மானூர் திருத்தலம் வரலாறு

3 views
Skip to first unread message

Shiva Shankar

unread,
Feb 8, 2026, 10:39:01 PM (4 days ago) Feb 8
to amrith...@googlegroups.com
திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் நெல்லைக்கு வடக்கே 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மானூர் திருத்தலம். இதன் வேறு பெயர்கள் மானமாநகரம், மானவநல்லூர், மானையபதி, மானையூர் என்பனவாகும். 

திருக்கோவில் வரலாறு : 

மானூர் பெரிய கோவில் எனப்படும் அம்பலவாண சுவாமி கோவில் கட்டப்படுவதற்கு தனிக் கதை கூறப்படுகிறது. அது யாதெனில், சீவலமாற பாண்டியன் என்ற மன்னன் காலத்தில் அரண்மனை பசு திடீரென பால் கொடுக்கவில்லை. எனவே மாட்டை சரியாக கவனிக்கவில்லை என குற்றம் சுமத்தி, மாடு மேய்ப்பவனுக்கு சவுக்கடி தண்டனை கொடுக்கப்பட்டது. மறுநாள் மாட்டை பின் தொடர்ந்து மாடு மேய்ப்பவன் சென்றான்.
அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அந்தப்பசு ஒரு சிவலிங்கத்தின் மீது தாமாக பால் சொரிந்ததைக் கண்டு மாடு மேய்ப்பவன் ஆச்சரியம் கொண்டான். இது பற்றி தனது மன்னனிடம் போய் தகவல் கூறினான். அது உண்மை என்பதை அறிந்ததும், தானும் தவறாக மாடு மேய்ப்பவனுக்கு தண்டனை வழங்கியதை எண்ணி வருத்தம் கொண்டார். 

இந்த நிலையில் மன்னரது கண்களும், கைகளும் செயலிழந்தன. தன் தவறை உணர்ந்த பாண்டிய மன்னன், தனக்கு மன்னிப்பு வழங்கும்படி இறைவனை வேண்டினான். இந்த நிலையில் மன்னனின் கனவில் தோன்றிய இறைவன், ‘மானூரில் தனக்கு ஒரு கோவிலும், ஒரு குளமும் அமைத்தால் குறைகள் நிவர்த்தியாகும்’ என்று குறிப்பால் உணர்த்தினார்.
 அதன்பேரில் மன்னர் தன் படை பரிவாரங்களோடு மானூர் நோக்கி சென்றான். அப்போது வழியில் வல்லப மங்கலம் என்ற ஊரில் சென்றதும் மன்னனுக்கு கண் பார்வை கிடைத்தது, கைகளும் செயல்படத் தொடங்கின. மன்னன் மனம் மகிழ்ந்து அவ்வூரில் ஒரு கோவில் கட்டினான். 

பயணத்தின் நடுவழியில் அமையப்பெற்றதால் அங்குள்ள இறைவனுக்கு ‘நடுலிங்கம்’ என்ற பெயர் விளங்கியது. மன்னருக்கு கண்களும், கைகளும் வழங்கியதால், அந்த ஆலயம் கண் கை கொண்டான் என்று அழைக்கப்பட்டு, தற்போது கங்கைகொண்டான் என்று குறிப்பிடப்பட்டு வருகிறது.
தான் குணமடைந்ததைத் தொடர்ந்து மானூர் வந்த மன்னன், அங்கு சிவனுக்கு பெரிய கோவில் ஒன்றை அமைத்து, பெரிய குளத்தையும் வெட்டினான் என்று வரலாறு கூறப்படுகிறது. இத்திருக்கோவிலுக்கு என்று தனிப்புராணம் பாடப்படவில்லை. இவ்வாலயத்தின் வரலாறு, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தல புராணத்திலேயே இரண்டு சருக்கங்களில் அமைந்திருக்கிறது. 

