🌸🌸🌸🌸🌸🪷🌸🌸🌸🌸🌸🌸
🌸 அனந்தனுக்கு ஆயிரம் திருநாமங்கள்!
விஷ்ணு ஸஹஸ்ரநாம!
122:: வராரோஹாய நமஹ
(Varaarohaaya namaha)
திருநாமம்
🌸🌸🌸🌸🌸🪷🌸🌸🌸🌸🌸🌸
திருவரங்கத்தில் நம்பிள்ளையின் திருவாய்மொழி காலட்சேபம் மிகவும் பிரசித்தியானது.
தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும் நம்பிள்ளையின் விளக்கங்களைக் கேட்பதற்காகத் திருவரங்கத்துக்கு
அடியார்கள் வருவது வழக்கம்.
ஒருசமயம் முதல் பத்து இரண்டாம் திருவாய்மொழியின் பொருளை
நம்பிள்ளை விளக்கிக் கொண்டிருந்தார்.
அதில் ஐந்தாவது பாசுரம்,
“அற்றது பற்றெனில் உற்றது வீடு உயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே”
என்பது.
இதற்கான விளக்கத்தை வெகு சிறப்பாக நம்பிள்ளை அளித்தார்.
“அற்றது பற்றெனில் – உலகியல் விஷயங்களில் உள்ள பற்றுகள் விலகினால்,
உற்றது வீடுயிர் – ஜீவாத்மாவின் உண்மையான சொரூபம் நன்கு பிரகாசிக்கும்.
அனைத்துப் பந்தங்களிலிருந்தும் விடுபட்டு, ஜீவாத்மா தன்னைத் தானே அனுபவித்துக் கொள்ளும்.
செற்று அது – ஆனால் ஆத்மாநுபவத்தில் உள்ள விருப்பத்தை விடுத்து,
மன்னுறில் – மிக உயர்ந்த லட்சியமான இறைவனின் திருவடிகளை அடைந்து தொண்டு செய்ய நினைத்தால்,
அற்று இறை பற்றே – இதர விஷயங்களில் பற்றற்றவனாக இறைவனைப் பற்றிக் கொள்.
ஜீவாத்மா இறைவனுக்கு சரீரம், இறைவன் ஜீவாத்மாவுக்குள்ளும் ஆத்மாவாக உள்ளான் என உணர்ந்து
அவனைத் தஞ்சமாகப் பற்று.” இவ்வாறு நம்பிள்ளை கூறியவாறே, கூட்டத்திலிருந்து ஒரு பண்டிதர் எழுந்தார்.
“எந்தப் பற்றும் இல்லாத நிலைதானே முக்தி? அப்புறம் ஏன் இறைவன் மேல் பற்றுக் கொண்டு அவனைத் தொழ வேண்டும்?
நாம் இந்த உடல் இல்லை, ஆத்மா என உணர்ந்து கொண்டபின்,
நாம் ஏன் இறைவன் என்ற யாரோ ஒருவனுக்கு உடலாக இருக்க வேண்டும்?
ஜீவாத்மா தன்னைத்தானே அனுபவித்துக் கொண்டால் போதாதா?” என்று கேட்டார்.
அவரைப் பார்த்துச் சிரித்தபடி, “சுவாமி! உங்கள் கூற்று நன்றாகத்தான் இருக்கிறது.
ஆசைகளை விடுத்தவாறே ஆத்மா முக்தியடையும்.
அதில் சந்தேகமில்லை.
அதற்குக் ‘கைவல்யம்’ என்று பெயர்.
தனிமையில் ஆத்மா தன்னைத்தானே அனுபவித்துக் கொள்ளும் நிலை அது.
ஆனால் அது உயர்ந்த லட்சியமில்லை.
ஏனெனில் அனைத்து ஜீவாத்மாக்களும் இறைவனின் சொத்து.
அவனுக்குத் தொண்டு செய்வதற்காகவே ஏற்பட்டவை.
அவ்வாறிருக்க ஒருவன் இறைவனுக்குத் தொண்டு செய்யாமல் தன்னைத் தானே அனுபவித்துக் கொள்வது சரியாகுமா?
ஊதியம் கொடுக்கும் முதலாளிக்காக உழைக்காமல், அவரது அலுவலகத்திலே அமர்ந்து கொண்டு
நமது சொந்த வேலையைச் செய்துகொள்வது போன்ற செயல் அது.
அறிவற்ற பொருட்கள் தொடங்கி அறிவுள்ள ஜீவாத்மாக்கள் வரை அனைத்தும் இறைவனுக்கு சரீரம் என்று வேதம் கூறுகிறது.
எனவே இந்த உடல் எப்படி ஜீவாத்மாவின் நியமனத்துக்கேற்ப நடக்கிறதோ,
அவ்வாறே ஜீவாத்மா தனக்கு உயிராக இருக்கும் பரமாத்மாவின் நியமனப்படி அவனுடைய ஆனந்தத்துக்காகச் செயல்பட வேண்டும்.
அப்படிப் பார்க்கும்போது, ஆத்மா தன்னைத்தானே அனுபவித்துக் கொள்வதை விட இறைவனை அடைந்து தொண்டு செய்வதே
அதன் சொரூபத்துக்கு ஏற்ற செயல்!” என்று கூறினார்.
மேலும், “இந்திர பதவியை விரும்புபவன் இவ்வுலக ராஜ்ஜியத்தில் கண்வைக்க மாட்டான்.
பிரம்மாவின் பதவியைப் பெற விரும்புபவன் இந்திர பதவியைக்கூட விரும்ப மாட்டான்.
ஆத்மானுபவத்தை விரும்புபவன் பிரம்மாவின் பதவியைக் கூட விரும்பமாட்டான்.
அதுபோல அனைத்து கல்யாண குணங்களும் நிரம்பிய இறைவனை அடைய நினைப்பவன் ஆத்மானுபவத்தையும் நாடாமல்
இறைவனின் திருவடிகளிலேயே நோக்குடையவனாக இருக்க வேண்டும் என்பதே
இப்பாசுரம் வலியுறுத்தும் கருத்து!” என விளக்கினார் நம்பிள்ளை.
இவ்வாறு இந்திர பதவி, பிரம்மாவின் பதவி, ஆத்மானுபவம், இவை அனைத்தையும் விட உயர்ந்த லட்சியமாகத்
புருஷார்த்தமாகத் திருமால் திகழ்வதால் ‘வராரோஹ:’ என்றழைக்கப்படுகிறார்.
‘வர’ என்றால் உயர்ந்த என்று பொருள்.
‘ஆரோஹ’ என்றால் புருஷார்த்தம்.
‘வராரோஹ:’ என்பது ஸஹஸ்ரநாமத்தின் 122-வது திருநாமம்.
வராரோஹாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு மிகச் சிறந்த பதவி உயர்வுகள்
விரைவில் கிட்டும்படித் திருமால் அருள்புரிவார்.
🌸🌸🌸🌸🌸🌸🪷🌸🌸🌸🌸🌸