🌸 வால்மீகி ராமாயணம் 🌸- சோ - பாகம் 19🌸-
அத்தியாயம்-9
பகீரதனின் சாதனை
கங்கை நதி பூமிக்குக் கொண்டு வரப் படாத நிலையிலேயே காலமாகிய ஸகர மன்னனின் பேரன் அம்சுமான் பட்டத்திற்கு வந்தும் கூட தன்னுடைய மகன் திலீபனிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு கடும் தவத்தை மேற் கொண்டான். ஆனால் கங்கை நதியைக் கீழே கொண்டு வர முடியவில்லை. அதன் பின்னர், அவனுடைய மகன் திலீபன் எவ்வளவோ முயற்சித்தும், கடும் விரதங்களை மேற்கொண்டும், கங்கை நதியை பூமிக்குக் கொண்டு வர முடியாமல் காலம் சென்றான். அவனுக்குப் பின் பட்டம் எய்திய பகீரதன், மகப்பேறு இல்லாத காரணத்தால், ராஜ்ய பாரத்தை மந்திரிகளிடத்தில் ஒப்படைத்து விட்டு, ஐந்து தீக்களுக்கு இடையே நின்று கடும் தவத்தைச் செய்யத் தொடங்கினான். அவனுடைய தவத்தின் வலிமையைக் கண்டு ப்ரம்ம தேவர் மகிழ்ச்சி அடைந்து அவனைப் பார்த்து , உன்னுடைய தவத்தினால், நான் பெரும் சந்தோஷமடைந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்” என்று கூறினார்.
ஸகர மன்னனுடைய மகன்கள் 60,000 பேருக்குத் தர்ப்பண நீரை நான் செலுத்த வேண்டும். அவர்களுடைய சாம்பல் கங்கை நீரினால் நனைக்கப் பட வேண்டும். எனக்கும் மக்கட்பேறை அளித்து எங்கள் சந்ததி வளர்வதற்கும் நீங்கள் அருள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.
ப்ரம்ம தேவர் ” கடுமையான தவம் புரிந்தவனே பகீரதா! இக்ஷ்வாகு வம்சம் விருத்தி அடையும் வகையில் உனக்கு மக்கட்பேறு உண்டாகட்டும். கங்கை ஹிமவானுக்கு ப் பிறந்தவள், அவளைத் தாங்குவது என்றால், அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அவள் பூமிக்கு வந்தால் தாங்க கூடிய சக்தி யாருக்கும் கிடையாது. சிவ பிரானைத் தவிர அந்தக் காரியத்தைச் செய்யக் கூடியவர் எவரும் இல்லை. அப்படி சிவ பெருமானால் தாங்கப் படாமல் கங்கை பூமியை அடைந்தால், பூமாதேவியினால் அதைத் தாங்க முடியாது. ஆகையால் கங்கையைத் தாங்க, சிவனுடைய சம்மதத்தை நீ பெற்றாக வேண்டும். அப்படிப் பெற்றால் கங்கையை நீ பூமிக்குக் கொண்டு வந்து விடலாம். உனக்கு மங்களம் உண்டாகட்டும்” என்று ஆசீர்வதித்தார்.
இதையடுத்து பகீரதன், பரமசிவனை மனதால் நினைத்து கடும் தவம் புரிந்தான். உள்ளம் குளிர்ந்த சிவபிரான், அவன் முன் தோன்றி, உன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். மலைகளின் அரசனாகிய ஹிமவானின் மகள் கங்கை பூமிக்கு வரும் போது , அவளை நான் என் தலையில் தாங்குகிறேன்.” கவலையை விடு” என்று வரமளித்தார்.
