டிசம்பர் 22 முதல் 26 வரை.... நங்கநல்லூர் J K SIVAN
சென்னையிலிருந்து காரில் சவாரி செய்து கோயம்பத்தூர் திருப்பூர் போவது வசதியா? ரயிலில் போவது வசதியா? என்ற கேள்விக்கு பல வித பதில்கள் இருக்கிறது. காசு குறைவாக செலவழிக்க எண்ண மிருந்தால் ரயிலில் போகலாம். கால் சரியாக நடக்கமுடியாமல் இருந்தால் கார் தான் வசதி. வீட்டிலிருந்து மெதுவாக வாசலுக்கு வந்து காரில் அமர்ந்தால் காலை நீட்டிக்கொண்டு டிரைவர் அருகே சாய்ந்து உட்கார்ந்து கொண்டு பேசிக்கொண்டே பாடிக்கொண்டே போகலாம். அல்லது கால் நீட்டி பின்னால் படுத்துக் கொள்ளலாம். வேண்டியபோது வண்டியை நமது சௌகர்யத்துக்கு நிறுத்திக் கொள்ளலாம். வழியில் ஏதாவதுக்கோவிலைப் பார்த்தால், அது திறந்திருந்தால் நிறுத்தி தரிசனம் செய்யலாம். இது ரயிலில் முடியாது. மேலும் ரயில் கழிவறைகளை நினைத்தால் குமட்டுகிறது.அங்கே போய் வியாதி பிடித்துக் கொண்டு வந்தால் ரயிலில் சேமித்த பணம் வெள்ளைக்கோட்டுக்கும், ஆஸ்பத்திரி மருந்துக்கும் தரவேண்டும். இன்னொரு விஷயம். வீட்டிலிருந்து ரயிலுக்கு வண்டிக்கு கொடுக்கும் காசும், ரயிலில் இருந்து இறங்கி கோயம்பத்தூரில் போகவேண்டிய இடத்துக்கு கொடுக்கவேண்டிய வண்டிச்சத்தமும் கிட்டத்தட்ட சேமிப்பை சாப்பிட்டுவிடும். காரில் கிடைக்கும் சுதந்திரம் ரயிலில் எதிர் பார்க்க முடியுமா?. சௌகர்யமா காசு மிச்சமா என்று பார்த்தால் சௌகர்யத்துக்கு முதலிடம் கொடுக்க தீர்மானிக்கும் இன்னொரு விஷயம் வயசு... 86+ல் காசின் மேல் பாசமில்லை. சௌகர்யத்தை தான் மனம் நாடுகிறது.
TOLL என்று ஆங்காங்கே காசு வாங்குவது எப்போது நிற்கும். அப்படி ஒன்றும் சாலைகள் 'எல்லா' இடத்திலும் மழமழவென்று வண்டி ஓட சமமாக இல்லையே..இப்படி சாலைகள் அமைத்ததற்கு ஆயுசு பரியந்தம் ஒவ்வொரு வண்டிக்காரரும் கப்பம் காட்டிக்கொண்டே இருக்க வேண்டுமே. அதுவும் ஒவ்வொரு 40-50 கி..மீ. தூரத்திலும் வசூலா? நெடுஞ்சாலைகளில் சைவ உணவுச்சாலைகளை விட அசைவ உணவு ஹோட்டல்கள் மலிந்து விட்டது தெரிகிறது. சைவ உணவுக்கு ஹோட்டல் போகலாமென்றால் அருகிலேயே ஓட்டினால் போல் நாட்டுக்கோழி விளம்பரமோ, பிரியாணி விளம்பரமோ கொண்ட உணவு தயார் என்று கண்ணில் பட்டால் வண்டியை நிறுத்தாமல் வேறு இடம் தேடி செல்ல மனம் விரும்புகிறது. சின்ன சேலம் என்ற இடத்தில் ஊருக்குள்ளே சென்று சாப்பிட இடம் தேடி ஒரு சைவ உணவகத்தில், ஒரு கிண்ணம் நிறைய தயிர் சாதம் 40 ரூபாய்க்கு கிடைத்தது. அது முழு சாப்பாடு அளவுக்கு இருந்ததால் பாதிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. காரமான எலுமிச்சை ஊறுகாய் உதவியோடு வயிறு நிரம்பியது.
நண்பர் சுப்ரமணியன் ஒரு ஒய்வு பெற்ற உயர் அதிகாரியாக தனியார் துறையில் பணி புரிந்தவர். உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை நகைச்சுவை உணர்வு கொண்ட அனுபவசாலி. என் போன்ற 87. தினமும் ஊசிகள் போட்டுக்கொண்டாலும் இனிக்க பேசுபவர். உணவைத்தவிர மாத்திரை மருந்துகள் சாப்பிடுவது அதிகம். அவரோடு ரெண்டு நாள் அவர் வீட்டில் தங்கி இருந்தபோது செவிக்கும் வயிற்றுக்கும் நிறைய ருசிகர உணவு கிடைத்தது. கோயம்பத்தூரில் நல்ல குளிர். மார்பிள் தரையில் வெறும் கால் படாமல் பறக்க வழியில்லையே.
காலம்பாளையத்திலிருந்து வெகு அருகே பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் 3 கி.மீ. தூரத்தில் இருப்பதால் அற்புத தரிசனம் கிடைத்தது.கோவில் தூண்களில் அற்புத சிற்பங்கள் கண்ணைக் கவர்கிறது. விசாலமான கோவில்.
ஏற்கனவே இந்த ஆலயம் பற்றி விவரமாக எழுதியுள்ளேன். சிவன்; பட்டீஸ்வரர்.அம்பாள்; பச்சைநாயகி.