THRIPRAYAR

3 views
Skip to first unread message

Sivan Krishnan

unread,
May 11, 2026, 6:34:42 AM (4 days ago) May 11
to amrith...@googlegroups.com
பரசுராம க்ஷேத்ர யாத்திரை  -   நங்கநல்லூர்  J K  SIVAN 
17/42026-22/4/2026

த்ரிபிரயார் ஸ்ரீராமன் கோவில் -

21/4/22026  அன்று விடிகாலை  பெரும்பாவூரிலிருந்து  சென்னை நோக்கி புறப்பட்டவன் முதலில் கொடுங்களூர்  பகவதி தரிசனம் பெற்றதைப் பற்றி எழுதி இருந்தேன். கொடுங்களூர்  பகவதி தரிசனம் முடித்து வடமேற்காக மேற்கு கடற்கரை ஓரம் சென்றால் 25 கி.மீ. ள்தூரத்தில் ஒரு ராமர் க்ஷேத்ரம் உள்ளது.
அதன் பெயர் திருப்ரயார் எனும் அற்புத க்ஷேத்ரம். ஒரு மணி நேரத்துக்குள்  கோவிலை அடைந்தோம். வழியில் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. காலை  6,30 மணி ஆகிவிட்டது. வழியில் நமது ஊர்களைப்போல் தெருவில் மாடு, நாய் மனிதன் வாகனம், என்று எந்த  இடையூறும் இல்லை.  எல்லாமே  தூங்கும் பட்டணங்கள் தான்.

த்ருபிரயார் க்ஷேத்ரத்தில் பழைய கால  ஸ்ரீ ராமசாமி கோவில் உள்ளது.  புராதன மரக்கோவில், ஓடு வேய்ந்தது.நாலம்பலங்களில் ஒன்று என்ற புகழ் பெற்றது. சதுர்புஜ ராமர். சங்கு சக்ரத்தோடு  காட்சி தருகிறார். ஒரு கையில் கோதண்டம், இன்னொரு கையில் மாலை.  தீவ்ரா என்கிற நதிக்கரை ஆலயம்.  ஆறாட்டுப்புழா பூரம் ஸ்தல முக்கியபண்டிகை. விழா.  

இந்த ஆலயம் முதலில் சேலூர் மனா, ஜனப்பிள்ளி மனா, புன்னப்பிள்ளி மனா என மூன்று நம்பூதிரி குடும்பங்கள் நிர்வாகத்தில் இயங்கி வந்தது. பின்னர்  கொச்சி  தேவஅஸ்வம் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.  மேலே சொன்ன குடும்பஸ்தர்கள் தான் ஊராளன் கள் .

ராமனுக்கு இங்கே செல்லப்பெயர்  த்ரிப்ரயாரப்பன். த்ரிபிரயார் தேவர் என்றும் பெயர்.  ஒரு முக்கியமான ஆச்சர்யமான விஷயம்  ஸ்ரீ கிருஷ்ணன் துவாரகாவில் வணங்கிய ராமன் த்ரிப்ரயாரப்பன். கிருஷ்ணன் ஸ்வர்கம் சென்றவுடன் இந்த ராமன் விக்ரஹம் கடலில் மூழ்கியது.  பல காலத்துக்குப் பிறகு சில மீன் பிடிக்கும் செம்படவர்கள்    ராமர் விக்ரஹத்தையும்  மற்றும் மூன்று விக்ரஹங்களையும் மீட்டு  கேரளாவில் சேட்டுவா என்ற இடத்தின் பக்கத்தில் கடலில் கண்டெடுத்து அந்த ஊர் ராஜாவான,  'வாக்கையில் கைமேல்' என்கிறவரிடம் அளித்தார்கள். ராஜா  நான்கு விகரஹங்களையும்  த்ரிப்ரயாரில் இந்த ஆலயத்தை நிர்மாணித்து ராமன் ப்ரதிஷ்டையானார். மற்ற மூன்று  விக்ரஹங்களும்  சந்நிதி பெற்று நாலம்பலம் என இந்த ஸ்தலம் பெயர் பெற்றது. (ராமர், லக்ஷமன், பரதன் சத்ருக்கனன் நால்வருக்கும் அம்பலம் தான் நாலம்பலம்). ராமருக்கு த்ரிப்ரயாரில்,  கூடமாணிக்யம், இரிஞ்சாலகுடாவில்  பரதனுக்கு, த்ரிமூழிக்களம்  ஊரில்  லட்சுமணனுக்கு, பயம்மல்  ஸ்தலத்தில்  சத்ருக்கனனுக்கு கோவில்கள். மொத்தம் நாலம்பலம்.