ப்ரம்மன் ஏற்கெனவே கூறியதற்கு இணங்க, தாங்க முடியாத வேகத்துடன் கங்கை, பிரவாகமாக ஆகாசத்தில் இருந்து பூமிக்கு இறங்கினாள். தன்னைத் தாங்குவதற்காக, தயாராக நின்ற சிவனையும் அடித்துக் கொண்டு போகும் வேகத்துடன் வீழ்வது என்ற எண்ணத்தோடு , கங்கை பாய்ந்து வந்த போது, பரமசிவன் அவளுடைய இறுமாப்பை அடக்க நினைத்தார். கங்கை அவளுடைய தலையில் வீழ்ந்தாள். ஆனால் அதன் பின்னர் அவள் எவ்வளவோ முயற்சித்தும், அவருடைய ஜடை முடியிலிருந்து, தப்பிக் கீழே இறங்க அவளால் இயலவில்லை.
இப்படி கங்கை நதி சிக்குண்டதைக் கண்ட பகீரதன், மேலும் தவம் புரிந்தான். மீண்டும் அவனுக்கு அருள விரும்பிய சிவபிரான், தன் முடியிலிருந்து கங்கையை விடுவித்து, ப்ரம்மனால் சிருஷ்டிசெய்யப் பட்ட பிந்து சரஸ் என்னும் நீர் நிலையில் விட்டார். அப்போது கங்கை நதியில் ஏழு நீரோட்டங்கள் உண்டாயின. அவற்றில் மூன்று கிழக்கு திசையை நோக்கிச் சென்றன. மேலும் மூன்று மேற்கு திக்கை நோக்கிப் பாய்ந்தன. ஏழாவதான நீரோட்டம், பகீரத மன்னனைபின் தொடர்ந்து சென்றது.
இந்த அற்புத காட்சியைக்காண தேவர்களும், ரிஷிகளும், கந்தர்வர்களும், யக்ஷர்களும் கூடினார்கள். இப்படி தேவ கணங்களால் சூழப் பட்ட வானம் ஆயிரக் கணக்கான சூரியன்களுடைய பிரதேசமாகப் பிரகாசித்தது. பரமசிவனின் தலையில் விழுந்து, அங்கிருந்து பூமியில் பாய்ந்ததால், கங்கை நீர் பாவங்களைப்போக்க வல்ல புனிதத் தன்மை உடையதாக ஆயிற்று. சில சாபங்களின் காரணமாக, சொர்க்க லோகத்திலிருந்து பூமியை அடைந்திருந்த பலர், அப்பொழுது அந்த நதியில் நீராடி பாவங்களை நீக்கியவர்களாகி, நல்ல உலகங்களை அடைந்தார்கள். உலகமே கங்கை நீரால், புனிதமடைந்தது . பகீரதன் முன் செல்ல, அவனைப் பின் தொடர்ந்து கங்கை செல்ல, தேவர்களும் ராக்ஷஸர்களும் , கின்னரர்களும் கந்தர்வர்களும் , ரிஷிகளும் அப்சரஸ்களும், அதைத் தொடர்ந்து சென்றார்கள்.
போகிற வழியில் கங்கை நதி, ஜஹ்னு என்ற பெயருடைய ஒரு பெரும் முனிவருடைய யாக பூமியை அழித்து விட்டது. இதைக் கண்டு கோபமுற்ற ஜஹ்னு முனிவர் தன்னுடைய மாபெரும் யோக சக்தியின் மூலமாக, அந்த கங்கை நதி நீரையே அப்படியே குடித்து விட்டார். தேவர்களும், ரிஷிகளும் இதைக் கண்டு திகைத்தனர். பின்னர் அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்க கோபம் தணிந்தவராக, ஜஹ்னு மஹரிஷி, கங்கை நீரை மீண்டும் வெளியே விட்டார். அதிலிருந்து கங்கை, ஜஹ்னு மஹரிஷிக்கு மகள் முறைஆவாள் என்று தேவர்களும் முனிவர்களும் வாழ்த்த, அதன் காரணமாக கங்கைக்கு ” ஜான்ஹவி” என்ற பெயருமை் உண்டாயிற்று. மீண்டும் கங்கை, பகீரதனைப் பின் தொடர்ந்து சென்று, பாதாள லோகத்தை அடைய, அங்கே சாம்பலாகிக் கிடந்த ஸகரனின் மகன்கள் மீது அவள் பாய்ந்தாள். அதன் காரணமாக அவர்கள் சொர்க்க லோகத்தை அடைந்தார்கள்.
