முருகா எனும் நாமங்கள்
“முருகன் குமரன் குகன் என்றுமொழிந்து உருகும் செயல்தந்து ,உணர்வு என்று அருள்வாய்?” --- என்ற வரிகள், கந்தர் அநுபூதியில்அருணகிரிநாதர் முருகப் பெருமானிடம் கேட்பதாக அமைந்துள்ளது. முருகன், குமரன், குகன் என்று விடாமல் மொழிந்தால் நம் உள்ளம் உருகும், அப்போது நெஞ்சத்தின் கனம் நீங்கும், அதனால் திண்மை ஒழியும்; நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகி, அது கல்லின் தன்மையை இழந்து, நீரின் தன்மையை அடைந்து .அன்பு பெருகி, உள்ளத் தடாகத்திலே, இள முருகன் பாத தாமரை மலரும்.அதாவது தாளாகிய அணி ஆர் அரவிந்தம் அரும்பும் என்று வருணிக்கிறார்.
ஏன் முருகன் என்று முதலில் வைத்திருக்கிறார் அருணகிரிநாதர் என்று நாம் சற்று சிந்திக்க வேண்டும். முருகனுக்கு, பல நாமங்கள் உண்டு.
“ஆறுமுக வித்தகனும் ஆறிரு புயத்தரசும், ஆதி முடிவற்ற திருநாமக் காரனும்“ என்று திரு வேளைக்காரன் வகுப்பில் அருணகிரிநாதர் முருகனுக்கு. எண்ணற்ற, முடிவில்லாத நாமங்கள் இருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றார். திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் பெருமான், முருகவேளுக்குரிய பல நாமங்களை அருச்சனை செய்வதுபோல் கூறி நமக்கு நினைவு படுத்திகிறார்.
“அரும் பெறல் மரபிற் பெரும் பெயர் முருக” ----- பிறராலே பெறுவதற்கு அரிய இலக்கணங்களை உடைய பெரிய பெயரையுடைய முருகனே! என்பது இதன் பொருள். எத்தனை பெயர்கள் இருப்பினும் .-- முருகன் -- எனும் திரு நாமத்திலேயே அவனுடைய பல பெயர்கள்அடங்கியுள்ளன என்பதை நாம் கண்டு கொள்ளலாம். அப்பெயரால் பல இலக்கணங்கள் குறிக்கப் பெறுகின்றன. அவ் விலக்கணங்கள் யாவும் ஒருங்கே உடையவன் முருகன் .
 ‘முருகு என்னும் சொல் தனித் தமிழ்ச் சொல். தமிழ் எழுத்துக்களின் மூவினமும் இச் சொல்லில் அமைந்துள்ளது. ‘மு’ என்பது மெல்லினம் 'ரு’ என்பது இடையினம்; ’கு' என்பது வல்லினம். தமிழர்களின், தமிழ்க் கடவுளாகப் போற்றும் செப்புத் தமிழ்க் கினிய குரு குமரனுக்கு, தமிழ் எழுத்துக்களிலுள்ள மூவினத்தினின்றும் எழுத்தைப் பெற்று ‘முருகு’ என்று ஆகியது பொருத்தம்தானே!
‘முருகு' என்பதற்குப் பல பொருட்கள் உண்டு. அவற்றுள் தலைமை பெற்றவை நான்காகும். நறு மணம், தெய்வத் தன்மை, இளமை, அழகு. இவைகளே அந்த நான்கு. முருகப் பெருமான் இந்த நால்வகையில் எந்த வகையைச் சேர்ந்தவன்? என்ற சந்தேகமின்றி நான்கையும் சேர்ந்தவன் ஆகின்றான்..
‘முருக' என்ற சொல் சிறியதாக இருக்கிறதே! அத் திருநாமத்திற்கு என்ன சிறப்பு இருக்கப் போகிறது? ஐந்தெழுத்து, ஆறெழுத்து, பன்னீரெழுத்து என்றெல்லாம் பேசும் மந்திரங்களும், திருநாமங்களும் இருக்க, இந்த மூன்றெழுத்துப் பெயருள் பல நாமங்கள் அடங்கியிருக்கிறதா? என்று யாவரும் வியக்கலாம்.
