MARGAZHI 17TH DAY

58 views
Skip to first unread message

Sivan Krishnan

unread,
Jan 1, 2016, 9:42:01 PM1/1/16
to amritha varshini, amrith...@googlegroups.com, Rathnam K
                                                                
                                 17. உலகளந்த உம்பர் கோமான்

போன பாசுரத்தில் என்ன பார்த்தோம்?

ஆண்டாள் மற்ற பெண்களை அழைத்துக்கொண்டு நந்தகோபன் அரண்மனைக்குள் சென்றாளல்லவா? எல்லோரும் குதூகலத்தோடு நந்தகோபனை சந்தித்தனர். இந்த துயிலெழுப்பும் பாசுரம் நமது இந்த குட்டிக் கற்பனை மார்கழி 17வது நாளன்று இடம் பெறுகிறது.

உள்ளே சென்ற ஆண்டாளும் மற்ற சிறுமிகளும் நேராக நந்தகோபன் அறைக்கே சென்றார்கள்.

நந்த கோபன் படுக்கையிலிருந்து எழுந்தவர் முதன் முதலாக இந்த சிறுமிகளின் முகத்தில் தான் விழித்தார் என்றே வைத்துக் கொள்ளலாம்.

ஆண்டாள் அவரை வணங்கிநின்றாள் :

''குழந்தை,  யாரம்மா  நீ,     நீங்கள் எல்லாம் எதற்கு இங்கே அதிகாலையில் வந்திருக்கிறீர்கள்?''

''ஐயா மகானுபாவரே, நந்தகோப பிரபுவே, நீங்களல்லவோ எங்கள் அனைவருக்கும் எல்லா நன்மைகளும் செய்பவர், உம்மாலல்லவோ நாங்கள் குடி நீர் பெறுகிறோம், உங்கள் தயவால் அல்லவோ எங்களுக்கு உடுக்க உடை கிடைக்கிறது. உலகில் வாழ தேவையான அனைத்தும் எங்களுக்கு வாரி வழங்கி அன்போடு அளிக்கும் பெருந்தகையே! உங்களை துயிலெழுப்ப முகமன் பாட நாங்கள் பாக்கியம் செய்தவர்கள்.''

இதற்குள் யசோதை அங்கு வந்துவிட்டாள் . இக் குழந்தைகளைக் கண்டு ஆனந்தித்தாள்

அருகில் அவர்களை அன்பாக வரவேற்ற யசோதையைக் கண்டதும் ஆண்டாள்

''எங்களின் தாய், அம்மா, யசோதை! நீ அல்லவோ எங்கள் இல்லங்களின் ஒளி விளக்கு. எங்கள் பசுக்கூட்டம்,  அவற்றை கண்காணிக்கும் எங்கள்  ஆயர் பாடி கோபர்கள் மற்றும் வீட்டில் உள்ள கோபியர் எல்லோருமே உங்கள் அன்பாலும் பாசத்தாலும் அன்றோ கட்டுண்டு இருக்கிறோம். உங்களைத் துயில் எழுப்ப திருவுள்ளம் கொண்டு வந்தோம் தாயே. எங்களை ஆசிர்வதிப்ப்பீர்களாக''

இதற்குள் கிருஷ்ணனைக் கண்டு விட்டாள் ஆண்டாள். அருகே துயில் கொண்டிருந்த பலராமனையும் பார்த்துவிட்டவள் வணங்கினாள்.

''எங்கள் உயிராய் விளங்கும் ''ஹே கிருஷ்ணா, கடவுளுக்கெல்லாம் கடவுளே, தெய்வமே துயிலெழு. நீ உறங்கினால் உலகமே உறங்கிவிடுமே.!

எங்கள் தலைவனின் சகோதர அழகிய வீர பலதேவா நீயும் உன் சகோதரனும் எழுந்திருங்கள்.''

எங்களை ஆசிர்வதியுங்கள். எங்கள் நோன்பு சிறக்க உங்கள் அருள் வேண்டும் ''

இவ்வாறு வேண்டி ஆண்டாளும் சிறுமிகளும் பல துதிப்பாடல்களை ப் பாடினர். (அந்த பாடல்களின் பெயர்கள் எனக்கு மறந்து போய் விட்டது. ஞாபகம் வந்தபோது சொல்கிறேன் !!)

ஆண்டாள் அழகாக அன்று அவர்கள் அனைவரையும் வணங்கி போற்றி ஒரு அழகான பாசுரம் பாடுகிறாள். தோழியர்களும் சேர்ந்து கொள்கிறார்கள்.

இந்த நந்தகோபன் குமரன் கதையில் அந்த ஆயர்பாடிப் பெண்கள் போற்றிப்பாடும் அந்த நாராயணனின் கலியுக தோற்றமாகிய திருப்பதி வெங்கடேசனுக்கு இந்த நன்னாளில் ஸஹஸ்ரகலசாபிஷேகம் விமரிசையாக நடைபெறும். கலியுக தெய்வமே, கண்கண்ட வரதா என நாமும் அவனைப் பணிவோம்.

ஆண்டாள் பாடியது எங்கோ தென்கோடியில் உள்ள வில்லிப்புத்தூரில் விஷ்ணு சித்தர் காதிலும் விழுந்தது. 
இதை யார் பாடுகிறார்கள்? ஆண்டாளா கோதையா? ஆஹா!   ஆண்டாள்  கண்ணனைக்கண்ட ஆனந்தத்தில் கடல் மடையென பாசுரம் ஒன்று பாடுகிறாள். இல்லை, இல்லை, ஆண்டாள் உருவில் வில்லிப்புத்தூரில் மற்றொரு இளம்பெண் கோதை அல்லவோ ஆண்டாளாகி இதைப் புனைகிறாள். ஏட்டில் எழுத்தாணி விரைகிறது. வார்த்தைகள் மனசிலிருந்து பொங்கி மதியை நிரப்பி கண்வழியே கைக்குத் தாவி ஏட்டில் படைக்கப்பட்டது. இனி காலம் காலமாக அந்தக் காணற்கரிய நிகழ்ச்சி மகிழ்ச்சி தரும் சிலையாக என்றும்  நம் மனத்திலும் நிற்கச் செய்த ஆண்டாளே, கோதையே, உன்னை சாஷ்டாங்கமாக வணங்குகிறோம். இதோ அந்த அற்புத பாசுரம்.

''அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
                 எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
              எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த
             உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா
               உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்'

தூணில் சாய்ந்தவாறு விஷ்ணுசித்தர் இது வரை நூறு தடவையாவது மேற்கண்ட பாசுரத்தை படித்து வாயாரச் சொல்லி மகிழ்ந்திருப்பார்.

இன்னும் அவருக்கு அந்த ஓலைச்சுவடியை கீழே வைக்க மனம் வரவில்லையே. எதிரே மலர்களைத் தொடுத்துக்கொண்டே அவரைப்பார்த்து பாசத்தோடு கோதை அமர்ந்திருக்கிறாள்.


