எதிரி லாத பத்தி
தனைமேவி
இனிய தாள்நி னைப்பை யிருபோதும்
இதய வாரி
திக்கு
ளுறவாகி
எனது ளேசி றக்க
அருள்வாயே
கதிர காம
வெற்பி
லுறைவோனே
கனக மேரு வொத்த
புயவீரா
மதுர
வாணி
யுற்ற
கழலோனே
வழுதி கூனி மிர்த்த
பெருமாளே
கதிர்காமம்
இவன் பக்திக்கு இணையில்லை என்று சொல்லும் விதம்
பக்தியை மேற்கொண்டு, உன் திருவடியை எப்போதும் நினைந்து, என் நெஞ்சமாகிய கடலில் நீ புகுந்து, உன் தாள்கள் என் உள்ளத்தே சிறந்து விளங்க அருள்வாயே, முருகா.
பொன் மயமான மேருமலைக்கு ஒப்பான புயங்களை உடையவனே, இனிமை தரும் நாதம் பொருந்திய கழல்களைஉடையவனே, பாண்டியனது கூனை நிமிர்த்தியவனே, உன் திருவடி நினைப்பை நீ தாராய்.
பாண்டியனது கூனை நிமிர்தியயவன்
யார்? சம்பந்த பெருமான் அல்லவா. சம்பந்த பெருமானாக வந்தது முருக பெருமானே என்பது அருணகிரிநாதரின்
கூற்று. இனி பதப்பொருளை பார்க்கலாம்
எதிர் இலாத பத்தி தனை மேவி
இனிய தாள் நினைப்பை இருபோதும்
எதிர் இலாத = இணை இல்லாத. பத்தி
தனை = பக்தி நிலையை மேவி = அடைந்து இனிய
தாள் = (உனது) இனிய திருவடிகளின் நினைப்பை = நினைப்பை இரு
போதும் = காலை மாலை
இரண்டுவேளைகளிலும் ( நினைப்பு உறக்கம் என்ற இரண்டு பொழுதிலும்)
இதய வாரிதிக்குள் உறவாகி
எனது உளே சிறக்க அருள்வாயே
இதய வாரிதிக்குள் = மனமாகிய கடலில் உறவாகி
=உறவு பூண்டு. எனது
உ(ள்)ளே = என்னுடையஉள்ளத்தில் சிறக்க = சிறந்து விளங்க அருள்வாயே
= அருள் புரிவாயாக.
கதிர காம வெற்பில் உறைவோனே
கனக மேரு ஒத்த புய வீரா
கதிர காம வெற்பில் = கதிர் காமம் என்னும் மலையில்உறைவோனே= வீற்றிருப்பவனே கனக = பொன் மயமான மேரு ஒத்த = மேரு மலைக்கு ஒப்பான புய
வீரா =(வலிய) புயங்களை உடைய
வீரனே.
மதுர வாணி உற்ற கழலோனே
வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே.
மதுர = இனிமை தரும் வாணி உற்ற= நாதம் பொருந்திய கழலோனே = கழல்களை உடையவனே வழுதி = பாண்டியனது கூன்
நிமிர்த் பெருமாளே = கூனை (சம்பந்தராக வந்து)
நிமிர்த்திய பெருமாளே
{ மதுர வாணி உற்ற - இனிமையான மொழிகளையுடய சரஸ்வதிக்கு உகந்தவனே என்றும் பொருள் கொள்ளலாம்}
வாணி = நாதம் தோன்றும் இடம்.
இனிய நாத சிலம்பு புலம்பிடும்
அருண ஆடக கிண்கிணி தங்கிய அடிதாராய் என்று இன்னொரு திருப்புகழில், (கமலமாதுடன்) கூறுகிறார்
‘கூன்
நிமிர்த் பெருமாளே’ வரலாறு
கூன் பாண்டியன் என்றழைக்கப்படும் சீர் நெடு மாறன் பாண்டிய மன்னன். சமண
சமயத்தைத் தழுவியிருந்தான். நாட்டில் சிவ வழிபாடு நின்று போயிற்று.
மன்னனின் மனைவி மாதேவியார் மங்கையர்க்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும்
சிவநெறியுடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இறையருள் பெற்ற ஞானசம்பந்தரின் பெருமைகளைக்
கேள்வியுற்ற அரசியாரும் அமைச்சரும் அவர் திருமறைக்காட்டுக்கு வந்திருப்பதை தெரிந்து
அவரை மதுரை வந்து நாட்டில் வந்து திரும்பவும் சைவம் தழைக்க அருள் புரிய வேண்டினர்.
அவர் வந்து மதுரையில் தங்கியிருந்த இடத்தை சமணர்கள் தீயிட்டு கொளித்தினர். `இத்தீ அரசன்
முறை செய்யாமை யால் நேர்ந்ததாகும், ஆதலால் இத்தீ அவனைச் சென்று பற்றுதலே முறையாயினும்
மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணுக்கு ஊறு நேராதவாறு பையச் சென்று பாண்டியனைப் பற்றுவதாகுக` என்று கூறி `செய்யனே திரு` என்று
பதிகம் ஓதி தீயை ஏவினார் சம்பந்த பெருமான். மன்னனுக்கு வெப்பு நோய் வந்தது. மருத்துவர்களாளும்
சமண முனிவர்களாலும் நோயைக் குணப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் குலச்சிறையார் அரசனை அணுகி `ஞானசம்பந்தர் திருமடத்துக்குச்
சமணர்கள் இட்ட தீயே நோயாகி வந்துள்ளது. அவர் வந்தால் நோய் தீரலாம்` என்றார். மன்னன்
ஞானசம்பந்தர் என்ற நாம மந்திரத்தைக் கேட்ட அளவில் அயர்வு நீங்கியதை உணர்ந்து `அவரை
அழைப்பீராக` என்று கூறினான்.
ஞானசம்பந்தர் பாண்டியன் அரண்மனையை அடைந்து மன்னன் அருகில் அமர்ந்தார்..
சமணர்கள் மன்னன் உடலில் இடப்பாகம் பற்றிய நோயை நாங்கள் குணப்படுத்துகிறோம் என்று பீலி
கொண்டு உடலைத் தடவிய அளவில் நோய் மேலும் கூடியது. ஞானசம்பந்தர் `மந்திரமாவது நீறு`
என்ற திருப்பதிகம் பாடி, தம் திருக்கரத்தால் வலப்பாகத்தில் திரு நீற்றைத் தடவிய அளவில்
நோய் தணிந்தது. ‘இடது பாகத்தையும் தாங்களே தீர்த்தருள வேண்டுமென’ வேண்டினான். ஞானசம்பந்தர்
இடப்பாகத்திலும் திருநீறு பூசிய அளவில் நோய் தணிந்தது. மன்னன் எழுந்து ஞானசம்பந்தரைப்
பணிந்து `யான் உய்ந்தேன்` என்று போற்றினான்.
பிறகு அனல் வாதத்திலும் புனல் வாதத்திலும் சம்ணர்களை வென்றார். புனல்
வாதத்தில் சம்பந்தர் பாடிய பாடல் ஏடு வைகை நதியில் எதிர் கொண்டு சென்றதைக்கண்ட மன்னன்
எழுந்து குதித்த சமயம் அவன் கூன் நீங்கிற்று.
அத்திருப்பதிகப் பாடலில் `வேந்தனும் ஓங்குக` என ஞான சம்பந்தர் அருளிச்
செய்ததால் பாண்டியன் கூன் நிமிர்ந்து நின்ற சீர் நெடு மாறன் ஆயினான்.