பையன் "நீங்கள் தான் ஏக்நாத் ஸ்வாமியா" என்றான்
அவர் தலையாட்டின மறுகணம் தடால் என்று அந்த பையன் அவர் காலடியில் விழுந்தான்
"சுவாமி உங்களைப்பற்றி ஊரில் கேள்விப்பட்டேன். உதவி செய்வீர்கள் என்று நம்பி வந்திருக்கிறேன். எனக்கு பெற்றோர் இல்லை. வெளி தேசத்தில் இருந்து வந்திருக்கிறேன். உங்களிடம் சிஷ்யனாக இருக்க ரொம்ப விருப்பம். தாங்கள் இந்த ஏழையை ஏற்றுக்கொள்வீர்களா?"
"உனக்கு என்னிடம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறதப்பா?"
"சுவாமி நீங்கள் எனக்கு வேதம் மந்திரம் எல்லாம் கற்றுக் கொடுங்களேன்"
"உன் தாய் தந்தையர் எங்கிருக்கிறார்கள் ?"
"யாருமில்லை இப்போது. நீங்கள் தான் சகலமும்" .
"நீ எந்த ஊரப்பா?"
"சுவாமி நான் துவாரகையை சேர்ந்தவன். என் பெயர் கண்டீய கிருஷ்ணன். பையன் அன்று முதலே ஏக நாதரின் சிஷ்யனானான். இல்லை இல்லை அவர் பிள்ளையாகவே ஆனான். அவருக்கும் அவர் மனைவிக்கும் வலது கை அவன்.! பூ தொடுப்பது, பூஜைக்கு ஏற்பாடு செய்வது. கடைக்கு சென்று காய்கறி வாங்குவது. வீடு துடைப்பது, பெருக்குவது, துணி துவைப்பது. கை கால் பிடித்து விடுவது சர்வமும் அவனே.
அன்று ஏக்னாதரின் அப்பா ஸ்ராத்தம். வீட்டில் ஸ்ராத்த சமையல் நடந்து கொண்டிருந்தது. தெருவில் சில குடியானவ ஜனங்கள் போய்கொண்டிருந்தனர். நல்ல பசியில் அவர்கள் உணவு எங்கே கிடைக்கும் என்று அலைந்து கொண்டிருந்த வேளையில் கம கம என்று சமையல் வாசனை ஏக்னாதரின் வீட்டிலிருந்து வந்து கொண்டிருப்பதை நின்று ரசித்து சுவாசித்து கொண்டிருந்தனர்.
" இந்த மாதிரி சாப்பாடு நமக்கு எந்த ஜன்மத்தில் கிடைக்க போகிறது?" என்று ஒருவன் சொன்னான்.
"ஆமாம் நாம் எல்லாம் கொடுத்து வைக்காத பாவிகள் ஆச்சே நமக்கு எப்படி அய்யா இது கிடைக்கும்" என்று மற்றொருவன் சொன்னது இது அத்தனையும் உள்ளே ஏக நாத்தின் காதில் விழுந்தது. "விட்டலா இது என்ன சோதனை" என்று மனங்கனிந்து வேண்டி அவர்களை உள்ளே கூப்பிட்டார். வயிறு நிறைய ஸ்ராத்த சமையல் பூரா அவர்கள் அத்தனை பேருக்கும் உபசரித்து அளித்தார். "பகவானே நீங்கள் நீடூழி வாழவேண்டும்". என்று மனமார வாழ்த்தி அவர்கள் சென்றனர்.
ஸ்ராத்தத்துக்கு வந்த பிராமணர்கள் இதைக்கண்டு கோபித்து வெளியேறினார்கள். ஊரில் இந்த செய்தி பரவி ஊர்க்கார பிராமணர்கள் ஆத்திரங்கோண்டார்கள்.
"எப்படிய்யா, ஸ்ராத்தம் பண்றதுக்கு முன்னாடி பிராமணர்கள் சாப்பிடறதுக்கு முன்னாலே குடியானவர்களுக்கு அந்த சமையலை போட்டே?" இது சாஸ்திர விரோதம் என்று தெரியாதா உனக்கு"
"சுவாமிகளே, பசி என்று வந்தவர்களுக்கு அன்னதானம் பண்ண ஜாதி மத பேதம் எல்லாம்கிடையாது. அவர்களை விட்டல ஸ்வரூபமாகத்தான் பார்த்தேன்"
"இதெல்லாம் விதண்டா வாத பேச்சு" .
