பரசுராம க்ஷேத்ர யாத்திரை - நங்கநல்லூர் J K SIVAN
17.4. 26 - 22.4.2026
21.4.2026. எண்டே குருவாயூரப்பா
த்ரிப்ரயார் க்ஷேத்ரத்திலிருந்து குருவாயூர் வடக்கே 25 கி.மீ. தூரம் பிரயாணம் செய்யவேண்டும். நல்ல சாலையாக இருந்தததால் ஒரு மணிநேரத்துக்கும் சென்று விட்டோம். நிறைய கும்பல் எதிர்ப்பார்த்தது தான். நான் பல வருஷங்களுக்கு முன் பார்த்த குருவாயூர் இல்லை இப்போது. நெரிசல், போலீஸ் பந்தோபஸ்து. ஆயிரம் ரூபாய் கட்டி நெய்விளக்கு தரிசனம் வரிசையில் நின்று அரை மணி நேரத்தில் குருவாயூரப்பன் முன்னால் நின்றேன்.
குருவாயூரப்பா, உன்னைப்பற்றி மேப்பத்தூர் நாராயண பட்டத்ரி எழுதிய ஸ்ரீமன் நாராயணீயம் அத்தனை ஸ்லோகங்களையும் தமிழில் அர்த்தம் எழுதியபோது உன்னை தரிசிக்க மனதில் ஆவல். ஆனால் அது நிறைவேறவில்லை. எழுதி முடித்து புத்தகமும் வெளியிட்டபின் எத்தனையோ நண்பர்கள் வாசகர்கள் என்னை வாழ்த்தினார்கள். உன் அருள் எனக்கு உண்டு என்றார்கள். அது பலித்து விட்டது. இதோ உன் எதிரே நிற்கி றேன். நான் எதிர்ப்பார்க்காமல், எந்த திட்டமும் போடாமல் உன்னை தரிசிக்க வைத்துவிட்டாயே. இதை விட என்ன அதிசயம் இருக்கிறது எண்டே குருவாயூரப்பா..
கிருஷ்ணன் குட்டியாக நிற்கிறான். நான் சென்றபோது வர்ண ஆபரணங்கள் அணிந்து ஜொலித்தான். இந்த மூர்த்தி மஹா விஷ்ணுவால் பிரம்மாவுக்கு முதலில் அளிக்கபட்டது. அப்புறம் ,சுதபா ப்ரிஷ்ணி தம்பதியிடம் சென்று அவர்கள் தான் கஸ்யபர் அதிதியாக உருவெடுத்தார்கள். பின்னர் வசுதேவர் தேவகியிடம் சென்றது, பின்னர் கிருஷ்ணனிடம் வந்து, கிருஷ்ண அவதாரம் முடிந்து, அவர் வைகுண்டம் திரும்பும் முன்பு உத்தவரிடம் தரப்பட்டு அதன் பின் குரு (ப்ரஹஸ்பதி ) வாயு இருவருமாக இனைந்து இந்த இடத்தில் அந்த விக்ரஹத்தை பிரதிஷ்டை பண்ணி இந்த ஊர் குருவாயூர் ஆகியது என்பார்கள். ஆகவே குருவாயூரப்பன் மூர்த்தி கிருஷ்ணரின் ஆரம்ப ரூபத்துடன் தொடர்புடையது என்று புரிகிறதல்லவா?
மிகப் பழமையான 5000 வருஷ கோவில்.எல்லோரும் ஒரு தடவையாவது நாராயணீயம் படித்தால் கிருஷ்ணன், குருவாயூரப்பன் அதிசயம், மஹிமை புரியும். இது தான் உண்மையிலே “பூலோக வைகுண்டம்”. பக்தர்களின் அனைத்து மனோபீஷ்டங்களும் இங்கே வந்து அவனை தரிசித்தால் பூர்த்தியாகும்.அவனைப்
பார்க்க வேண்டும் என்ற என் ஆசை இப்படி தான் நிறைவேறியது.
