read

5 views
Skip to first unread message

Sivan Krishnan

unread,
3:06 AM (20 hours ago) 3:06 AM
to amrith...@googlegroups.com
                                  
  
கடவுளே   ப்ளீஸ்......

இதை ஒரு கதையாகவோ, கட்டுரையாகவோ, கற்பனை கலந்து எழுத நானும்  முயற்சிக்க வில்லை, இந்த சம்பவத்தில் வரும் சிறிய பெண்ணும் அப்படி நினைக்கவில்லை, அவள் டீச்சருக்கும்  அப்படியொரு எண்ணம் சிறிதும் இல்லை. இது ஒரு யதார்த்தமாக நடந்த ஒரு நிகழ்ச்சி.  எங்கோ தினமும் நடப்பதும் கூட.

அது ஒரு வளர்ந்து வரும் ஒரு  கிராமம்.  அதன் வேகமான வளர்ச்சி ஒரு பட்டணமாக சீக்கிரம் அதை மாற்றி விடும். எங்கள் நங்கநல்லூர் அப்படி தான் வளர்ந்தது. 
ஊரில்  ஒரு கார்பொரேஷன் பள்ளிக்கூடம். ஐந்து வகுப்புகள் தான் அந்த  எலிமெண்டரி ஸ்கூலில். ஒன்றிலிருந்து ஐந்து வகுப்பு வரை  மொத்த மாணவர்கள் மாணவியர்கள் டீச்சர்கள்  எல்லோருமே சேர்ந்து 150க்கு கீழே. 

அந்த  சிறிய  பள்ளிக்கூடத்தில். மூன்றே டீச்சர்கள் .அதில்  சீதா டீச்சர் நிறை மாத கர்ப்பவதி. எப்போது வேண்டுமானாலும் லீவில் போய்விடுவாள். சரஸா  டீச்சர்,  பத்மா டீச்சர்   தலைமை ஆசிரியை    கமலா மூன்று பேரும்  தான் சமாளிக்கவேண்டும்.  ரெண்டு நாளில் சுதந்திர தினம் ஏற்பாடுகள் பண்ணுவதற்கு  கமலா டீச்சருக்கு அதிக வேலை. ஆகவே  சரசாவும் பத்மாவும்  வகுப்புளில்  பிஸி .  சீதா டீச்சர் அனுபவசாலி என்பதால் அடிக்கடி அவளை தான் கமலா பாதி பாடம் நடத்தும்  போது அடிக்கடி தலைமை ஆசிரியை அறைக்கு கூப்பிடுவாள். அன்றும் அது போல் தான். மத்தியானம் சாப்பாட்டுக்கப்புறம் நிறைய வேலை இருக்கிறது. 

நாலாம் வகுப்பில் பாடம் நடுத்திக்  கொண்டிருக்கும்போது  சீதாவுக்கு அடிவயிற்றில் வலி எடுக்க ஆரம்பித்து விட்டது. சீதாவினால் நிற்க முடியவில்லை. நாற்காலியில் சாய்ந்து கொண்டாள். 30 மாணவ மாணவிகளில்  21 பேர்  பெண்கள்.  அதில் அவள் பெண்  மீனாவும்  ஒரு மாணவி. 

ஒரு முக்கால் மணி நேரம் அந்த பீரியட் முடியும் வரை ஏதாவது குழந்தைகளுக்கு ஒரு வேலை கொடுக்க எண்ணினாள் .  என்ன செய்ய சொல்லலாம்?   சீதாவுக்கு கடவுள் நம்பிக்கை ஜாஸ்தி. அதையே உபயோகித்துக் கொண்டாள் .

