TODAY'S POST-JAYA-VRUCHIGA-DHKASHANAIYANAM- SHUKLA-DVADASI-SOWMYA- ASWINEE

7 views
Skip to first unread message

devotee

unread,
Dec 3, 2014, 8:19:50 PM12/3/14
to
 
புல்லாங்குழல் புகட்டிய கீதை

மாயக் கண்ணன் மாமதுரை நோக்கி புலம் பெயர்ந்தான். கடைசியாக ஒரு முறை பிருந்தாவனத்தைத் திரும்பிப் பார்த்தான். பத்மபத்ர விசாலாக்ஷனின் கண்களில் நீர் துளித்தது. கை இடுப்பில் எதையோ தேடியது. “ஓ குழல் தான் ராதையிடம் உள்ளதே” என்று நினைத்தான். பெருமூச்சு விட்டான். மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் தன் தலையை சிலுப்பிக் கொண்டது. கோபியரின் கள்ளமிலா அன்பு அவனை இனிமேலும் கட்டிப் போடக் கூடாது. அவனுடைய அவதார
இலட்சியத்தின் அடுத்த பாகத்தை எழுத அவனே தயாராகி விட்டான். அதற்கு இதோ அக்ரூரரே சாட்சி.

யமுனைக் கரையில் வளர்ந்த சுயாமுனான கண்ணன் பிருந்தாவனத்திற்கு வெளியே அடி எடுத்து வைத்தான். கம்ஸனின் அறைகூவல் அக்ரூரரின் மூலமாக வந்தே விட்டது. அறவழியை மனிதனுக்குக் காட்டி கொடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது விநயிதனுக்கு. கலியின் தாக்கத்தால் மனிதன் கர்ம மார்க்கத்தை விட்டு வெகுதூரம் சென்று விட்டான். அதை நினைவு படுத்தி திவ்ய மனிதத்துவத்தைக் காட்ட அந்த குருதமனை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? காலத்தை வென்ற அனந்தாத்மன், தேவகி நந்தனனாக அல்லவோ அவதரித்திருக்கிறான்!

ஆமாம், அவதரணம் எப்பொழுது எதற்காக ஏற்படுகிறது? இறைவன் அவ்வப்பொழுது ஏதாவது ஓர் உருவெடுத்து மனித குலத்தை ஆபத்திலிருந்தும் அதர்மத்திலிருந்தும் காப்பதற்கு மட்டுமா? அல்லவே, அவன் பூமிக்கு இறங்கி வருவது அதற்கும் மேலானதொன்றை சுட்டிக் காட்டுகின்றதல்லவோ? பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இருபத்தியிரண்டு அவதாரங்களும் எதைக் குறிக்கின்றன? ஒரு ஜீவனின் பரிணாம வளர்ச்சி அல்லவோ அத்துணை அவதாரங்களில் வெளிப்படுகிறது?
டார்வினின் பரிணாம வளர்ச்சித் தத்துவம் மேலை நாட்டில் பரிணமிப்பதற்கு பல யுகங்களுக்கு முன்பே நம் வேதங்கள் ஒரு ஜீவனின் வளர்ச்சியைப் பற்றி மட்டும் அல்ல, இந்த ப்ரபஞ்சத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் தெரிவிக்கின்றன. காலச்சுழல் என்னும் ஆழ்கடலில் ஹிரண்யகர்பத்தின் உள்ளிருந்து இயற்கை எனும் மாயையின் துணைகொண்டு ஆயிரக்கணக்கான யோனிகளிலிருந்து ஜீவன்களை தன் லீலையினால் அப்பேரறிவாளன் படைத்துள்ளான். பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் ஓரினத்தின் பிரதிநிதியாக தானே விரும்பி ஓரோர் அவதாரம் செய்துள்ளான். எங்கும் எதிலும் நீக்கமற வியாபித்திருக்கும் விஷ்ணு ஒவ்வொரு அவதாரத்திலும் ஜீவனை ஒரு படி மேலே ஏற்றியுள்ளான் என்றே கொள்ள வேண்டும். இயற்கை எனும் மாயை தன் உற்பத்தியில் அலுப்புற்றுப் போகும்போதெல்லாம் அந்த புருஷோத்தமன் அல்லவோ கை கொடுக்கின்றான்?

