WRITE STORY

3 views
Skip to first unread message

Sivan Krishnan

unread,
Jan 5, 2026, 3:16:53 AM (5 days ago) Jan 5
to amrith...@googlegroups.com
எல்லாம் அவன் செயல்..--  நங்கநல்லூர்  J K   SIVAN 

அது  ஒரு பிரபல  ஆஸ்பத்ரி.  ஆபரேஷன் தியேட்டரில்   பெரும் புகழ் பெற்ற  சர்ஜன்  டாக்டர்  சுப்புராமன் மிகவும்  பிஸியாக  இருக்கிறார். இன்னும்  சில  நிமிஷங்களில் அடுத்ததாக  அவர்  ஒரு மிகக்  கடினமான ஆபரேஷன் செய்ய வேண்டும். . 

ரத்தக்குழாய்களை வெட்டி ஓட்டுவதில் உலகத்திலேயே   நிபுணர், முதல்வர், எனப் பெயர் பெற்றவர் டாக்டர் சுப்புராமன். ஒவ்வொரு நாளும் அவர் பல ஆபரேஷன்கள் செய்து உயிர்களைக்  காப்பாற்றி வரும்  எமனின் நம்பர் ஒன்  எதிரி.  நாற்பது வருஷத்துக்கு மேலாக இப்படி ஒரு தியாக வாழ்க்கை. 

இதோ இன்று அவர்  எதிரே  ஒரு  MRI  ஸ்கேன் . பல  நூறு  தடவை அதை முறைத்துப் பார்த்தும் அவருக்கு  பிடிபடவில்லை. வழி .தெரியாத காட்டில் தவிக்கிறார்.  உடல் சிலிர்த்தது.   குளிர் சாதன அறையில் இருந்தாலும் அவர் உடல் முகம் எல்லாம் 'குப்' என்று  வியர்த்து விட்டது.  அதி அற்புதமாக  பணிபுரியும் கைகள் நடுங்கியது.   MRI  ஸ்கேன் சொல்வதைப் பார்த்தால்  இதோ இப்போது ஒரு மேஜர் ஆபரேஷன் செய்யப்போகிறார்.. எதிரே  கிடக்கும் பெண் நிச்சயம் உயிர் தப்பவே போவதில்லை. அவளைக்  காப்பாற்றமுடியாது.  கருப்பு வெளுப்பில்  உண்மையைக்  கக்குகிறது MRI  ஸ்கேன்.

''இந்த பெண்ணின் இதயத்தைப்  பிளந்து ஒரு நுண்ணிய  ரத்தக்குழாயை  ஆபரேஷன் செய்யப்போகி றார். அடுத்த கணமே அவள் உயிர் பிரியப்போகிறது நிச்சயம். 40 வருஷ  அனுபவம், புகழ், பெருமை, பெயர்  எல்லாமே,  இந்த ஒரு ஆபரேஷனில் அவரை மண்ணைக்  கவ்வ வைக்கப்  போகிறது. 

சென்னையின் அத்தனை சந்து பொந்துகளையும் அறிந்த ஆட்டோ ரிக்ஷாக்காரர் போல மனித  உடலின் அத்தனை  பாகங்களையும் சின்ன சின்ன ரத்தக்குழாய்களின்  பாதைகளையும் கூட  தலை கீழாக, நன்றாக அறிந்தவர்  டாக்டர்  சுப்புராமன்.    அவர்  உள்ளங்கைகளில் எத்தனையோ ஆயிரம்  இதயங்கள் துடித்துக் கொண்டு இருந்தவை, இருப்பவை,  இருக்கப்  போகிறவை. சுருங்கி விரியும் இரத்தம் ஓடும்  குழாய்களை clamp  போட்டு  ரத்த போக்கை நிறுத்துபவர். கொஞ்சம்  தவறினால் கூட போதும்.  மேலே கூரை வரை  வேகமாக ரத்தத்தை பீச்சுபவை அல்லவா அந்த குழாய்கள். 

ஆனால்  எதிரே  உள்ள  MRI  ஸ்கேன்ஐ பார்த்ததும் ஏன் தலை சுற்றுகிறது? இத்தனை வருஷமும் இல்லாத ஒரு சோதனை...
முதன் முதலாக கத்தி, கத்திரிக்கோல் பிடிக்கும் சர்ஜன் போல் ஏன் அவருக்கு  இன்று ஏன் இது சவாலாக அவரது  தன்னம்பிக்கையைக் குறைக்கிறது? நான் ஒரு கொலையாளி இன்னும் சில நிமிஷங்களில்.. என்று அவரை எண்ண  வைக்கிறது. . 