ஊர்க்கட்டுப்பாடு பண்ணி இனி எந்த பிராமணரும் ஏக்நாத் வீட்டில் தண்ணி கூட குடிக்க கூடாது. அவருக்கு யாரும் எந்த வீட்டிலும் அனுமதியோ, ஆகாரமோ, பேச்சு வார்த்தையோ வைத்துகொள்ளகூடாது என்று தண்டித்தனர்.
அன்று ஸ்ராத்தமாச்சே. பித்ரு கார்யம் நடந்தாகவேண்டுமே? மறுபடியும் எல்லோரும் குளித்து விட்டு சமையல் தயாராகி விட்டது. எந்த பிராமணர் வருவார் சாப்பிட?
எப்படி மூன்று தலைமுறைக்கு பிண்டம் போட?, பிராமண ஸ்வரூபமாக எவருக்கு உணவு இடுவது? ஏகநாதர் "விட்டலா" என்று துடித்தார் கண்டிய கிருஷ்ணன் சொன்னான். " குருவே பேசாமல் மூன்று கூர்ச்சங்களை இலைக்கு எதிரே போடுங்கள் அதுவே பித்ருக்களாகிவிடும். போஜனம் செய்யும் " என்றான்.
"டே சின்ன பயலே, உனக்கு இது விளையாட நேரமாடா? "
"இல்லை குருவே, ஸாஸ்த்ரமே இதைத்தான் சொல்கிறது. மனத்தில் பித்ருக்களை வேண்டி அந்த கூர்ச்சத்தில் அவர்களை ஆவாஹனம் பண்ணி கூப்பிடுங்களேன்"
அவ்வாறே ஏகநாதர் தனது அப்பாவை நினைத்து ஒரு கூர்ச்சம் இட்டு வேண்டினார். இலையின் முன்னே விட்டலனே வந்து அமர்ந்து உணவை உண்டான்!! . மற்ற கூர்ச்சங்களுக்கு என்று இந்த்ராதி தேவர்கள் வந்து ஏகனாதருடைய மூதாதைகளாக ஆவிர்பவித்து உணவு உண்டு ஆசீர்வாதம் வழங்கினர்.
விட்டலனும் மற்ற தேவர்களும் பிராமணர்களாக வந்து ஆசிர்வாத மந்த்ரம் உச்சரித்தது மற்ற வீடுகளில் உள்ள பிராமணர்களின் காதிலும் விழுந்ததே. அவர்கள் ஏக்நாத் வெளியூரிலிருந்து பிராமணர்களை வரவழைத்து ஸ்ராத்தம் நடத்துகிறார். ஊர் கட்டுப்பாடு தெரியாத அவர்களும் வந்திருக்கிறார்கள். வெளியே வரட்டும் பேசிக்கலாம் என்று காத்திருந்தனர். யாரும் வரவில்லை என்றறிந்து கண்டிய கிருஷ்ணனிடம் " யார் வந்தார்கள்?" என்று கேட்டனர்
" ஒருத்தரும் வரவில்லையே" என்றான் பையன். சரி குரல் மாற்றி கிருஷ்ணனும் ஏக்நாத்தும் தான் மந்திரங்களை உச்சரித்தனர் என்று எண்ணி அவர்கள் திரும்பினார்கள்.
சில மாதங்களுக்கு பிறகு பிராமணர்கள் ஏக்நாத் தக்க பரிஹாரம் பண்ணினால் மீண்டும் ஏக்நாத் பிராமண சமூகத்தில் எற்றுகொள்ளப்படலாம் என்று அபிப்பராயம் தெரிவித்தனர். "என்ன பரிஹாரம்?"
ஒவ்வொரு பிராமணரும் ஒரு லிஸ்ட் தந்தார். அவர்கள் பரிகாரத்துக்கு கேட்ட தானம் அயிட்டங்கள் என்ன தெரியுமா? தங்கத்திலே ஒரு பசு, வீடு, நிலங்கள், பணம், ஆபரணங்கள். இன்னும் பல. ஏகநாதர் இவற்றுக்கெல்லாம் எங்கே போவார்?. இருக்கும் வீடு முதலிய சகலமும் தர முன்வந்தார் கண்டிய கிருஷ்ணன் தடுத்தான்.
"இந்த பிராமணர்கள் உங்களை ஓட்டாண்டியாக்கி விட ப்ளான் போட்டிருக்கிறார்கள். நம்பவேண்டாம். இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டாம்" . என்றான். ஏக்நாத் கிருஷ்ணன் சொல்லை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. தனது சொத்து பூரா தானமாக அளித்து
பிராமணர்களும் அவருக்கு சங்கல்பம் பண்ண தயாரானார்கள் கிருஷ்ணன் இதெல்லாம் பார்த்துக்கொண்டேயிருந்தான்.
