MAHABHARATHAM

15 views
Skip to first unread message

sree krishna

unread,
Dec 25, 2015, 9:59:48 PM12/25/15
to Sivan Krishnan
                                                          
                                               62      ''துர்வாசருக்கு  போஜனம்'' 

''நீ  கேட்குமுன்பே  நான்  கூறுகிறேன்  ஜனமேஜயா''
யுதிஷ்டிரன்  ஆவலாக  எதிர்பார்க்கும் கதையை   வியாசர் சொல்கிறார்.  ''அதைச்   சுருக்கமாக  உனக்கு  சொல்கிறேன் கேள் :

''குருக்ஷேத்ரத்தில் குடும்பத்தோடு ஒரு முனிவன் . அவன் பெயர்  முத்கலன்.  வயலில்  சிதறி கிடக்கும்  தானிய மணிகளில் ஜீவித்து வாழ்ந்தவன். அந்த ஆசிரமத்தில் அவன் அதிதிகளையும்  உபசரித்து மகிழ்வித்தவன். ஒருநாள் துர்வாசரும் அவரது சிஷ்ய கோடிகளோடு முத்கலனுக்கு  அதிதி யாக வந்தார். அவர்களுக்கு போஜனம் ஏற்பாடு செய்யவேண்டுமே.  எப்படியோ அவரையும் அவர்  சிஷ்யர்களையும்  திருப்தியோடு உணவளித்து அனுப்பி  மீண்டும்  மீண்டும் இருமுறை  துர்வாசரும் சிஷ்யர்களோடு வந்து போஜனமருந்தி முத்கலனை வாழ்த்தி சென்றார். 
துர்வாசர் மிகக் கடுந்தவம் புரிந்த சக்தி வாய்ந்த மகரிஷி அல்லவா.  அவர்  முத்கலனுக்கு  ஒரு வரம் அளிக்கிறார்:

'முத்கலா , உன் எளிய வாழ்க்கையிலும்  நீ செய்யும்  அதிதி போஜன  உபசாரம் அநேகரை மகிழ்வித்து அவர்கள் ஆசியை நீ  பெற்றதால் உன் உடலோடு நீ  முக்தி அடையத் தகுந்தவன்''. இப்படி துர்வாசர்  சொல்லியபோதே  ஒரு  தேவலோக  புஷ்பக விமானம் அங்கே வந்து இறங்கி அதிலிருந்து ஒரு தேவ தூதன் அவர்கள் எதிரே கைகட்டி நின்றான்.''வாருங்கள் மகரிஷி முத்கலரே, தங்களை  தேவலோகம் அழைத்து போகிறேன்'' என்றான். 

'முத்கலா,  பார்த்தாயா உன்  சேவையின்  புண்ய பலனை? 

முத்கலன்  அந்த  தேவதூதனைப் பார்த்து   ''தேவனே,  நமஸ்காரம்.  நான் தேவலோகம் செல்வதால் அங்கே புதிதாக நான்  அடையப்போகும் இன்பம், நன்மைகள்  என்னவென்று சொல்லமுடியுமா?

''மேல் உலகம்  அதன் பேரில்  உள்ளபடி  இந்த உலகத்துக்கு மேலே  உள்ளது. அங்கே  தெய்வீக  புருஷர்கள் ஸ்திரீகள், கல்ப தருக்கள்,  காமதேனு, தேவ ரிஷிகள், முனிவர்கள், தேவதைகள்,  சகலமும் உள்ளது. பாபிகளுக்கும், அதர்ம, அசத்திய ஆசாமிகளுக்கும்  அங்கே  இடம் இல்லை. 

 அதற்கு மேலும்  பல  உலகங்கள் உள்ளன. அங்கே பசி தாகம் எதுவுமே கிடையாது. பூக்கள்  வாடாது.  எங்கும் வேத நாதம்  ஒலிக்கும். துன்பம், அசுபம்  சம்பந்தப்பட்டது  எதுவுமே  கிடையாது.  அழுக்கு  இருட்டு,  பயம்  எதுவுமே  இல்லை.  இன்னும் மேலே  உள்ள  உலகங்களில்  பிரம்ம  லோகம், கைலாசம், எல்லாம் உள்ளன.  அங்கு உள்ளவர்கள்  ரிபுக்கள். தெய்வங்கள், தெய்வங்களின் தெய்வங்கள்  எல்லாரும்.அங்கே இருப்பார்கள்..   அதற்கும் மேல்  நாராயணன்  மஹாலக்ஷ்மி  உள்ள , வைகுண்டம் உள்ளது. .அங்கே  நேரமோ  காலமோ இல்லை. இன்பமோ  துன்பமோ பிரித்துப் பார்க்க முடியாத   சஹஜ நிலை. இன்னும்  எவ்வளவோ சொல்லலாம்.  இங்கிருந்து உன்னைப் போல் அங்கே  செல்பவர்கள்,  தங்கள் புண்யபலன்  தீரும்வரை  இந்த  இன்பம்  துய்க்கலாம்.பிறகு  பூமியில்  மீண்டும் பிறவி  எடுக்கவேண்டும்.