''பாமாலையில் மகிழ்ந்த அரங்கா உனக்கு ரெட்டிப்பு சந்தோஷம் இன்று, கோதை படைத்த பாமாலையோடு கோதை தொடுத்த பூமாலையும் சூடிக்கொள்''.


                                                                18 உந்து மத களிற்றன்

அதிர்ஷ்டக்காரி அந்த ஆண்டாள் குட்டி. அடடா எவ்வளவு புன்யசாலி. சாதாரண படிக்காத எளிய இடைச்சாதி பெண். இல்லவே இல்லை. மிக உயர்ந்த படிப்பான ஞானத்தில் பிறக்கும்போதே தேர்ந்த உயர்ந்த பெண். சாதி உடம்புக்கு தான் உள்ளத்திற்கேது? சாக்ஷாத் பரமாத்மன் நாரயணனே வேண்டும் என்று தானே ஆயர்குலத்தை தேர்ந்தெடுத்தான் தான் வளர. உலகில் உத்தமமான ஸ்ரேஷ்ட பூஜிக்க தக்க பிராணியான பசுவை பராமரிக்கும் ஆயர்பாடி மக்கள் அனைவரும் தான் ஆயர்குலம் என்ற உயர்குலம் கொண்டவர்கள். அதனால் தான் ஆண்டாளால் கிருஷ்ணனை அவன் வீட்டிலேயே காண முடிந்தது. நினைத்ததை சாதிப்பவள். நந்தகோபன், யசோதை, கிருஷ்ணன் பலராமன் ஆகியோரை எல்லாம் துயிலெழுப்பும் வேளையில் ஈடுபட்ட ஆண்டாள் தன் தோழியருடன் சுற்றும் முற்றும் பார்க்கிறாள், இன்னும் யாரை விட்டு விட்டேன் துயிலெழுப்பாமல் என்று. அப்போது தான் நப்பின்னை தெரிகிறாள். அடடா இவளை விடலாமா என்று அவர்கள் அனைவரும் அவளை ஸ்தோத்ரம் செய்கிறார்கள்.

''அழகிய நப்பின்னையே (நீளா தேவி) , கமகமக்கும் தைல வாசனையோடு மணப்பவளே நந்தகோபன் மறுமகளே, உன் மாமனார் எப்படிபட்டவர் தெரியுமா உனக்கு?.

அவரது செல்வங்கள் கணக்கிலடங்காது. அனேக பசுக்கள், எருமைகள்,கன்றுகள் மட்டுமல்ல. யானைகளையும் உடையவர். எதிரிகள் தான் அவரைக் கண்டு அஞ்சி ஓடுவர்களே தவிர அவர் அஞ்சியதாக சரித்திரமே இல்லை. வெளியே சேவல்கள் குரல் கொடுத்து பொழுது விடிந்ததை பறை சாற்றுகிறதே. அதோ பார், மல்லி பந்தல் முழுதும் குயில் கூட்டம் .என்னமாக சூழ்ந்து கொண்டுள்ளன. மல்லிகை மலர்ந்து மணம் வாரி வீச அவற்றை அனுபவித்து தென்றலில் விடியலின் குளுமையில் லயித்து குயில்கள் கூவும் அவைகளின் இனிய பாட்டு துயிலெழுப்பும் வேலையைச் செய்கிறதே தினமும். பந்து விளையாடும் பருவப் பெண்ணே, உன் கைகளின் வளையோசை கலகலவென ஒலிக்க உடனே வந்து கதவைத் திற. உள்ளே வந்து ஆசி பெறுகிறோம். எங்கள் நோன்புக்கு உன் நல்லாசியும் தேவையம்மா.''

நப்பின்னை யார்? இது பரம ரகசியமல்ல. ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே ஒரு பாலம்.

அது புரிந்தால் போதுமானது. அவளது அனுகூலத்துடன் தான் நாம் வீடு பேறு அடைய முடியும். சூர்ப்பனகை சீதையை ஒதுக்கிவிட்டு ராமனைத் தேடினாள், ராவணன் சீதையைத் தேடினவன் ராமனை மறந்தான். முடிவில் இருவருமே அழிவைத்தான் தேடிக்கொண்டனர். நப்பின்னைப் பிராட்டி தான் ஆண்டாள் குரல் கேட்டு, கதவைத் திறந்து அந்த ஆயர்பாடி சிறுமிகளைக் கண்ணனிடம் உள்ளே அழைத்துச் சென்றாள். அதற்கப்புறம் தான் ஆண்டாள் கிருஷ்ணனை நேரே காண்கிறாள்.

ஆண்டாளின் இந்த இந்த பாசுரம் ஸ்ரீ ராமானுஜரை மிகவும் கவர்ந்த ஒரு பாசுரம். அவர் பிக்ஷைக்கு போகும்போது இதையே பாடிகொண்டு தான் தனது ஆசார்யன் வீட்டு வாசலில் நின்றார் என ஒரு சரித்திரம் உண்டு.

''உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்''

மேலே சொன்ன ஆண்டாள் குரல் ஒலித்தது கோதை மூலம் வில்லிப்புத்தூரில். எங்கோ ஒரு அமைதியான நந்தவனத்தில் பறந்து செழித்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேலென்று பூத்துக்குலுங்கும் பல ஜாதிப்பூக்கூட்டங்களுக்கிடையே அந்த பர்ண சாலையை அந்த நந்தவனப்பூக்கள் எல்லாம் நறுமணத்தால் குளிப்பாட்ட உள்ளே விஷ்ணு சித்தர் பூஜைக்காக ஏற்றிய தூப தீபங்களின் இனிய மணத்தோடு கலந்து மேலும் இன்ப மூட்டியது. கண்ணுக்கு தெரியாமல் எங்கிருந்தெல்லாமோ வித வித பட்சி ஜாலங்களின் சப்தக்கலவை ஏழு ஸ்வரங்களின் ஓசையைக் கலந்து கட்டியாக பரிசளித்தது. இவற்றை எல்லாம் உள்ளடக்கி மேலே காற்றில் கோதையின் தெய்வீகக் குரலில் மேற்கண்ட பாசுரம் ஒலி பரப்பானது.


''அம்மா கோதை, நீ பாடுவது ஒவ்வொன்றும் அபூர்வம். அசாத்தியம். அதன் அர்த்தம் அலாதி.