இந்த சதுர்புஜ ராமனுக்கு  சிவனின் தன்மையும் உண்டு. ராமாயண காலத்தில் கரன்  எனும் ராக்ஷஸனைக் கொன்றபிறகு தான் ராமனுக்கு சிவ, சைவ பந்தம் ஏற்பட்டது என்பார்கள். கர சம்ஹார மூர்த்தி என போற்றப்படுகிறார். கையில்  மாலையுடன் இருப்பது பிரம்மாவை நினைவூட்டுவதால் இந்த ராமர்  திரிமூர்த்தி. ப்ரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரின் ஒரு தோற்றம் என பெருமை உண்டு.  ராமர்  சர்வாலங்கார பூஷணனாக ஆபரணங்கள் கொண்டவராக உள்ளார். இரு  பக்கமும் ஸ்ரீ தேவி பூ தேவி.

ஆச்சர்யமாக இந்த ராமர் கோவிலில்  தெற்கே கோஷ்டத்தில்  தக்ஷிணாமூர்த்தி அருள் பாலிப்பது ரொம்ப விசேஷம்.  துர்தேவதைகள் வசம்  சிக்காமல்  காப்பவர் இந்த ராமர். மூலவர் காலப்போக்கில்  கொஞ்சம் கொஞ்சமாக ஜீரணமாகி பஞ்சலோக கவசம் அணிவிக்கப்பட்டுள்ளார்.

நமஸ்கார மஹா மண்டபத்தில் ஹனுமான் தியானத்தில் ராமனை வணங்கியவாறு காட்சி தருகிறார். அவருக்கு அவல் நைவேத்யம்.

இன்னொரு விஷயம். தக்ஷிணாமூர்த்தி சிவலிங்க ஸ்வரூபத்தில்  கர்பகிரஹத்தில் உள்ளார். ருத்ராக்ஷ மாலைகள் அணிந்த பிறை சூடனாக  உள்ளார்.

ஸ்ரீ ராமர்  ஸ்ரீ கோவில் தெற்கு வாசலில் கணபதி தரிசனம் பெறுகிறோம்.  நாலம்பழத்தின் தென் மேற்கே ஒரு விநாயகர்.

தெற்குப்புறத்தில்  அய்யப்பன் ஸாஸ்தா தரிசனம் பெற்றேன். புது ராமர் விக்ரஹம்  வந்த பிறகு இந்த அய்யப்பன் சந்நிதி அருகே  ராமர் ஆலயம் உருவானது. த்ரிபிரயார் தேவர் ஆறாட்டுப்புழா பூரம்  விழாவின் பிரதான தெய்வம்.  

ஆலயத்தின் வடபுறம் கிழக்கு பார்த்த  கோசாலா கிருஷ்ணன்.
இங்கே  உள்ள தீவ்ரா நதிக்கு  புரயார் என்றும்  பெயர்.  மஹா விஷ்ணு  வாமன  அவதாரம் எடுத்தபோது திருக்காக்கரா செல்லும் வழியில் த்ரிபிரயார் வந்தார்.  அந்த பிரதேசம் வறண்டிருந்தது. கோவிலுக்கு செல்லுமுன் கைகால் அலம்ப  ஜலம்  இல்லை. அக்கம்பக்கம்  ஈ காக்கை  இல்லை. ஈசனை வேண்டிக் கொண்டு கமண்டலுவில் இருந்த சிறிது ஜலத்தில் கால் அலம்பினார். அது அகண்ட திருப்புரையாராக வளர்ந்து ஆறானது. இந்த ஆறு  ஸ்ரீ பிரியா நதி, நந்தியாறு  என்றும் பெயர் பெற்றது.

ஒரு விஷயம் தெரியுமா?  ''கைமால்''  மேல் ராஜா  ராமரை இங்கே பிரதிஷ்டை பண்ணும் முன்பு  அவருக்கு ஒரு அசரீரி கட்டளை.  ''இங்கே ஒரு மயில் வரும். அது எங்கே  உட்காருகிறதோ அங்கே தான் ராமரை பிரதிஷ்டை பண்ணவேண்டும்''.   ராஜா மயிலுக்கு காத்திருந்தான். ஒரு பக்தன்  மயில் இறகுகளை சுமந்து வந்து ஒரு இடத்தில் அமர்ந்தான். தாந்த்ரி  ராஜாவிடம் மயிலுக்கு பதில் அந்த மனிதன் என்று அறிவித்து அங்கே தான் இந்த ஆலயம் த்ரிப்ரயாரில் உருவானது.   ஸ்ரீ கோவில் வாசலில் ஒரு மயில் வந்து அமர்ந்தது.
''அடாடா, தப்பு பண்ணிவிட்டோமே ஆண்டு தாந்த்ரியும், ராஜா கைமாலும் வருந்தி  மயில் வந்து அமர்ந்த இடத்தில் ஒரு பெரிய  பலி கல்லை நட்டனர். இன்றும் அது உள்ளது. அந்த பலி கல்லும் ராமனாக வணங்கப்படுகிறது. இந்த பெரிய  பலி  கல் அதன் அச்சில்  சுழல்கிறது.  நாரணத்து  ப்ரந்தன் என்ற ஸ்தபதி மந்திர உச்சாடனத்துடன்  பெரிய  ஆணியை  கல்லின் மேல் செருகி, சம்மட்டியால் அடித்து  இந்த பலி  கல்லை நிறுவினான் என்கிறார்கள்.  உள்ளே ராமரின் சக்தி குறையக்கூடாது என்பதற்காக  ப்ரந்தன்  ராமரின் இருபக்கமும் ஸ்ரீ தேவி பூதேவியை பிரதிஷ்டை செய்தான் என்கிறார்கள்.

