அட, கலிகாலமே ! - நங்கநல்லூர் J K SIVAN
2. ரிஷியின் கணிப்பு
இன்னும் ஏழு நாள் தான் உலக வாழ்க்கை என்று தெரிந்தும் தளராமல் பரீக்ஷித் மஹாராஜா தான் அறிய வேண்டிய சகல விஷயங்களையும் சுகப்பிரம்ம ரிஷியிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறான். இனி வரப்போகும் யுகம் எப்படியிருக்கும் என்றும் அவனுக்கு அறிந்து கொள்ள ஆவல்.
''மகரிஷி, அடுத்ததாக ஏதோ ஒரு யுகம் வருமாமே. அது என்ன?''
'' கலியுகம்.''
''பேரே நன்றாக இல்லையே. சரி, அதில் என்ன நடக்கப்போகிறது மகரிஷி ? சொல்ல முடியுமா?''
ஆஹா சாஸ்திரங்கள் அதைப் புட்டு புட்டு வைத்திருக்கிறதே. கேள். மஹாராஜா, விவரமாக உனக்கு சொல்கிறேன்.''
இந்த பிரபஞ்சத்தில் ஆரம்பத்தில் சத்ய யுகம் 18,00,000 வருஷ காலம் நடந்தது. மனிதனின் வயது அப்போது பத்து லக்ஷம் வருஷம். யமனுக்கு சுத்தமாக வேலையே இல்லை. எத்தனை பிள்ளை, குட்டி, பேரன் பேத்தி, கணக்கு கம்ப்யூட்டரில் கூட போடமுடியாது.
அப்புறம் த்ரேதா யுகம் வந்தது - அது தான் ராமர் காலம் - 12,00,000 வருஷ காலம். அப்போது சராசரி ஒவ்வொரு மனிதனுக்கும் பத்தாயிரம் வருஷம் வயசு. LIC கிடையாது. அடடா, மனிதனின் வயது முதலாவது சத்ய யுகத்தைவிட பத்து மடங்கு வயது குறைந்து விட்டதே.
அடுத்தது துவாபர யுகம் உன் முன்னோர் காலம். 800,000 வருஷ காலம். மனிதன் வயது அப்போது சராசரி ஆயிரம் வருஷங்கள். ஐயோ இதென்ன அக்கிரமம். வயஸு இன்னும் பத்து மடங்கு குறைந்து விட்டதே.
இப்போது கலியுகம் நடக்கிறது. இதில் நமக்கு அதிக பக்ஷ வயஸு 100. இன்னும் பத்து மடங்கு குறைந்து விட்டது. நூறு வயதே ஜாஸ்தி. சராசரி 70 தாண்டினாலே அப்புறம் ஒவ்வொரு நாளும் போனஸ்.
இன்னும் போகப்போக 20 வயது 30 வயது ஆகிவிட்டாலேயே அவன் தொண்டு கிழவன். தாத்தா பட்டம் கட்டி விடப்போகிறார்கள்.
எப்படி இருக்கு? இப்போதே அங்கும் இங்குமாக ஒரு சில 30-35 வயது ஹார்ட் அட்டாக் மரணங்கள் . படிக்கவோ கேட்கவோ ஷாக் அடிக்கிறது. ஞாபக சக்தி குறைந்து போய் விட்டது. கேட்க கேட்க , படிக்க படிக்க எதுவுமே மறந்து கொண்டே போகிறது. நமது தாத்தா கொள்ளு தாத்தா, காவேரியில் வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டார், பனை மரம் ஏறி நுங்கு பறித்தார், தேங்காயை பல்லால் கடித்து உறித்தார். தோட்டத்தில் கரும்பு கண்ணில் பட்டால் ரெண்டு மூன்று கரும்பை கடித்தே தின்றார்.. இதெல்லாம் இப்போது ஆச்சர்யமான விஷயங்களாக வாயைப் பிளந்து கேட்கிறோம். ஆஞ்சநேயர் கோவில் மிளகு வடையை கூட நம்மால் கடிக்க முடியவில்லை. பல் அவ்வளவு வீக். WEAK.