'' முத்கலரே,  நான்  சொல்லவேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டேன்,  தயாராக இருந்தால்  உடனே  என்னோடு  கிளம்புங்கள், தங்களை அழைத்துக்கொண்டு  தேவலோகம்  செல்வோம்.''  என்றான்  தேவதூதன். 

முத்கலன் சிரித்தான். வணங்கியவாறு  அந்த  தேவதூதனிடம்  ''தேவதூதா  நீ  செல்லலாம்.  என்னை அழைத்ததற்கு  நன்றி.  எனக்கு  இன்பமோ துன்பமோ,  எல்லாம் ஒன்றே.  நீ  சொன்னது எதுவுமே  இங்கேயே  நான் அனுபவித்து வருகிறேன்.எனக்கு  வருத்தமோ, பயமோ,  எதிர்பார்ப்போ, ஏமாற்றமோ எதுவுமே இல்லை. நீ போகலாம்''  இவ்வாறு  முத்கலன்  கூறினார்.  நீயும்  யுதிஷ்டிரா, இவ்வாறு மனநிலை உள்ளவன் '' என்றார்  வியாசர். 
பனிரண்டு வருஷங்கள்  இவ்வாறே  வனத்தில் வாழ்ந்தவன். இன்னொரு வருஷம்  முடிந்து உங்கள் ராஜ்யத்தை பெற்று  நல்லாட்சி புரிந்து  மேன்மை பெறுவாய்.  என்று  வாழ்த்து கூறிவிட்டு  வியாசர்  மறைந்தார். 

ஹஸ்தினாபுரத்தில்  துரியோதனன் தூங்கவில்லை.  எப்படியாவது பாண்டவர்களுக்கு துன்பம் மேலும் மேலும் விளைவிக்க வேண்டும் என்றே சிந்தித்துக்கொண்டிருந்தான். பாண்டவர்கள் அநேக  ரிஷிகளுக்கும் முனிவர்களும் பிராமணர்களுக்கும்  அன்னதானம் அளித்து  ஆசிபெறுவது அவனுக்கு  ஆத்திரத்தை கூட்டியது.  அவன் ஆத்திரம்  பொறாமையாக மாறுவதற்கு   இன்னொரு விஷயமும் அவன் காதில் எட்டியது.  திரௌபதியிடம்  சூரியன் அளித்த ஒரு  பாத்திரம். அதில்  அவள் சமைத்த  உணவு  எத்தனைபேர் வந்தாலும் அவர்களுக்கு திருப்தியாக  சம்ருத்தியாக  வளர்ந்து அவளும் கடைசியில் சாப்பிட்டு கவிழ்த்து வைத்தால்  அடுத்தது  மறுநாள் தான் என்பது அவனுக்கு எரிச்சலை மூட்டியது.  

அந்த நேரம்  துர்வாசர்  ஹஸ்தினாபுரம் அருகே  எங்கோ வருகிறார்  என்று  அவன் கேட்ட விஷயம் அவனுக்கு ஒரு புதிய எண்ணத்தை  மனதில் தோற்றுவித்தது.  

பதினாயிரம் சிஷ்யர்களோடு  துர்வாசரை வரவழைத்து அவருக்கு உபசாரம் செய்தான்  துரியோதனன். துர்வாசரிடம் ஒரு பழக்கம். எப்போது பசிக்கும் என்று தெரியாது. பசித்தபோது  உடனே  உணவு கொடு என்று கேட்பார். உணவு கொடுத்தால்  மகிழ்ந்து வரம் கொடுப்பார்,  கொடுக்கவில்லை என்றால் சபிப்பார்.  அந்த கோபக்கார ரிஷியின்  வரமும்  சாபமும் பலிக்கும்.  இதையே  உபயோகித்தால் என்ன?


