நவராத்திரி மகிமை ஒரு சிறப்பு பதிவு.

4,354 views
Skip to first unread message

ABHIRAMI PHARMA- INDIA

unread,
Aug 9, 2016, 9:15:46 PM8/9/16
to amrith...@googlegroups.com

நவராத்திரி மகிமை  ஒரு சிறப்பு பதிவு.

அன்னையின் நவ அம்சங்களை உணர்த்தும் நாயகியருக்கு வழிபாடு செய்யும் வைபவமே நவராத்திரி திருவிழா.

புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசையை அடுத்த பிரதமை முதல் 9 நாட்களுக்கு செய்யப்படும் நவராத்திரி எனப்படும் தேவிவழிபாடு மிகச்சிறப்பானது.இதில் 3 நாட்களில் ஆதிபராசக்தியை துர்க்கையாகவும், அடுத்த 3 நாட்களுக்கு லட்சுமியாகவும், அதற்கடுத்த 3 நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறார்கள்.

ராத்திரியிலேயே ஆன்மிகத்தில் இரண்டு ராத்திரிகள்தான் இருக்கின்றன. ஒன்று, சிவராத்திரி. இது சிலரால் மட்டும் கொண்டாடப்படுவது. மற்றொன்று, நவராத்திரி. இது அனைவராலும் கொண்டாடப்பட்டு சிறப்பித்து வழிபடுவதாகும்.

‘நவ’ என்பது ஒரு சிறப்பு வாய்ந்த சொல்லாகும். இதற்கு இரு பொருள்கள் உண்டு. ஒன்று, ஒன்பது. மற்றொன்று புதியது. ஆக இந்த நவராத்திரியை ஒன்பது ராத்திரிகள் என்று பொருள் கொள்வதைவிட, புதிய ராத்திரிகள் என்று பொருள் கொண்டு பார்க்க வேண்டும்.

இந்த நவராத்திரி பூஜையானது முக்கியமாக சுமங்கலிகளுக்குரியதாகும். காரணம், இதில் மூன்று தெய்வச் சுமங்கலிகள் இடம் பெறுகின்றனர். அவர்கள்தான் துர்க்கா_லட்சுமி_சரஸ்வதி.

சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற வரிசைப்படி பார்த்தால் முதலில் பிரம்மா, பிறகு விஷ்ணு, முடிவில் சிவன். இம்மூவரின் துணைவியர் முறையே சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்று வரும். ஆனால் நவராத்திரியின்போது இந்த வரிசை மாற்றமடைந்து, துர்க்கா_லட்சுமி_சரஸ்வதி என்றாகிறது.

காரணம், விஷ்ணு தத்துவத்தையும், எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களின் வைபவங்களையும் சொல்வது ஸ்காந்த புராணம்.

அதோடு, எல்லா தெய்வங்களைப் பற்றியும் இப்புராணம் சொல்கிறது. ஸ்காந்த புராணத்தின் அதிபதி துர்க்கை.

பரமேஸ்வரனிடம் லட்சுமியின் பிரபாவத்தினை துர்க்கை கேட்க, அவர் சொன்னதாகவே இதில் இருக்கிறது. இன்றும் ஆலயங்களில் லட்சுமி அஷ்டோத்திர அர்ச்சனை அப்படித்தான் நடைபெறுகிறது.

ஆக, மலைமகளான துர்க்கையே முதல் மகளாக இருப்பதால், நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் துர்க்கை இடம் பெற்று நம் துயர்துடைக்கிறாள்.

நவராத்திரியின்போது துர்க்கையை முதலில் பூஜிக்கிறோம். ராத்ரம் என்றால் மங்களம். மங்களனாகிய செவ்வாய்க்கு அதிதேவதை துர்க்கை.அகத்தையும், புறத்தையும் அழகுப்படுத்தித் தூய்மைப்படுத்துவதற்காக துர்க்கை முதலில் வருகிறாள்.

முதல் ராத்திரியின்போது மலர்களால் துர்க்கையை அலங்கரித்து வழிபட்டால் சர்வமங்கள ரூபிணியாக அவள் நமது கிரகத்தில் கொலு வீற்றிருப்பாள்.

இரண்டாவது ராத்திரியின்போது, ஆபரணங்களை அவளுக்கு அணிவித்தாள், சர்வாபரண பூஷிதையாக அருள்பாலிப்பாள்.

மூன்றாவது ராத்திரியின்போது, முதலில் செய்வித்த பூஜைகளுக்கு மகிழ்ந்து ஞானத்தை நல்குகிறாள்.

முதல் மூன்று நாட்களிலும் மங்கலத்தையும், அருளையும், ஞானத்தையும் துர்க்கையிடமிருந்து பெறும் நாம், அடுத்த மூன்று நாட்களிலும் மகாலட்சுமியை பூஜிக்க ஆயத்தமாகிறோம்.

