
முடிவாக ஸகல மக்களும் ஒன்றுகூடி நடத்த வேண்டிய பணி என்னவென்றால் ஒரு பசு கூட வதைக்குப் போகாமல் வயிறு ரொம்பத் தீனி பெறவும், ஸுகாதாரமான கொட்டில்களில் வாஸம் பெறவும் செய்வதுதான். இதற்காகக் கறவை நின்றுபோன பசுக்களுக்கென்றே ஆங்காங்கு காப்பு விடுதிகளை மக்கள் அமைத்துச் செவ்வனே பரிபாலிக்க வேண்டும். கறவை நின்ற பசுக்களை வைத்துக் காப்பாற்ற ப்ரியப்படாமல் இறைச்சிக் கூடத்துக்கு விற்கவிருக்கும் எல்லா சொந்தக்காரர்களிடமிருந்தும் அவற்றை வாங்கி இந்த விடுதிகளில் வைத்துக் காப்பாற்ற வேண்டும். போதிய பண்பாடில்லாத சொந்தக்காரர்களாயிருந்தால் அவர்கள் மாம்ஸ விலையையும் தோல் விலையையும் நினைத்து பேரம் பண்ணக்கூடும். அவர்களுக்குப் பொறுமையாகவும் சாந்தமாகவும் இப்பணியிலுள்ள புண்யம், ஜீவகாருண்யம் இரண்டையும் எடுத்துச் சொல்லி நியாய விலைக்கோ, இலவசமாகவோ விற்கச் செய்ய வேண்டும். பல மாட்டுக்காரர்கள் நிஜமாகவே ஏழைகளாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களிடமிருந்து இலவசமாக எதிர் பார்ப்பதற்கில்லைதான். எப்படியானாலும் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்ற காரணத்துக்காக ஒரு பசுவைக்கூடக் கொலைக் கூடத்துக்குப் போகும்படிப் பண்ணிவிடக்கூடாது. ‘விலைக்கு மாடு வாங்குவது, விடுதி அமைப்பது, தீனி போடுவது என்றால் நிரம்பப் பணம் பிடிக்குமே! அதோடு, ‘மாடோ பாடோ’ என்று கிழமாடுகளைப் பராமரிப்பதென்றால் சரீர உழைப்பும் நிரம்பத் தேவைப்படுமே!’ என்றால், இந்தப் பணியின் முக்யத்வத்தைப் பார்க்கிறபோது பணமும் உழைப்பும் ஒரு பெரிசில்லை.
இது எத்தனை
அவச்யம் என்று, awareness create செய்வது என்கிறார்களே, அப்படி வலுவான ப்ரசாரத்தால்
ஜன ஸமூஹத்தில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி விட்டால் போதும், இத்தகைய பெரிய
ஜனத்தொகையுள்ள நம் தேசத்தில் தேவையான பணமும் திரளும், தொண்டர்களும் திரளுவார்கள்
என்றே நம்புகிறேன். அங்கங்கே நாலு பேர் விடா முயற்சியுடன் புறப்பட்டுவிட்டால்
போதும். பொருள் பலம், ஆள் பலம் இரண்டும் கிடைத்துவிடும். இதில் ஒரு விஷயம்
என்னவென்றால், பணம் கொடுக்கிறவர் வேறே, சரீரத்தொண்டு செய்கிறவர் வேறே என்று அடியோடு
இரண்டாகப் பிரிந்து நிற்கக்கூடாது. பணம் கொடுக்கிறவரும் கொஞ்சமாவது உடம்பால் உழைக்க
வேண்டும், உடம்பால் உழைக்கிறவரும் கொஞ்சமாவது பொருளுதவி பண்ணவேண்டும். அப்போதுதான்
எல்லோருக்கும் total involvement – பூர்ணமான ஈடுபாடு – இருக்கும். அதோடு
ஸமூஹத்திலும் மக்கள் பணம் படைத்தவர், உழைப்பாளி என்று இரண்டு ஜாதிகளாகப் பிரிந்து
நிற்காமல், எல்லோரும் ஒரேபோல் கோமாதாவின் குழந்தைகளாக, ஒரே குடும்பமாக,
ஐக்யப்படுவார்கள்.
என் ஆசை என்னவென்றால், ஹிந்துக்களான நாமெல்லோரும் இப்படி
ஒரு குடும்பமாக கோசேவையில் சேர்வதோடு, மற்றவர்களுக்கும் நல்லபடியாக ப்ரேமையுடன்
எடுத்துச் சொல்லிப் பிற மதஸ்தர்களையும் இதில் ஈடுபடுத்தி நம்முடைய ஒட்டுமொத்த ஜன
ஸமூஹம் முழுதுமே ஏக குடும்பமாக ஒற்றுமையோடு இப்பணியில் ஈடுபடவேண்டும் என்பதே.
மதாபிமானம் என்பது ஒவ்வொரு மதஸ்தருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாமானாலும்,
ஜீவகாருண்யம் என்பது ஸகலருக்கும் பொதுவானதாகையால் அந்த அம்சத்தைக் கொண்டு இந்தப்
பணியில் இந்த நாட்டிலுள்ள அத்தனை மதஸ்தர்களும் ஒன்று சேர்ந்து தோள் கொடுக்கவேண்டும்
என்பதே என் அவா.
N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536