கலியுகத்தில் மதம், பக்தி, மரியாதை, பதவிசு, எல்லாம் குறைந்து விடும். இப்போதே
மதம் என்று எவனாவது பேசி எசகு பிசகு பண்ணினால், சொன்னால், உடனே பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள்......மதச் சார்பற்ற.... இதற்கு என்ன அர்த்தம் என்றே எனக்கு இன்னும் புரியவில்லை. கோவில்கள் சிலரது வாழ்க்கைக்கு சௌகரியங்களை தேடித்தரும் சுலப வழியாகி விட்டதே. கிராமங்களில் கோவில்களில் ஆளே இல்லை. சில கோவில்களில் சாமியே காணோம். அமெரிக்காவுக்கோ எங்கோ சென்று விடுகிறது. கோவில் நிலங்கள் பிளாட் ஆகி விட்டன. அன்னதானம் நிச்சயம் என்று தெரிந்த சில கோவில்களில் பிச்சைக் காரர்கள், உழைக்காமல் பிழைப்பவர்கள் தான் சாப்பாட்டு நேரத்தில் கண்ணில் படுகி றார்கள். பக்தர்களுக்கு இலவச உணவு சுத்தமாக கிடைக்குமோ?.
கருணையாவது, காருண்யமாவது, தயையாவது. ஒரு ரூபாய்க்கு குழந்தையை விற்கி றார்கள். அசந்தால் அறுபதுக்கு மேலே கிழவிகள் தங்கச் சங்கிலி தங்கள் உயிர் இரண் டையும் கோட்டை விடுகிறார்கள். மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் வன்மையில் கொல்கிறார்கள். பத்திரிகை டிவி எல்லாமே நிமிஷத்துக்கு நூறு கொலை கொள்ளை பற்றி தான் செய்தியும் படமும் போடுகிறது. நல்ல விஷயம் எதையும் சொல்ல பிடிக்கவில்லையா? சொல்வதற்கு எதுவும் இல்லையா? நடப்பது இப்படி இருந்தால் அதைத் தானே காட்ட, சொல்ல, முடியும்.
ஆமாம் நமது காலம் கலிகாலம் என்பதை மேற்படி ஸ்லோகத்திலிருந்து உணர்கிறோம். எப்படி இவ்வளவு துல்லியமாக சுகர் சொல்ல முடிந்தது அதுவும் 5000 வருஷங்களுக்கு முன்னால் .....!
கலிகாலம் இப்போது தான் புதிதாக நடக்கிற மோசமான காலம் என்று நினைக்கவே வேண்டாம். நான்கு யுகங்களில் கடைசியாக நாலாவது, கலியுகம். இந்த நாலு யுகங்களும் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கும். அதற்கு பல கோடி வருஷங்கள் ஆகும். ஒவ்வொரு யுகமும், நமது கணக்கில், பல லக்ஷ வருஷங்கள் கொண்டது. இந்த பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து இது நடந்து வருகிறது. சொன்னால் அசந்து போவீர்கள். இது வரை 1.8 கோடி கலியுகங்கள் ப்ரம்மாவின் 50 வருஷ ஆட்சியில் வந்து முடிந்து விட்டது. அதாவது, அந்த 50 ப்ரம்மாவின் வருஷத்தில் 453 கலியுகங்கள் நடந்து விட்டது.
இப்போது ப்ரம்மாவின் 51வது வருஷம் நடக்கிறது அதில் நடப்பது முதல் பாதத்தில் இப்போது நாம் அனுபவிக்கும் கலியுகம் 454வது... இது நீடிக்கும் காலம் 432000 வருஷங்கள்! போதுமா?. கலிகாலம் இன்னும் முத்தவே இல்லை ஸார் . ஆரம்பத்த்திலேயே இப்படி.....!!!