உருவினால் சிறியவர் அகஸ்தியர். அவரை குறுமுனிவன்’ என்று அழைப்பார்கள் அவர் முருகனுக்கும், வினாயகருக்கும் பிரியமானவர் ஆவார். அருணகிரிநாதரும் 'குறு முனிவர் ஏத்தும் முத்தமிழோனே' என்று திருப்புகழில் பாடியிருக்கிறார். அகஸ்தியர் சிறியவராக இருந்தாலும், பொருட் பெருமையினால் பெரியவர் ஆனார்.
”சிவனை நிகர் பொதியவரை முனிவன் அக மகிழ இரு செவி குளிர இனியதமிழ் பகர்வோனே“
–அறிவழிய—திருப்புகழ்
“கும்பமுனிக்கும் கிருபை வரிக்கும் குருபாரா“ என்பதிலிருந்து அகஸ்தியர் பெருமை விளங்கும்.
 முருகன் எனும் ஒரே நாமத்திலேயே முருகனின் எல்லா நாமங்களும் அடங்கியிருப்பதால் அவனைப் ‘பெரும் பெயர் முருகன்’ என்று அழைப்பதில் தவறே இல்லை. ஒரே பெயரே பல பெயராக விரிவதற்கு உரியதென்றால் அது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது!” மனித்த பக்தர் தமக்கு எளியோனே, மதித்த முத்தமிழில் பெரியோனே“ என்கிறார் அருணகிரி அந்தப் பெரியோனை.
 “முருகா! என ஓர் தரம் ஓத அடியார் முடிமேல் இணைதாள் அருள்வோனே “ என்று ‘விழு தாது எனவே ‘ என்ற திருப்புகழ் பாடலின் மூலம் முருக நாமத்தின் சிறப்பை அருணகிரிநாதர் விளக்கிக் காட்டியிருக்கிறார். முருகா! என்று ஒருதரம் கூறினால் போதும் அவனுடைய பாத பங்கயங்களை அடியார் தலையில் வைத்து, அடியவர் இச்சையில் எவை எவை உற்றன அவை தருவித்து அருள்புரியும் கருணைக் கடல் ஆவான் என்பதை நமக்கு உணர்த்துகிறார். அதுமட்டுமன்று,“ என்றும் அகலாத இளமைக்காரா” என்றும் இளையோனே“ என்று முருகனின் இளமையைப் பாடும் அருணகிரிநாதர், “இனிய சொல் மாறாத சீலர் கருவிழி வாராமல் நாளும் இளமையது தானுமாக நினைவோன்“ என்று மற்றவர்களையும் இளமையோடு பார்க்கும் ஆற்றல் வாய்ந்தவன் முருகன் என்கிறார்.
முருகனின் நாமத்தால் குகன் பெற்ற பெரும் பேறு
ஓர் அரசன் தவறு செய்து விட்டான். சிறிய தவறு அல்ல; ஒரு அந்தணனைக் கொன்றுவிட்டான். தெரிந்து கொன்றாலும், அறியாமல் கொன்றாலும் கொன்றது கொன்றதுதானே! அதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் சூழ்ந்தது. அதனால் கவலையுற்ற அவன் தனது தோஷத்தைத் தீர்க்க ஒரு முனிவரை நாடிச் சென்றான். அந்த முனிவரின் குடில், கங்கைக் கரையில் இருந்தது..அரசன் தேரில் அமர்ந்து முனிவர் இடம் சென்றால், அங்கு முனிவரைக் காணமுடியவில்லை. முனிவரின் எட்டு வயது மகன் தான் இருந்தான். மகனிடம் விஷயத்தைச் சொல்லலாமா, வேண்டாமா? என்று தயங்கிக் கொண்டிருக்கும் பொழுது அந்தச் சிறுவனே.