நான் இப்போ எல்லாம் வில்லிப்புத்தூரில் இல்லை அம்மா. நீ தான் என்னைக் குண்டு கட்டா கட்டி தூக்கி ஆயர்பாடியிலே வைச்சுட்டியே. நான் கேக்கறதெல்லாம் '' என்னை ஆயர்பாடியிலேயே வச்சுடு. அந்த ஆண்டாளோடு சேர்ந்து நானும் எங்கெல்லாம் போறாளோ அவள் கூடவே போறேன். அவளை எனக்கு ரொம்ப பிடிக்கிற காரணம் என்ன தெரியவேண்டுமா உனக்கு, நீ தான் எனக்கு அந்த ஆண்டாள். என்னை மட்டுமல்ல எவரையுமே ஆண்டவள் ''


                                                              19 மலர் மார்பா

மாதங்களின் அந்த மாதவன் மார்கழியாக உள்ளான். எனவே மார்கழி ஒரு உன்னதமான மாதம். நாராயணன் அம்சமாக, திருப்பதியில் கண் கண்ட தெய்வமாய் அருளும் ஸ்ரீ வெங்கடாசல பதிக்கு புஷ்பாங்கி சேவையும் சஹஸ்ரநாம அர்ச்சனையும் உண்டே. அவனை வணங்கி, இந்த மார்கழி 19ம் நாள் நாம் ஆயர்பாடி செல்வோம். இதுவரை நமது பயணம் சுகானுபவமானதற்கும் நன்றி சொல்வோம்.

அன்று, ஆயர்பாடி சிறுமி ஆண்டாள் என்ன செய்தாள் என்பது நமது கட்டுரையின் இன்றைய பகுதி அல்லவா?

அந்த கிராம சிறுமிகள் கள்ளம் கபடமில்லாத கல்மஷமில்லாத தூய மனம் கொண்டவர்கள். உள்ளே சுத்தமாக இருப்பினும் புறமும் சுத்தமாக இருக்க யமுனை ஆற்றில் நீராடி விரதமிருந்து மனத்திலும் வாக்கிலும் கண்ணனே, நாராயணனே என்ற திருநாமங்களே நிரம்பி வழிய, இந்த தனுர் மாதம் பூரா தங்களை பகவத் சிந்தனையில்ஈடுபடுததிக் கொண்டதே பாவை நோன்பு என்பது தெரிந்தது தானே?

திரும்ப திரும்ப அந்த சிறு கிராமத்தில் வேறு எங்கு செல்ல வழி இருக்கு?

ஆண்டாளும் அவள் இடைச்சிறுமிகளும் ஆயர்பாடியிலே மிகப்பெரியதான -- ''பெரிய கடவுள்'' உள்ளே இருக்கும், நந்த கோபன் மாளிகைக்கு இன்று காலையும் வந்து விட்டார்கள். எதற்கு? சர்க்கரை இருக்கும் இடத்தில் எறும்பு சுற்றாதா? வழக்கம் போல்கண்ணனைத் துயிலெழுப்பவே!!

நப்பின்னை பிராட்டியுடன் தலைவன் உறங்குகின்ற அழகை அந்தப் பெண் ஆண்டாள் எவ்வளவு விவரமாக வர்ணிக்கிறாள் பாருங்கள். அவள் குரல் அந்த விடியற் காலையில் எங்கும் சஞ்சரித்து, அருகே யமுனையின் நீர் பரப்பின் மேல் மோதி எதிரொலிக்கிறதே காது கேட்கிறதா? அதைத் தொடர்ந்து பாடுவது போல் எண்ணற்ற பறவைகளும் உயர்ந்த குரலில் கீதம் இசைக்கின்றனவே.

'குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்''

+++
விஷ்ணுசித்தர் மனம் ஆயர்பாடியில் இருக்கிறது. உடல் ஆஸ்ரமத்தில், வில்லிப்புத்தூரில் ஒரு தூணில் சாய்ந்தவாறு விளக்கொளியில் தெரிகிறது.

அந்த விடியற்காலை நேரத்திலும் அருகே கோவிலில் அர்ச்சனை செய்யும் பட்டாச்சார்யர் அவரைத் தேடி ஆஸ்ரமத்தில் நுழைகிறார். உள்ளே கோதை அன்றைய மேற்கண்ட பாசுரத்தை பாட ஆரம்பித்து விட்டால். இருவருமே உட்கார்ந்து கோதை பாடிகொண்டிருக்கும் பாசுரத்தின் இனிமையிலும் அவள் பாடிய இனிய குரல் இன்பத்திலும் லயித்து சுகானுபவம் பெறுகிறார்கள்.

''மைத்தடம் கண்ணினாய் நீ'' என்கிற இடத்தில் கோதை வெகு அனாயாசமாக ஆத்மபூர்வமாக ஆலாபனம் விஸ்தாரமாக பண்ணி அவர்களை வைகுண்டத்திற்கே கொண்டு செல்கிறாள்.

பட்டாச்சார்யர் விஷ்ணு சித்தரைக் கண்டு வணங்கி ''விஷ்ணு சித்தர் சுவாமிகளே, சமீபத்தில் உங்களை அடியேன் தரிசிக்க நேரவில்லை. நேற்று சாயங்காலம் வந்ததிலிருந்து உடனே உங்களை தரிசித்து பாவை நோன்பு பாசுரங்களின் விளக்கம் கேட்க ரொம்ப ஆவலாக இருக்கிறது. இதோ இப்போ கோதை பாடினாளே அதன் விளக்கம் எனக்கு உங்கள் வாயிலாக அளிப்பீர்களா.?

''சுவாமிகளே, என் பெண் என்பதற்காக சொல்லவில்லை. மற்ற சில பாசுரங்களை விட என் கோதை அருளிச்செய்கிற இந்த திருப்பாவை பாசுரங்கள் புரிந்துகொள்ள அவ்வளவு கடினமில்லை. எதையும் நாம் எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதில் தான் சூட்ச்மம் இருக்கிறது. அவரவர் மனத்திற்கு, எதிர்பார்ப்புக்கேற்ப பொருள் விளங்கும்.'' என விஷ்ணு சித்தர் நெஞ்சம் தழு தழுக்க சொன்னார்.

வில்லிபுத்தூர் வட பத்ர சாயி கோவில் பட்டாச்சர்யார் பரம சந்தோஷத்தோடு விஷ்ணுசித்தர் வாயிலாக என்ன அறிந்து கொண்டார் என்பதை நாமும் தெரிந்து கொள்ளவேண்டாமா ?

''குத்து விளக்கு சாதாரண பெட்ரூம் விளக்கோ அகலோ அல்ல. பஞ்ச பூதங்களையும் காத்தருளும் பரமன் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கொளியில் நறுமண அகில் புகை கமகமக்க சப்ர மஞ்ச கட்டிலிலில் அருகே நப்பின்னை உறங்க தானும் உறங்கிக் கொண்டிருக்கிறான்.

மெதுவாக ஆண்டாள் கதவை தட்ட நப்பின்னை விழித்துகொண்டு கிருஷ்ணனை பார்க்கிறாள். யார் முதலில் எழுந்து கதவை திறப்பது?

