மஹா தேவா

18 views
Skip to first unread message

Sivan Krishnan

unread,
Feb 24, 2016, 9:05:32 PM2/24/16
to Sivan Krishnan


                                                   திருவேட்டீச்வரன் 

சென்னையின்  இதயத்திலோ, வயிற்றிலோ  எதிலோ இருந்து கொண்டு, நெரிசலில்  நாம் மட்டுமா சிக்கி கொண்டிருக்கிறோம்.   சுற்றிலும் ஒரு அவசர கதியில் இயங்கும்,  அரை நொடியும் அமைதியில்லாத பட்டண  நெருக்கடியில், பொறி பறக்கும் வேகத்தில்,  அதற்கு  சம்பந்தமில்லாமல்  ஒரு சில   பழைய கோயில்களில். சுற்றியுள்ள  சுவற்றினால்  தப்பி, ஆனால்  கொஞ்சமாவது உள்ளே  அமைதியாக உள்ளார்கள்  அந்தந்த கோவிலின்  பெருமாள்கள், சிவன்கள், மற்ற கடவுள்கள். 

 எத்தனையோ  காலங்களுக்கு முன் தோட்டமும் துறவுமாய்,  குளங்களோடு எங்கும் மரம் சூழ்ந்து நின்ற காலம் இனி கனவில் தான் காண முடியும். 

அப்படிப் பட்ட ஒரு கோவில்  சென்னை திருவல்லிக்கேணி பிரதான சாலையில் பிரியும் பிள்ளையார்கோயில் அருகே உள்ள திருவேட்டீஸ்வரன் பேட்டை  சிவன் கோவில்.  

21.2.2016  சிவாஜி மகாராஜா பிறந்தநாள் கூட்டம் செல்கையில் நான்  இந்த ஆலயத்துக்கு தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்தது.  30 ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாக அங்கே  சென்றது ஞாபகம் இருக்கிறது.   ஒரே வித்தியாசம் அப்போது இவ்வளவு ஆக்ரமிப்பு  நெரிசல் இல்லை.  

 இந்த பழைய கோவில் 500-1000 ஆண்டுகளுக்கும்  முற்பட்டது. கருவறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தூண்களில் காணப்படும் சிற்பங்களினின்று, இதை அறியலாம். கோவில் கோபுர உயரத்திற்கு இன்னும்  அங்கே  கட்டிடங்கள் வராததால்  இதோ நான் இங்கே இருக்கிறேன் வாயேன்  என்று  ஆற்றில் மூழ்கியவன் மேலே கை காட்டுவதை போல்  கட்டிட  நெரிசலில் கோவில் கோபுரம் தலை காட்டுகிறது. 

கோவிலுக்கு இடது புறத்தில் பெரிய தெப்பக்குளம் .செண்பக புஷ்கரணி.. பின்புறத்தில், நந்தவனம்  உள்ளூர் பையன்களுக்கு  செபாக் கிரிக்கெட் மைதானம். அநேக நாகலிங்கங்கள்  சூழ்ந்த ஒரு வயதான அரச மரத்தில் கலர் கலராக பக்தர்கள் கட்டி ய கயிறுகள், துணிகள், வேண்டுதல் காணிக்கைகள் மரத்தடியே உட்கார்ந்திருக்கும்  நாக சிவன், குட்டி நந்தி பார்க்க நன்றாக இருக்கிறது.  குளம் சுற்றியுள்ள மதிலால் பார்க்கும்படியாக இருக்கிறது.  சிற்பங்கள் செதுக்கப் பட்டுள்ள தூண்கள் காணப்படுகின்றன.

திருவட்டீஸ்வரன்பேட்டை  என்றதும் முதலில் எனது மனதில் தோன்றுவது  இதன் மிக அருகில் தமிழ் தாத்தா  உ.வே. சுவாமிநாத ஐயர்  தியாகராஜ விலாசம் என்ற பெயர்  கொண்ட இல்லத்தில் வாழ்ந்தது.எவ்வளவு முறை, எத்தனை வருஷங்கள் இந்த கோவில் சிவனை வழிபட்டிருப்பார். 

எத்தனையோ முறை அவர வாழ்ந்த  வீட்டை பல வருஷங்களுக்கு முன் பார்த்தது நெஞ்சில் நின்றது.  இப்போது தரையோடு தரையாக இடித்து விட்டார்கள். தமிழ்த் தாத்தாவுக்கு இப்படி ஒரு நினைவுச் சின்னமா?  ''தமிழுக்கு பெருமையளித்த தமிழ் தாத்தாவின்  பெயராவது  யாருக்காவது தெரியுமா என்று பல பேரை விசாரித்தேன்.

அடுத்த வீட்டிலேயே  இருப்பவர்.  ''நீங்கள்  பாரதியாரை சொல்றீங்களா.  நேரே போனீங்கன்னா திருவல்லிக்கேணி பார்சாதி கோயிலாண்டை கேளுங்க''
வெகுநாளாக  கடைகள்  வைத்திருப்பவர்கள், ஒரு உள்ளூர்  போலிஸ் காரர்,  அந்த  வீட்டருகே  வயதாக காணப் பட்ட  சிலர்,  உ.வே. சா. என்றால் ஏதோ   அஸ்ஸாம் லாட்டரி சீட்டு பேர்  சொன்னது போல் யோசிக்கிறார்கள்.  தமிழ் செம்மொழியா  எம்மொழியோ? என்று கேட்பவர் நிறைந்த கூட்டம்  மனதில் இறுக்கத்தை உண்டாக்கியது.  ஐம்பெரும் காப்பியங்களை  யாருக்காக தமிழ்  தாத்தா  நீங்கள் கண்டுபிடித்து கொடுத்தீர்கள்?  நாலு  டீ  கடையாவது கட்டி விட்டிருக்கலாமே? உ.வே.சா  துணிக்கடை  என்றாலாவது நாலு பேருக்கு தெரிந்திருக்குமல்லவா? தமிழனென்று சொல்லடா  தலை நிமிர்ந்து நில்லடா.

கோவிலின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலை: கோவிலின் பிரதான வாயில் பகுதி தவிர மற்ற எல்லா பகுதிகளிலும் வீடுகள் சுற்றி கட்டப்பட்டுள்ளன. இவையெல்லாம் 50-100 வருடங்களில் கட்டப்பட்டவை  என்று பார்ப்பவனுக்கே  தெரிகிறது. அதிகாரிகளுக்கு ஏனோ தெரியவில்லை. ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது என்பது, நீதிமன்ற வழக்குகளும், செய்திகளும் எடுத்துக் காட்டுகின்றன. 
 
வள்ளலார்  இங்கு வந்திருக்கிறார். அவருக்கு ஒரு சந்நிதி இருக்கிறது. அர்ஜுனன் சிவனிடம் பாசுபத அஸ்தரம் பெற்றபோது மேற்கொண்ட தீர்த்த யாத்திரையில் இங்கும் வந்திருக்கிறான். ஒரு வேடனாக அவனுக்கு காட்சி அளித்ததால் இந்த ஆலய ஈஸ்வரனுக்கு  வேட்டீச்வரன் என்று பெயர் என்று சொல்கிறார்கள். அம்பாள்  ஷெண் பகாம்பிகை.

திருவல்லிக்கேணி பக்கம் செல்பவர்கள் ஒருமுறை கண்டு தரிசிக்கவேண்டிய சிவன்  திருவேட்டீஸ்வரர்.

 


thiruv.jpg
thiruvetteeswaranpet 1.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages