🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
🌟 அனந்தனுக்கு ஆயிரம் திருநாமங்கள்!
விஷ்ணு ஸஹஸ்ரநாம!
வேதாங்காய நமஹ (Vedhaangaaya namaha)
திருநாமம்
ஆயிரம் வருடப் போராட்டத்துக்குப் பின் தன் முயற்சியால் தன்னை விடுவித்துக்கொள்ள முடியாது என உணர்ந்தது அந்த யானை.
“ஆதிமூலமே! வேதம் போற்றும் முதல்வனே! நீ தான் வந்து இந்த முதலையின் பிடியிலிருந்து அடியேனை விடுவிக்க வேண்டும்!”
என உரக்க அழைத்தது.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
கஜேந்திரனின் கூக்குரலைக் கேட்ட மாத்திரத்தில் வைகுண்டத்திலிருந்து திருமால் அதிவேகமாகப் புறப்பட்டார்.
கருடன் மேல் ஆரோகணித்தார். சக்கரம், அம்பு, கத்தி, தாமரை, சங்கு, வில், கேடயம், கதை என எட்டு கரங்களில்
எட்டு ஆயுதங்கள் ஏந்தியபடி குளக்கரையை நோக்கி விரைந்தார்.
“கருடா! வேகமாகச் செல்! என் பக்தன் அங்கே தவித்துக் கொண்டிருக்கிறான்.
விரைவில் அவனைக் காக்க வேண்டும்!” என்றார்.
கருடனும் முழு வேகத்தில் சென்றார்.
ஆனாலும் திருமாலுக்குத் திருப்தி இல்லை.
ஒரு நிலையில், கருடனின் தோள்களில் இருந்து இறங்கிய திருமால், கருடனைத் தன் தோளில் வைத்துக் கொண்டு
குளக்கரையை நோக்கிப் பறக்கத் தொடங்கினார்.
கருடனைத் தோளில் ஏந்தியபடி குளக்கரையை அடைந்த திருமால், சக்கரத்தால் முதலையைக் கொன்றார், யானையை மீட்டார்.
தான் பறித்த தாமரையைத் திருமாலின் திருவடித் தாமரைகளில் கஜேந்திரன் சமர்ப்பித்தான்.
கஜேந்திரனுக்கு முக்தியளித்து அவனை வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றார் திருமால்.
வைகுண்டம் சென்ற கஜேந்திரன் திருமாலிடம்,
“எம்பெருமானே! எனக்கொரு சந்தேகம். என்னைக் காக்க வருகையில் நீங்கள் ஏன் கருடனை உங்கள் தோளில் சுமந்து வந்தீர்?
கருடன் உம்மைச் சுமந்து வருவது தானே வழக்கம்?” என்று கேட்டான்.
“அவன் பயணித்த வேகம் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை.
அதனால் தான் அவனைத் தோளில் சுமந்து கொண்டு
நான் வேகமாகப் பறந்து வந்துவிட்டேன்!” என்றார் திருமால்.
“என்னைக் காக்க வேண்டியது நீங்கள் தானே?
கருடன் இல்லையே! அப்புறம் ஏன் அவரைச் சுமந்து கொண்டு பறந்து வர வேண்டும்?
அவரை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் வந்தால் போதாதா?” என்று கேட்டான் கஜேந்திரன்.
அதற்குத் திருமால், “நீ என்னை அழைக்கும் போது ‘ஆதிமூலமே! வேதம் போற்றும் முதல்வனே!’ என்று அழைத்தாய் அல்லவா?
எனவே நானே வேதம் போற்றும் முதல்வன் என்பதை உனக்கு நிரூபிப்பதற்காக வேதமே வடிவெடுத்தவரான கருடனைச் சாட்சியாக உடன் அழைத்து வந்தேன்!” என்றார் திருமால்.
வேதத்தின் பகுதிகளே கருடனின் திருமேனியில் அங்கங்களாக இருக்கும் விதத்தையும் திருமால் விளக்கினார்.
வேதப்பகுதி – கருடனின் அங்கம்
காயத்ரி மந்திரம் – கண்கள்
த்ரிவ்ருத் – தலை
வாமதேவ்யம் – உடல்
ஸ்தோமம் – ஆத்மா
சந்தஸ் – கால்கள்
தீஷ்ண்யம் – நகங்கள்
யஜ்ஞாயஜ்ஞம் – வால்
ப்ருஹத், ரதாந்தரம் – இறக்கைகள்
அப்போது குறுக்கிட்ட கருடன், “கஜேந்திரா! எம்பெருமானின் திருமேனியிலேயே அனைத்து வேத மந்திரங்களும் எப்போதும் உள்ளன.
வேத மந்திரங்களையே அங்கங்களாக உடையவராய் விளங்குவதால் தான் அவர் ‘வேதாங்க:’ எனப் போற்றப்படுகிறார்!” என்றார்.
“ஆனால் உங்களது உடல் உறுப்புகளாக வேத மந்திரங்கள் இருப்பதாகத் திருமால் கூறுகிறாரே!” என்று கேட்டான் கஜேந்திரன்.
அதற்குக் கருடன், “தன்னுடைய பக்தர்களையும் தன்னைப் போலவே ஆக்கி அழகு பார்ப்பவர் நம் பெருமாள்.
அதனால் அவரது தொண்டனான அடியேனுக்கும் வேத மந்திரங்களை உடல் அங்கங்களாகத் தந்து விட்டார்.
அவர் இயற்கையாகவே வேத அங்கங்களைத் தனது அங்கங்களாகக் கொண்டவர்.
அடியேன் அவரது அருளால் அவற்றை அங்கங்களாகப் பெற்றவன்!” என்றார்.
“இப்போது மற்றொரு சந்தேகம் எழுந்து விட்டது!” என்ற கஜேந்திரன்,
“திருமாலின் திருமேனியிலேயே
வேதங்கள் அனைத்தும்
இருக்கின்றன என்றால், அவர் உங்களை ஏன் வேத சொரூபி எனக் கூறிச் சாட்சிக்கு அழைத்து வந்தார்?” என்று கருடனிடம் கேட்டான்.
அதற்குக் கருடன், “கருணைக் கடலான திருமால், கஜேந்திர மோட்சக் காட்சியை அடியேனும் கண்டு அனுபவிக்க வேண்டும்
என எண்ணியுள்ளார்.
அதனால், தாமே என்னைக் குளக்கரைக்குச் சுமந்து கொண்டு வந்து
என் கண் முன்னால் அந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளார்!” என்று கூறிப் பரவசப்பட்டார்.
கருடன் சொன்னபடி, வேத மந்திரங்களையே தனது அங்கங்களாகக் கொண்டு விளங்குவதால்,
திருமால் ‘வேதாங்கஹ’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின்
132-வது திருநாமம்.
உலகியல் வாழ்க்கையாகிய குளத்தில், நாம் செய்த முன்வினைகளாகிய முதலைகள் நம்மைப் பிடித்துக் கொண்டு வாட்டுகையில்,
வேதாங்காய நமஹ என்ற இத்திருநாமத்தைச் சொன்னால், அந்த முதலைகளிடமிருந்து திருமால் நம்மை விடுவித்தருள்வார்.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