காமாக்ஷி 27 வயதுக்காரி,  கணவன் பொறுப்பில்லாமல் அவளை  விட்டு எங்கோ போய்  ரெண்டு வருஷம் ஆகிறது..மூன்று வயது மஹா லக்ஷ்மியின்  அம்மா....அப்பா இல்லாத பெண்.  உலகத்தில் ஒரே  உறவாக இருக்கும்   அம்மாவை அந்த குழந்தை இழக்க நான் காரணமாக போகிறேனா?  ஒரு  பாவமும் அறியாத குழந்தையை அனாதையாக்கப்போகிற ராக்ஷசனாக போகிறேனா? இனிமேல்  காமாக்ஷி ஓட்டலில் சமையல் வேலை இரவும் பகலும்   செய்ய  உயிரோடு இருக்கப் போவதில்லை.. ஏதோ கஷ்டப்பட்டு சம்பாதித்து குழந்தை   மஹாலக்ஷ்மியை இது வரை காப்பாற்றினவள் இனி இல்லாமல் போகப்போகிறாள். யார் அந்த குழந்தையைக்  காப்பாற்றப்போகிறார்கள்?.

நாலு  மணி நேரத்துக்கு முன்பு   யாருக்கோ  காப்பி  ஆற்றியவள் தடாலென்று கீழே விழுந்ததாக ரிப்போர்ட் சொல்லியது. இங்கே தூக்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள். 

MRI  ஸ்கேன் அவளது  மூளையில்  ஒரு முக்கியமான  ரத்தக்குழாய் அடைபட்டு   ரத்தக்குழாயின் மெல்லிய  மயிரிழையை
 விட  மெலிந்த கனமுள்ள  குழாய் பார்த்துக்கொண்டே வருகிறது....இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக   குழாய்  உப்புகிறது. எந்த நேரமும் வெடிக்கும்,, ரத்தம் சிதறும், உயிர் அடுத்த கணமே நிற்கும்..இது போன்ற  கேஸ்கள் பார்த்திருக்கிறார். ஆனால்  இந்த குழாய் மற்ற ரத்த குழாய்கள் போல் இல்லை... மூளையின் முக்கிய பகுதியை சுற்றி வளைத்துக் கொண்டு செல்லும் குழாய் இது...என்பதால் அதன் மிக மிக  நுண்ணிய  ரத்தக்குழாய் சுவர்  கவலையளிக்கிறது...கெட்டியாக பாம்பு இரையை வளைத்து க்கொண்டிருப்பது போல் மூளையின் செயல்பாடு பகுதியை நெருக்கமாக சுற்றி  வளைத்துக்  கொண்டு செல்லும் குழாய்.

''ஆபரேஷன் செய்ய முடியும். நிச்சயம் செய்வேன். செய்ய முடியும். '' என்று தனக்குள் சொல்லிக்கொண்டார் டாக்டர் சுப்புராமன்.  எதிரே  காமாக்ஷி இன்னும் 48 மணிநேரத்திற்குள் வெடிக்கப்போகும்  அந்த  மூளைக்குழாயோடு கிடக்கிறாள்.

மற்ற டாக்டர்கள்  ''இவளைக் காப்பாற்ற முடியவே முடியாது. மரணம் எந்த வினாடியும் நேரலாம்.  ஆபரேஷன் செய்தும் ஒன்று பயன் இல்லை என்று  கை  விரிக்கிறார்கள்... காமாக்ஷி  பாதி வழி எமலோகம் போய்விட்டாள்....உங்களால் இந்த  ஆபரேஷன் பண்ணி  அவளைக் காப்பாற்ற முடியாது.  ஆபரேஷன் வெற்றியாகவே வழியில்லை.. வேண்டாம் டாக்டர். இயற்கையாக அவளைச் சாக விடுங்கள்.  வேறே வழியில்லை...''  மற்ற  டாக்டர்கள் எல்லோரும் சொல்லும் அறிவுரை இது..

சுப்புராமன்  எதிரே கிடைக்கும்  காமாட்சியின் கண்களை பார்க்கிறார்.  கண்ணாடி வழியாக எதிரே உள்ள அறையில் ஒரு பெஞ்சின் மேல் அமர்ந்து குழந்தை   மஹாலக்ஷ்மி மும்முரமாக  ஒரு  யானை பொம்மைக்கு  வர்ணம் தீட்டிக் கொண்டி ருக்கிறாள். டாக்டர் வாங்கி கொடுத்த  நோட்  கலர்  பென்சில்...பழைய  சாயம் போன  கவுன் போட்டிருக்கிறாள். காமாக்ஷி   இறந்து போனால்...?? மஹாலக்ஷ்மியின் கதி என்ன???

