
புத்தியைப் படுக்கப் போடுகிறதுதான் சரணாகதி. அதற்கு அடையாளமாகத் -தான் பௌதிக கார்யமாக, 'ஸிம்பாலி'க்கா நமஸ்காரம் என்று ஆக்கிக் கொடுத்திருக்கிறது. புத்தி என்று மூளையை ஸம்பந்தப்படுத்தித்தானே சொல்கிறோம்? பாதத்துக்கு மேலே எட்டாம் சாணாகத் தலையுச்சியிலிருக்கிற அந்த மூளையை பூமி மட்டத்தில் படியவிட்டுத்தானே கீழே விழுந்து நமஸ்காரம் பண்ணுகிறோம் 'கீழ்ப்படிதல்' என்ற உள்பாவத்திற்கே நமஸ்காரம் வெளியடையாளம். வேதத்திற்கு, வேதத்தின் பரம தாத்பர்யமான ஈச்வரனுக்கு, மூளை கீழ்ப்படியும் சரணாகிதக்கு அடையாளமாக சரீரம் கீழே பூமியில் படியும் படிக் கிடக்கிறதே நமஸ்கார க்ரியை.
இங்கே புத்திக் கார்யமில்லை. அதன் இடத்தில் 'ச்ரத்தை', 'நம்பிக்கை' என்ற உணர்ச்சி இருக்கிறது. ப்ரத்யக்ஷமாக ஒன்றைத் தெரிந்துகொள்வதில் - ஜ்வாலை வீசினால் உஷ்ணம் என்று, பணிவாடை வீசினால் குளிர் என்று, இப்படிப் பிரத்யக்ஷமாக அநேகம் தெரிந்துகொள்வதில் - இது உஷ்ணந்தான், இது குளிர்தான் என்று புத்தி எப்படி ஸந்தேஹமில்லாமல் நிச்சயமாக இருக்கிறதோ அந்த மாதிரியே, அப்ரத்யட்சமான பரலோக, ஆத்மலோக விஷயத்தில் வேத - சாஸ்த்ரம் சொல்கிறதுதான் ஸத்யம் என்ற நிச்சயமான உணர்ச்சியாக அந்த நம்பிக்கை இருக்க வேண்டும். அதற்குத்தான் 'ச்ரத்தை' என்று பெயர். அந்த ச்ரத்தையை மூலதனமாகக் கொண்டால் அது நம்மைக் கொண்டு போய் நிறுத்தும் பரிபூர்ணமான கீழ்ப்படிதலுக்கே 'சரணாகதி' என்று பெயர். அங்கே நம் புத்திக்கு வேலை இல்லை, எந்தக் கேள்விக்கும் இடமில்லை.
WITH PRANAMS
N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536