துரியோதனன் அளித்த விருந்தில் மகிழ்ந்து துர்வாசர்  ''துரியோதனா  உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

''முனி ஸ்ரேஷ்டரே,  எங்கள்  குல மூத்தவன்  யுதிஷ்டிரன்.  எங்களுக்கு அவன் மேல் பக்தியும் பாசமும் அதிகம். எங்களை  மகிழ்ந்து வாழ்த்திய  நீங்களும் உங்கள்  அனைத்து சிஷ்யர்களும் இதேபோல்  காம்யக  வனம் சென்று  திரௌபதி எல்லோருக்கும்  அன்னதானம் அளித்து  முடிந்து ஓய்வெடுத்து இருக்கும் அந்தி  நேரத்தில்  சென்று  பிரத்யேகமாக  அவர்கள் அளிக்கும்  அன்னதான உபசாரம் பெறவேண்டும் ''

''ஒ அப்படியா,  உனக்கு இது திருப்தி தரும் என்றால்  நாங்கள் அங்கே செல்வோம்''  என்று வாக்களித்தார்  துர்வாசர்.  துரியோதனன் கர்ணன்  ஆகியோர்  தங்கள் திட்டம்  கை மேல் பலனளித்தது கண்டு  பரம சந்தோஷம் கொண்டனர். துர்வாசர்  பாண்டவர்களிடம்  உணவு இல்லாத நேரத்தில்  அவர்களை அணுகப்போகிறார்  பத்தாயிரம்  பேரோடும் பசியோடும்.  உணவில்லை என்றதும் அவர் கோபம் எப்படி எல்லை மீறும்  என்ன சாபம் கொடுப்பார்  பாண்டவர்களுக்கு  என்று கற்பனையில் களித்தனர். 

துரியோதனனுக்கு வாக்களித்தபடியே  துர்வாசர்  ஒருநாள்   காம்யக  வனம் மாலை நேரத்தில் கிட்டத்தட்ட  இருட்டியபிறகு  சென்றார்.  திரௌபதி அன்றைய உணவு அத்தனையும்  தானம் செய்து அனைவரும் உண்டபின்  சூரியன் அளித்த  அக்ஷய  பாத்திரத்தை  கவிழ்த்து வைத்துவிட்டு  ஓய்வெடுத்த நேரம்  துர்வாசர்  பத்தாயிரம் பேரோடு  பசியுடன் அதிதியாக  வருகிறார் என்ற சேதி கிடைத்தது. இந்த இரவிலா வருகிறார்?

தர்மனும் சகோதரர்களும் அவரை வரவேற்று உபசரித்து  ஸ்நானம்  முடித்து  போஜனத்துக்கு தயாராகும்படி  உபசரித்தனர்.
தருமனுக்கும்   அக்ஷயபாத்ரம் கழுவி வைக்கப்பட்டது  என்பது நினைவில்லை.  திரௌபதியிடம் உணவுத் தயார் செய்  என்று சொல்லும்போது தான் அவளும் திடுக்கிட்டாள்.  என்ன செய்வது. இந்த நடுக்காட்டில்  எப்படி  பதினாயிரம் பேருக்கு உடனே இந்த இரவு நேரம்  உணவளிப்பது. இன்னும் சற்று நேரத்தில் ஸ்நானம் முடித்து  பசியோடு போஜனம் அருந்த வருவார்களே.  கடவுளே  ........  கடவுளே  என்று  எண்ணிய திரௌபதியின்  மனதில் ஒருவன் பற்றிய  நினைப்பு  தோன்றியது.  

முன்னே  எனக்கு  ஆபத்தில்  ஆடை கொடுத்து  சபையில் மானம் காத்தவன் அந்த  ஹரி தானே. அவனையே வேண்டினால் இப்போதும் உதவுவானே!  

'' கிருஷ்ணா , வாசுதேவா, ஆபத் பாந்தவா..உடை கொடுத்து  உதவினவா, இப்போது உணவு கொடுக்க வா. ஆடை கொடுத்தவனே, ஆகாரம் கொடுக்க வா''

ருக்மிணி அருகில் படுத்துக்கொண்டிருந்த  கிருஷ்ணன் எழுந்தான். அடுத்த கணம்  காம்யக  வனத்தில் இருந்தான். 
பாண்டவர்கள் இருந்த பர்ணசாலை கதவு தட்டப்பட்டது.  யார் இந்த இரவு நேரத்தில்  என்று  கதவைத் திறந்தாள்  திரௌபதி.  
'
'கிருஷ்ணா  நீயா?''  