"குழந்தைகளே, உங்களுக்கு இன்று ஒரு புது  அனுபவம் கொடுக்க போகிறேன். நீங்களாக யோசித்து, மற்ற மாணவர்களோடு பேசாமல் தானாகவே  ஒரு  கடிதம் எழுத வேண்டும்.  யாருக்குத்  தெரியுமா?  உங்களுக்கு எது அவசியமாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அது வேண்டும் என்று கடவுளிடம் கேட்க வேண்டும்.  ஒரு பக்கம் கட்டாயம் 20 வரிகள் எழுதவேண்டும்.   ஏழு நிமிஷம் டைம் கொடுப்பேன். யோசிக்க வேண்டும். பிறகு மெளனமாக  மற்றவர்கள் யாரையும்  கேட்காமல் தானாகவே எழுதவேண்டும். மொத்த நேரம் 30-35 நிமிஷம் தான். நான் மணி அடிக்கும்போது நிறுத்திவிடவேண்டும். ஒவ்வொருவரும் உங்கள் பேரை முதலில் தாளில் எழுதவேண்டும். அப்போதுதான் மார்க் போட்டு யார் எவ்வளவு மார்க் என்று  சொல்வேன். முதல் பரிசு சாக்லேட்  கொடுப்பேன். 

''ஆரம்பியுங்கள்'' என்று சீதா டீச்சர் சொன்னதும் குழந்தைகள் எழுத ஆரம்பித்தார்கள். 

வயிற்று வலியை  கொஞ்சம் கண்ணை மூடி  சாய்ந்து  உட்கார்ந்து  பொறுத்துக்  கொள்ள  அவகாசம் கிடைத்தது.  அந்த பீரியட்  முடியும் நேரம் வந்துவிட்டது. மத்தியானம் கொஞ்சம் படுக்க நேரம் கிடைக்கும்.  
ஆசிரியர்கள் ஒய்வு எடுக்கும் அறையில் சாய்ந்து கொண்டு குழந்தைகள் எழுதின  கடிதங்களை படித்தாள் .    ஒரு குழந்தையின்  கடிதம் அவளை  ரொம்ப  உலுக்கியது.  அசந்தே போய் விட்டாள் .இதென்ன விசித்ரம்.  அதை  வீட்டுக்கு  கொண்டு போய் அன்று மாலை  ஆபிசிலிருந்து வந்த தனது கணவன் கோபாலனிடம்  காட்டினாள்.   கோபாலன்  ரொம்ப களைத்துப் போயிருந்தான்.   சீதா,   நீயே  அதைப் படியேன்.  எனக்கு ரொம்ப  டயர்டாக . படி நான் கேட்கிறேன். '' சீதா படித்தாள் ;