வில்வமங்கள் என்கிற சாது, துறவி,  ஸ்ரீதேவி பூதேவியை நிறுவினதாகவும் மேற்கு வாசலை மூடியதாகவும்   சிலர் சொல்கிறார்கள்.

தினமும் வெடி வெடிக்கிறார்கள். நான் சென்றபோதும் விடிகாலை வேளையில்  வெடி சப்தம் கேட்டேன்.
பக்தர்கள் வெடி வாங்கி கொடுக்கிறார்கள்.
கோவிலை ஒட்டி  புரயார்  நதி. குளம். அதில் நிறைய மீன்கள். அதற்கு  ஆகாரம் அளிப்பது ஒரு வேண்டுதல். மீன் ஊட்டு என்று அதற்கு பெயர்.

இந்த ஆலயத்துக்கும் சாக்கியார்  கூத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு.  சமுத்ரி என்கிற ராஜா இங்கே சாக்கியர் கூத்து பார்த்து ரசித்து,  எனக்கு ஹனுமார்  லங்கையில் புரிந்த  சேஷ்டைகளை பார்க்கவேண்டும் நடித்து காட்டுங்கள் என கூறி பன்னிரண்டு நாள் விழாவாக நடந்தது.  வருஷா வருஷம் விரிச்சிக்க மாசம், கிட்டத்தட்ட நவம்பரில் நடக்கிறது.  சாக்கியர் கூத்து ஆரம்பிக்கும்போது கூட்டத்தில் ஒரு ப்ராமணவாவது இருக்கவேண்டும் என்று நியதி. ஒரு முறை, ஒரு பிராமணனும் இல்லை. எப்படி ஆரம்பிப்பது?  சாக்கியர் கூத்து வேஷம் கட்டியவன் ராமரை வேண்டினான்.  ''அடேய், உன் கூத்து பிராமணனுக்கு இல்லை,எனக்கு, நீ ஆரம்பி  நான் பார்க்கிறேன்''  என்று ராமர் குரல் அவனுக்கு கேட்டது.  இந்த கூத்தில் முக்கிய கட்டம் ஹநுமானுக்கு சீதையும் பேசுவது. அதை விவரமாக காட்சி யாக்கி தருகிறார்கள்.
பூரம், மற்றும்  துகாதசி விழாவின் பொது 21 யானைகள் பங்கேற்கும் காட்சி அபூர்வம்.  வருஷா வருஷம் திருவோணத்தின்போது  இந்த ஒரு கோயிலில் தான்  சேது பந்தனம் காட்சி நடைபெறும்.

த்ரிபிரயார்  கொடுங்களூர்- குருவாயூர் போகும் வழியில் உள்ளது. திருசூர் ஜில்லாவை சார்ந்தது.
பக்தர்கள் பெரும்பாலும் இங்கே  தனக்குள்  மெதுவாக அதிக சத்தம் வராமல்  மந்திரம், ஸ்லோகம் உச்சரிக்கிறார்கள் . ஹரே ராம  ஹரே ராம ராம ராமா ஹரே ஹரே.. ஸ்லோகம் சொல்கிறார்கள். பக்தி பூர்வமாக அவர்களது தொழுகை என் மனம் கவர்ந்தது.  ஒரு யானை நான் செல்லும்போது சீவேலி தாங்கி மூன்று முறை கோவிலை வளம் வந்தது. மேல தளங்களுடன், வெடிகளுடன். அதனோடு நடக்க முடியவில்லை. அதன் வேகம் அதிகம். 

श्रीराम राम रघुनन्दन राम राम ।  श्रीराम राम भरताग्रज राम राम ॥  श्रीराम राम रणकर्कश राम राम । श्रीराम राम शरणं भव राम राम ॥
śrī rāma rāma raghunandana rāma rāmaśrī rāma rāma bharatāgraja rāma rāma  
śrī rāma rāma raṇakarkaśa rāma rāma śrī rāma rāma śaraṇaṁ bhava rāma rāma

ரகுவம்சத்தில் பிறந்த ராமா! பரதனின் அண்ணா ,மஹா வீரனே, உன்னிடம் சரணாகதி அடைகிறேன்.

रामाय रामभद्राय रामचन्द्राय वेधसे ।  रघुनाथाय नाथाय सीतायाः पतये नमः ॥
rāmāya rāmabhadrāya rāmacandrāya vedhase  raghunāthāya nāthāya sītāyāḥ pataye namaḥ
ராமா, ராமபத்ரா,  ராமச்சந்திரா, சீதையின் கணவா, ரகுநாதா, உனக்கு நமஸ்காரம்.

Reply all
Reply to author
Forward
0 new messages