சிறுவயதிலேயே ஸ்வாமியிடம் பிடிப்பு-
இந்தச் சின்ன வயதிலிருந்தே ஸ்வாமியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்போது தான் அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவும் முடியும். வயதாக ஆக வேறு பல தினுசான ஆசைகள் எல்லாம் வந்து, ஸ்வாமியை நினைக்க ஒட்டாமல் இடைஞ்சல் செய்யும். இப்போது உங்களுக்கு அந்த இடைஞ்சல் இல்லை. அதனால் இப்போதே அவரிடம் பக்தி வைக்கப் பழகிவிட்டால் அப்புறம்கூட அந்த ஆசைகள் உங்களிடம் வந்து உபத்திரவம் பண்ணாது.
நீங்கள் எல்லோரும் க்ஷேமமாக இருக்க வேண்டும். நிறைய மார்க் வாங்கி, நிறையப் பாஸ் பண்ணி வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரவேண்டும். இதற்கெல்லாம் வழியாக இப்போதிலிருந்தே ஸ்வாமியிடம், அம்மையப்பனிடம் பக்தியோடு இருங்கள்.
பிறருக்கு உபகாரமாக
இப்போது நாம் இத்தனை பேரும் ஒரே ஒரு மரத்தின் நிழலில் இருக்கிறோம்.* ரொம்ப வருஷங்களுக்கு முன் இத்தனூண்டு சின்னதாக இருந்த ஒரு செடிதான் இப்போது இவ்வளவு பேருக்கும் நிழல் தருகிற மரமாக ஆகியிருக்கிறது. இன்றைக்குச் சின்னவர்களாக இருக்கிற நீங்களும் பெரியவர்களாகிற போது இந்த மரம் மாதிரிப் பலபேருக்கு உபகாரமாக இருக்க வேண்டும்.
*இது ஒரு பள்ளியின் மர நிழலில் ஆற்றிய உரை.
வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பது பிறருக்கெல்லாம் உபகாரம் செய்வதற்காகத்தான். நிறையச் சம்பாதித்து அதையெல்லாம் நமக்காகவே செலவழித்துக் கொண்டால் ஸ்வாமி சந்தோஷப்படமாட்டார். அவருக்கு நாம் எப்படிக் குழந்தையோ அதே மாதிரி ஏழைகள், நோயாளிகள், அநாதைகள் எல்லாரும் குழந்தைகள். அந்தக் குழந்தைகளுக்கு நாம் உபகாரம் பண்ணாமல் நமக்கே செலவழித்துக் கொண்டால் ஸ்வாமி அதற்கப்புறம் நமக்கு அருள் செய்யமாட்டார்.
அதனால் நீங்கள் எல்லோரும் உலகத்துக்கு உங்களால் முடிந்த உபகாரத்தை செய்யவேண்டும். அதில் உங்களுக்கு ஒரு பெரிய சந்தோஷமும் திருப்தியும் உண்டாகும். நீங்களே சாப்பிடுவதை விட ஓர் ஏழைக்குச் சாப்பாடுபோட்டால் அதில் உங்களுக்கு இன்னும் ஜாஸ்தி இன்பம் உண்டாகும். நாம் பிறந்திருப்பதே மற்றவர்களுக்கு உபகாரம் செய்வதற்காகத்தான் என்று தெரியும். இப்படி உங்களால் முடிந்த உதவியைச் செய்து நீங்கள் மற்றவர்களின் மனத்தைக் குளிர வைத்தால் அதைப் பார்த்து ஸ்வாமியும் உங்களிடம் மனம் குளிர்ந்து நிரம்ப அருள் செய்வார்.
உங்களிடம் மற்றவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் வந்தால் அவர்களும் நீங்கள் ஸ்வாமியைத் தொழுவதைப் பார்த்துத் தாங்களும் தொழுவார்கள். பக்தியினால் உங்களுக்கு உண்டாகிற ஆனந்தமும் நல்லறிவும் அவர்களுக்கும் கிடைக்கும். ஆனபடியால் நீங்கள் ஸ்வாமியிடம் பக்தியாக இருப்பதே எல்லாவற்றையும் விடப் பெரிய பரோபகாரமாகிறது.
WITH PRANAMS
N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536