வெளியே ஆண்டாள் குரல் கேட்கிறது--- ‘ஹே துளசியும் வண்ண,மணமிக்க மலர்களும் மார்பில் புரள நப்பின்னை அருகிருக்க துயில்பவனே, கொஞ்சம் வாயை திறந்து அருள்வாயா? மையிட்ட கண்களால் வையம் குளிர வைக்கும் நப்பின்னையே, கொஞ்சம் அவனை எங்களுக்காக வெளியே விடுவாயா? நீ ஒன்றும் சொல்ல வேண்டாம். எங்கே அவன் வாய் திறந்து இதோ வருகிறேன் என்று சொல்லி எழுந்து வந்துவிடுவானோ என்ற சந்தேகத்தில் அவனை ஒரு கணமும் பிரிய விரும்பாத நீ நாங்கள் அவனை எழுப்ப விடமாட்டாய் என்று ரொம்ப நன்றாகவே எங்களுக்கு தெரியும். நீ  செய்வது தகுமா, ஞாயமா, முறையா?? இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. உன்னருளும் அவனருளுடன் எங்களுக்கு கிடைத்து எங்கள் பாவை நோன்பு பலனளிக்க செய்வது உன் தயவால் தான் தாயே.! '' என்றவாறு அவளை வணங்கிவிட்டு அந்தப் பெண் கூட்டம் அன்றைய நோன்பு முடிந்து வீடு திரும்பியது'' இது தான் அந்த பாசுரத்தின் சாராம்சத்தை ஆண்டாள் பாடியதாக அமைந்துள்ளது இந்த அழகிய கற்பனை வளம் சிறந்த பாசுரம்.


'' நாராயணனின் காருண்யத்தைச் சோதிக்க ஒரு முறை தாயார் ''உங்கள் பக்தன் என்றுசொல்லிக்கொள்கிறீர்களே, இவனைப் பாருங்கள் மிகப்பெரிய தவறைச் செய்கிறான் என்று ஒருவனைச் சுட்டிக்காட்ட, பெருமான் சிரித்துக்கொண்டே ‘’என்னைத் தூய மனத்தோடு வேண்டும் என பக்தன் ஒரு போதும் தவறு செய்ய மாட்டான், எந்தத் தவறுக்கும் காரணமாகவும் இருக்கமாட்டான். அப்படி அவன் செய்யும் எந்தச் செயலாவது தவறாகத் தென்பட்டாலும் அது யார் நன்மைக்காகவே செய்ததாக இருக்கும்'' என்றான் இறைவன். விஷ்ணு சித்தரை நமஸ்கரித்து பட்டர் கோயிலுக்கு மீண்டார்


                                 20      கப்பம் தவிர்க்கும் கலியே

காற்று வீசும்போதெல்லாம் குறிப்பாக அந்த மூங்கில் காட்டில் இருந்து விசேஷமான காந்த சக்தி யுடைய சப்தம் வரும் என்று ஆயர்குடி கோப கோபியர் அறிவார்கள். யமுனையின் மறு பக்க கரையில் தான் மூங்கில் காடுகள் இருந்தன.

கண்ணன் அங்கிருந்து தான் ஒரு மூங்கில் குழாயில் தனது புல்லாங்குழல் தயார் செய்து கொண்டான். மற்ற மரங்களுக்கெல்லாம் அந்த மூங்கில் கொத்து மரங்களின் மீது இயற்கையாகவே பொறாமை இருக்க இதற்கு மேல் என்ன காரணம் தேவை. எல்லா மரங்களுக்கும் ஒரு புறம் பெருமையாகவும் இருந்தது. அனைவரும் விரும்பும் கண்ணன் அந்த மூங்கில் குழாய் மீது தனிப் பிரேமை வைத்ததால் அவை அடிக்கடி காற்று வீசாதா அது மூங்கில் காட்டிலிருந்து இன்னிசை எழுப்பாதா என்று. எங்கும்.
காற்று தாங்கிக்கொண்டு வந்த இன்னிசை ஒரு பாட்டாகவே அந்த வ்ரஜ பூமி எங்கும் எதிரொலித்தது. ''புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே அந்த புருஷோத்தமன் புகழ் பாடுங்களே''

மார்கழி 20வது நாளான இன்று ஆண்டாளும் சிறுமியர்களும் வழக்கம்போலவே இன்று காலையும் நந்தகோபன் மாளிகை சென்று துயிலெழுப்ப தயாராயினர் . யாரைப் பிடித்தால் காரியம் ஆகும் என்பது ஆண்டாள் என்கிற கெட்டிக்கார சிறுமிக்கு

சுலபமாக தெரிந்து விட்டது. தங்கள் பாவை நோன்பு பலனளிக்க எவர்ஆசியும் அருளும் தேவையோ அவரையே இயங்க வைக்கும் சக்தி நப்பின்னை பிராட்டியே என்பதால் ஆண்டாளின் சிறுமியர் குழாம் நப்பின்னையையே வளைய வந்ததில் என்ன ஆச்சர்யம்! மாளிகையில் முன் வாசலில் அவர்களின் இனிமையான குரலில் நாராயணனையும் கிருஷ்ணனையும் போற்றி பாடினர்.

ஆண்டாள் பாடினாள். தனது பாடலிலே கண்ணனை வேண்டினாள்: அதன் சாராம்சம்:

''முப்பத்து முக்கோடி தேவர்கள் வணங்கும் தேவாதிதேவா. நாராயணா, கேளாமலேயே அனைவரையும் ரட்சிக்கும் தேவனே துயிலெழு. அம்மா, நப்பின்னைப் பிராட்டியே, உலக நாயகியே, நீயும் துயிலெழு. உங்கள் ஆசியுடன் எங்கள் நோன்பு நன்று தொடர வாழ்த்தி அருளவேண்டும். தூய மனங்களில்என்றும் வீற்றிருக்கும் நாராயணனும் பிராட்டியும் தேவர்களை எல்லாம் காத்ததுபோல் நம்மையும், நாம் வேண்டாமலேயே, கேளாமலேயே, காப்பார்கள்.''

அச்சிறுமிகள் அன்றும் யமுனை நீராடி விரதம் வழக்கம் போல் கொண்டாடினர் கை நிறையபுஷ்பங்களை எடுத்து கொண்டு வாய் நிறைய நாமாவளி சொல்லி கொண்டு வீதி வழியாக அருகே இருந்த பெருமாள் கோயில் சென்று வழிபட்டு அன்றைய விரதம் முடிந்தது.

மார்கழியில் இந்த புனித நாளில் கீழ் திருப்பதியில் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாளுக்குதிருமஞ்சனம் நடைபெறும். மாலையில் ஊஞ்சல் சேவையுடன், மாடவீதி புறப்பாடு. காலம் மாறலாம். காட்சிகள் மாறுவதில்லை!!. கோலத்தில் சற்று வேறுபாடு. அவ்வளவே!

எப்போதோ யார் செய்த புண்ணியமோ, நமக்கெல்லாம் அந்த சிறுமி கோதை ஆண்டாளாக உருவெ டுத்துக்கொண்டு அளித்த புதையல் இதோ கர்ணாம்ருதமாக வில்லிப்புத்தூர் நந்தவனம் பூரா எதிரொலிக்கிறது.

''முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்''

வாசலில் மாவு எடுத்து பெரிதாக கோலம் போட்டிருந்தாள் கோதை. செடி கொடிகளை தத்ரூபமாக வரைந்திருந்தாள் அல்லவா? அவளுக்கு மிகவும் நெருக்கமான வைதேகி என்கிற பசு அந்த கோலத்தை அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தது. பாவம் அந்தப் பசு. கோதை வர்ணம் தீட்டி வரைந்திருந்த செடிகொடிகளை நிஜம் என்று நம்பி ஆர்வமுடன் நாவால் நக்கி தின்ன முயற்
சித்ததில் கோலம் கலைந்து விட்டது. நமக்கென்றால் மிக்க கோபம் வரும். வாயில்லா ஜீவன் என்று கூட பார்க்காமல் ஒரு கொம்பினால் அதை அடித்து விரட்டுவோம். ஆண்டாள் நம் போல் இல்லையே. ஆனந்தமாக சிரித்தாள. பசுவை அணைத்தாள் . மெச்சினாள் . கழுத்தைக் கட்டிக்கொண்டு '' வைதேகி ஏமாந்தாயா, நிஜம் என்று நம்பின நீ ஏமாந்து போகலாமா? பாவம் உனது ஆசை நிறைவேற வேண்டாமா? நிஜமாகவே உனக்கு இலை தருகிறேன் என்று உள்ளே சென்று நிறைய அகத்திக்கீரை கட்டாக கொண்டு வந்து வைதேகியின் வாயின் ஊட்டினாள் . ( வைதேகியின் கண்களில் இருந்து வெளிப்பட்ட நன்றியையும், அன்பையும், பாசத்தையும் எனக்கு எழுதத் தெரியவில்லையே . வார்த்தை தேடியும் கிடைக்கவில்லையே . நான் ஒரு சாதாரணன் என்னால் அதை எப்படி அழகாக எழுத முடியும். மன்னிக்கவும்.- சிவன்)


இப்போதெல்லாம் வடபத்ர சாயி கோவிலில் விஷ்ணு சித்தரைச் சுற்றி நிறைய பக்தர்கள் அன்றாடம் ஆண்டாள் எழுதிய பாசுரங்களை படிக்கச்சொல்லி கேட்டு அர்த்தமும் அவர் சொல்லி புரிந்துகொண்டு மகிழ்கிறார்களே. மேற்கண்ட 20வது நாள் பாசுரம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


                             21                  ஊற்றம் உடையாய் பெரியாய்

இந்த உலகத்திலேயே அதி வேகமாக ஓடக்கூடியது எது என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை ஊகித்து நான் சொல்லட்டுமா?

புலி, சிறுத்தை, மான், என்று சிலர் சொல்வது காதில் விழுகிறது, யாரோ ...." நாய்'' ... , மன்னிக்கவும் . இது எதுவுமே இல்லை. ''நேரம், நாள்'' இது தான் எதைக்காட்டிலுமே அதி வேகமாக ஓடுகிறது என்பேன்.

விஷ்ணு சித்தரும் இதைத்தான் உரக்க செடிகளிடம் சொல்லிக்கொண்டிருந்தார். '' மார்கழி ஆரம்பித்ததே தெரியவில்லை. நழுவிக்கொண்டே இன்று 21 நாள் ஆகிவிட்டதே. என்ன அற்புதமான அனுபவம் இத்தனை நாளும். கோதையின் பாசுரங்கள் எனக்குப் புத்துயிர் அளித்து வருகிறதே, இன்னும் ஒன்பது நாள் மட்டுந்தானா இந்த இன்பம் ! வேகமாக ஓடும் நாளே, நீ ஏன் மார்கழிக்கு மட்டும் இருநூறு நாட்களாவது இருக்கக்கூடாது ! '

ரோஜாப்பூ, சண்பகம், மல்லிகை எல்லாமே இதைக்கேட்டு குபீர் என்று சிரித்தன.

''ஏன் சிரிக்கிறீர்கள்'' என்று அவற்றைப்பார்த்து பெரியாழ்வார் கேட்டார்?

''ஆழ்வாரில் பெரியவர் எனப் பெயர் பெற்றவரே, சிறந்தவரே, கோதையின் அப்பாவே, இந்த மார்கழிக்கு முப்பது நாள் போதாது என்றே குறைப்பட்டுக் கொள்கிறீர்களே, எங்களைப்பற்றி ஒரு கணமாவது சிந்தித்தீர்களா? ''
.
''காலையில் மலரும் நாங்கள், மாலையில் மடிகிறோமே, எங்கள் வாழ்வு சோகமானதல்லவா? ''

''ஆஹா ! நீங்கள் சொல்வது என் மனத்தில் உங்களிடம் உள்ள முள்ளைப்போல் சுரீர் என்று தைக்கிறதே!''

''அது தான் இல்லை! நாங்கள் பரம திருப்தியாக இருக்கிறோம், பரம்பரை பரம்பரையாக. காலையில் மலர்ந்தோமா, எங்களை யாராவது உங்களைப்போல் உள்ளவர்கள், ஆசையாக வளர்த்தார்களா, எங்கள் அழகை ஸ்லாகித்து பேசி, பாடி, பறித்து, மாலையாக்கி, தங்களுக்கோ, இறைவனுக்கோ சூட்டி மகிழ்ந்தார்களா , அது போதுமே, எங்கள் வாழ்வின் லட்சியம் அதோடு முடிந்ததே! இது அல்லவா பேரின்பம். சிறிதும் துன்பமே இல்லையே, பிறந்தோம், வளர்ந்தோம், மகிழ்ந்தோம், மகிழ்ச்சியளித்தோம், முடிந்தோம். எல்லாம் சிறிது நேரத்திலேயே. போதுமே!

பயனற்று பலகாலம் வாழ்ந்து தானும் வருந்தி, பிறரையும் வருத்தி வாழ்வது நல்லதா, சுகமான சொல்ப வாழ்வு சிறந்ததா? நீங்களே முடிவெடுங்கள்!''

பெரியாழ்வார் கண்களை மூடி ''ரங்கா, ரங்கா, வட பத்ர சாயி'' என்றார். அது தான் முடிவு, அதில் தான் எல்லாம் அடக்கம்!
கற்பனை உலகம் ஒன்றில் தான் யாருமே நினைத்த நேரத்தில் எங்கு வேணுமானாலும் கண் மூடி திறப்பதற்குள் சென்று விடலாம். அங்கு RAC கிடையாது.

