2026 மார்ச் 7, புனித பயணம் - நங்கநல்லூர் J K SIVAN
அய்யம்பேட்டை சேரி நரசிம்மேஸ்வரர்:
மாலை ஐந்து மணி நெருங்கும் நேரம் நாங்கள் சென்றது அய்யம்பேட்டை சேரி என்ற கிராமத்தில் உள்ள அதிசய நரசிம்மேஸ்வரர் ஆலயம். வாலாஜாபாத்தில் உள்ள தன்வந்திரி ஆலயம் செல்ல விருப்பம் ஆனால் நேரம் இன்மையால் அடுத்த முறை தரிசிக்கலாம் என மனதை தேற்றிக்கொண்டோம்.
காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் போகும் பாதையில் சென்றால் அய்யம்பேட்டை சேரி கிராமம் வரும். கிராமத்தில் கிழக்கே 2 கி.மீ. சென்றால் தியாமுகச்சேரி எனும் கிராமம் வரும். ஆரம்பத்தில் திசைமுகம் என்று எங்கு நோக்கினும் நரசிம்மர் இருக்கிறார் என்று அர்த்தத்தில் ஊர் பெயர் இருந்தது. அங்கே தான் நரசிம்மேஸ்வரர் இருக்கிறார். நரசிம்மராக மஹா விஷ்ணு அவதாரம் செய்து ஹிரண்யனை வதம் செய்த பிறகு நரசிம்மனின் உக்ரம் குறையவில்லை. அப்போது சிவன் சரபேஸ்வரராக தோன்றி அவர் உக்ரத்தை குறைத்தார். இங்கே நரசிம்மர் உக்ரம் நீங்கி சிவனை வழிபட்டதால் இந்த ஆலய மூலவருக்கு நரசிம்மேஸ்வரர் என்று நாமம். அம்பாளுக்கு மரகதவல்லி,பச்சையம்மன் என்றும் பெயர்.
கோவிலின் கோபுரம் மேற்கு பக்கம் நரசிம்மன் சிவனை வணங்கும் உருவச்சிலை பார்த்தேன்.
அதிகம் பக்தர்கள் அறியாத, அமைதியான க்ராம கோவில். ரொம்ப அருமையான அமைதியான க்ஷேத்ரம். இங்கே கோபம்,மனக் குழப்பம் எல்லாம் குறைகிறது. கிரஹ தோஷங்கள் நீங்கும். பயம், எதிரி தொந்தரவு அகலும்.
ஒரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்த பிரதேசம். அநேக சித்தர்கள், முனிவர்கள் வாழ்ந்து தவம் செய்த க்ஷேத்ரம். முக்தீஸ்வரர் மோக்ஷமும், நரசிம்மேஸ்வரர் பாதுகாப்பும் தரும் சக்தி ஸ்தானம். சோழர் கால கல்வெட்டுகள் இருக்கிறது. படிக்க முடியவில்லை. 11ம் நூற்றாண்டு ஆலயம்.