''நான் கிருஷ்ணன் தான். ஆண்  கிருஷ்ணன்.  நீ  பெண் கிருஷ்ணா  இல்லையா,  என்ன சந்தேகம் உனக்கு ''

''இப்போது தானே  உன்னை நினைத்தேன்.  எங்களுக்கு நீ உடனே  உதவ வேண்டுமே''

''இதோபார்  திரௌபதி,  உங்களுக்கு உதவி செய்வது அப்பறம் இருக்கட்டும்.  எனக்கு நீ சொல்வது எதுவுமே  காதில் விழாதபடி  பசி  காதை அடைக்கிறதே , முதலில் எனக்கு கொஞ்சம் ஆகாரம் உடனே கொடு. அப்புறம் பேசுவோம்''

திரௌபதிக்கு தலை சுற்றியது. அப்படியே  சுவரில் சாய்ந்தாள்  

'' என்ன ஆயிற்று உனக்கு?''

'' கிருஷ்ணா  நான் என்ன செய்வேன்.    எல்லோருக்கும் உணவளித்து,  கடைசியில் நானும் சாப்பிட்டு விட்டு  அக்ஷய பாத்தரத்தை அலம்பி கவிழ்த்து வைத்து விட்டேனே,  இனி நாளை சூரிய  உதத்தில்  தானே அதில் உணவு  கிடைக்கும் ''

''திரௌபதி,   விளையாடாதே என்னோடு. என் பசியில்  நான் உன்னையே  தின்றாலும் ஆச்சரியம் இல்லை.  போய்  அந்த  அக்ஷய பாத்திரத்தை உடனே இங்கே  கொண்டுவா. என்னிடம் காட்டு  நானே  பார்க்கிறேன்''

காலியாக  இருந்த அக்ஷய  பாத்திரத்தை  கையில் வாங்கி கிருஷ்ணன்  மேலும் கீழும் முன்னும் பின்னும் பார்த்தான்.  அதன் விளிம்பில் ஒரு இடத்தில் ஒரு சிறு  கீரைத் துண்டு ஒட்டிக் கொண்டிருந்தது. அதைக் கண்டதும் கிருஷ்ணன் கண்களில் ஒளியும் இதழில் புன்னகையும் மலர்ந்தது. அந்த சிறு கீரைத் துண்டை ஆர்வத்தோடு எடுத்து  தனது  வாயில் போட்டுக்கொண்டு விழுங்கினான். அப்போது அங்கே  பீமசேனன் ஓடிவந்து கிருஷ்ணனை வணங்கினான்.

''பீமசேனா  திரௌபதி சொன்னாளே  துர்வாசரும் அவரது பதினாயிரம் சிஷ்யர்களும் இங்கே  போஜனம் அருந்த வருவார்கள் என்று. ஏன் இங்கே நிற்கிறாய். அவர் கோபக்கார முனிவர் .  உடனே  நீயே  நேரில் சென்று அவரை வணங்கி  உபசரித்து இங்கே அழைத்துக்கொண்டு வா ''

கிருஷ்ணன் சொன்னால்  பீமன்  மறுப்பானா.  உடனே ஓடினான்.  

இதற்கிடையே, ஆற்றில்  துர்வாசரும் சிஷ்யர்களும்  நீராடிக் கொண்டிருந்தனர்.   நீரில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு வாய் குளிர்ந்த
நீரை விழுங்கியவுடனே வயிறே வெடித்து விடும் அளவுக்கு  அனைவருக்கும் வயிறு நிரம்பிவிட்டது.  

''உணவு தயாராகட்டும் இதோ ஸ்நானம் முடித்து வருகிறோம் என்று சொன்னோம்.  எப்படி அதற்குள்  நமக்கு பசி  பறந்துபோய்  வயிறு  நிரம்பி விட்டது''  துர்வாசருக்கு  ஆச்சர்யமாக  இருந்தது. 

சிஷ்யர்கள்  தயங்கியவாறு  துர்வாசர் எதிரே நின்று  வணங்கினார்கள்.  