"ஏ,  கடவுளே,  உன்னை எனக்கு தெரியாது. டீச்சர்  கேட்க சொன்னதால் உன்னிடம் கேட்கிறேன்.   நான்  உன்னிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான்.  என்னை சீக்கிரம்  ஒரு மொபைல் செல் டெலிபோனாகவோ,
 அல்லது  கலர்  டி வி  யாகவோ  மாற்றிவிடுகிறாயா?  உடனே பண்ணு.  அப்போ தான்,   எனக்கு என்று  ஒரு தனி  இடம் மரியாதை என் வீட்டில் எனக்கு  கிடைக்கும். அப்போது தான்   என்னை சுற்றி   எப்போதும் என்  குடும்பத்தில்  அனைவரும்  இருப்பார்கள்.  என் தந்தை என்னை விரட்டி விட்டு  போனிலேயே பேசிக்கொண்டிருப்பார்.  எங்கள் பெரியம்மா, அம்மா, வேலைக்கார முனியம்மா எல்லோருமே  டிவியில் சீரியல் டிராமா பார்த்துக்கொண்டிருப்பவர்கள்  என்னருகிலேயே இருப்பார்கள். இப்போது நான் ஏதாவது கேட்டல் கூட  பேசமாட்டேன் என்கிறார்கள். என்கிட்டே  இருந்து   வரும்  பேச்சை நம்புவார்கள்.  உன்னிப்பாக கேட்பார்கள்.  குறுக்கே பேசாமல்  முழு  கவனமும்  என்  மேலே இருக்கும்  எனக்கு உடம்பு சரியில்லை, நான்  வேலை செய்ய வில்லை   என்றால்  உடனே என்னை கவனித்து  சரியாக்கி  விடுவார்கள்.  எவ்வளவோ களைப்பாக  இருந்தாலும் ஆபிசிலிருந்து   வந்ததும் அப்பா  என்னெதிரே கண்டிப்பாக  உட்காருவார்.   என்   அம்மா  எவ்வளவு  வேலையிருந்தாலும்   என்னிடம் நிமிஷத்துக்கு ஒரு   தடையாவது  வருவாள். எதிரில் உட்கார்ந்து கண் கொட்டாமல் என்னை பார்த்துக் கொண்டிருப்பாள் வீட்டுக்கு வருவோர்கள் கூட  என்னெதிரேயே  என்னை கவனித்துக் கொண்டிருப்பார்கள். எல்லோருமே  யார் எனக்கு  முன்னாலே  இருப்பது என்று  போட்டி போட்டுக்கொண்டு  என் அருகில் உட்காருவார்கள்.  எனக்கு  அருகிலேயே  இருக்க  அலைவார்கள். எனக்கு  ரொம்ப ரொம்ப  பெருமையாக அப்போது இருக்கும். இப்போது என்னை யாரும் கவனிப்பதே இல்லை. ஏதாவது பேசினால் கூட போ போ  என்று விரட்டுகிறார்கள். எனக்கு இது பிடிக்கவில்லை. 
'கடவுளே  ப்ளீஸ்,  நீ  என்னை  எங்கள் வீட்டு   டீ வியாக  மாற்றினால் அப்போது தான் எல்லோருக்கும் முக்கியமாக என் அப்பாவுக்கு   என்னை  பிடிக்கும்.  எனக்கும் வீட்டில்  எல்லாருடனும்   சந்தோஷமாக இருக்க பிடிக்கும். இது எனக்கு தெரியும். அதனால் தான் தயவு செய்து என்னை எப்படியாவது ஒரு டிவியாகவாவது  அல்லது  மொபைல் டெலிபோனகவாவது  என் வீட்டில் இருக்கும்படியாக பண்ணிவிடு. உனக்கு நன்றி சொல்கிறேன். வணக்கம்
இப்படிக்கு 
பாலாம்பிகை. 4வது வகுப்பு.  
இப்படிக்கு  
G.பாலாம்பிகை என்கிற  மீனா..."

இதை டீச்சர்  புருஷனுக்கு  படித்து  காட்டினதும் அவன்  சொன்னான். ' த்சோ  த்சோ ... சீதா,  பாவம்....  அந்த  குழந்தையின்  மனதில் எவ்வளவு வேதனை  பார்த்தாயா? எவ்வளவு ஏக்கம் மனதில் இருந்தால் அந்த குழந்தை இப்படி எழுதி இருக்கும்?  சே சே..  எவ்வளவு  மோசமான பெற்றோர் அந்த குழந்தைக்கு  பார்த்தாயா?  என்று  கோபாலன் அங்கலாய்த்தான்.   சீதா   ஹாஹா  என்று சிரித்தாள்.  அதில் கோபமும் இருந்தது.
இதை எழுதிய குழந்தை உங்களுக்கு தெரிந்தவள்  தான்.  இந்தாருங்கள் நீங்களே  பாருங்கள்....

''என்ன சீதா  இது?  நம்ம  மீனாவா......?

"எங்கள்  பள்ளிக்கூடத்திலேயே  4 வது   படிக்கும் உங்கள்  பெண்  மீனா  தான்  இதை  எழுதியிருக்கிறாள். இனிமேலாவது  வீட்டில் அடிக்கடி மொபைல் போன் பேசாதீர்கள். டிவியில் பட்டி மன்றம்,  கிரிக்கெட் மேகி,  அரசியல் மேடை,  சீரியல்,  சினிமா  எதுவும்  குழந்தை வீட்டில்  இருக்கும்போது  வேண்டாம். அவள் மேல் கொஞ்சம் அக்கரை  காட்டவேண்டும் என்று அடிக்கடி சொல்வேனே   இப்போது  புரிகிறதா?!  


Reply all
Reply to author
Forward
0 new messages