🌺🌿சிவபெருமான், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளும் நாள்தோறும் வழிபடும் முருகப்பெருமான். நாரதர், அகத்தியர், நவகோள்கள், நாகக் கன்னிகள், சித்தர்கள் வழிபட்ட ஆலயம், ஆதிசங்கரர், அருணகிரிநாதர், ராகவேந்திரர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் திருப்புகழ் பாடல் பெற்ற கோவில், பல்வேறு யாகங்கள் நடந்து பூமி என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்கிறது. பழங்காலத்தில் பெரிய அளவிலான யாக சாலைகள் இருந்ததால், யாக சாலை என இப்பகுதி வழங்கப்பட்டு, பின் இதுவே மருவி பாகசாலை என வழங்கப்பட்டதென ஊருக்கு பெயர்க் காரணம் கூறப்படுகிறது. இது தவிர, பார் + கை எனப் பிரித்தால், ‘அபயமளிக்கும் திருக்கை’ என பொருள்படும்.
🌺🌿அபயமளிக்கும் திருக்கை கொண்ட முருகப்பெருமான் விளங்கும் தலமானதால் ‘பாகை’ என வழங்கப்படுவதாகவும் கூறுகிறார்கள். படைக்கும் தொழில் செய்து வந்த காரணத்தால் பிரம்மாவுக்கு ஆணவம் வந்தது. அந்த ஆணவத்தை அடக்க முருகப்பெருமான் சித்தம் கொண்டார். அதன்படி பிரம்மனிடம் பிரணவத்திற்கு பொருள் கூறுமாறு கேட்டார் முருகன். அதற்கு பதில் தெரியாமல் திகைத்த பிரம்மனை, சிறையில் அடைத்தார் கந்தக்கடவுள். அதன்பின் இத்தலத்தில் தங்கியிருந்து பிரம்மனின் படைப்புத் தொழிலை தானே மேற்கொண்டு வந்ததாக தல புராணம் குறிப்பிடுகிறது.
🌺🌿தானே படைப்புத் தொழிலை செய்து வருவதால், இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமான், தன் கரங்களில் ருத்தராட்ச மாலையையும், கமண்டலத்தையும் தாங்கி ‘பிரம்ம சாஸ்தா’ கோலத்தில் காட்சி தருகின்றார். இத்தலத்தினை அருணகிரிநாதரின் திருப்புகழ், மூன்று பாடல்கள் மூலம் புகழ்ந்துரைக்கிறது. ராகவேந்திரர், இத்தலத்தில் தங்கியிருந்து வழிபட்ட நிலையில், இவ்வூர் வனப்பகுதியில் பேய்களாய் அலைந்து திரிந்த அனைவருக்கும், முருகப்பெருமானையும், ஆஞ்சநேயரையும் தியானித்து மோட்சம் அளித்ததாகவும் தல புராணம் புகழ்ந்துரைக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாலய தூண்களில் ஆதிசங்கரர், ராகவேந்திரர் புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன.
🌺🌿கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் நம்மை அன்போடு வரவேற்கிறது. உள்ளே நுழைந்ததும் ஆதிசங்கரர், ராகவேந்திரர், லட்சுமி, சரஸ்வதி ஆகிய சிலா வடிவங்கள் காட்சி தருகின்றன. கோவிலை வலம் வரும் போது கொன்றை மரம், தென்மேற்கே விநாயகர் சன்னிதி, வடமேற்கே வள்ளி – தெய்வயானை சமேத முருகப்பெருமான், கோமுகத்தின் அருகே சண்டிகேசுவரர், வடகிழக்கே அருணகிரிநாதர் சன்னிதி ஆகியவற்றை தரித்து வழிபடலாம். அருணகிரிநாதர் சன்னிதியின் அருகே பாம்பன் சுவாமிகள், குமரகுருபரர், சிதம்பரம் சுவாமிகளின் சுதைச் சிற்பங்கள் இருக்கின்றன. கோவிலை வலம் வந்த பின் கொடிமரம், பலிபீடம், மயில் வாகனத்தை தரிசித்து மூலவரை காணச் செல்லலாம். கருவறையின் வலதுபுறம் உற்சவத்திருமேனிகள் அணி வகுக்கின்றன.
🌺🌿கருவறையில் சுமார் ஆறடி உயரத்தில் கம்பீரமான கோலத்தில் பிரம்ம சாஸ்தாவாக, ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்டு பாகசாலை முருகன் காட்சி தருகிறார். வலது மேல் கரத்தில் அட்சயமாலை, இடது மேல் கரத்தில் கமண்டலம், வலது கீழ்க்கரம் அபய முத்திரை, இடது கீழ்க்கரம் இடுப்பில் தாங்கி, அழகே உருவாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மந்திர மயிலும், சக்திவேலும் இத்தலத்தின் தனிச் சிறப்புகள் ஆகும். இத்தலத்தில் தலமரமாக பிரமாண்ட வில்வ மரம் விளங்குகின்றது. மகரிஷி ஒருவரே மரமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. தல தீர்த்தமாக குசஸ்தலை ஆறு திகழ்கின்றது. காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம்.
🌺🌿கிருத்திகை, கந்த சஷ்டி, மாசி மகம், பங்குனி உத்திரம், குடமுழுக்கு ஆண்டு விழா, புத்தாண்டு சிறப்பு வழிபாடு, வினையறுக்கும் வேல் பூஜை என அனைத்து விழாக்களும் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகின்றன. பிரம்மோற்சவம் மாசி மகத்திற்கு பத்துநாள் முன்பு தொடங்கி மாசி மகத்தன்று நிறைவுபெறும். இத்தலத்தில் ஐந்தடி உயரமுள்ள வேலுக்கு, வினை தீர்க்கும் வேல் பூஜை, மாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது வரும் ஞாயிற்றுக்கிழமையில் வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொண்டு வழிபடுவோரின் வினைகள் அகலுவதாக பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
🌺🌿திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டத்தில் கங்கைக்கு இணையாகப் போற்றப்பட்ட குசஸ்தலை ஆற்றின் தென்கரைத் தலமாக பாகசாலை அமைந்துள்ளது. சென்னைக்கு மேற்கே 65 கிலோமீட்டர் தொலைவிலும், பேரம்பாக்கத்திற்கு வடக்கே 7 கிலோமீட்டர் தூரத்திலும், மணவூர் ரெயில் நிலையத்திற்கு தெற்கே 4 கிலோமீட்டர் தொலைவிலும் பாகசாலை திருத்தலம் இருக்கிறது🌺🌿