சிவன் முழுநிறைவானவர். ஆயினும், ஏன் அவர் பார்வதியை மணந்து கொண்டார்? சிவசக்தி சமத்துவம் விளக்கும் அர்த்தநாரீஸ்வரர்
கடவுள் நிறைவானவர், ஏன் இவ்வுலகை படைத்தார் என்று கேட்பது போலுள்ளது. ஒரு சிலந்தி நிறைவானது தான் ஆயினும் அது தன்னுடைய உமிழ்நீரினாலேயே ஒரு வலையைப் பின்னி அவ்வலையுனுள்ளேயே நகர்ந்து கொண்டிருக்கின்றது. சமுத்திரத்தில் அலைகள் எழுகின்றன, அவை எங்கே செல்கின்றன?வெளியே எங்கேனும் செல்கின்றனவா? ஏன் அவை எழுகின்றன? புரிந்ததா? சமுத்திரம் முழு நிறைவானது தான், ஆயினும் அது அலைகளை எழுவிக்கின்றது.
சிவனும் சக்தியும் ஒன்றே. சிவன் பாதி, சக்தி பாதி என்னும் அர்த்தநாரீஸ்வரர் கோட்பாடு அதுவே ஆகும். நம் ஒவ்வொருவருக்குள்ளும் அது உண்மையாகவே உள்ளது. தாயின் உயிர் அணுவும், தந்தையின் உயிர் அணுவும் அதாவது ஆண், பெண் என்னும் இரு தன்மைகளும் சேர்ந்தாலே ஒருவர் முழு நிறைவு பெற முடியும். உடல்ரீதியாக நீங்கள் பெண்ணாக இருந்தாலும், உங்கள் தந்தையின் ஆண் தன்மை உங்களுள்ளே இருக்கும்.
அர்த்தநாரீஸ்வரர் என்ற வடமொழி சொல்லுக்கு தூய தமிழ் சொல் உமையொருபாகன் என்பதாகும். சிவனும் சக்தியும் சரிசம பாகமாய் அமைந்த திருவுருவமே அர்த்தநாரீஸ்வர வடிவம். ஆண் பெண் சமத்துவத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் உயர்ந்த வடிவம். ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் என்பதை உணர்த்தும் வடிவம்.
சக்தியில்லையேல் சிவமில்லை, சிவமில்லையேல் சக்தியில்லை. சிவ சக்தி கலப்பே உலகம். அதுவே விந்து நாத தத்துவம். சிவசக்தி சேர்க்கையே உலக இயக்கத்திற்கு காரணமாய் அமைவது ஆகும். அர்த்தநாரி வடிவத்தை வழிபட்டால் கணவன் மனைவியிடையே உள்ள பிணக்குகள் தீர்ந்து ஒற்றுமை மேலோங்கும்.
பெண்களெல்லாரும், பெண்கள் வழியாகவும், ஆண்கள் எல்லோரும் ஆண்கள் வழியாகவும் பிறக்கின்றார்களா என்ன? இல்லை. உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஆண் மற்றும் பெண் தன்மைகள் உள்ளன. சிவனும் சக்தியும் ஒன்றே, ஆயினும் அவர்கள் வேறுபட்டவர்கள். பார்வதி என்பதன் பொருள் சக்தி (தெளிவாகத் தெரிவிக்கப் பட்ட உலகம் அதாவது காற்று, நிலம், நெருப்பு, நீர், மனம், தான் எனும் அகந்தை, மற்றும் நினைவுத் திறன்), சிவன் வெளிப்படையாக தெரிவிக்கப் படாதவர். உருவமும் உருவில்லாமையும் மணம் புரிதல் என்பது, உருவில்லாத உங்கள் மனமும் உருவமுடைய உங்கள் உடலும் இணைந்திருப்பது போன்றது ஆகும்.