குருவாயூர் ஏகாதசி விசேஷமானது. அனைத்து நோய்களும் குணமாகும் உன் எதிரே நான் ஒரே ஒரு வேண்டு கோள் வைத்தேன். ''என்னப்பா அடுத்த ஜென்மத்திலும் உன்னை தரிசிக்க வேண்டும்''
எண்ணற்ற பக்தர்கள் நிரம்பி இருந்தாலும் ஒருவரை ஒருவர் பிடித்து தள்ளவில்லை. மேலே இடிக்கவில்லை. ரொம்ப அமைதியாக பக்தியோடு கிருஷ்ணனை வணங்கினோம். தீப ஒளி, ஆலயத்தன் அமைதி மனதில் ஆனந்தத்தை தந்தது.
ஒவ்வொரு நாளும் அதிகாலை நிர்மால்ய தரிசனம், உஷத்கால பூஜை, உச்சி வேளை பூஜை, தீபாராதனை, அத்தாழ பூஜை தரிசனம் பெறுகிறோம். துளசி மாலை, வெண்ணை, வாழைப்பழம் நிறைய பக்தர்கள் கொண்டுவந்து அற்பணிக்கிறார்கள்.
என்னையறியாமல் என் வாய் பாடியது कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च ।नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः ॥
kr̥ṣṇāya vāsudēvāya dēvakīnandanāya ca nandagōpa kumārāya gōvindāya namō namaḥ
கிருஷ்ணாய வாசு தேவாய தேவகி நந்தனாரை ச நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நம;
என்னப்பா கிருஷ்ணா நீ வசுதேவரின் புத்ரன் ,தேவகியின் ஆனந்தம். நந்தகோபனின் ஆசை மகன், கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா, உன்னை மீண்டும் மீண்டும் நா இனிக்க போற்றி வணங்குகிறேன்.
गुरुवायूरपते देव भक्तानुग्रहकारक । भावसागरमुद्धर्तुं त्वं कृपा कुरु जनार्दन ॥
guruvāyūrapatē dēva bhaktānugraha kāraka bhava sāgaram uddhartum tvaṁ kr̥pā kuru janārdana
குருவாயூர பதே,தேவா, பக்தானுகிரஹ காரக, பாவ சாகரம் உத்தரதும் த்வாம் க்ருபா குரு ஜனார்த்தன;
குருவாயூரப்பா! பக்தர்களுக்கு அருள் புரிவோனே, இந்த சம்சார சாகரத்திலிருந்து எங்களை மீட்டருள வேண்டும்.
குருவாயூர் த்ரிசூர் ஜில்லாவில் உள்ளது. 26 கி.மீ. த்ரிசூரிலிருந்து. வைஷ்ணவ திவ்ய தேசங்கள் எனப்படும் 108 க்ஷேத்ரங்களில் இது ஒன்று அல்ல எனும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. அபிமான க்ஷேத்ரமாக இருக்கிறது. அது போதுமே மக்களின் அபிமானத்தை என்றென்றும் மனமார பெற்ற குருவாயூரப்பன் எனும் குட்டி உன்னி கிருஷ்ணன் கோவில் அபிமான க்ஷேத்ரமாகவே இருக்கட்டும்.
1970 நவம்பர் 30 அன்று குருவாயூர் ஆலயத்தில் தீ விபத்து நேர்ந்தது. பழைய கால மர கோவில். மேற்கு பக்க சிட்டம்பலத்தில் ஆரம்பித்த தீ, பரவி ஐந்து அணி நேரம் எரிந்தது. கிருஷ்ணின் ஸ்ரீ கோவில், சாஸ்தா சந்நிதி கணபதி, பகவதி சந்நிதி, கொடிமரம் எதுவும் பாதிக்கப்படவில்லை. அப்புறம் புதுப்பித்தார்கள். இப்போது செப்புக்கூரைகள்,
குருவாயூர் கிருஷ்ணன் ஸ்ரீ கோவில் ரெண்டு அடுக்கு பாரம்பரிய கேரள, ஆலயம். செப்பு கூரை. தங்க கவசம் பூண்டு ஜொலிக்கிறது. ஆலய சுவர்களில் வண்ண ஓவியங்கள். புராண காட்சிகள்.
குருவாயூரப்பன் நிற்கிறான். சதுர்புஜங்கள். நாலு-நாலரை அடி உயரம். சங்கு, சக்கரம், கதை,பத்மம் கைகளில் காணப்படும். குருவாயூரப்பனின் கண்கள் காந்த சக்தி கொண்டவை. பார்த்துக் கொண்டே இருந்தால் தன்னை மறந்துவிடுவோம். அவனோடு ஐக்யமாகிவிடுவது போல் ஒரு உணர்வு தோன்றுகிறது. தேவ சிற்பி விஸ்வகர்மா உருவாக்கியது.
