இறைவனின் அன்பும் தர்ம ஒழுங்குப்பாடும்-
சூரிய மண்டலம் எத்தனை பெரிது! அதைவிடப் பெரிய நட்சத்திர மண்டலங்கள் எத்தனையோ இருக்கின்றனவாம். இத்தனையையும் செய்த ஸ்வாமி எவ்வளவு பெரியவராக இருக்க வேண்டும்? அத்தனை பெரியவர் குழந்தைகளான நம் பிரார்த்தனையையும் கேட்கிறார்! புழு பூச்சியிலிருந்து எல்லாவற்றுக்கும் இந்த உலகத்தில் அததற்குத் தேவைப்படுகிற ஆகாரத்தை அவர்தான் வைத்திருக்கிறார். அப்படியானால் அவர் இருதயத்தில் எத்தனை அன்பு இருக்கவேண்டும்?
அன்பு இருப்பது மட்டுமல்ல. நாம் ஒழுங்கில்லாமல், தப்பும் தவறுமாகக் காரியம் செய்வது போலவா அவர் செய்கிறார்? அவரை ’ஏன்?’ என்று கேட்டுக் கண்டிப்பதற்கு அவருக்கு மேல் எவரும் இல்லாவிட்டாலும் அவர் எத்தனை ஒழுங்கோடு தினமும் இந்தப் பூமியை ஒரு முறை சுழலவிட்டுப் பகலையும் இரவையும் படைக்கிறார்? இதே போல் இந்தப் பூமி சரியாக ஒரு வருஷத்தில் சூரியனைச் சுற்றி வரச் செய்து பலவிதமான பருவங்களை உண்டாக்குகிறார்! ஒவ்வொன்றும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒழுங்கு செய்திருக்கிறார். நாமும் அவரைப் போல மனசில் அன்பாக இருக்க வேண்டும்; காரியத்தில் ஒழுங்காக இருக்க வேண்டும். இந்த ஒழுங்குக்குத் தான் தர்மம, அறம் என்று பெயர்.
அன்பும் அறமும் உருவான ஸ்வாமியை வேண்டினால் நமக்கும் இவை உண்டாகும். அவருடைய அருளை நினைத்து நன்றி செலுத்துவதே மன அழுக்கையெல்லாம் போக்குகிற பெரிய ஸ்நானம்.
நல்ல பிள்ளைகளாவதற்கு வேண்டுக!
கெட்ட பிள்ளையாவது எளிது. ஆனால் அந்தப் பெயர் எடுத்துவிட்டால் அப்புறம் நமக்கு எத்தனை அவமானம், கஷ்டம்! வாழ்க்கையில் முன்னுக்கு வரவே முடியாது. நல்ல பிள்ளையாவது கடினம் என்ரு தோன்றலாம். ஆனால் கடவுளின் அருளைத் துணை கொண்டால் இதையும் எளிதாகச் சாதித்து விடலாம். நல்ல பிள்ளை என்று பெயர் வாங்கினால்தான் வாழ்க்கையில் முன்னேற நல்ல நல்ல வாய்ப்புக்கள் வரும். ஒருநாள் இல்லாவிட்டால் ஒரு நாள் கெட்டவன் தண்டனை பெறத்தான் செய்வான்.
ஸ்வாமியின் பாத கமலங்களை விடாமல் பிடித்துக் கொண்டு, “எனக்கு வேறு கதியில்லை; நீதான் நல்ல வழி காட்ட வேண்டும்” என்று வேண்டிக்கொள்ள வேண்டும். பிஞ்சான உங்கள் குழந்தை உள்ளத்திலிருந்து உண்டாகிற வேண்டுகோளுக்கு ஸ்வாமி நிச்சயம் பலன் தருவார். உள்ளத் தூய்மையை இவ்வாறு இளவயதிலேயே பெறுவது தான் எளிது. பிற்பாடு அழுக்கு ரொம்பவும் தடித்துப் போகவிட்டால் நல்ல வழி தேட வேண்டும் என்ற எண்ணம் கூடப் போய்விடும். எனவே, இன்றிலிருந்து பகவானைப் பிரார்த்தியுங்கள். உங்களை அழுக்கேயில்லாமல் பளிச்சென்று வைத்து உங்களுக்கு ஒரு குறைவும் வராமல் ஸ்வாமி காப்பாற்றுவார்!
WITH PRANAMS
N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536