நாம் 80 தாண்டுவதே அதிர்ஷ்டம். அதற்குள் 'ஆஹா ஊஹூ'' கலி காலம் ரொம்ப மோசம் என்கிறோமே, இனி வரப் போவது எப்படி இருக்கும்? இதற்கு முன் 453 கலிகாலங்கள் எப்படி இருந்தது? யாருக்கு தெரியும்? இதை விட மோசமாக இருந்திருக்குமோ? யார் கண்டார், யார் எழுதி வைத்தார்?.
இப்போது நடக்கும் கலிகாலத்தில் என்ன நடக்கும் என்பதை சுகப்பிரம்ம ரிஷி பரீக்ஷித் மகாராஜாவுக்கு சொன்னதால் நமக்கும் தெரிந்தது. நாம் அன்றாடம் கண்ணால் கண்டு அனுபவிக்கும் அதிர்ச்சிகள் ''கலி காலம் எப்படி இருக்கு பார்த்தாயா?'' என்று உலுக்குகிறது.
சுகர் கலிகாலத்தை பற்றி சொல்வது ஸ்ரீமத் பாகவதத்தில் 12வது காண்டத்தில் 2வது அத்தியாயத்தில் இருக்கிறது. அதன் சாராம்சங்களைப் படித்தேன் . அதைச் சொல்கிறேன். முதல் பதிவு வெளியிட்டுவிட்டேன்.
நான் ஜவந்திப்பூ மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு சப்பளாங்கால் போட்டு உட்கார்ந்து உரக்க கதை சொல்லும் பௌராணிகன் இல்லை. உங்களில் ஒருவன்.
சுக ப்ரம்ம ரிஷியால் எப்படி இவ்வளவு துல்லியமாக 5000 வருஷங்களுக்கு முன்பே நமது இப்போதைய கலிகாலத்தில் என்னென்ன வெல்லாம் நடக்கப்போகிறது என்று அறிய முடிந்தது என்று கேட்டால் சுலபமான பதில் ''ஞான திருஷ்டி'' என்று சொல்லிவிடலாம். நமக்கு பகலிலேயே எதிரே வரும் தண்ணீர் லாரி , கண்ணாடி போட்டுக்கொண்டும் தெரியவில்லையே.
இதைச் சொன்ன சுக ப்ரம்ம ரிஷியை விட எதிர்கால கவலையில் கேள்விகேட்டு அவரை துளைத்து இதைச் சொல்ல வைத்த பரீக்ஷித் மகாராஜாவுக்கு தான் நாம் ரொம்ப ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அவன் இத்தனை கேள்விகளை ஏழு நாளில் கேட்டு ஏழு ஜன்மத்துக்கு நமக்கு போதுமான விஷயங்களை சுகப்ரம்மத்திடமிருந்து பெற்றுத் தந்திருக்கிறானே.
ஆன்மீக கட்டுரைகள் படிப்பதை விட வாட்சப்பில், அவரைக்காய் பொரிச்ச குழம்பு பண்ணுவது பற்றி தெரிந்து கொள்ள நாட்டம் தான் அதிகம் உள்ளது. அவனவன் ஆபிஸ் போகும்போது, பஸ்ஸில் தொங்கிக் கொண்டு காதில் ஒயரை ear phone wire செருகிக் கொண்டு நிற்கும்போது, பக்கத்தில் இருப்பவனை இடித்துக்கொண்டு ரயிலில் பயணிக்கும்போது படிப்பதற்கு ஒரு எண்ணம் வந்து பத்து நிமிஷம் செலவழித்தால் அவன் நிச்சயம் பூர்வ ஜென்ம புண்ணியம் பண்ணவனாக இருக்க வேண்டும். அந்த நேரத்தில் அவனைப் பிடிக்க சின்னதாக சுருக்கி எழுதினால் தான் உண்டு. இல்லையேல் அலமாரியில் பரிமேலழகர், நாலடியார், திரிகடுகம், திவ்ய பிரபந்தம், பெரிய புராணம்,ராமாயண பாரதம், பாகவதம் புத்தகங்கள் பக்கத்தில் என் புத்தகமும் அமர்ந்து கொள்ளும் என அறிவேன். அதற்கெல்லாம் சொந்தக்காரன் அந்த புத்தகங்களை வாங்கியவன் இல்லை. பழைய பேப்பர் காரன்.