அவை கருவூர்சித்தர் சருக்கம் (21 திருவிருத்தங்களால் ஆனது) மற்றும் ‘மானூர் சபையில் ஆச்சரிய நடன சருக்கம்’ (58 திருவிருத்தங்களால் ஆனது) என்பதாகும். இது திருநடனசபை என்பதால் தீர்த்தம் மற்றும் தல விருட்சம் இல்லை. இது நெல்லையப்பர் கோவிலுக்குரிய ஆறு சபைகளுள் ஒன்றாகும்.
 ஆச்சரியசபை வரலாறு : 

சிவபெருமான் ஒருசமயம் தாருகாவனத்தில் மாமுனிவர்களின் வீடுகளுக்கு, பிச்சை ஏற்பவர் போல் சென்றார். இதையறிந்த முனிவர்கள் சிவனை சபித்தனர். அப்போது சிவபெருமான், ‘யாம் உங்களுக்கு ஞானம் தந்தோம். அது கொண்டு உண்மையை ஆராய்ந்து பாருங்கள். 

நாம் செய்யும் நடனமும் காணுங்கள்’ என்று அருளி, திருமாலின் கட்டளைப்படி தேவதச்சனால் அலங்கரிக்கப்பட்ட ஆச்சரிய சபையில் வந்து ஆச்சரிய நடனம் ஆடி நடராஜராக காட்சி தந்தருளினார். ஒரு காலத்தில் சுவாமி நெல்லையப்பரின் நடனசபையாக மட்டுமே இருந்த இத்தலத்தில், பிற்காலத்தில் விநாயகர், முருகன், நெல்லையப்பர், காந்திமதி சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆலயத்தில் கருவூர் சித்தர் சன்னிதி மற்றும் திருவடிப்போற்றி சன்னிதி ஆகிய இரண்டு சிறப்பு சன்னிதிகள் உள்ளன. கருவூர் சித்தர், தவமியற்றி எண் வகைச் சித்திகளும், சிவத்தல யாத்திரைப்பேறும் பெற்றார். சிவத்தலங்களில் தாம் அழைத்தவுடன் இறைவன் நேரில் தோன்றி காட்சி கொடுக்கும் பேறும் பெற்றார். 

ஒரு சமயம் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் முன்பு வந்து நெல்லையப்பரை அழைத்தார். நெல்லையப்பர் பதிலளிக்காததால் கோபமுற்ற கருவூர்சித்தர் ‘ஈசன் இங்கு இல்லை. எருக்கும் குறுக்கும் எழுக’ என்று சாபமிட்டுவிட்டு மானையம்பதி (மானூர்) செல்ல முற்பட்டார். இதை உணர்ந்த நெல்லையப்பர் ஒரு சிவத்தொண்டராக வந்து கருவூர் சித்தரை தடுத்து அழைத்தார்.
கோபம் தணிந்த கருவூர் சித்தர், சிவத்தொண்டரிடம் ‘மானூர் வந்து தனக்கு காட்சி கொடுத்து நெல்லையப்பரை சாப விமோசனம் பெறச் சொல்’ என்று கூறிவிட்டு மானூர் சென்றடைந்தார். மறுநாள் நெல்லையப்பர், காந்திமதி, அகத்தியர், குங்கிலிய நாயனார், சண்டிகேஸ்வரர், தாமிர பரணி, பாண்டியராசன் ஆகியோர் மானூர் வந்து சேர்ந்து மானூரில் கருவூர் சித்தருக்கு காட்சியளித்தனர். 

பின்னர் கருவூர் சித்தரையும் உடனழைத்துக் கொண்டு நெல்லை வந்தடைந்தனர். சித்தரும் நெல்லையை அடைந்து ‘ஈசன் இங்கு உண்டு அதனால் எருக்கும் குறுக்கும் அற்றுப் போக’ என்று மொழிந்தார். இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று மானூரில் ‘ஆவணி மூலத்திருவிழா’ என்ற பெயரில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
கருவூர் சித்தர் திருவிசைப்பா பாடியருளிய பெரியாராவார். இவருக்கு மானூரில் நடந்ததாக நிகழ்வொன்று கூறப்படுகிறது. அது யாதெனில், மானூரில் 1008 லிங்கங்களும், 1008 பிராமணர்கள் வாழ்ந்ததாகவும் வரலாறு உண்டு. 