“தாங்கள் யார்? எதற்காக இங்கு வந்தீர்கள்? நான் ஏதேனும் உதவி செய்யலாமா? “ என்று பட படவெனப் பல கேள்விகளைக் கேட்டான். அவன் கேட்ட விதத்திலிருந்து அவன் அறிவாளி என்பது விளங்கியது.
 “சரி! இவனிடமே விஷயத்தைச் சொல்லி விடலாம்“ என எண்ணிச் சொல்லத் தொடங்கினான் மன்னன்.
“சில நாட்களுக்கு முன் நான் தெரியாமல் ஒரு அந்தணனைக் கொன்றுவிட்டேன். அது என்னை உடலளவிலும், மனத்தளவிலும் வாட்டுகிறது. சிலர் பிரம்மஹத்தி தோஷம் பிடித்திருக்கிறது என்று கூறுகிறார்கள் கங்கைக் கரையில் ஒரு முனிவர் இருப்பார் அவரிடம் .அதற்கு பரிகாரம் கேளுங்கள் என்று கூறி என்னை இங்கு அனுப்பி வைத்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. உன்னுடைய தந்தை இல்லையா? அவரை நான் உடனே பார்க்க வேண்டுமே! “ என்றான்.
“என் தந்தை வருவதற்குக் கால தாமதமாகும். இது சாதாரண விஷயம் தானே. கவலைப் படாதீர்கள், நான் தீர்த்து வைக்கிறேன்” என்றான்.
அரசன் சிறு பிள்ளையை நம்புவதா, வேண்டாமா? என்று புரியாமல் விழித்தார். ஆனால் அவன் பேசிய பேச்சிலிருந்து அவன் யாவும் கற்றவன் என்பது தெரிந்தது.
“சரி!” என்று ஒப்புக் கொண்டார்.
“அப்படியானால் கங்கையில் குளித்துவிட்டு வாருங்கள்“ என்றான்
அரசனும் அவ்வாறே செய்தான்.
எட்டு வயது பாலகனும் கங்கையில் மூழ்கி எழுந்து, “ கங்கையில் இறங்கி நின்று கிழக்குப் பக்கம் நோக்கி மூன்று முறை ‘ முருகா’ என்று  கூற வேண்டும். ஒவ்வொரு முறையும் முருகன் நாமத்தைக் கூறி மூழ்கி எழ வேண்டும்” என்றான் .
அவ்வாறே அரசனும் கிழக்கு திசை நோக்கி நின்று ‘முருகா’ எனச் சொல்லி மூழ்கி எழுந்து மறுபடியும் ‘முருகா’ எனச் சொல்லி மூழ்கி... இப்படி மூன்று முறை செய்தான் என்னே அதிசயம்! , அவன் உடலில் ஒரு புது சக்தி கிட்டியதை அறிந்தான். மனமும், உடலும் லேசாகி விட்டது போன்ற ஒரு உணர்வும் பெற்றான். பிடித்திருந்த பிரம்மஹத்தி விலகிவிட்டது. இப்பொழுது புதுப்பொலிவுடன் காணப்பட்டான் அந்த அரசன். அவனுக்குத் தாங்கொணாத மகிழ்ச்சி, சிறுவனைப் போற்றி, விடை பெற்று, மறுபடியும் அவன் தந்தையைக் காண சன்மானத்துடன் வருகிறேன் என்று சொல்லிப் புறப்பட்டான்..
சூரியன் மறையும் வேளை வந்தது .முனிவரும் தன் குடிலுக்குத் திரும்பினார். பாதையில் கண்ட தேரடிச் சுவடைப் பார்த்து.
“யாரேனும் வந்தார்களா?” என்று கேட்க, ”ஆம்! ஒரு அரசர் வந்தார் அவரை பிரம்மஹத்தி தோஷம் பீடித்திருந்ததாம் . அதனால் பரிகாரம் செய்யத், தங்களைத் தேடி வந்தார்“ என்றான்.
“அதற்கு நீ என்ன சொன்னாய்?“ என்று கேட்டார், தந்தை.