வழக்கம்போல் தினமும் யமுனையில் நீராடி கிருஷ்ணன் வளர்ந்து வாழும் ஆயர்பாடியில் நந்தகோபன் மாளிகைக்கு தினமும்
சென்று கிருஷ்ணனை துயிலெழுப்புவது எல்லாருக்கும் கிடைக்கும் சந்தர்ப்பமா? சாத்தியம் தானா?. அந்த சிறுமி ஆண்டாளுக்கு, அவளால் மற்ற சிறுமிகளுக்கும், இது வரப்ரசாதமாக அமைந்ததே! அதி புத்திசாலியான ஆண்டாளின் வர்ணனைக்கு ஈடு இணை இல்லை.

நந்தகோபன் வீட்டு பசுக்கள் மந்தையாக மலை போன்று பருத்துப் பெரிதாக நிற்கின்றன அந்த அதிகாலையில். கோபர்கள் பெரிய பாத்திரங்களை எடுத்துக் கொண்டு அந்த கறவைப் பசுக்களை அணுகி பால் கறக்க அந்த பாத்திரங்களை மடிக்கருகில் வைத்த கணத்திலேயே, தானாகவே பால் வெள்ளம் பொங்கி பாய்கிறது பாத்திரத்தில். கண்ணிமைக்கும் நேரத்தில் பாத்திரம் பொங்கி வழிகிறது இடமில்லாமல்!!

ஒரு வள்ளல் என்பவன் அவனைத்தேடி பலமுறை படையெடுத்து, அவனை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்தால் மட்டுமே பணமோ பொருளோ கேட்டு கொடுப்பவனல்ல. கேளாமலேயே வாரி கொடுப்பவன் தான் வள்ளல். .நந்த கோபன் பசுக்கள் ஒவ்வொன்றுமே
பால் வள்ளல்கள்.

கிருஷ்ணா, உன் வீட்டு பசுக்களே இப்படி வள்ளல்கள் என்றால் எண்ண வொண்ணா சகல உயிர்களையும் ஊட் டி வளர்க்கும் நீ எத்தனை பெரிய வள்ளல். உன்னை "பெரிய கடவுள்"என்பது எத்தனை பொருத்தம். உன்னை எதிர்த்தவர்கள் பின்னர் தம் தவறை உணர்ந்து உன்னைச் சரணடைவது உன் பேரருளுக்கல்லவோ?. உலக மாயை இருளகற்றும் பேரொளியே! துயிலெழு!, உன்னை தேடி வந்த இந்த சிறுமிகளுக்கும் வழிகாட்டு. எங்கள் பாவை நோன்பின் கருப்பொருளாக வந்து எங்களை எப்போதும் உன் நினைவிலேயே போற்றி புகழ்ந்திட அருள்வாய்.'' அருமையாக பாடுகிறாள் ஆன்டாள்

இப்படி அந்த இடைச்சிறுமி ஆண்டாள் பாடுவதாக கோதை அபூர்வமாக ஒரு பாசுரம் எழுதினாள் . காலத்தால் அழியாத சிறிய காவியம். அது இதோ:

''ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்''

வில்லிப்புத்தூரில் கோதை மேலே சொன்ன பாசுரத்தை எழுதியிருந்த ஓலைச்சுவடியை இதுவரை குறைந்தது பத்து முறையாவது வழக்கம்போல் விஷ்ணுசித்தர் படித்து மகிழ்ந்தார். அருகிலிருந்தோரிடம் எல்லாம் அர்த்தத்தை விளக்கினார்.


'' அம்மா கோதை என் செல்வமே, பல்லாண்டு பல்லாண்டு என்று பெரிய பாசுரங்களை எல்லாம் எழுதினேன்.அந்த நாராயணனை விடியலில் எழுப்பி வாழ்த்தினேன். எல்லோரும் என்னைப் புகழ்ந்தார்கள். நான் எழுதிய பல்லாண்டுக்கு ஈடு இணை இல்லை என்று புகழ்ந்தார்கள். இன்று தோட்டத்தில் நந்தவனத்தில் ஒரு ரோஜாப்பூ எனக்கு உணர்த்திய உண்மை இதற்கும் பொருந்தும் தாயே. ஒரு சிறிய பாசுரத்தில் நீ துயிலெழுப்பின அழகுக்கு எடைக்கு எடை என் பெரிய பாசுரம் தாங்குமா தெரியவில்லை என் தெய்வமே!!.


                             22 செங்கண் மாலே 

இறைவன் எங்கும் உள்ளான். அவனை எப்பெயரிலும் எவர் வேண்டுமானாலும் அறியலாம் என்பதால் தான் எம்மதமும் சம்மதமே என்ற பரந்த நோக்கம் நம்மிடம் உண்டு. எனினும் எல்லாக்குழந்தைகளும் பிடிக்கும் என்றாலும் என் குழந்தை மீது அலாதி பிரியமும் பாசமும் வைப்பவள் தாய். கிருஷ்ணன் அவ்வாறே நம் இதயத்தில் குடிகொண்டவன். இந்த மார்கழி முப்பது நாளும் அவன் விடியற்காலை ஒவ்வொருநாளும் ஆயர்குடிப் பெண் ஆண்டாளால் துயிலெழுப்பப்பட்டு நம் அனைவரையும் வந்தடைகிறான் என்று உணரும்போது மனம் மகிழ்கிறது. 

ஆண்டாளின் திருப்பாவை 21 பாசுரங்களை இதுவரை எனக்குத் தெரிந்த தமிழில், என்மனத்தையும், ஆர்வத்தையும் சேர்த்துக் கலந்து மிக்க மகிழ்வோடு பகிர்ந்து வருகிறேன்.

இது உங்களை திருப்தி கொள்ளச்செய்து, ஒரு கணம் அந்த இளம் சிறுமியை நினைக்கச் செய்தால் என் முயற்சிக்கு அதுவே அன்பர்களே, நீங்கள் எனக்கு கொடுத்த சிறந்த பரிசு, சன்மானம்.

இன்னும் என்னை திருப்திப்படுத்த நினைத்தால் உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆண்டாளை அறிமுகம்செய்யுங்கள். மார்கழி மாதம் கோவிலுக்குக் கூட்டிச் செல்லுங்கள். ஆண்டாள் சந்நிதி இருந்தால் ''இதோ உள்ளே இருக்கும் உம்மாச்சி பத்தித் தான் அன்னிக்கு சொன்னேன்'' என்று ஞாபகப்படுத்துங்கள். அவர்கள் பெரியவர்களாகி தங்கள் குழந்தைகளுக்கு அவ்வாறு சொல்ல நேரிட்டால் நீங்கள் நினைவில் நிற்பீர்கள்!