ஆயிற்று, துவாபர யுகத்தின் முடிவிலேயே கலி தன் கைங்கர்யத்தைக் காட்டத் தொடங்கி விட்டான். கண்ணன் கவலையுற்றான். பிறந்தது முதல் ஸ்தூல ரூபத்தில் வந்த அசுரர்களையெல்லாம் அழித்த வீரபாஹு அவன். ஆனாலும், எப்பொழுதும் மந்தஹாஸமுகத்தைக் காட்டக் கூடிய ஜிதக்ரோதனான கோபத்தை வென்றவனும் அவனே. பிறந்ததிலிருந்தே தான் ஒரு பூரண அவதாரம் என்றும் காட்டி விட்டான். அன்பு ஒன்று மட்டுமே அறி்ந்த பாமரரான கோப-கோபியரை தன் புல்லாங்குழலின் இசையினாலேயே உய்வு பெறச் செய்து விட்டான். இனி அவர்களைப் பற்றிய கவலை இல்லை. கண்ணனின் நினைவு ஒன்றையே உறுதியாகப் பற்றிக் கொண்டு வைகுண்ட பதவி அடைந்து விடுவார்கள். அந்த திவ்ய கர்மம் செய்து முடித்தாகி விட்டது.

ஆனால் புவியில் அவனுக்கு ஓரு மகத்தான செயல் காத்திருக்கிறதே. எப்பேர்ப்பட்ட பணி அது? அறைகுறை யாக இருக்கும் மனித இனத்திற்கு ஒரு பூரணத்துவம் கொடுக்க வேண்டுமே. சுகம்- துக்கம்,, வெற்றி- தோல்வி, ஆரம்பம்- முடிவு, குளிர்- வெம்மை என்று எல்லாவற்றிலேயும் இரட்டையையே பார்க்கும் மனிதனுக்கு எவ்வாறு பூரண மனிதத்துவத்தையும், ஒரே சத்தியத்தையும் அதன் மூலமாக பேரானந்தத்தையும் காட்டப் போகிறோம்?’ கண்ணன் மிக்க கவலையுற்றான்.மனித வர்க்கத்திற்கு காலத்திற்கும் அழியாத உபதேசம் ஒன்று தர வேண்டும். அதுவும் அவர்களால் இயன்றதாக இருக்கவேண்டும். க்ருத யுகத்தின் தவத்தையோ, த்ரேதா யுகத்தின் வேள்விகளையோ இவர்களிடம் எதிர்பார்க்க முடியாதே. தன் உபதேசத்தினால் இவர்களை நல்வழிபடுத்த முடியுமா? கண்ணன் கவலையுற்றான். இதற்கு முன்னரும், பல முறை தன் உபதேசங்களை கபிலனாகவும், புரஞ்சனனாகவும், ஜட பரத சரித்திரத்தின் மூலமாகவும் கூறியிருக்கிறான். ஸ்ரீ ராமனாக வாழ்ந்தே காட்டியிருக்கிறான். ஆனால் இப்பொழுது மற்றுமொருமுறை மானிடருக்கு ஒரு உபதேசம் தேவைப் படுகிறது. மனிதனுள் மவுன சாட்சியாகவே மட்டும் இருந்து கொண்டு அஹங்காரம் எனும் திரையினால் மூடப் பட்டிருக்கும் தெய்வ மனிதனை வெளிக் கொணர வேண்டும். ஆம் , கர்ம, ஞான பக்தி யோகங்களை அவனுக்குப் புகட்ட வேண்டும். கம்ஸனைக் கொல்ல மட்டும் அல்ல என்னுடைய இந்த பயணம். தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே மிகப் பெரிய யுத்தம் ஒன்று வரப் போகிறது. யுத்த களத்தில், அர்ஜுனன் செய்வதறியாது திகைக்கப் போகிறான். அவனை வழி நடத்திச் செல்ல வேண்டுமே. அது மட்டுமல்ல. வரப்போகும் கலியில் வாழ்க்கையே ஒரு யுத்த களமாகத் தானே இருக்கப் போகிறது?. அர்ஜுனனைப் போன்று எத்தனையோ பேருக்கு வாழ்க்கை எனும் இருண்ட பாதையில் பயணிக்க ஒளிவிளக்காக ஒன்று கொடுக்க வேண்டுமே என்று கருணையுடன் நினைத்தான் கண்ணன்.