“தந்தை வெளியில் சென்றிருக்கிறார். தங்களுக்கு ஆட்சேபணம் இல்லை என்றால் நான் பரிகாரம் கூறுகிறேன் என்றேன்“ ---என்றான்.
“ஓ! அதற்கு மன்னன் ஒப்புக்கொண்டானா?”
“ஆம் ,ஒப்புக்கொண்டதின் பேரில் நானே பரிகாரத்தைக் கூறி அவர் குறையைத் தீர்த்து வைத்தேன்.“
“சரி ! நீ என்ன செய்தாய்?“ ஆர்வத்துடன் கேட்டார் முனிவர் .
“கங்கையில் கிழக்குமுகமாக நின்று ‘முருகா’ என்று மூன்று முறை கூறி மூழ்கச் சொன்னேன், அவரைப் பீடித்திருந்த தோஷமும் விலகிவிட்டது“ எனப் பெருமையாகக் கூறிக்கொண்டிருந்தான்.
அதைக் கேட்டவுடன் வந்ததே கோபம் அம்முனிவருக்கு, உனக்கு அறிவில்லையா? முருகனின் பெயரை மூன்று தரமா கூறுவது? ஒருமுறை கூறினாலே கோடி பிரம்மஹத்தி தோஷம் அகன்றுவிடுமே! ‘முருகா’ என்று ஒருமுறை கூறும் அருமை உனக்குப் புரியவில்லையே அதனால் நீ வேடனாகப் போகக் கடவது! “ என்று எதையும் யோசியாது சாபமிட்டார்.
 சிறுவனோ தான் நல்லது செய்ய, இவ்வளவு பெரிய தண்டனையா? என மனதில் நினைந்து, பின் தன் தந்தையிடம்,” தந்தையே என்னை மன்னித்து விடுங்கள். நான் சிறியவன்தானே! என் அறியாமையினால் தவறு இழைத்துவிட்டேன். இனி முருகனைப் போற்றி வாழ்வேன். தயை செய்து சாபத்திலிருந்து என்னை விடுவியுங்கள்” என்று கெஞ்சினான்.
முனிவர்கள் ஒருமுறை சாபம் கொடுத்தால் அதை மீட்கமாட்டார்கள் ‘முனி’ என்றாலே கோபம்தானே! ’வேல்முனி நம் குரு‘ என்று சொல்லும்படியான முருகன் முனிய அறியாத பெருமாளாவான்.
“சரி! நீ அறியாமல் செய்த பிழையாதலால், ஒன்றுமட்டும் என்னால் செய்ய முடியும். வேடர்களுக்குத் தலைவனாக “குஹன்“ என்னும் பெயரில் பிறந்து, ஸ்ரீ இராமபிரானின் அருளைப் பெறுவாய்“ என்றார்.
சிறுவனாக இருந்து, பின் வளர்ந்தால்கூட முனிவராகத்தான் ஆகி இருப்பான். ஆனால் குஹனாகப் பிறந்து, திருமாலின் அவதாரமான ஸ்ரீ இராமபிரானின் அன்பையும், அருளையும், தழுவலையும் பெற, அவன் மிக்க பேறு பெற்றுள்ளான் என்றே சொல்ல வேண்டும். இப் பேறு எதனால் வந்தது? நம் முருகப் பெருமானின் திரு நாமத்தினால் தானே!
“அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ் சமரில் அஞ்சலென வேல் தோன்றும்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்
--- என்று ஒரு பழம் பாடல் கூறுகின்றது.
சிவனும் முருகனும் ஒருவனே!
 “சம்பு நாதர் தந்தருள் பெருமாளே”, “சங்கரன் தந்திடும் பெருமாளே“, “சிவனார் அருள் சுதன் என்றார்க்கு நலனே அருள்“ என்று அருணகிரிநாதர், திருப்புகழ் பாடல்களில் முருகனை விளித்தாலும் “திரிபுரம் எரி செய்த கோவே!”, என்றும் “புலி சரம் பொன் திரு நடங்கொண்டார் கந்தப் பெருமாளே!“ என்றும், “மன்றுளாடும் சிவ சிவ ஹர ஹர தேவா” என்றும் சிவனும் முருகனும் ஒன்றே தான் என நமக்குத் தெளிவாக நினைவுபடுத் துகிறார்.