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனின் பாதங்களை வருடியபடி இருக்கும் மகாலட்சுமி, எவருக்குமே கொடுப்பது கிடையாது. அப்படிக் கொடுக்க ஆரம்பித்தால் அதை வாங்கிடும் வல்லமை இந்த அவனிக்கே கிடையாது. அன்னையின் கருணைக் கடாட்சத்தை மட்டும்தான் நாம் பெற்றிட இயலும். அப்படிப்பட்ட மகாலட்சுமியிடமும் செல்வம் தங்குவதில்லை! காரணம், எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருப்பதால்தான்.

அந்தச் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை நான்காவது நாளில் பூஜிக்க வேண்டும். அன்னைக்குப் பாசம் அதிகம். அதனால், ‘என்னை பூஜிப்பவர்களை எப்போதும் கைவிடமாட்டேன்!’ என்று கூறுகிறாள்.

ஐந்தாவது நாளில் பூஜிப்பதால், சகல செளபாக்கியங்களும், ஆயுள் விருத்தியும் கிட்டும். பஞ்ச பூதங்கள் நம்மைச் சரிவர நடத்தும்.

ஆறாவது நாளில் பூஜிப்பதால் நாளும் உணவு கிடைக்கும் வண்ணம் நம்மை மகாலட்சுமி காத்தருளுவாள்.

இந்த ஆறு நாட்களும் முடிந்த பிறகு வித்தைக்கு அதிபதியான சரஸ்வதி வருகிறாள்.

ஏழாவது நாளில் நாதஸ்வரூபமாக எழுந்தருளும் கலைவாணி நமக்கு வினயத்தைத் தந்தருளுகிறாள்.

எட்டாவது நாளில் வாழ்க்கையில் எட்டாததையும் எட்டச் செய்து, நமக்கு ஏற்றத்தை நல்குகிறாள்.

ஒன்பதாவது நாளில், அழியாத தன்மையைத் தருகிறாள். செல்வம் அழிந்தாலும் கற்ற வித்தை அழியாது என்பதை உணர்த்துகிறாள்.

பத்தாவது நாள் விஜயதசமி. விஜயம் என்றாலே வெற்றி!

நவராத்திரியின் போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்று இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் வெற்றி கிடைக்கும். அவர்கள் எல்லா நலனும் பெறுவார்கள். அதை உணர்த்துவதே விஜயதசமி.

கடும் கோடைக் காலமும், மழைக்காலமும் எமனின் இரண்டு கோரைப் பற்கள் என ஞான நூல்கள் சொல்கின்றன.

இந்த இரண்டு காலங்களிலும் பலவிதமான தொற்றுநோய்கள் நம்மைத் தாக்கும் ஆபத்து உண்டு. இது உடலை பாதிக்கும். உடல் கெட்டால், உள்ளமும் பாதிப்பு அடையும். இந்த பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பவள் அம்பிகை. அவளுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டே ‘நவராத்திரி’ என்ற பெயரில் ஒன்பது இரவுகள் அம்பிகையை வழிபடுகிறோம்.

‘அகிலத்தில் இருக்கும் அத்தனை உயிர்களிலும் அம்பிகையே இருக்கிறாள். அவள் கருணையினால்தான் அனைத்தும் உயிர் வாழ்கின்றன’ என்ற தத்துவத்தை விளக்கவே நவராத்திரி கொலு வைக்கிறோம்.

பொம்மைகளை, கண்ட கண்ட இடங்களில் கலந்து வைக்காமல், அதிலும் ஓர் ஐதிகத்தை வைத்தார்கள் நமது முன்னோர்கள். கொலுப்படிகள் 9,7,5 என ஒற்றைப் படையில் அமைய வேண்டும்.

எந்தெந்தப் படியில் என்னென்ன பொம்மைகளை வைக்க வேண்டும் என்றும் முறை இருக்கிறது. கீழிருந்து முதல் படியில் ஓரறிவு உள்ள உயிரினங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். செடி, கொடி, மரங்கள், பூங்கா, சிறிய அளவிலான தோட்டம் ஆகியவை.

இரண்டாவது படியில் இரண்டறிவு உள்ள உயிரினங்களின் வடிவங்களை வைக்க வேண்டும். அட்டை, நத்தை, சங்கு போன்ற ஊர்ந்து போகும் உயிரினங்கள் இந்த ரகம்.