ப்ரம்ம தேவர் இந்த மாபெரும் சாதனையைப் புரிந்த பகீரத மன்னனைப் பார்த்து,” மனிதர்களில் சிறந்தவனே! உன்னுடைய சாதனையின் காரணமாக ஸகரனின் மக்கள் 60,000 பேரும் நல்லுலகை எய்தினார்கள். உன்னால் பூமிக்குக் கொண்டு வரப் பட்ட கங்கை, உனக்கு மகள் ஆகிறாள். ஆகையால் அவன் பெயர் ” பாகீரதி” என்று விளங்குவதாக! தேவலோகத்தில் பாய்ந்து கொண்டிருந்த கங்கை, உன் முயற்சியின் காரணமாக பூவுலகிலும், பாதாளஉலகிலும், பாய்கிறாள். இப்படி மூன்று வழியாகப் பாய்வதால் ” த்ரிபதகை” என்று அவள் போற்றப் படுவாள். உன் முன்னோர்களால் செய்ய முடியாத காரியத்தை நீ செய்து முடித்தாய். இதனால் உன் புகழ் பூமியில் என்றும் அழியாமல் இருக்கும்” என்று ஆசீர்வதித்தார்.
பகீரதன் , சாத்திர விதிமுறைகளின் படி, சகர குமாரர்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்தான்.
இப்படி கங்கையின் வரலாற்றைக் கூறிய விச்வாமித்திரர், ராமா! இந்த வரலாற்றைக்கேட்பவர்கள் பெரும் புண்ணியம் எண்தியவர்கள் ஆவார்கள். ஆயுள், புகழ், செல்வம் , மக்கட்பேறு எல்லாவற்றையும் அளிக்க வல்லது இந்த வரலாறு. இந்த வரலாற்றை சிரத்தையுடன் கேட்பவன், தன்னுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறியவனாகிறான்” என்று சொல்ல , அவர் கூறிய வரலாற்றைப் பற்றிய வியப்பைப் பரஸ்பரம், ராம லக்ஷ்மணர்கள் பரிமாறிக் கொள்ள, அன்றுஇரவு கழிந்தது. அடுத்த தினம் அவர்கள் ஓடத்தில் ஏறி, கங்கையைக் கடந்து அதனுடைய வடக்குக் கரையை அடைந்தார்கள். அங்கிருந்து பார்த்த போதே விசாலை என்கிற நகரம் அவர்கள் கண்களுக்குத் தெரிந்தது. அது பற்றிய விவரங்களை ராம- லக்ஷ்மணர்கள் விச்வாமித்திரரிடம் கேட்க, அவர் முன்பு நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்கிறேன்” என்று கூறி, ஒரு பழைய வரலாற்றை எடுத்துச் சொல்லத் தொடங்கினார்.
( வால்மீகி ராமாயணத்தில் இவ்வளவு விவரமாக வருகிற விச்வாமித்திரரின் மூதாதையர் பற்றிய நிகழ்ச்சிகளும், கங்கை நதியின் வரலாறும், கம்ப ராமாயணத்திலும், துளசி தாஸரின் ராமாயணத்திலும், விவரிக்கப் படவில்லை. வால்மீகி ராமாயணத்திலோ இவை மிகவும் விஸ்தாரமாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. நான்மேலே கொடுத்திருப்பது கூட, ஒரு சுருக்கமே தவிர, முழுமையான மொழி பெயர்ப்பு அல்ல)
தொடரும்…
ஸ்ரீவைஷ்ணவிஸம் முகநூலிலிருந்து எடுத்தது.