என்ன ?  என்று அனைவரையும் கேட்ட போது அவர்கள்  தயக்கத்துடன் 

''குருவே, என்னவோ தெரியவில்லை,  முதலில் பசியோடு தான் இங்கே ஸ்நானம் செய்ய வந்தோம். இப்போது ஏனோ  ஒன்றுமே சாப்பிட முடியாது போல் இருக்கிறது. வயிறு நிரம்பிவிட்டதே. நீங்கள்  தான்  எங்களால் யுதிஷ்டிரருக்கு சிரமம் ஏற்பட்டதற்கு  மன்னிக்கவேண்டும்.. எங்களில் ஒருவராலும்  இனி நாளை மதியம் வரை எதுவுமே  உண்ண  இயலாது.''

துர்வாசர்  யோசித்தார்.  அவருக்கும்  அதே நிலை. '' நீங்கள் சொல்வது எனக்கும் புரிகிறது.  இத்தனை பேருக்கும்  சிறந்த உணவு தயார் செய்து நமக்காக  பாண்டவர்கள் காத்திருக்கிறார்கள்.  அவர்கள்  தர்மிஷ்டர்கள், சத்ய புருஷர்கள்.  பகவான் ஹரி அவர்களுக்கு உற்ற தோழன். நான் எவ்வாறு  அவர்களிடம்  சென்று  என்னால்  போஜனம் அருந்த முடியாது என்று சொல்வது.  அவர்கள் நம்மை பற்றி என்ன தாழ்வாக நினைப்பார்கள். அவர்கள் கோபத்திற்கு நாம்  ஆளாக கூடாது. அவர்கள் சக்தி வாய்ந்தவர்கள். எனவே  நாம் எல்லோரும்  இனி யுதிஷ்டிரன் பர்ணசாலைக்கு செல்லவேண்டாம். பாண்டவர்களை சந்திக்க வேண்டாம். நேராக திரும்பிச் செல்வோம்.  மற்றொரு சந்தர்ப்பத்தில் அவர்களிடம் சென்று  போஜனம் அருந்துவோம். ''  வேகமாக அவர்கள்  அனைவரும்  அங்கிருந்து  அகன்றார்கள். 

ஆற்றங்கரைக்கு ஓடிய  பீமன்  அங்கே  யாரையும்  காணாமல் எங்கெங்கோ தேடினான். அங்கிருந்த  சில ரிஷிகளை, முனிவர்களைக்கண்டு  துர்வாசரைப் பற்றி விசாரித்தான்.  சற்று நேரம் முன்பு அவர்கள்  சென்றுவிட்டார்கள் என்று அறிந்தான்.  யுதிஷ்டிரனிடம் விஷயம் சொன்னான் .

''அடடா,  இரவில் பசியோடு வந்த ரிஷியும் சிஷ்யர்களும் உணவு இல்லாமல் சென்று விட்டார்களே. அவர்கள் மனம் துன்புற்றால் அந்த  பாபத்திற்கு நாம் என்ன ப்ரயசித்தம்  செய்ய முடியும்.''

அப்போது கிருஷ்ணன் தர்மன் முன் வந்து,  ''யுதிஷ்டிரா,  துர்வாசர் தனது பரிவாரத்தோடு வருகிறார்  அவரது கோபத்துக்கு  ஆளாகக் கூடாதே என்று  அஞ்சி  திரௌபதி என்னை அழைத்தாள் . நானும் ஓடோடி வந்தேன். உனது தர்ம சிந்தனை, சத்யம் சீலம்  அதற்கு முன் அவரது தவ வலிமை குறைந்ததில்லையே,  உன்னிடம் சொன்ன வாக்கை  மீறியதற்கு எப்படி விளக்கம் சொல்ல முடியும் என்று  அஞ்சி துர்வாசர்  உன்னைக் காணாமலே  சென்று விட்டார் போலிருக்கிறது.  சரி,  நானும் செல்கிறேன். விடை கொடு'' என்றான் கிருஷ்ணன்.

''கிருஷ்ணா  எங்கள்  துன்பத்திலிருந்து எப்போதும் எங்களைக் காப்பவனே''  என்று மனமுருகி பாண்டவர்கள்  அனைவரும் வணங்க  அவர்களை வாழ்த்தி விட்டு  கிருஷ்ணன் மறைந்தான். 


Reply all
Reply to author
Forward
0 new messages