மூன்றாவது படியில் மூன்று அறிவு உயிரினங்களான கரையான், எறும்பு முதலான உருவங்களை வைக்க வேண்டும். நான்காவது படியில் நான்கு அறிவு உள்ள உயிரினங்களான வண்டு, பறவை முதலான வடிவங்களை வைக்க வேண்டும். ஐந்தாவது படியில் ஐந்தறிவு உயிரினங்களான பசு முதலான விலங்கினங்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

ஆறாவது படியில் ஆறறிவு உள்ள உயர்ந்த ஜீவராசிகளான மனித வடிவங்கள், வாத்திய கோஷ்டி பொம்மைகள் இடம் பெற வேண்டும். ஏழாவது படியில் மகான்கள், ஞானிகளின் உருவங்கள் இடம் பெற வேண்டும். எட்டாவது படியில் தெய்வ அவதாரங்கள், தசாவதாரம் முதலான தெய்வ வடிவங்கள். ஒன்பதாவது படி, உச்சியில் இருப்பது. அதில் பூர்ண கும்பத்துடன் அம்பிகை திருவுருவம் மட்டுமே இருக்க வேண்டும்.

அம்பிகையின் அருளாட்சியின் கீழேதான் அனைத்து ஜீவராசிகளும் வாழ்கின்றன என்பதுடன், அவை படிப்படியாக முன்னேறி வாழ்வில் உயர்ந்து மேன்மை அடைகின்றன என்பதையும் இந்த அமைப்பு விளக்குகின்றன.

நியமத்தோடு இருந்து நவராத்திரி பூஜை செய்ய முடியாதவர்கள், அஷ்டமி அன்று மட்டுமாவது அவசியம் பூஜை செய்ய வேண்டும்.

நவராத்திரி காலத்தில் ஒன்பது நாட்களும் விதிப்படி கன்னிகைகளை பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜை முறைகளையும் அதன் பலன்களையும் வியாசர் விரிவாக எழுதி வைத்திருக்கிறார்.

நவராத்திரியின் முதல் நாளன்று 2 வயதுள்ள ஒரு பெண்ணை ‘குமாரி’ என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும். (அந்தப் பெண்ணுக்குப் பெற்றோர் இட்ட பெயர் அதுவாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. யாரோ ஒரு 2 வயது பெண்ணை குமாரியாக உருவகப்படுத்தி பூஜை செய்ய வேண்டும்) குமாரியை பூஜை செய்தால் ஏழ்மை நீங்கும். ஆயுள் பலப்படும். செல்வம் பெருகும்.

இரண்டாம் நாளில், 3 வயதுள்ள பெண்ணை ‘திரி மூர்த்தி’ என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும். இதை செய்தால் அறம், பொருள், இன்பம், நீண்ட ஆயுள் உண்டாகும். மூன்றாவது நாளன்று 4 வயது பெண்ணை ‘கல்யாணி’ என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும். இதை செய்வதன் மூலம் கல்வி ஞானம் பெருகும். நான்காவது நாளன்று 5 வயது பெண்ணை ‘ரோகிணி’ என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும். ரோகிணி பூஜை, நோய்களைப் போக்கி, ஆரோக்ய வாழ்வு தரும். ஐந்தாவது நாளன்று 6 வயதுள்ள பெண்ணை ‘காளிகா’ என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும். காளிகா பூஜை, பகைவர்களை வெல்லும்.

ஆறாவது நாளன்று 7 வயது பெண்ணை ‘சண்டிகா’ என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும். சண்டிகா பூஜை செல்வச் செழிப்பை தரும். ஏழாவது நாளன்று 8 வயதுள்ள பெண்ணை ‘சாம்பவி’ என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜை அரசாங்க பதவிகளை கொடுக்கும். பகைமையை வேரறுக்கும். எட்டாவது நாளன்று 9 வயது பெண்ணை ‘துர்க்கை’ என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும். இது கஷ்டமான காரியங்களையும் சிரமமின்றி செய்யும் சக்தியைக் கொடுக்கும். ஒன்பதாவது நாளன்று 10 வயதுள்ள பெண்ணுக்கு ‘சுபத்ரா’ பூஜை செய்ய வேண்டும். இதனால் புலனடக்கம் உண்டாகும்.

வசதியும் மனமும் உள்ளவர்கள், முதல் நாள் அன்று ஒரு பெண், இரண்டாம் நாளன்று இருவர் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னிகையை அதிகமாக வரவழைத்தும் பூஜை செய்யலாம். இது நிறைந்த பலன் தரும்.

நவராத்திரி மகிமை தொடரும்

குமார் ராமநாதன்

secretarynitra

unread,
Aug 18, 2016, 9:02:22 PM8/18/16
to Amritha Vahini
அதி விசேஷம்


இந்த கட்டுரையை நவராத்திரிக்கு இரண்டு வாரங்கள் முன்பு மீண்டும் பிரசுரித்தால் அனைவருக்கும் நலம் பயக்கும்


ஜெயராமன்
Noida

Reply all
Reply to author
Forward
0 new messages