இந்த உலகில் உண்மையாக பாடுபட்டு உழைத்தால் கைமேல் பலன் என்று நாம் கூறுகிறோம் அல்லவா? அந்த காலத்திலேயே ஆண்டாள் என்கிற சிறு பெண் இதை நிரூபித்திருக்கிறாள். தினமும் முழுமனதோடு இறைவன் மீது தீராத அன்பும் பக்தியும் கொண்டு தன்னொத்த சிறுமிகளையும் விடியற்காலையிலேயே கூட்டிக்கொண்டு யமுனை நதியில் நீராடி மார்கழி குளிரில் நாவினிக்க மனமினிக்க நாராயணனை, பரந்தாமனாகிய கிருஷ்ணனை வேண்டி அருள் பெற விரதமிருந்தாள். இதோ இன்று மார்கழி 22ம் நாள் நந்தகோபன் அரண்மனையில் கிருஷ்ணனின் அறையில், நப்பின்னையின் பூரண ஆசியோடும் உதவியோடும் கிருஷ்ணனையே நேரில் கண்டு தோழியரோடு நிற்கிறாள்.

கிருஷ்ணனை அவன் அறையிலேயே பிடித்த கின்னஸ் ரெகார்ட் பெண்ணல்லவோ ஆண்டாள்.

அவள் என்ன சொல்லிப் பாடுகிறாள் இனிய குரலில் கிருஷ்ணனை நோக்கி, என கோதையின் எழுத்துவடிவில் பார்ப்போமா:

''அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்''

“கிருஷ்ணா, இதோ உன் அறையில் எண்ணற்ற மாவீரர்களும் அரசர்களும் உன்னோடு மோதி தோற்று, உன் அருமை பெருமை
அறிந்து தம் தவறை உணர்ந்து கைகட்டி வாய் பொத்தி, தலை குனிந்து பணிவோடு உன் அடிமையாக நின்றிருப்பதை நாங்கள்
ஏற்கனவே பார்த்திருக்கிறோமே. அதே போல் நாங்களும் உன் கட்டிலின் அருகே செயலிழந்து சரணாகதி என நிற்கிறோமே.
பாரேன்! உன்னுடைய சூர்ய சந்திரர்கள் போன்ற செந்தாமரைக்கண் சற்றே திறந்து கொஞ்சம் கொஞ்சமாகமாவாவது எங்கள் மேல் பட்டாலே எங்கள் ஜன்ம ஜன்மாந்தர பாபங்கள் எல்லாம் தீருமே!! எங்கள் பாவை நோன்பின் பலன் கைமேல் கிட்டட்டுமே".

இதோ இங்கே வில்லிப்புத்தூரில் வடபத்ரசாயி ஆலயத்தின் வாசலில் நிற்கும் இருவரும் ஏற்கனவே நமக்கு அறிமுகமானவர்கள் தான்.
பட்டாசார்யர் சுவாமி விஷ்ணுசித்தரை நோக்கி தலையாட்டி உள்ளன்போடு என்ன சொல்கிறார்:

""என்ன ஆழ்ந்த பக்தி உங்கள் அருமைப் பெண்ணுக்குப் பார்த்தீர்களா?. தனது தூய பக்தியை அந்த ஆயர்பாடிச் சிறுமி மேல் புகுத்தி அவள் கிருஷ்ணனை நேரில் கண்டு வணங்கியது போல் சித்திரம் தீட்டியிருக்கிறாளே . உண்மையிலே இன்று உங்கள் பெண்ணுக்கு ரங்கன் காட்சி தந்தானோ என்னவோ.? அதால் தான் இப்படியெல்லாம் எழுத வருகிறதோ?''

அவள் பெற்ற அந்த அருள் கொஞ்சம் கொஞ்சமாவது சிந்தி நம் மேல் விழட்டும் என்று நாம் பிரார்த்திப்போம்.

இன்று நாம் இதை படித்துக்கொண்டு இருக்கும் மார்கழி 22ம் நாள் வழக்கமாக ஸ்ரீ வில்லிபுத்தூரில் என்ன விசேஷம் தெரியுமா ஸ்ரீ ஆண்டாள் பிரியா விடை காட்சி நடைபெறும்.


அங்கிருக்கும் பக்தர்களுக்கும், எங்கிருந்தோ அங்கு சென்று களிக்கும் பக்தர்களுக்கும் இங்கிருந்தே அதையெல்லாம் நினைத்து
பார்க்கும் நமக்கும் அந்த நாராயணனின் அருள் கிடைக்க வேண்டி இன்றைய பாசுர பகுதி விடை pe றுகிறது.


                                 23 பூவைப் பூவண்ணா

ஒவ்வொரு நாளும் நமக்கு புதிதாகத் தான் அமைகிறது.புதிய எண்ணங்கள், புதிய எதிர்பார்ப்புகள். சில புதிய நம்பிக்கைகள். இதை முன்னேற்றம் என்று சொல்லலாமா? முன்னேற்றம் என்பது ஒரேயடியாக மேலே தாவுவது அல்ல. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக மேலே நகர்வது. இந்தச் சிறு பெண் ஆண்டாள், எப்படி முதலில் மற்ற ஆயர்பாடி இடைச்சிறுமியர்களை அழைத்தாள். கூட்டம் போதவில்லை என்று வராதவர்கள் வீடெல்லாம் சென்று அவர்களை தட்டி எழுப்பினாள் . அனைவரையும் ஒன்று சேர்த்து தினமும் யமுனையின் குளிர்ந்த நீரில் நீராட வைத்து அவர்கள் அனைவரும் பாவை நோன்பு நோற்க வைத்தாள் . பின்னர் நந்தகோபன் மாளிகை சென்றாள் . அவனை எழுப்பியதோடல்லாமல் யசோதையை, பலராமனை, நப்பின்னையை, எழுப்பினாள். எழுப்பியும் எழுந்திராத கண்ணனையும் எழுப்பிவிட்டாள் . கிருஷ்ணனை அவன் கட்டிலுக்கருகிலேயே நின்று அவர்கள் எல்லோரும் அவனது திவ்ய தரிசனம் கண்டு, அவனது க்ருபா கடாக்ஷம் வேண்டுமென்று பார்வை தங்கள் மேல் விழுந்து பாபங்கள் அகலவேண்டுமேன்று சரணாகதி அடைந்தனர் என்பது இதுவரை நாம் அனுபவித்த மார்கழி விருந்து.

இன்று மார்கழி 23ம் நாளில் இருக்கிறோம். இதோ இன்று ஆண்டாள் பாடும் அருமையான பாசுரம்.

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் போங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூஒவைப் பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் அறைந்து அருளேலோர் எம்பாவாய்

ஆண்டாள் சத்தித்து விட்டாள். அவள் விரதம் பலன் கொடுக்கத் துவங்கிவிட்டதே. (நர) சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்து விட்டாளே.

இந்த சந்தோஷம் நம்மை அப்படியே தூக்கி வில்லிபுத்தூரில் துளசி வனத்தில் அல்லவா போட்டு விட்டது. இதோ நமக்குத் தெரிந்த குரல் பேசுவதும் கேட்கிறதே.