ஏதோ ஒரு அசுர முடிவுக்கு வந்து விட்டார்  சுப்புராமன்...''ஆப்பரேஷனுக்கு  உடனே   ரெடி பண்ணுங்கள்..இந்த கேஸை சவாலாக  எடுத்துக்கொண்டு  உடனே ஆபரேஷன் பண்ணப்போகிறேன்''

டாக்டர்  சுப்புராமனை  ஒரு வெறி பிடித்த, பைத்யக்காரனைப் போல்  எல்லோரும் பார்க்கிறார்கள். பார்த்து விட்டுப் போகட்டுமே....

மூன்றரை மணிநேரமாக ரொம்ப தீவிரமாக இந்த  ரத்தக்குழாயை எப்படி கையாள்வது, மயிரினும் மெல்லிய  குழாயை எப்படி துண்டித்து உள்ளே  ரத்தப்போக்கை சீராக்கி மீண்டும் மூடி ஒட்டவைப்பது....எல்லாம் குறிப்பிட்ட வினாடிகளுக்குள் முடிந்தேயாகவேண்டும்.. என் அனுபவ கை  விரல்களுக்கு அமானுஷ்ய  சக்தி இருந்தால் மட்டுமே அது சாத்தியம்... டாக்டரின் மனதுக்குள்  பக்ஷி சொல்லியது. கருடன். நாராயணனின் வாகனம்..

கட கட வென்று  அவர்  உத்தரவு,  கட்டளைகள் செயல் பெற்றன..  அவர் கைகள் இரும்பாயின. அவர் மனம் கல்லாயிற்று.. ''காமாக்ஷி உன்னை எப்படியாவது காப்பாற்றுகிறேன்''  உனக்காக அல்ல.. அதோ மஹாலக்ஷ்மிக்காக.... என்று ஒரு உறுதி..
எதிரே  கூரிய  ஸ்கால்பெல் .scalpel   சிறிய கத்தி, எத்தனையோ ஆபரேஷன்களை வெற்றியாக மடித்த  உபகரணம்  கையில் ஏறிவிட்டது...
பழுதுபட்ட  குழாயை அடைய வழியே இல்லையே...எந்த கோணத்திலும் நெருங்க முடியாத சிக்கல்.. தற்கொலை முயற்சியில் அல்லவா டாக்டர் இறங்கி விட்டார்?.... ரத்த ஓட்டம், தையல், வெட்டுகள், ரத்த போக்கு  எல்லாம் அத்துபடியான  ஒரு அனுபவ சாலி டாக்டர்....இருந்தும் இந்த குழாய் ஒரு புதிராக காட்சி தருகிறதே...

 கண் மூடி ஒரு கணம் உள்ளே  ...நோக்கினார்  ''வைத்தீஸ்வரன்....  உலகுக்கு ஒரே பெரிய டாக்டர்.. அவர் அனுக்ரஹம்  இப்போது ரொம்ப ரொம்ப தேவை..முதல் முதல் டாக்டராக  பட்டம் பெற்று  முதல் ஆபரேஷன் செய்யப்  போகும் முன்   சாரதா பாட்டி  கொடுத்த படம்... ''கண்ணா  சுப்பு, இதை வச்சுக்கோடா. பகவான் தாண்டா மஹா  பெரிய டாக்டர், மஹா  வைத்ய நாதன், ஈஸ்வரன் டா.. அவனை வேண்டிண்டு உன் வேலையை சரியா செய்... பகவான் மத்ததெல்லாம் பார்த்துக் குவான்..அவனால் முடியாதது எதுவும் இல்லைடா கண்ணா.   மருந்து உடலை மட்டும் தாண்டா சரிப்படுத்தும்... உயிரை காப்பாத்தறது ஈஸ்வரன் தாண்டா''.   சாரதா பாட்டியின் குரல்  உள்ளே கணீரென்று ஒலித்தது...

 ''ஹே ப்ரபோ'' என   வைத்தீஸ்வரனை மனதில் வேண்டியவாறு ஆபரேஷன் ஆரம்பித்துவிட்டார்..
 ''பகவானே இத்தனை வருஷங்களில் நான் எதிர் கொள்ளாத  சோதனை இது..நான் ஒரு உபகரணம் உனக்கு. நீ தான்  டாக்டர் . இந்த பெண்ணின் உயிரை மீட்டுக்கொடு...தெய்வமே... 

