'பூர்ணாவதாரமான கிருஷ்ணரா ஆயுர்விருத்தி மாதிரியான ஒரு ஐஹிகமான (இகவுலக) விஷயம் தெரிந்து கொண்டு அதிலே இவ்வளவு த்ருப்திப்பட்டார்?' என்று நினைக்கப்படாது. இந்த வித்யையில் ஒரு ஜீவன் தன்னுடைய பஞ்ச ப்ராணன்களையும் வரிசையாக வயஸு ருத்ர - ஆதித்யர்களுக்கு அர்ப்பணம் பண்ணியே அந்த 116 - வயஸு கொண்ட வாழ்க்கையின் முதல் - இரண்டாவது - மூன்றாவது பாகங்களைக் கடப்பதாக வருகிறது. அதற்குள்ளே என்னவெல்லாம் ரஹஸ்யமான பாரமார்த்திக தத்வங்களை ஒளித்து வைத்திருக்கிறதோ? '116 வயஸு ஆயுஸ்' என்பதிலேயே என்னென்ன 'மெடஃபிஸிகல்' ரஹஸ்யங்கள் ஒளிந்து கொண்டிருக்குமோ? திருட்டு க்ருஷ்ணர் அந்த ஆத்மார்த்தமான ரஹஸ்ய நவநீதத்தையெல்லாமும் ஸ்வீகரித்துக் கொண்டே த்ருப்திப்பட்டிருப்பாராக இருக்கும்!
அவர் த்ருப்திப்பட்டது இருக்கட்டும். அம்மா பேரில் பிள்ளையைச் சொல்வதிலல்லவா இருந்தோம்? இங்கே க்ருஷ்ணரைப் பற்றிச் சொல்லும்போது 'க்ருஷ்ணாய தேவகிபுத்ரா' என்றே இருக்கிறது!அவர் வஸுதேவர் பிள்ளை என்பதாலேயே பிரஸித்தமான 'வாஸுதேவ' நாமம் பெற்றவர். 116 வயஸு ஆயுஸிலும் முதல் பாகத்தில் வஸுக்கள்தான் ப்ராணாதாரமாக இருப்பது. ஆனாலும் தம்முடைய மாயவித்தனத்திற்கேற்ப, தேவகிபுத்ரர் என்றே இங்கே தம்மை ரிஷிக்குத் தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்!க்ருஷ்ணாவதாரத்தை ஏற்படுத்திய வித்து எதுவோ அதை வஸுதேவர் மனஸிலே தரித்து தேவகியின் மனஸுக்கு அனுப்பி வைத்ததாகத்தான் - பௌதிக கர்ப்பமாக இல்லாமல் மானஸீக ரீதியில் - பாகவதத்தில் சொல்லியிருக்கிறதே தவிர, சரீர ஸம்பந்தத்தால் அவர்களை அப்பா அம்மா என்று சொல்லும்படியாகக் காட்டவில்லை. ஆனாலும் அவர்களில் தேவகி வாஸ்தவமாகவே கர்ப்பவதியாக இருந்துதான் அவரைப்
பெற்றிருக்கிறாள். அதனால் அவளுக்குத்தான் ஓரளவுக்காவது மாத்ரு ஸ்தானம் கொடுக்க இடமிருக்கிறது, வஸுதேவருக்கு (பித்ரு ஸ்தானம்) கொடுக்க அந்த அளவுக்குக்கூட ந்யாயமில்லை என்றே பகவான் நினைத்து அப்படிச் சொல்லயிருக்கலாம்