கண்ணனுடைய அறிவுரை எப்படிப்பட்டதாக இருக்கும்? எதை ஆதாரமாகக் கொள்ளும்? ஆசாபாசங்களில் உழலப் போகும் மனிதன் வேதங்களின் சாரத்தை விசாரம் செய்வானா? செய்ய வேண்டும். தன்னலத்தையே மையமாகக் கொள்ளப்போகும் அவன் கடவுளை கடவுளுக்காக பக்தி செய்வானா? செய்ய வேண்டும். பலன் கருதாமல் தன் கடமைகளைச் செய்வானா? செய்ய வேண்டும்.

அவனுள் கீதையின் சாரம் குழலிசையைப் போலவே அமுதமாக நிறைந்தது.

கீதை அன்றும் இன்றும் என்றும், மனிதனுக்காக்க கண்ணன் என்னும் மனிதனால் இயற்றப் பட்ட ஓர் இசையாகும். அதன் எளிமையில் யார் தான் மயங்க மாட்டார்கள்?
வேதத்தின் மறைபொருள் இங்கு வெட்ட வெளிச்சமாக்கப் பட்டுள்ளது.

கர்ம, பக்தி ஞான யோகங்கள் அவனுக்குப் புரியும்படியாக இசைக்கப் பட்டுள்ளன. காடு நாடித் தவம் மேற்கொள்ள வேண்டாம். நாடித் தேடி கடவுளுக்காக அலைய வேண்டாம். கர்ம பலனைக் கருதாது செய்யும் வேலைகளை அவனடியில் சமர்ப்பித்து விட்டால், கடவுளே அவனை நாடி வருவான். தன்னைக் கருதாது பூரண பக்தியில் அவனையே கருதியிருந்தால், பக்த பராதீனன் தன் கை கட்டி நிற்பான். ஞான யோகம் செய்தாலோ தன்னிலை மாறி சுத்த முக்த பரபிரம்மமாகி விடுவான். இது எதுவுமே முடியாது என கைகளை விரித்து விட்டாலோ விரித்த கைகளில் தன் கால்களைக் கொடுத்து என்னை சரணாகதி செய், நான் இருக்க என்ன பயம்? கவலை வேண்டாம் என்பான்.
ஆக ஆன்மாவின் யோக சாதனையை இவ்வாறு தான் மனிதனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஜீவான்மா தன் தெய்வத்தன்மையை அடைவதற்கு உதவி புரிய வேண்டிய தருணம் வந்தே விட்டது. கலியுகத்திலிருந்து மனித இனத்தை சத்ய யுகத்திற்கு இட்டுச் செல்ல சிலபல அர்ஜுனர்களையாவது தயார் செய்ய வேண்டிய தருணம் வந்தே விட்டது’ என ஜகத்குருவாகிய க்ருஷ்ணன் நினைத்தான். அப்பொழுதுதான், திவ்ய கர்மத்திற்காக மட்டுமல்லாமல் திவ்ய ஜன்மம் உருவாவதற்கு ஆதாரமாகவும் தன் அவதாரத்தின் நோக்கம் நிறைவேறும் என்று அவனுக்குத் தோன்றியது.