திருவடிப் போற்றி சன்னிதி : 

ஏழடி உயரமான கருங்கல் தூண் ஒன்று அம்பலவாண சுவாமி கோவிலின் முன்பாக இருக்கின்றது. அதுதான் திருவடிப் போற்றி என்று வழிபடப்படுகிறது. தற்போது அது சொல் வழக்கில் ‘திருவாளிப் போற்றி’ என்று மருவிவிட்டது. முன்னொரு காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவரால், மெக்காவிலிருந்து கொண்டு வரப்பெற்றது அந்த தூண் என்றும், அதில் மிகுந்த சக்தி பதிந்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.
கோவில் அமைப்பு : 

இத்தலத்தின் நடுநாயகமாக இருப்பது அம்பலவாண சுவாமியின் திருக்கோவிலும் முன் மண்டபமும். அதற்கு கீழ் பகுதியில் உள்ளது தான் திருமண மண்டபம் எனப்படும் ஆவணி மூலமண்டபம். இங்குதான் கருவூர்சித்தருக்கு காட்சி கொடுக்க திருநெல்வேலியிலிருந்து சுவாமி நெல்லையப்பர் வந்து இறங்குகிறார்.

கோவிலின் முன் மண்டபத்தின் கன்னி மூலையில் விநாயகரும், வடமேற்கு மூலையில் முருகப்பெருமானும், இவர்களுக்கு நடுவே சுவாமி நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் வீற்றிருக்கிறார்கள். இவர்களை சுற்றி உட்சுற்றும், புதிய கல்மண்டபமாக உள்ள வெளிச்சுற்றும், அதற்கு வெளியே தரை வழியாக சுற்றிவர புறச்சுற்றும் என பிரகாரங்கள் அமைந்துள்ளன. 

கோவிலின் தெற்குப்பகுதியில் திருவடிப்போற்றி எனப்படும் சன்னிதியும் கோவிலின் உள்ளே அமைந்துள்ள கருவூர்சித்தர் சன்னிதியும் சிறப்பு வாய்ந்தவையாகும். இது தவிர சனி, சூரிய சந்திரர், வைரவர் சன்னிதிகளும் உண்டு. உடையவர் எனப்படும் அம்பலவாணராகிய பாணலிங்கம் மிகச்சிறியதும் பேரழகுடையதுமான திருவுருவம் ஆகும். 

உடையவருடைய மண்டபம் அழகான தூண்கள் கொண்டது. இத்தூண்களில் கல்வெட்டுகள் காணப்படுகிறது. மண்டபத்தின் முன்வரிசையில் இருபுறமும் தலையெடுப்புக்குமேல் அழகான மரச்சிற்பங்கள் அமைந்துள்ளன. இத்திருக்கோவிலின் வடகிழக்கு மூலையில் இருந்து கொண்டு ஆமையும், அன்னமும் அம்பலவாணரை வழிபட்டு வீடு பேரு பெற்றதாக நம்பப்படுகிறது. 

இக்கோவிலின் வடகிழக்கு மூலையில் ஆமையும், அன்னமும் கல்லில் சித்திரமாக வடிக்கப்பட்டுள்ளன. ஆவணி மூலத்திருநாள் மற்றும் மார்கழி திருவாதிரை திருநாள் போன்ற திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. 

இதில் ஆவணி மூலத்திருவிழாவிற்கு திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கொடியேறிய நாளில், மருதூர்  அகஸ்தியார் அணை– தாமிரபரணி நதியில் நீராடி விரதமிருந்து அதன்பின் ஆவணி மூலத்திருநாளன்று மானூர் வந்து மானூரில் கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் ஜோதிமயமாய் காட்சி கொடுப்பதை கண்டு வணங்கினால் மூல நோய் தீருவதோடு முக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
Reply all
Reply to author
Forward
0 new messages