அந்த நேரம் பார்த்து ஒரு குஷ்ட ரோகி அங்கு வந்தான்
" யார் நீ எதற்கு இங்கு வந்தாய்?" என்று பிராமணர்கள் கேட்க
"இங்கு ஏக் நாதர் யார்? அவரிடம் ஒரு பரிஹாரம் பண்ணிக்கொள்ள வந்திருக்கிறேன்" என்றான் அவன்.
"ஏக்னாதரே எங்களிடம் இப்போது பரிஹாரம் பண்ணிக்கொள்கிறார்!!. நீ வேண்டுமானால் எங்களிடம் பரிஹாரம் பண்ணிக்கொள்" என்றனர்
"இல்லை இல்லை ஏகநாதர் ஒருவரால் தான் என் குறையை தீர்க்கமுடியும். த்ரியம்பகேஸ்வரரின் ஆக்ஞை இது. உங்களைப்போல பல பேரிடம் சென்று தோல்வியும் பண நஷ்டமும் தான் மிச்சம். வியாதி குணமாகவே இல்லை. "
கண்டிய கிருஷ்ணன் அவர்கள் காது பட அந்த குஷ்டரோகியிடம் கேட்டான்." "
"ஏகனாதரிடம் என்ன பிராயச்சித்தம் பெறவேண்டும் ?
"ஏக நாதர் பாதத்தை அலம்பி அந்த ஜலத்தை ப்ரோக்ஷித்துக்கொண்டு ஒரு கை நிறைய குடித்தால் தான் என் உடலை பாதித்த குஷ்ட நோய் தீரும்.என்று த்ரியம்பகேஸ்வரர் கனவில் சொன்னாரே"
"நான் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டேன். நான் ரொம்ப சாதரணமானவன். நானே ஒரு பாபி" என்றார் ஏக நாத்.
"அதெல்லாம் இல்லவே இல்லை. இது திரயம்பகேஸ்வரர் ஆக்ஞை. மீராதிர்கள். என் வாழ்வை சீராக்க வேண்டியது உங்கள் கடமை" என்றான் குஷ்டரோகி.
"நாங்கள் இருக்கும்போது ஏகநாதர் பரிஹாரம் செய்ய விடமாட்டோம்" என்றனர் பிராமணர்கள்.
" நீங்கள் மறுத்தால் இதோ இந்த கோதாவரியில் விழுந்து உயிரை மாய்த்து கொள்வேன். த்ரியம்பகேஸ்வரர் கட்டளையை மீறினது இல்லாமல், என் உயிர் போன பாபமும் உங்களை சேரும்" என்று பிராமணர்களை எச்சரித்தான் குஷ்டரோகி.
பிராமணர்களும் மந்திரத்தை நிறுத்தினார்கள். முதலில் ஏகநாதர் இந்த ஏழை குஷ்டரோகியை எப்படி நிவர்த்திக்கிறார் என்று பார்ப்போம் என்று காத்திருந்தனர்.
குஷ்டரோகி, கண்டிய கிருஷ்ணன் ஜலம் விட அவர் காலை பூஜித்து அலம்பி அந்த ஜலத்தை குடித்த அடுத்த கணமே அவன் உடல் பொன்னிறமாக மாறி அவன் ஒரு அழகிய வாலிபனாக மிளிர்ந்தான். பிராமணர்கள் இந்த அதிசயத்தில் சிலையாயினர்
"பிராமணர்களே, அவர் ஏழைகளுக்கு அன்னதானமிட்டதை தெய்வங்களே ஏற்றுக்கொண்டபோது இன்னும் நீங்கள் என் குருநாதருக்கு பரிஹாரம் செய்ய ஏற்றவர்களா என்று யோசித்து செய்யுங்கள். உங்களை பெரும் பாவம் பற்றிக்கொள்ளும். விட்டலன் நிந்தனைக்கு ஆளாவீர்கள் ஜாக்ரதை" என்றான் கண்டிய கிருஷ்ணன்.
ஆடிப்போய்விட்ட பிராமணர்கள் ஏக நாதர் காலில் விழுந்து வணங்கி அவர் மன்னித்தருள வேண்டினர். ஏகநாதர் மீது விதிக்கப் பட்ட ஊர்க்கட்டுப்பாடு தானாகவே . விலகியது. கண்டிய கிருஷ்ணனும் தன வேலை முடிந்தது என்று பண்டரிபுரம் திரும்பினான். அவன் கோவிலில் போய் இடுப்பில் கை வைத்து நிற்கவேண்டாமா?