🌸🌸🌸🌸🌸🌸💎🌸🌸🌸🌸🌸 🌸 அனந்தனுக்கு ஆயிரம் திருநாம! விஷ்ணு ஸஹஸ்ரநாம! ஸர்வவிதே நமஹ (sarvavidhe namaha) திருநாமம் குருக்ஷேத்ரப் போர் நிறைவடைந்தபின்னர், போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கான ஈமச் சடங்குகளைத் தரும புத்திரரைக்கொண்டு செய்வித்து, அதன் பின் தருமபுத்திரருக்குப் பட்டாபிஷேகமும் செய்வித்துவிட்டுத், தன் தலைநகரான துவாரகையை நோக்கிக் கண்ணன் தன் தேரில் பயணித்துக் கொண்டிருந்தா�

6 views
Skip to first unread message

Ramakrishnan K S

unread,
Dec 30, 2025, 3:29:50 AM (11 days ago) 12/30/25
to Abridged Recipients
🌸🌸🌸🌸🌸🌸💎🌸🌸🌸🌸🌸
🌸 அனந்தனுக்கு ஆயிரம் திருநாம!

விஷ்ணு ஸஹஸ்ரநாம!

ஸர்வவிதே நமஹ
(sarvavidhe namaha)
திருநாமம்

குருக்ஷேத்ரப் போர் நிறைவடைந்தபின்னர், 
போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கான 
ஈமச் சடங்குகளைத் தரும புத்திரரைக்கொண்டு 
செய்வித்து, அதன் பின் தருமபுத்திரருக்குப் பட்டாபிஷேகமும் செய்வித்துவிட்டுத், தன் தலைநகரான துவாரகையை
நோக்கிக் கண்ணன் தன் தேரில் பயணித்துக் கொண்டிருந்தார். 

வழியில் உதங்கர் என்ற முனிவர் கண்ணனைச் சந்தித்தார்.

“கண்ணா! நலமாக இருக்கிறாயா? உன் பங்காளிகளான பாண்டவர்களும் கௌரவர்களும் நலமா?” 
என்று கேட்டார்.

“உங்களுக்கு விஷயமே தெரியாதா?” என்று சிரித்த கண்ணன், “குருக்ஷேத்ரத்தில் பெரும் போர் நடந்தது.

அந்தப் போரில் பாண்டவர் கௌரவர் இருவர் அணிகளிலும் பெருத்த 
சேதம் ஏற்பட்டுவிட்டது.

இப்போது பாண்டவர்களின் அணியில், பஞ்ச பாண்டவர்களும், அர்ஜுனனின் மருமகளான உத்தரையின் கருவில் வளரும்
குழந்தையும் மட்டுமே மிஞ்சியுள்ளார்கள். 

கௌரவர்களின் அணியில் கிருபாசாரியாரும் அச்வத்தாமாவுமே மிஞ்சியுள்ளார்கள்!” என்றான்.

“கிருஷ்ணா! நீ தவறு செய்து விட்டாய்! 

நீ இந்த யுத்தத்தைத் தடுத்திருக்க வேண்டும். 

பாண்டவர்கள் உனக்கு 
அத்தை மகன்கள்.

துரியோதனனோ உனக்குச் சம்பந்தி. 

உனது உறவினர்கள் போரிட்டுக் கொள்வதை நீ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது மாபெரும் தவறு.

உனக்கு என்ன சாபம் கொடுத்தாலும் தகும்!” 
என்றார் உதங்கர்.

“எனக்குச் சாபம் கொடுத்து உங்கள் தவ வலிமையை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள்.

நான் வேண்டுமானால் உங்களுக்கு வரம் தருகிறேன்!” என்று கூறிய கண்ணன் தனது விஸ்வரூபத்தை அவருக்குக் காட்டினான்.

விஸ்வரூபத்தைத் தரிசித்துப் பரவசம் அடைந்த உதங்கர், “கண்ணா! எனக்குத் தாகம் ஏற்படும் போதெல்லாம் உடனே
தண்ணீர் கிடைக்கும் என வரம் கொடு!” என்று பிரார்த்தித்தார்.

“அப்படியே ஆகட்டும்!” என்று சொல்லிவிட்டுக் கண்ணன் புறப்பட்டான்.