நர்ஸகள்  வெள்ளை சீருடையில் கையை,  தலையை, வாயை கவசத்தால்  மூடியவாறு அங்கும் இங்கும் சிட்டாக அலைந்தார்
கள் .மயக்கமருந்து கொடுக்கும்  anesthesiologist க்கு  முடிவு நன்றாக வெட்டவெளிச்சமாக தெரியும்.  டாக்டர் கண்ணை பார்க்கவே  கூசியது அவருக்கு.  ஏதோ ஒரு பெரிய  தோற்கப்போகும் யுத்தத்துக்கு எல்லாரும் தயாரானார்கள்...
சவாலாக இருந்த குழாயை டாக்டர் எப்படியோ நெருங்கி விட்டார். எல்லாம் அசுரவேகத்தில்.... இங்கே ஒரு உயிர் ஊசலாடு கிறது. மஹாலக்ஷ்மி  யானை   வாலுக்கு   வர்ணம் தீட்டி முடிக்கப்  போகிறாள்..  நேரே பார்க்கும்போது MRI  scan  காட்டியதை விட ரொம்ப மெல்லிசான குழாய். தொட்டாலே வெடிக்கப்போகிறது.... ஒரு தவறான  moove  போதும். அப்புறம் மூச்சே இல்லை..   விலை உயர்ந்த கம்பியூட்டர்  மெஷின்கள்... மானிட்டர்கள் வெளிச்சம், சப்தத்துடன் இயங்கின... 

அப்போது என்ன நடந்தது தெரியுமா?
ஆபரேஷன் அறையில்  நிசப்தம்.. மரண அமைதி.. டாக்டர் சுப்புராமனின் உடல் திடீரென்று சூடு பிடித்தது. அவர் பின்னல் அவரை ஒட்டி யார் நிற்பது?? தோளில்  கைகளில் அமானுஷ்ய வேகம் சக்தி.. திறமை..விரல் நுனிகள் அற்புதமாக நர்த்தனமாடின.. எப்படி என் விரல்கள் என்னுடைய கட்டுப்பாடே இல்லாமல் , தானாகவே  இயங்குகிறது?... நான் பேசாமல் என் விரல்களின் அசைவை பார்த்துக் கொண்டிருக்கிறேனா??என் விரல்களை இயக்குவது யார்... என்ன செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும், என உன்னை  ஆட்டிவைப்பது யார்..?  என்ன ஆச்சர்யம் இது? எப்படி முடியாத ஒன்றை என் விரல்நுனி முடித்து வைக்கிறது.  குழாய் துண்டிக்கப்பட்டு அதனுள் ரத்த ஓட்ட தடையை நீக்கி மீண்டும் மெலிதான அந்த குழாயை  இணைத்து, தையல் வேறு போட்டு  ரத்தம் ஒரு பொட்டும்  சிந்தாமல் ஒட்டவைத்து. .....கைவிரல்களின் நடனம் முடிந்தது....  இந்த பெண்ணின் உடலை இனி தையல் போட்டு வழக்கம் போல் மூடிவிடுங்கள் ஆபரேஷன் செய்தாகிவிட்டது.  எல்லாம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது....  மெஷினைப்  பார்க்கிறார்கள், ரத்த ஓட்டம் சீராக ஓடுகிறது. குழாய் எதுவும் நடக்காதது போல் இயங்குகிறது. அதை எப்படி வெட்டி, ஓட்ட முடிந்தது?.. ரத்த அழுத்தம் சீராக இருக்கிறது.....ரத்த ஓட்ட  ப்ளாக்  BLOCK தடை  சீர் செய்யப்பட்டுவிட்டது... உப்பல் இனி கிடையாது. மெல்லிய அந்த முக்கிய குழாய் இனி  வெடிக்க வழியில்லை....அப்பாடா  எப்படி இவ்வளவு பெரிய பேராபத்து கடந்து போனது??

டாக்டர் சுப்புராமன்  ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளியே வந்துவிட்டார்.  குளித்து விட்டு வந்தது போல் உடல் வியர்த்திருந்தது..

அடுத்த அறையில் மஹாலக்ஷ்மியின் யானை, பச்சை வர்ண உடலுடன்  ரத்த சிவப்பு காதுகளுடன் மஞ்சள் நிற  கால்களோடு அவரைப் பார்த்துச்  சிரித்தது. குழந்தையை கட்டித் தழுவினார்... அவள் அம்மா அவளுக்கு மீண்டும் கிடைத்துவிட்டாள்.எமனுலகு சென்றவள் திரும்பி வந்துவிட்டாள் .. 