“அருவமும் உருவமாகி அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய் பிரம்மமாய் நின்ற ஜோதிப் பிழம்பு, அது ஓர் மேனியாகிக் கருணை கூர் முகங்கள் ஆறும் கரமது பன்னிரெண்டும் கொண்டே ஒரு திரு முருகனாய்“ அவதரித்தது" –கந்த புராணம்
அதையேதான் மேற் கண்ட பாடலும் விவரிக்கிறது. ஐந்து முகம் பெற்ற சிவபெருமானை நினைக்கையில், ஆறுமுகம் கொண்ட முருகனை நினைக்காமல் இருக்க முடியாது. கொடுமையான போர்க்களத்தில் அவனது வீர வேல் தோன்றும், ஒருகால் எப்போதேனும் அவனை நினைத்தால் அவனது இருகாலும் தோன்றும். ஆனால் இவைகள் யாவும் யாருக்குத் தோன்றும்? ‘முருகா’ என்று ஓதுவார் முன்.
விழிக்குத் துணை திரு மென் மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே
--- என்று கந்தர் அலங்காரப் பாடலில் அருணகிரிநாதர் அழகாகக் கூறுவார்.
மெய்மை குன்றா மொழிக்குத் துணை ---- நாம் பேசும் ஒவ்வொரு மொழிக்கும், சொல்லுக்கும் துணையாக இருப்பது ”முருகா எனும் நாமம்” என்று ஒருமையில் கூறாமல் 'முருகா எனும் நாமங்கள்’ என்று பன்மையில் கூறுகிறார் அருணகிரிநாதர். அப்படி யென்றால் அதற்கு என்ன பொருள்? முருகனுக்குப் பல நாமங்கள் இருந்தாலும் , அந்த ஒரு முருகன் நாமத்திலேயே அவைகள் யாவும் அடக்கம் என்றும், 'முருகா' என்று கூறிவிட்டால் அந்தப் பல நாமங்களை மொழிந்த நன்மைகளையும் பெறுவோம் என்ற உட் கருத்திலும் கூறுகின்றார் என்பதுதானே பொருள்? எந்த இடத்திலும், எந்தக் காலத்திலும், எவராலும், (நொண்டி ,முடம் கண்பார்வையற்றவன்) திருநாமத்தை நாவில் ஏற்றலாம். அவனை ஒரு சிறப்பமைந்த கோவிலில் கண்டு களிக்க வேண்டுமானால் தடைகள் இருக்கலாம். ஆனால் திருநாமம் அப்படியல்லவே!
இறைவனுடைய அர்ச்சா வடிவங்களைக் காட்டிலும், அவன் திருநாமங்கள் உயர்ந்தவைகளாகும். அழுக்காக இருக்கின்றபோதும், குழந்தைகளும், நோயாளிகளும், பெரியவர்களும், சிறியவர்களும் அவன் நாமத்தைக் கூறலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை,
'முருகா' என்னும் நாமத்தை நம் நாவில் ஏற்றி, அதைச் சொல்வதற்குப் பழகிவிட்டோமேயானால், நாள் ஆக ஆக, அந்த நாமம் நம் நாவுக்குத் துணையாகிப் போகும், அதனால், நம் நாவிலிருந்து பிறக்கும் குற்றங்களைத் தடுக்கலாம். அந்தக் குற்றங்கள் நால்வகைப் படும். புறம் கூறுதல், பொய் உரைத்தல், பிறர் மனம் புண் பட இன்னாத கூறல், பயன் இல்லாதன சொல்லல் ஆகியவையாகும். இவைகள் யாவும் அழிந்து, அதனால் நம் அகங்காரமும் அழிந்து மேன்மேலும் நல்ல காரியங்களைச் செய்யத் தூண்டுதலாகிறது. இப்படியாக நாம் தான் முருகன் நாமத்தைச் சொல்லிப் பயன் பெறுகிறோமேயன்றி அதனால் அவனுக்கு ஒரு லாபமும் இல்லை.
