முற்பிறவி கர்ம வினைகளுக்கு ஏற்ப, அதன் பலா பலன்களை அனுபவித்தே தீர வேண்டும்
கி.பி.18ம் நூற்றாண்டில்
பகவான் கண்ணனையே இரவும், பகலும் மனதில் இருத்தி, வாழ்ந்து வந்தவர் ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற துறவி.
ஆந்திராவில் தோன்றி தமிழ்நாட்டில் ஜீவசமாதியானவர்
ஆந்திர பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்தில் மங்களகிரிக்கருகில் பிறந்தவர்.
இவருடைய இயற்பெயர் தள்ளவஜுல கோவிந்த சாஸ்த்ருலு.
ஒருநாள், இவரது சீடர்கள், ஏராளமான பொன்னையும், பொருளையும் கொண்டு வந்து, அவர் பாதங்களில் சமர்ப்பித்தனர்.
‘இவை எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைத்தன…’ என, ஸ்ரீநாராயண தீர்த்தர் கேட்டார்.
அதற்கு சீடர்கள், ‘குருவே… காஷ்மீரி கவி என்பவர், அதிகம் படித்து விட்டோம் என்ற கர்வத்திலும், வாதப் போரில் அனைவரையும் வென்று விட்டோம் என்ற அகங்காரத்திலும் இருந்தார்.
அவரை நாங்கள், வாதப்போரில் வென்று விட்டோம். தோற்றுப்போன அவர், சமர்ப்பணம் செய்த பொருட்கள் தான் இவை…’ என்றனர்.
உடனே நாராயண தீர்த்தர், ‘இந்தப் பொருட்களையெல்லாம் காஷ்மீரி கவியிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள். ஒருவருடைய மன வருத்தத்தால், கிடைத்த பொருள் நமக்கு வேண்டாம்…’ என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார்.
இத்தகைய நல்ல உள்ளம் கொண்ட நாராயண தீர்த்தர், ஏழு ஆண்டுகள் கடுமையான வயிற்று வலியால், வேதனையை அனுபவித்து வந்தார்.
வலியின் வேதனை தாளாமல், பகவானை நோக்கி, தன்னுடைய வயிற்று வலிக்கான காரணத்தைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதார்.
அதன் விளைவாக, பெருமான், பூபதிராஜபுரம் எனும் திருத்தலத்தில் அவருக்கு காட்சி தந்து, ‘நாராயண தீர்த்தரே… நீர் முற்பிறப்பில், பத்மநாபன் என்னும் ஏழை அந்தணனாக பிறந்திருந்தாய். அப்போது, நீ சாதுக்களிடம் கொண்ட அன்பின் காரணமாக, அவர்களுக்கு அன்னமிட்டு உபசரிக்க நினைத்தாய்.
அதற்காக, செல்வந்தர் ஒருவரிடம் சிறிது கடன் வாங்கி, சிறிய கடை வைத்து, அதில் அரிசி முதலான தானியங்களை விற்பனை செய்யத் துவங்கினாய். அதில் கிடைத்த லாபத்தில், நீ நினைத்ததைப் போலவே, அவர்களுக்கு அன்னமிட்டு உபசரித்தாய்.
நாட்கள் செல்லச் செல்ல, இன்னும் பெரிய அளவில் தானங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தாய்.
‘அதன் விளைவாக, தானியங்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்கத் துவங்கினாய். அதில் கிடைத்த பணத்தில், பாகவத ஆராதனை செய்து, வாழ்ந்து, இறுதியில், உலக வாழ்வை நீத்தாய்.
‘நீ செய்த நற்செயல்களின் காரணமாக, உனக்கு இப்பிறப்பில், நற்குலத்தில் பிறப்பும், செல்வம், தெய்வ அனுக்கிரகமும் கிடைத்தன.
அதே சமயம். உணவுப் பொருட்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்ற பாவத்தால், உனக்கு கடுமையான வயிற்று வலியும் வந்தது…’ என்றார்.
இதன் பின், பகவான் கிருஷ்ணரின் அனுக்கிரகப்படி, ‘கிருஷ்ண லீலா தரங்கிணி’ எனும் பாடல்களைப் பாடி, தன் துயரம் தீர்த்தார் நாராயண தீர்த்தர்.
அப்போது எழுந்த ஒரு தெய்வீக ஒலி இவர் கண்களுக்குத் தென்படும் ஒரு பன்றியைப் பின் தொடர்ந்து, அது எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் செல்லப் பணித்தது.
அப்படி அவர் கண்ணில் பட்ட ஒரு பன்றியை இவர் பின் தொடர அது பூபதிராஜபுரம் எனும் ஊரைச் சென்றடைந்தது. அந்த ஊர்தான் இப்போது வரகூர் எனப்படும் தலம்.
நீண்ட நாட்கள் வரகூரில் தங்கிய பிறகு அங்கிருந்து புறப்பட்டு தன்னுடைய வாழ்வின் கடைசி கட்டத்தில் திருப்பூந்துருத்தி தலத்துக்கு வந்து சிலகாலம் வாழ்ந்தபின் அங்கேயே ஜீவசமாதி அடைந்தார்.
இன்றும் சென்று தரிசிக்கலாம்.