ஒரு  வாரத்துக்குப் பின்  மெதுவாக  காமாட்சியை வெளியே ஆஸ்பத்திரி ஜெனரல் வார்டுக்கு மாற்றினார்கள். அவள் தலைமாட்டில் டாக்டர்   தலைகாணிக்கு அடியே வைத்திருந்த வைத்தீஸ்வரன் பட த்தை எடுத்துக்  கண்ணில் ஒற்றிக் கொண்ட பின் தனது கோட்  பாக்கெட்டில் போட்டுக்கொண்டு நடந்தார். 

வெகு சீக்கிரம் காமாக்ஷி குணமடைந்து டாக்டருக்கு நன்றி சொல்ல அவர் அறைக்குள் சென்று அவர் முன் கைகூப்பி
 வணங்கி நின்றாள். அருகே  குழந்தை மஹாலக்ஷ்மி. முடிவான  ஹாஸ்பிடல் ரிப்போர்ட் தயாராக அவர் கையெழுத்துக்கு காத்திருந்தது அதை படித்துவிட்டு கையெழுத்திட்டார்.

''டாக்டர்  நீங்கள் தான் கடவுள். இந்த ஏழையை காப்பாற்றின ப்ரத்யக்ஷ தெய்வம்' என கண்ணீர்விட்டாள் காமாக்ஷி.
''இல்லேம்மா  நான்  ஒண்ணுமே செய்யலே. கூட இருந்தவர்....''  என்கிறார்.

அவர் மனதில்  எல்லா  பக்கமும்  வழி   மூடப்பட்டு  இருந்தாலும்  எப்படியோ ஒரு வழி கிடைக்க காரணம் தான் இல்லை.   தன்னுடைய கையில் இருந்த கத்தி, கத்திரிக்கோல், உபகரணங்களை  தான் இயக்கவில்லை.. ஆபரேஷன் டேபிளில் தனக்குப்  பின்னால் இருந்து தனது   கை விரல்களை அதி வேகமாக   இயக்கியவர் வேறு ஒருவர்... டாக்டர் வைத்தீஸ்வரன்.
அமானுஷ்ய வேகத்தில் யாராலும் முடியாததை.  முடித்துக் காட்டியவர்  அவரே... ஜெய் வைத்தீஸ்வரா''  என்ற  எண்ணம் தான் டாக்டர் மனதில் அப்போது  தோன்றியது. ..

காமாக்ஷியோ  டாக்டர்  ஏதோ பணிவாக,   கர்வமில்லாமல், தன்னோடு இருந்த மற்ற  டாக்டர்கள்  நர்ஸ்கள் இருந்ததை   சுட்டிக்காட்டி அவர்  ''இல்லேம்மா  நான் மட்டும் இதை செய்யலே''  என்று  சொல்வதாக நினைத்தாள் . எல்லோரும் அவர் திறமையைப் புகழ்ந்து  நம்பமுடியாத அதிசயமென்று   பாராட்டினார்கள்....
நண்பர்களே  ஒன்று நிச்சயம்.    'விஞ்ஞானம் எப்போதுமே ஒரு விஷயத்தை ''அது எப்படி’ என்பதை குறிப்பிட்ட அளவு வரை தான்  விளக்கும். ரத்த ஓட்டம்,  நரம்புத் தொடுப்புகள்—இவற்றின்  பொது தன்மையை விளக்கும். ஆனால் ‘ஏன்,எப்படி,  எதனால் அதை மீறி?’ என்பதை விஞ்ஞானத்தால் ஒருபோதும் விளக்க முடியாது. சாத்தியமற்றதை எதிர்கொள்ளும் போது, வழியே இல்லாத இடத்தில் ஒரு மனிதன் எப்படி திடீரென வழியை கண்டுபிடிக்கிறான் என்பதை அதனால்  சொல்ல முடியாது. நாம் எல்லோருமே  கருவிகள் தான்.  காமாக்ஷிக்கு ஆபரேஷன் நடந்தபோது டாக்டர்  சுப்புராமன் வெறுமே ஒரு கருவி மட்டுமே. ஆபரேஷனை நடத்தி முடித்தது  டாக்டர் மஹா வைத்தியநாதன்.  நாற்பது வருஷங்களுக்கு முன்பு சாரதா பாட்டி சொன்னது ரொம்ப ரொம்ப  வாஸ்தவம்..
Reply all
Reply to author
Forward
0 new messages