ஆயினும் சக்திச் சொட்டுப் பொறியியலின்படி பார்த்தால் இவை அனைத்துமே அலைகோவை தான். ஆண் பெண் என்று எதுவும் கிடையாது. இருந்த போதிலும், குழந்தை வேண்டும் என்று வரும்போது சக்திச் சொட்டுப் பொறியியலின்படி எல்லாமே ஒன்று என்று கூற முடியாது! அங்கு அது வேறு தான். உணருந்த வேண்டும் என்று விரும்பும் போது சக்திச் சொட்டுப் பொறியியல் வேலை செய்யாது. எதை உண்ண வேண்டும் எதை உண்ணக் கூடாது என்பது உங்களுக்குத் தெரிய வேண்டும் அல்லவா? வேறுபாடுகள் நிறைந்த உலகமும், ஒன்றேயான உலகமும் இணைந்தே இயங்குகின்றன. ஆகவேதான் உருவில்லா சிவதத்துவம் ஈடு இணையற்றது, இரண்டென்பதே இல்லை; அது ஒன்றேயான முழுமைபெற்றது என்று கூறப்படுகின்றது.
சிவன் என்பது ஆண் தன்மை அதாவது விழிப்புணர்வு, பெண் தன்மை என்பது உருத்தெரியும் இவ்வுலகம் அல்லது உடல் ஆகும். நீங்கள் உடல் மற்றும் மனம் பற்றிப் பேசும் போது, இரண்டு விஷயங்கள் உள்ளன. உருவில்லாதது, உருத்தெரியக் கூடியது. ஆனால் அணு மற்றும் சக்திச் சொட்டுப் பொறியியலின் அலைகோவை பற்றி பேசும்போது எல்லாமே ஒரே ஒரு அதிர்வலை தான்.
தொலைக்காட்சியை பார்க்கும்போது ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். அதை மற்றொரு கோணத்தில் எடுத்துக் கொண்டால், நீங்கள் மின்னணு அலைகளை உணர்ந்து கொண்டிருக்கின்றீர்கள். நிகழ்ச்சியின் மூலம் ஒரு புறம் காட்சியின் செய்தியை அறிகின்றீர்கள் மற்றொரு புறம் இது நிகழ்கின்றது. இவை வேறுபட்டவை அல்ல இயற்கையிலேயே ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றது.
அர்த்தநாரீஸ்வர துதியில் மொத்தம் 9 பாடல்கள் உள்ளன. அவற்றில் முதல் 8 பாடல்கள் சிவசக்தி கலப்பையும், சிவசக்தியின் பெருமைகளையும் விளக்குகின்றன. கடைசி பாடல் துதியினை பாராயணம் செய்வதால் ஏற்படும் பலனையும் கூறுகிறது.
எடுத்துக்காட்டாக, முதல் பாடலை எடுத்துக் கொள்வோம். அந்த பாடல் இதோ.
சாம்பேய கௌரார்த சரீரகாயை
கர்பூர கௌரார்த சரீரகாய
தம்மில்லகாயை ச ஜ்டாதராய
நம:சிவாயை ச நம:சிவாய
முதல் வரியில் சக்தியின் சொரூபத்தையும், இரண்டாம் வரி சிவனின் சொரூபத்தையும், மூன்றாம் வரியின் முதல் பாதி சக்தியைப் பற்றியும், மறுபாதி சிவனை பற்றியும், கடைசி வரியின் முதல் பாதி சக்தியை வணங்குவதற்காகவும், மறுபாதியில் சிவனை வணங்குவதாகவும் உள்ளது.
என்ன வியப்பு...! இரண்டு வரிகளில் இருவருக்கும் ஒவ்வொரு வரியும், மீதமுள்ள இரண்டு வரிகளில் ஒவ்வொன்றிலும் பாதி பாதி வரி இருவருக்கும் சமமாக பங்கிடப்பட்டுள்ளது.
முதல் வரி “யை” என்னும் எழுத்தில் முடிகிறது. இது சக்திக்கு உரியது. இரண்டாம் வரி “ய” என்னும் எழுத்தில் முடிகிறது. இது சிவனுக்கு உரியது. அதே போல் மூன்றாம் வரியின் முதல் பாதி “யை” என்னும் எழுத்திலும், மறுபாதி “ய” என்னும் எழுத்திலும் முடிகிறது. நான்காம் வரியின் முதல் பாதி “யை” என்னும் எழுத்திலும், மறுபாதி “ய” என்னும் எழுத்திலும் முடிகிறது.
நான்காம் வரியின் முதல் பாதி “நம: சிவாயை” என முடிகிறது. இது சிவை என்னும் சக்திக்கு வணக்கத்தை கூறுவதாக உள்ளது. மறுபாதி “நம: சிவாய” என முடிகிறது. இது சிவன் என்றும் இறைவனுக்கு வணக்கத்தை கூறுவதாக உள்ளது.