குருவாயூர் யானைகளில் மிக பிரசித்தமானது கேசவன். புண்ணிய கர்மம் நிறைய பண்ணிய கிருஷ்ணபக்தி நிறைந்த மகானின் ஜீவன். குருவாயூரில் கிருஷ்ணனோடு அதுவும் என்றும் மறக்க முடியாத ஒரு விக்ரஹமாக நின்று விட்டது. கேசவன் 1922-ல் பிறந்து, ராஜ குடும்பத்தால் குருவாயூர் கோவிலுக்கு காணிக்கையாக்கப்பட்டது. 1976 டிசம்பர் 2ம் தேதி கிருஷ்ணனோடு சேரும் வரை அரை நூற்றாண்டுகளுக்கு மேல் குருவாயூரப்பனுக்கு கிருஷ்ண சேவை.
எப்போதுமே மூலவர் சன்னிதி இருக்கும் திசையை நோக்கியே தலை குனிந்து நிற்கும். யானை சேவையில் முதலில் நிற்கும்,
1716ல் டச்சுக்காரன் தொந்தரவு. கோவிலை கொள்ளையடித்து மேலை கோபுரத்தை தீயிட்டு செல்வங்களை வாரி கொண்டு சென்றார்கள். அப்புறம் ஹைதர் அலி 1766ல் ஆக்கிரமித்தான். 1789ல் ஹைதர் அலி மகன் திப்புசுத்தானின் ஆக்கிரமிப்பு. திடீரென்று வந்த பேய் மழை வெள்ளம் திப்புவை திரும்ப செய்தது.
குருவாயூரப்பனின் அதிசயங்கள் சொல்லி மாளாது. ஒரே ஒரு விஷயம் மட்டும். ஒருவரைப் பற்றி மட்டும். சொல்லிவிட்டு நிறுத்துகிறேன்.
குரூரம்மாள் என்ற ஒரு பாட்டி குருவாயூரில் வாழ்ந்தாள். கிருஷ்ணன் மேல் சொல்ல முடியாத அளவு தாய்ப்பாசம்.தினமும் அவனுக்காக சமைப்பாள் . ''கண்ணா விஷமம் பண்ணாமல் வா, வந்து சாப்பிடு'' என கட்டளை. எல்லோரும் இது ஒரு பைத்யம் , சிலையோடு பேசுகிறது என்பார்கள்.
ஒருநாள் அப்படி கூப்பிடும்போது ஒரு சிறுவன் வந்தான்.
“அம்மா, எனக்கு பசிக்கிறது ” அவள் உடனே அவனுக்கு சாதம் பிசைந்து ஊட்டினாள். சாப்பிட்டுவிட்டு மறைந்தான். தினமும் அதை தொடர்ந்து அவள் வீட்டுக்கு வந்து சாப்பிட்டான். அவன் வருவது, போவது, பேசுவது, சாப்பிடுவது, எதுவுமே மற்றவர் கண்ணுக்குத் தெரியாது. கண்ணனை பாட்டி தூக்கி வைத்துக் கண்டு விளையாடுவாள். மடியில் போட்டு தாலாட்டுவாள்.
பாட்டி குரூரம்மாள் மரணகாலம் வந்துவிட்டது. ஈனஸ்வரத்தில் ''கண்ணா' என கூப்பிட்டாள் .'
அவன் அவள் எதிரில் வந்து நின்றான்.
“என் கண்ணா, என்னை விட்டுப் போகாதே”.
பாட்டி கையை குருவாயூரப்பன் பிடித்தான், அவளை தன்னுடன் அழைத்துச் சென்றான்.
பாட்டி கதை என்ன சொல்கிறது?
உண்மையான அன்பு இருந்தால், பகவான் நம்மிடம் நிச்சயம் வருவான்.
குரூரம்மா யசோதையின் அவதாரம் என்கிறார்கள்.
குருவாயூர் கோவில் வழிபடு ஆதிசங்கரரால் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் ரவி நாராயண நம்பூதிரி வம்சம் தொடர்ந்து பராமரித்து வருகிறது.