வாலிப
மாணவர்களுக்குஉணர்ச்சி
வெள்ளமும் கட்டுப்பாட்டு அணையும்-
யௌவனம், வாலிபம் என்பது உணர்ச்சி வேகங்கள் கட்டறுத்துக் கொண்டு புரளுகிற பருவம். தற்காலத்தில் மிதமிஞ்சிய சக்தியுடன் ஸர்வ ஜனங்களின் மேலும் ஆளுகை செலுத்திக் கொண்டிருக்கிற பாலிடிக்ஸ், ஸினிமா, பத்திரிகைகள், ஸ்போர்ட்ஸ் ஆகியவை அத்தனை பேரையுமே உணர்ச்சி வேகங்களில் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கையில், தன்னியற்கையாகவேறு அந்த வேகங்களின் எழுச்சிக்கு ஆளாகியிருக்கிற வாலிய வயசு மாணவர்கள் – கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பவர்கள் – ஒழுங்கு முறைகளுக்குக் கட்டுப் பட்டிருப்பது இரண்டு பங்கு (மடங்கு) சிரமம்தான். ஆனாலும் தங்களுடைய எதிர்காலத்துக்கான வளர்ச்சியை முன்னிட்டு அவர்கள் இந்த சிரமத்தை சமாளித்தே தீர வேண்டும். அதிலேயேதான் தேசத்தின் தற்கால அமைதி, எதிர்கால அமைதி ஆகியவையும் அடங்கியிருக்கின்றன. வாலிப வயஸுக்காரர்கள் கட்டுப்பாடு இழந்தால் அவர்களும் கெட்டுப் போய், வீட்டிலும் அமைதி குலைந்து கெட்டுப் போய், நாட்டிலும் அமைதியின்மையே அடிவேர் வரை பரவிக் கெடுத்து விடும்.
கட்டறுத்துப் புரளுகிற இந்த உணர்ச்சி வெள்ளத்துக்கு அணைபோட்டு வைப்பதாகத்தான் நம்முடைய முன்னோர்களான பெரியவர்கள் பாலப்பிராயத்தில் அக்ஷராப்யாஸம் ஆன நாளிலிருந்து தெய்வ பக்தியையும், குரு பக்தியையும், அந்த பக்தியிலிருந்து விளைகிற விநயம் என்கிற அடக்க குணப் பண்பையும் விதித்து, குருகுலத்தில் அதைப் பசங்களுக்கு நடைமுறையாக்கிக் கொடுத்தார்கள்.
பக்தி அவசியம்
இப்போது குருகுலவாஸக் கல்விமுறை அடிபட்டுப் போய்விட்டாலும், இன்றைக்கும் யுவர்களைத் தப்பான உணர்ச்சி வேகங்கள் அடித்துக்கொண்டு போகாமல் ரக்ஷிப்பதற்கு பக்தியையும், விநயத்தையும் விட்டால் வேறே உபாயமில்லை. தெய்வத்திடம் பக்தியும், அகத்திலே தாயிடமும்-தகப்பனாரிடமும் கல்விசாலையில் ஆசிரியர்களிடமும் கட்டுப்பட்டு மரியாதை காட்டுவது என்ற ரூபத்தில் பக்தியும் மாணவர்களுக்கு அத்யாவச்யம்.
பக்தியுடன் ஸ்வாமியிடம் தினமும் இரண்டு வேளையும் கால்மணி, அரைமணி நேரம் ஜபம், பிரார்த்தனை செய்வது, அவ்வப்போது கோவிலுக்குப் போவது, ஸத்கதா ச்ரவணம் செய்வது, தெய்விகமான ஆத்ம ஸம்பந்தமான நூல்கள் கொஞ்சம் படிப்பது ஆகியன அவர்களுக்கு ரொம்பவும் நல்லது செய்யும். ஆனாலும் இங்கேயுங்கூட நான் ஜாக்ரதையுடனேயே கால்மணி-அரைமணி பிரார்த்தனை, ‘கொஞ்சம்’ தெய்வ பரமாகப் படிப்பது என்று கால அளவைக் குறுக்கிக் கொடுத்திருக்கிறேன். ஏன் குறுக்கினேன் என்றால் மாணவர்களுக்கு முக்கியம் படிப்புத்தான். அதிலேதான் அவர்கள் மிக நிறையக் கவனம் செலுத்தவேண்டும். அப்படிப் பார்க்கும்போதுதான் ‘ஆவரேஜ்’, சராசரி என்ற நிலையிலுள்ள ஒரு மாணவன் தெய்வ சம்பந்தமாகவேகூட ரொம்பவும் பொழுதைச் செலவு செய்து படிப்புக்கு ஊறு விளைவித்துக் கொள்ளக்கூடாது என்ற அபிப்பிராயத்தில் பக்தி பண்ணுவதற்கு கால அளவைக் குறுக்கிக் கொடுத்தேன். நல்ல புத்திசாலியாக இருந்து, படிப்புக்கு அதிகப் பொழுது செலவிடத் தேவையில்லாதவர்களுக்கு இந்தக் குறுக்கல் இல்லை. அதே ஸமயத்தில் அவர்களுக்குக்கூட இந்தக் காலகட்டத்தில் படிப்புத்தான் முதல் முக்யத்வம் என்ற ப்ரக்ஞை மறக்கக்கூடாது.
அடிப்படையில் அத்தனை மாணவர்களுக்கும் உறுதியான தெய்வ நம்பிக்கை என்பது இருந்து, தெய்வந்தான் தங்களை நல்வழியில் நடத்திச் செல்ல வேண்டும் என்ற பிரார்த்தனா சிந்தனை பலமாக ஸ்திரப்பட்டுவிட்டால் போதும், தெய்வ பக்திக்காக எவ்வளவு பொழுதை ஒதுக்குவது என்பது அடுத்த பக்ஷம் தான். அது அவரவரும் படிப்பில் எப்படி, கெட்டிக்காரரா இல்லையா என்பதைப் பொறுத்து அமையும். கெட்டிக்காரர்கள் படிப்புக்குப் பொழுதைக் குறைத்துக் கொண்டு பக்தி பண்ணுவதற்கு ஜாஸ்தி செலவிடலாம். அப்படியில்லாதவர்கள் இதற்கு மாறுதலாகச் செய்ய வேண்டும்.
WITH PRANAMS
N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536