 ஒரு குகை ஆயிரம் வருடங்களாகப் பூட்டிக் கிடந்தது, அதற்கு ஒளி தர வேண்டு மென்றால் ஆயிரம் விளக்குகள் தேவையில்லையே , ஒரு விளக்கை ஏற்றி வைத்து உள்ளே நுழைந்தால் ஆயிரம் வருடகாலத்து இருட்டு போய்விடுமே! அதே போல முருகனுக்குப் பல நாமங்கள் இருந்தாலும் ‘முருகா’ என்று கூறினால் போதும், ஆயிரம் காலத்துப் பாவங்களும், மனத்தில் பலகாலமாகக் குடிகொண்டிருக்கும் இருளும் தொலையுமே! அப்பொழுது அவன் நாமங்கள் முழுவதையும் முழங்கிக் கொண்டே இருந்தால்? சொல்லவும்வேண்டுமோ!
“ஒருநாமம் ஓருருவம் ஒன்றும் இலார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டோமோ!” என்றார் மாணிக்க வாசகர். அதனால் சிவபிரானே முருகன் என்றுணர்ந்து அவனை நம் விருப்பம் போல் பல பெயர்கள் வைத்து அழைப்பதில் தவறே இல்லை.
 ‘முருகு' என்பது ஒரு பண்பு. உயர்ந்த பண்புகள் யாவும் ‘முருகு' என்ற ஒரு பொதுச் சொல்லால் வழங்கப்பெறும். முருகன் அப் பண்புகள் பலவற்றையும் உடைய பரம்பொருள் ஆவான். பண்புக்கும், பண்பிக்கும் உள்ள ஒற்றுமையால் பண்பின் பெயர் பண்பிக்கும், பண்பியின் பெயர் பண்புக்கும் அமையுமல்லவா?
உதாரணமாக ‘இறை‘ என்பது தலைமை என்ற பொருள்படும்; அது பண்பு; பண்பை உடையவன் – பண்பி – அதாவது இறைவன். இறையும், இறைவனும் ஒரே பொருளைத் தானே உணர்த்துகின்றன? அது போல ‘முருகனே’ ‘முருகு’; ‘முருகே – ‘முருகு’ ஆகும்.
சுருங்கக் கூறின், கண்ணுக்கு அழகாக, காதிற்கு நாதமாக, நாவிற்கு அமுதமாக, மூக்கிற்கு மணமாக, உடலுக்கு இனிய பரிசமாக ,கருத்திற்கு விருந்தாக, உயிருக்கு உணர்வாக இப்படி -- எல்லாமாக இருப்பவன் முருகன் .
திவாகரம், பிங்கலந்தை, நாம தீப நிகண்டு முதலியவைகளை நோக்கினால் அழகு, பூந்தட்டு, கள், எலுமிச்சை, எழுச்சி, அகில், முருகு என்னும் வாத்தியம்-- என்ற பொருளும் காணப்படும். இப்படியாகப் பலபொருட்கள் அனைத்தையும் உணர்த்தும் ஆற்றல் ‘முருகு’ என்ற ஒரு சொல்லுக்கு உள்ளதால் மேற்கண்ட அழகு ஆகிய பண்புகள் அத்தனையும் ஒரு சேரத் தாங்கி, எப்பொழுதும் மக்கள் மனத்தைப் பிணித்து , சாவா, மூவாப் பேரின்ப வடிவாய் நிற்பதொரு பேர் அருட்சக்தி இருப்பது நன்கு புலனாகும். அப்பொருளே ‘முருகன்‘ ஆவான்.