வாட்சாப் வந்தாலும் வந்தது, மூணு மணி நேரம் கதை சொல்கிறவர்கள் கூட மூணு நிமிஷத்தில் மொபைலில் சுருக்கிச் சொல்ல முன் வந்து விட்டார்கள். யூ ட்யூப், டிவி செய்திகள் , கட்சிக் கொடி பூசல், லஞ்ச பேரம், ஊழல், நில ஆக்கிரமிப்பு கோர்ட் கேஸ்கள் பற்றி கூட சுக பிரம்ம ரிஷி ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பே தெரிந்து வைத்திருக் கிறார். விவரமாக படிக்க இங்கே யாரும் இல்லை. நூறு வருஷங்களுக்கு முன்பே ராமலிங்க வள்ளலார் ''கடை விரித்தேன் கொள்வார் இல்லை'' என்று அனுபவ பூர்வமாக சொல்லி விட்டார்.
அவசரமாக பார்க்க, நுனிப்புல் மேய, பொம்மைகல் மூலம் பதில் சொல்ல மட்டுமே தேவையாகிறது. மீம்ஸ் memes என்பது வடிவேல் சுவாமிகளால் உயிர்பெற்று ஊரெல்லாம் கொரோனா போல் பரவி இருக்கிறதே. யார் சுகப்ரம்மத்தின் ஸ்லோகங்களை படிப்பார்கள்?
சுகர் பரிக்ஷித்துக்கு எந்த தேசத்தில் எந்த ராஜாவுக்கு அப்புறம் எவனைக் கொன்று எவன் வருவான் என்று சரித்திர பக்கங்களை அது எழுதப்படுவதற்கு முன்பே சொல்கிறார்.
சத்யம் என்றால் நிறைய பேருக்கு தெரியாமல் போய்விட்டது. சத்யம் தெரியுமா? என்று கேட்டால், தெரியுமே, இப்போ 'அங்கே என்ன படம் ஓடுகிறது?'' என்று கேட்பது தான் ஞானம்.
மூக்குக்கு மேல் கோபம் எல்லாவற்றிலும், எதற்கும், எவருக்கும் வருகிறதே. பொறுமை, கருணை சகிப்பு தன்மை, எங்கிருந்து வரும்?
கலிகாலத்தில் பணம் ஒன்றே தான் பிரதானமாக செயல்படும். காசே தான் கடவுளடா. உண்மை, நேர்மை, சத்யம் எல்லாமே பணத்திற்கும், அது தரும் பதவிக்கும் அதிகாரத்திற்கும் அடிமையாகிவிடும். (நாம் தான் நிறைய பார்க்கிறோமே, படிக்கிறோமே). பணம் இருந்தால் படிக்காதவன் கூட டாக்டர். ஊசி போடுபவர் அல்ல, நீளமான தொள புளா கோட்டு மாதிரி கருப்பாக ஒன்று போட்டுக்கொண்டு தலையில் சதுரமான தொப்பி போட்டுக்கொண்டு கையில் சுருட்டி இருக்கும் நூல் சுற்றிய காகிதத்தைப் பலபேர் முன்னிலையில் கை தட்ட லுடன் ஒன்றுமே தெரியாமல், செய்யாமல் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொள்பவன் தான் டாக்டர். நாலு க்ளாஸ் படித்தாலே போதும் இதை பெற. பணம் சமூக பலம் இருந்தால் போதும். தடி எடுத்தவன் தண்டல்காரன்.
சுகப்ரம்மம் இப்போது நம்மோடு வாழ்பவரைப் போலவே, நமது அனுபவங்களை தானும் அனுபவித்தவர் போலவே ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு எப்படி உணர்ந்திருக்கிறார்? என்பது தான் ஆச்சர்யம். மஹான்களால் எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே சொல்லமுடியும்.