இத்தனை தத்துவார்த்த உண்மைகளை உரைக்கப் போகும் திவ்ய ஜீவியான புருஷோத்தமன் கோகுலத்தின் மண்ணில் புரண்டு, மாடுகளை மேய்த்த இடையன் என்றால்
ஆச்சரியமாக இல்லை! ஆம், அவன் இடையன் தான். மும்மூர்த்திகளுள் காக்கும் கடவுளான திருமாலாக இருக்கும் இடையன் தான். எதற்கு எப்படி அவதாரம் எடுக்க வேண்டும் என்பதும் அந்த பரம்பொருளின் சித்தத்தில் உதித்தது தானே.

கோபியரின் கலப்படமில்லாத அன்பும், அவனைச் சுற்றியே தங்கள் வாழ்க்கை முழுதும் அர்ப்பணித்த சமர்ப்பண மனப்பான்மையும் அவனைக் கட்டிப் போட்டது. ஒரு பூரண நிலவில், தன் பூங்கரங்களால் புல்லாங்குழல் வாசித்து, அத்துணை ஜீவராசிகளையும் தன்பால் ஈர்த்தான். பூரண நிலவே சாட்சியாக மந்த மாருதமே வேதகோஷமாக ஆங்கொரு தெய்வத் திருமணம் நடந்தேறியது. வேய்ங்குழல் வாசித்து இன்னிசையின் இராகத்தால், அவர்களுடைய ராக த்வேஷங்களை நீக்கினான். ராஸலீலை செய்து, ஒவ்வொரு ஆன்மாவிற்கும் பரமாத்ம ஸ்வரூபத்தைக் காட்டினான். கோகுலத்தில் இருந்த ஒவ்வொரு பொருளும் கண்ணனுடையதே அன்றி தங்களுடையது என்று எதுவுமே நினைக்கவில்லை. இவ்வாறு “நான்-எனது” என்ற அபிமானம் அறவே அழிந்து விட்டதால், கோகுலம் உய்ந்தது. தாயின் கயிறுக்குக் கட்டுப் பட்ட கள்வன், இன்று அத்தனை கோபியரையும் தன் பிரேமையில் கட்டுப்படுத்தி விட்டான்.

ஆனால் பிருந்தாவனத்திற்கு வெளியே, இந்த பரந்த உலகில் மக்கள் அனைவரும் நான்-எனது என்ற அகந்தையை அழித்தவர்களா? ’அவர்களை எப்படி திருத்தப் போகிறோம்” கண்ணன் பெருமூச்சு விட்டான். எதிர்காலம் அவனுக்கென ஒரு மகத்தான பணியை வைத்திருக்கிறது.

புல்லாங்குழலுக்கு இனி என்ன வேலை? எதிர்காலத்தில், அவன் அதரத்தினின்றும் கீதை எனும் இசை ஒலிக்கப் போகிறது. புல்லாங்குழலை ராதையிடம் சேர்ப்பித்தான்.

கண்ணன் பிறந்த அன்று யமுனையில் வெள்ளம் பெருக்கெடுத்தது தெரியும். அதற்கு நிகராக மனித இனத்தின்மேல் பெருக்கெடுத்த கருணை மட்டுமே துணையாகக் கொண்டு மானிடத்தை உய்விக்கப் பறப்பட்டு விட்டான் பிற்காலத்தில் கீதாசாரியான் என அழைக்கப் படப் போகும் பதினைந்தே வயதான நந்தகுமாரன்.

(இப்பொழுது மறுபடியும் முதலிலிருந்து மறுபடியும் படிக்கவும்.) 

Article by Smt Shantha Rajan

WITH PRANAMS
 N.Ramesh Natarajan/S.Ramanathan/WB Kannan
(SRI KARYAM)                   
1_a


1_a[4].jpg
Reply all
Reply to author
Forward
0 new messages