அருணகிரி அழைத்த நாமங்கள்
அருணகிரிநாதர் தாம் படைத்த நூல்களில் எண்ணவொணாத முருகன் திரு நாமங்களைக் கூறியிருக்கிறார். குருபரநாதன், மயில் வாகனன், சரவணபவன், சுப்பிரமணி,கிருபாகரன், குகன், தகப்பன் சாமி, ஞான பண்டிதன், செந்தூர்க் கந்தன் வேலாயுதன் இப்படிப்பலப்பல...
முருகன் சங்க நூல்களில் --- பிள்ளையார், சித்தன், சேய், செவ்வேள், முருகன், வேள், நெடுவேள், சேவற்கொடியோன், ஆலமர் செல்வன் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறான்.
முருகன் செந்நிறமுடையவராதலின் சேய், சேயோன் என்ற பெயர்ளைத் தாங்கி நிற்கிறான். “சேய்” என்ற பெயரே, இளமை குறித்துக் குழந்தைகளுக்குப் பெயராயிற்று.
‘வேள்‘ எனும் பெயர் விருப்பத்தைக் குறிக்கிறது. வேள்வி, வேட்கை, வேட்டல் முதலிய சொற்கள் முறையே யாகம், விருப்பம், மணம் செய்தல் போன்ற பல பொருளைத் தருமாதலால் இந்த மூன்றும் ‘வேள்’ என்பதிலிருந்து பிறந்தவையாகும்.
‘வேள்' என்று அழகன் மன்மதனுக்கும் ஒரு பெயர் உண்டு. மன்மதன் காமத்தை உண்டு பண்ணுவான், அதன் விளைவாகக் கரு உண்டாகிறது அதனால் அவனுக்கு ‘கருவேள்’ என்றும்; முருகன் செம்மையை உண்டு பண்ணுவதால் ‘செவ்வேள்’ என்றும் பெயர் வழங்கப்படும். வேளுக்கு ‘உபகாரம்’ என்ற வேறு ஒரு பொருளும் உண்டு.
 அதனால் ‘முருகன்’-- விரும்பப்படுதல், விருப்பத்தை விளைவித்தல், உபகாரம் என்ற மூன்று குணமும் கொண்டவனாகிறான். முருகனை விரும்பாதவர்கள் யார்? அவன் உபகாரத்துக்குக் குறைவே இல்லை “திருவேளைக்காரன் வகுப்பில்” அருணகிரிநாதர் எவ்வாறு முருகன், பக்தஜன வாரக்காரனாக, ஆண்மைக்காரனாக, நேர்மைக்காரனாக, ஓடக்காரனாக, திருத்தணியில் வாசக்காரனாக, நேயக்காரனாக, காவற்காரனாக, மேன்மைக்காரனாக, மாயக்காரனாக, கோபக்காரனாக, உபாயக் காரனாக, உபகாரக்காரனாக, வாசிக்காரனாக, ஆயக்காரனாக, விநோதக்காரனாக, கவி மாலைக்காரனாக, கேள்விக்காரனாக, வேலைக்காரனாக, உதாரக்காரனாக, சூறைக்காரனாக, வெகுரூபக்காரனாக, குறத்தி திரு வேளைக்காரனாக என்று அந்த அந்த வேளைக்கு, தம்மை மாற்றிக் கொள்ளும் திறம் வாய்ந்து வருவான் என்பதை அழகாக விளக்குகிறார். யாவரும் படித்து, அறிந்து இன்புற வேண்டிய ஒன்று.
வேலைக் கையில் ஏந்தி இருப்பதால் அவனுக்கு ‘வேலன் ’என்ற ஒரு பெயரும் உண்டு. பாவங்களைப் போக்கி, ஆன்மாக்களுடைய பாசத்தை நாசம் செய்பவன் என்பதால் அவனுக்கு ‘அரன் மகன்‘ என்ற பெயரும் உண்டு. கார்த்திகை மாதர் ஆறு பேருக்கும் அவர்கள் தவத்திற்காக இரங்கி, அவர்கள் முலையுண்டு வளர்ந்த மகன் ஆகையால் ‘கார்த்திகேயன்’, 'அறுமீன் காதலன்‘ என்ற பெயர்கள் படைத்தான்.
”உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்க அவர்
ஒருவர் ஒருவர்க்கு அவண் ஒர் ஓர் புத்ரன் ஆனவனும்"
(வேடிச்சி காவலன் வகுப்பு )
ஆறு கிருத்திகைப் பெண்களின் விருப்பத்திற்கு இசைந்து ஆறுமுகன், ஒவ்வொரு முருகனாக வடிவெடுத்து ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு மகனானான்.
‘அறுமுகன்‘ என்ற நாமத்தை அறியாதவர் உலகில் இல்லை. ‘கோழிக்கொடியோன்’ முருகனின் மற்றொரு பெயராகும். அக்னி தேவனையும், சூரன் உடற் பிளப்பில் ஒன்றான அதிர அரற்று கோழியையும் கொடியாகக் கொண்டவர் என்பதைக் குறிக்கும். கந்தன் – வலிய மைந்த தோள்களையுடையவன்-------
மற்றும் குகன், காங்கேயன், கடம்பன், குமரன், குழகன், சித்தன், சிலம்பன், சரவணபவன், சுரேசன்,செட்டி, சேந்தன், தேவசேனாபதி, விசாகன், வள்ளி மணாளன், சாமி, சுப்பிரமணியன் போன்ற பல பெயர்களுக்கு உரியவனாகி நிற்கின்றான் முருகன்.
ஒரே சூரியன் எவ்வாறு பல திசைகளுக்கும், பலதரப்பட்ட ஜீவராசிகளுக்கும், பாரபட்சம் பாராது ஒளியைத் தருகின்றானோ, அவ்வாறே அடியவர்க்கு எளிய பெருமாளாகிய முருகன், யார் நெஞ்சக் கன கல்லும் நெகிழ்ந்து உருகி ‘முருகா‘ என்று ஒருமுறை கூறுகிறார்களோ, அவர்கள் முன்,
திருவடியும், தண்டையும், சிலம்பும், சிலம்பு ஊடுருவப்
பொரு வடிவேலும், கடம்பும், தடம் புயம் ஆறிரண்டும் ,
மரு வடிவான வதனங்கள் ஆறும், மலர்க் கண்களும்
குரு வடிவாய் வந்து என் உள்ளம் குளிரக் குதி கொண்டவே
--- கந்தர் அலங்காரம்
என்று கூறுவதற்குத் தகுந்தாற் போல வந்து, நம் உள்ளத்தைக் குளிர வைத்து, நம் உயிர் காப்பான் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
முடியாப் பிறவிக் கடலில் புகார், முழுதும் கெடுக்கும்
மிடியால் படியில் விதனப் படார்; வெற்றி வேல் பெருமாள்,
அடியார்க்கு நல்ல பெருமாள், அவுணர் குலம் அடங்கப்
பொடி ஆக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே!
கந்தர் அலங்காரம் -- 33
வெற்றியைத் தரும் வேலைக் கரத்தில் தாங்கும் பெருமாளும், தன்னைப் பணியும் அடியவர்களுக்கு நன்மையைச் செய்யும் நல்ல பெருமாளும், அசுரர் குலம் முற்றும் அழித்துப் பொடியாக்கிய பெருமாளுமாகிய முருகனுடைய திருநாமத்தை விரும்பிச் சொல்கிறவர்கள், என்றும் முடிவு என்பதே இல்லாத பிறவியாகிய கடலிலே விழமாட்டார்கள். ஒருவரிடம் உள்ள எல்லாவற்றையும் அழியச் செய்யும் வறுமையினால் உலகத்தில் துயரம் அடைய மாட்டார்கள். (மறுவாழ்வும் இம்மை வாழ்வும் பெறுவர் என்பது கருத்து).
----------- “பெம்மான் முருகன் பிறவான் இறவான்“ --------
வாழ்க முருகன் நாமங்கள்! வளர்க அவன் அருள்!
|