நம : என்பதன் பொருள் வணக்கம்.
சிவாயை என்பதன் பொருள் சக்தி.
சிவாய என்பதன் பொருள் சிவன்.
இத்துதியில் எங்கு காணினும் சிவசக்தி சமத்துவமே மேலோங்கி நிற்பதை காண முடிகிறது. முதல் இரண்டு வரிகளில் சக்தியும் சிவனும் கலந்து நிற்கின்றனர். மூன்றாம் வரியில் சக்தியும் சிவனும் பாதி பாதியாக கலந்து நிற்கின்றனர். இதே போல் நான்காம் வரியில் சக்தியும் சிவனும் பாதி பாதியாக கலந்து நிற்கின்றனர்.
“யை” என்று முடியும் சொல் பெண்ணையும், “ய” என்று முடியும் சொல் ஆணையும் குறிக்கின்றது. இது துதியின் 8 பாடல்களுக்கும் பொருந்தி வருகிறது. 9ம் பாடல் துதியின் பலனை கூறுகிறது.
அனைத்து பாடல்களிலுமே சிவசக்தி கலப்பே மேலோங்கி நிற்கிறது. பாடல்கள் அனைத்திலுமே அர்த்தநாரீஸ்வர தத்துவம் வெளிப்படுகிறது. பாடலும், பாடலின் வரிகளும் சிவசக்தி சமத்துவமாகவே அமைந்திருக்கின்றன. பாடலே அர்த்தநாரீஸ்வர வடிவமாகவே அமைந்துள்ளது.
அர்த்தநாரீஸ்வரர் குறித்து கூறப்படும் இன்னொரு கதை என்ன என்றால் ஒரு முறை தேவலோகத்தில் சிவனும் பார்வதியும் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டு இருக்கையில் விளையாட்டாக சிவபெருமானின் கண்களை பார்வதி மூடி விட்டாள். அதனால் அந்த நேரத்தில் உலகம் இருண்டது. பூமி உலர்ந்தது, ஜீவராசிகள் அழியத் துவங்கின. ஆகவே கோபமுற்ற சிவ பெருமான் பார்வதியை விட்டுப் பிரிந்தார். மீண்டும் தன்னுடன் அவள் இணைய வேண்டும் எனில் அவளை இமயமலையில் சென்று தவம் இருக்குமாறு கூறிவிட்டார்.
அங்கு பல காலம் தவம் இருந்த பார்வதிக்கு காட்சி தந்த சிவபெருமான் அவளை மீண்டும் காசி நகருக்குச் சென்று அங்கு விஸ்வனாதராக உள்ள தன்னை வேண்டிக் கொண்டு தவம் இருக்குமாறு கூறிவிட்டு மறைந்து விட்டார். பார்வதியும் காசிக்குச் சென்று சிவனை வேண்டி தவம் இருக்க அவளுக்குக் காட்சி தந்த சிவனும் மீண்டும் அவளை திருவண்ணாமலைக்கு சென்று தவம் இருக்குமாறுக் கூறினார். பார்வதியும் சளைக்கவில்லை. தான் அவருடன் இணைவது மட்டும் இல்லாமல் அவருடைய சக்தியின் பாதியாக வேண்டும் என்ற திடமான எண்ணத்தில் திருவண்ணாமலைக்கு சென்று இன்னமும் கடுமையாகத் தவம் செய்தாள்.
அவள் தவத்தை மெச்சிய சிவனும் அங்கேயே அவளுக்குக் காட்சி தந்து அவளை தன் உடலில் பாதியாக ஏற்றுக் கொண்டாராம். அதனால்தான் அவர் அர்த்தநாரீஸ்வரராக ஆனார் என்றும் ஒரு கதை உள்ளது.
அர்த்தநாரீஸ்வரர் படைப்பு தோன்றியது குறித்து கூறப்படும் கதைகளில் சில இவை. சிவன் திருவண்ணாமலையில் அல்ல கொங்கு நாட்டில்தான் தவத்தில் இருந்த பார்வதிக்கு தரிசனம் தந்து அவளை தன் உடலில் பாதியாக ஏற்றார் என்ற மூன்றாவது கதையும் உள்ளது.
தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!
குமார் ராமநாதன்.