''பரிக்ஷித், இனி எதிர்காலம் கலியுகத்தில் தடுமாறும். படிப்பு, நேர்மை, நாணயம் இதற் கெல்லாம் மதிப்பில்லை என்று சொன்னேனே, அதோடு பக்தியையும் சேர்த்துக்கொள். காசு மட்டும் இருந்துவிட்டால் இதெல்லாம் இருப்பதாக உலகம் உன் தலையில் கற்பூரம் ஏற்றி அடித்து சத்தியம் செய்யும்.
பணத்தை இன்னொருவனிடமிருந்து அபகரிக்க பெண்ணையும் பிள்ளையும் பலி ஆடு களாக காட்டி இரக்கமில்லாத பெற்றோர்களே சுயநல விரும்பிகளாக மாறிவிடு வார்கள்.
நமது கலாச்சாரங்கள், புராணங்கள், வேதங்களை விற்பனை பொருளாக மாற்றி சிலர் யோகிகளாக, ஞானிகளாக சாமியார்களாக ( டம்பாச்சாரிகளாக என்று வார்த்தையை உபயோகிக்கிறார்) காட்டிக்கொள்வார்கள். ஏமாற்றுவித்தையில் சிறந்தவர்கள்மட்டுமே பிழைப்பார்கள். கடவுளையே திருடி விற்பார்கள். பொற்சிலைகளை சுரண்டி பித்தளைச் சிலைகள் பொன் பாலிஷ் போட்டுக் கொண்டு விடும். பழங்கால ராஜாக்கள் பிரதிஷ்டை பண்ணிய ஐம்பொன் சிலைகள் கோவிலை விட்டு பறந்து வெளிநாடுகளில் கண்ணாடிப் பெட்டியில் வைத்து விற்கப்படும்.மரகத விக்ரஹங்கள் வேறு பச்சைக்கல்லாக மாறிவிடும்.
சாமியைப் பார்ப்பதற்கே அதிக காசுகொடுத்தால் தான் சீக்கிரம் ஸ்பெஷல் வரிசையில் பணம் கொடுத்து தூரத்தில் இருந்து ஒரு நிமிஷத்துக்கு கம்மியாக பார்க்க விட்டு பிடித்துத் தள்ளுவார்கள். ' ஜருகண்டி ' ஜருகண்டி என்பார்கள்.
சுக ப்ரம்மம் சொல்கிறார் ''ஹே ராஜன், சொல்கிறேன் கேள். கலியுகத்தில் எண் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம் என்று ஆகும். உண்பதே உடல் எடுத்ததின் காரணம். அடாவடி, அதிரடி தில்லு முல்லு , அடித்தே கொல்வது , அக்கிரமம், பொய் , அதிகார துஷ்ப்ரயோகம், பணத்தின் பாபச் செயல் இவைகள் சர்வ சாதாரண சாத்தியமாகும். சத்தியமும் ஆகும். தன் குடும்பத்தை காப்பதே ஒருவனுடைய பெரிய உயர்ந்த தியாகச் செயல் என்று ஆகியிரும். குடும்பம் சிதறிவிடும்.
எவனிடம் அதிகமாக சொத்து, காசு சேர்கிறதோ அவன் சொல் ஒன்றே வேத வாக்கு. அந்த சொத்து காசு வகையறா எப்படி சேர்ந்தது என்பது முக்கியமில்லை. அது சாமர்த்தியமாக போற்றி பாதுகாக்கப்படும். அவனையே சிறந்த தலைவனாக, அறிவாளியாக, கௌரவம் கொண்டவனாக, யுக புருஷனாக கை தட்டி வரவேற்பார்கள்.
எவன் ஒரு நாளைக்கு, ஒரு வேளைக்கு, தனது காரியம் நிறைவேற மற்றவர்களுக்கு வயிறார உணவு அளிக்கிறானோ அவன் தெய்வமாக கொண்டாடப் படுவான். ஏனென்றால் கலியுகத்தில் பசி மக்களை வாட்டும். அலைக்கழிக்கும். உணவின் வாசனை கூட கிட்டாதவனுக்கு ஒருவேளை, ஒரு நாள், சாப்பாடு பரிபூர்ண திருப்தியை ஆனந்தத்தை அளிக்கும் அல்லவா?.
இன்னும் வரும்