“மகாபாரதப் போரை நீ ஏன் தடுக்கவில்லை? அதற்குப் பதில் கூறு!” என்று கேட்டார் உதங்கர்.

“அது போகப் போக உங்களுக்கே புரியும்!” என்று சொல்லி விட்டுக் கண்ணன் துவாரகைக்குச் சென்றான்.

அங்கிருந்து புறப்பட்ட உதங்கர், பாலைவன மார்க்கமாகப் பயணித்தார். 

தாகம் ஏற்பட்டது.
“கிருஷ்ணா! தாகமாக இருக்கிறது! தண்ணீர் கொடு!” என உரக்கப் பிரார்த்தித்தார்.

அப்போது ஐந்து நாய்களுடன் அங்கே வந்த ஒரு வேடன் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து அவருக்கு அளித்தான்.

“என்னருகே வராதே! நகர்ந்து செல்!” என்றார் உதங்கர். 

“நீங்கள் தானே தண்ணீர் வேண்டுமென்று கேட்டீர்கள்.

அதனால் தான் கொண்டு வந்தேன்!” என்றான் வேடன்.

“நான் உன்னிடம் கேட்கவில்லை. 

கண்ணனிடம் தான் கேட்டேன்!” என்றார் உதங்கர்.

அந்த வேடன் எவ்வளவோ மன்றாடியும், அவன் தந்த தண்ணீரை வாங்க மறுத்துவிட்டார் உதங்கர்.

அவனும் திரும்பிச் சென்றான். 

“ஏ கிருஷ்ணா! நீ ஒரு பொய்யன் என்பதை நிரூபித்துவிட்டாய்!

எனக்கு நீ அளித்த வரம் என்னவாயிற்று?” என அலறினார் உதங்கர்.

 அப்போது அவர்முன் 
கண்ணன் தோன்றினான்.

“இந்திரன் அமுதத்தை எடுத்துக் கொண்டு உங்களிடம் வந்தானே. 

நீங்கள் தானே வேண்டாம் என்று அவனை விரட்டினீர்கள்?” என்று கேட்டான் கண்ணன்.

வேடன் வடிவில் வந்தவன் இந்திரன் என அப்போது உணர்ந்தார் உதங்கர்.

“கிருஷ்ணா! இந்திரனே அமுதத்தோடு என்னிடம் வந்தாலும், உன் அருள் இல்லாவிட்டால் எனக்கு 
அது கிட்டாது எனப் புரிந்து கொண்டேன்.

ஏனெனில் உன் சித்தப்படி தானே அனைத்தும் நடக்கும். 

கிருஷ்ணா! மகாபாரதப் போரை நீ ஏன் நிறுத்தவில்லை என்பதும் இப்போது
எனக்குப் புரிந்து விட்டது. 

பூமி பாரத்தைப் போக்க வேண்டுமென முடிவெடுத்து 
நீ அவதாரம் செய்தாய்.

அந்தப் பணிக்குப் பாண்டவர்களை உனது கருவியாக நீ பயன்படுத்திக் கொண்டாய்.

மகாபாரதப் போரை முன்னின்று நடத்திப் பூமியின் பாரத்தைக் குறைத்து விட்டாய்.

உனது செயலைத் தவறு என்று கூறிய எனக்குச் சரியான பாடமும் புகட்டி விட்டாய்!

நீ நினைத்ததை முடிப்பவன் என இப்போது புரிந்து கொண்டேன்,” என்று கூறினார் உதங்கர்.

உதங்கர் கூறியவாறு தான் நினைத்ததை நினைத்தபடி முடிப்பவராகத் திருமால் திகழ்வதால் ‘ஸர்வவித்’ என்றழைக்கப்படுகிறார்.

‘வித்’ என்றால் சாதிப்பவர் என்று பொருள்.

‘ஸர்வவித்’ என்றால் அனைத்தையும் சாதிப்பவர் என்று பொருள்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 
125-வது திருநாமம்.

ஸர்வவிதே நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் நினைக்கும் நல்ல காரியங்கள் அனைத்தும்
இனிதே நிறைவடையும்படித் திருமால் அருள்புரிவார்.
🌸🌸🌸🌸🌸💎🌸🌸🌸🌸🌸🌸

Reply all
Reply to author
Forward
0 new messages