ஆம் விஷ்ணுசித்தர் தான் அருமை மகள் அன்று எழுதிய பாசுரத்தைப்பற்றித்தான் வடபத்ர சாயீ ஆலய படாச்சாரியாரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அவர்களோடு பட்டாச்சாரியாரின் பாரியாளும் கையைக் கட்டிக்கொண்டு கேட்டுக்கொண்டிருக்கிறாள். மேலும் சில வைஷ்ணவர்களும் அவர்களோடு இருப்பதும் காண்கிறோம். விஷ்ணு சித்தர் அவர்களிடம் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார்?

ஆயர்பாடியில் ஆண்டாள் சொன்னதையே தான் விஷ்ணு சித்தரும் சொல்கிறார். ஆண்டாள் அன்று காலை நந்தகோபன் அரண்மனையில் கண்ணனைச் சந்தித்த விவரங்களைத் தான் சொல்கிறார். நாமும் தெரிந்துகொள்வது நாம் செய்த பாக்கியம்.

கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடுபவளா அந்த குட்டி ஆண்டாள். எவ்வளவு சமயோசிதம் தெரிந்தவள்.

''கிருஷ்ணா, உன்னைப் பார்க்கும்போது எனக்கு என்ன மனதில் தோன்றுகிறது தெரியுமா? ஒரு அடர்ந்த வனம். அதில் ஒரு பெரிய மலை. அதன் அடிவாரத்தில் இயற்கையாக அமைந்த ஒரு பெரிய குகை. அந்த குகையில் தனது ராணியுடன் ஒரு சிங்கம் வசிக்கிறது. மழை காலம் எனவே, அடக்கமாக ராஜா சிங்கமும் ராணி சிங்கமும் உறங்குகின்றன. கொஞ்சம் மழை விட்டது. சூரியன் வெளிச்சமும் கொஞ்சம் குளிரை விரட்டியடித்துவிட்டது. எனவே சிங்கராஜா எழுந்து விட்டார். தலையை அசைக்கிறார். கம்பீரமான அவரது மஞ்சள் விழிகள் சிவந்த நிறத்தை அடைந்து விட்டன. நெருப்பு உமிழ்கின்றன. எல்லாபக்கமும் நோட்டம் விடுகின்றன. அடர்ந்த பிடரியை அனாயாசமாக ஒரு உலுக்கு உலுக்குகிறார் சிங்க ராஜா. தையைத்தூக்கியவாறு கம்பீரமாக ராஜ குகைக்கு வெளியே வருகிறார். ஒரு பெரிய பாறை எதிரே தெரிகிறதே அதன் மேல் ஏறி நின்று ஒரு தனித்துவமான சிம்ம கர்ஜனை அவரிடமிருந்து வெளிப்படுகிறது. வனாந்திரமேல்லாம் அது கர்ஜித்து எதிரொலிக்கிறது.

காயாம்பூ வர்ண மலரணிந்த கண்ணா, அந்த சிங்கம் நீயே. உன் தலையை நிமிர்த்தி உயர்த்தி, எழுந்து ராஜ நடை போட்டு இந்த அழகிய ரத்ன சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு '' பெண்களே, எதற்காக என்னை வந்து எழுப்பினீர்கள் என்று நீ கேட்பாயானால் நாங்கள் நீ கேளாமுன்னரே , எங்களுக்கு உன் அருள் உண்டு, எங்கள் நோன்பின் பயனை உன் தரிசனத்திலே அடைந்தோம் என்று அர்த்தமாக எடுத்துக்கொள்வோம். எங்கள் மீது கருணை கொண்டு எங்களை ரட்சிக்க வேண்டும். ''

ஆண்டாள் இப்படி வக்கணையாக பேசுவது நமது நன்மைக்காகவும் தான். இந்த பாசுரத்தில் ஆண்டாள் கிருஷ்ணனை நரசிம்ஹ மூர்த்தியாக பாவிப்பது அபூர்வம். என்ன வளமான கற்பனை அந்த சிறிய இடைப்பெண்ணுக்கு


சிங்கம் இந்த இடத்தில் நரசிம்மனாக ஸ்ரீ நாராயணன் அவதாரமெடுத்து ப்ரகலாதனைக்காக்க ஹிரண்யாக்ஷதர்களை வாதம் செய்ததை நினைவுகூர்வதாக அமைகிறது. வழக்கமாக இன்றைய தினம் வில்லிப்புத்தூரில் ஸ்ரீ ஆண்டாளுக்கு எண்ணெய் காப்பு உற்சவம். மனதாலேயே நாம் இந்த வைபவத்தில் கலந்து கொள்வோம்.


              24     குன்று குடையாய் எடுத்தாய்

நாளுக்கு நாள் குளிர் அதிகமாகிக்கொண்டே தான் போகிறது. இருந்தும் ஆயர்பாடியில் ஆண்டாளும் அவளுடைய தோழியர்களும் சிறு பெண்களாயிருந்தாலும் விடாப்பிடியாக தங்களது பாவை நோன்பை ஸ்ரத்தையோடு நிறைவேற்றி வருகிறார்கள். அந்த கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் அருளட்டும். அவர்களுக்கு நல்ல கணவன்மார்கள் கிடைக்கட்டும். ஆண்டாளுக்கு அவள் தேடும் கிருஷ்ணனே கிடைக்கட்டும்.

ஆண்டாள் உரக்க ப்பாடுகிறாள். விடியர்காலை அமைதியில் அவள் வெங்கலக் குரல் கோவில் மணி போல் உள்ளத்தைத் தொடுகிறது. எங்கும் எதிரொலிக்கிறது.

''அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்''

தெய்வத்திடம் வைக்கும் நமது பூரண பக்தி நம்மை அவரிடம் கொண்டு சேர்க்கும் என்பதை விட அவரை நம்மிடம் கொண்டு வந்து விடும் என்பது இந்த சிறு ஆயர்பாடி பெண்ணிடமிருந்து தெரிந்து கொள்வோம்!!

நேற்று மார்கழி 23ம் நாள் நடந்ததை நினைவு கூர்வோம். அவள் பாடுவதின் பொருள் என்னவாக நமக்குப் படுகிறது?

“அழகிய சிங்கமே வீறு நடை போட்டு உன் சிம்மாசனத்துக்கு வா, கம்பீரமாக எங்களை உன் காந்த விழியில் நோக்கி “என்னடி பெண்களா எதற்கு என்னை எழுப்பி இங்கு உட்கார சொல்லுகிறீர்கள்?. என்ன வேண்டும் உங்களுக்கு?” என்று கேட்கச்செய்யும் அளவுக்கு பரந்தாமன் கிருஷ்ணன் மீது அந்த ஆண்டாளுக்கு செல்வாக்கு இருந்தது என்றால் அவளது பக்தி எத்தனை ஆழமானது என்று புரியும் . கிருஷ்ணன் அவ்வாறு கேட்டதும் அவளும் அந்த பெண்களும் என்ன செய்தார்கள் தெரியுமா? அப்படியே ஆண் டாளும் அவள் கூட்டமும் கண்ணன் காலடியில் சரணாகதி என விழுந்தனர்.

''கண்ணா உன் திருவடிகளே சரணம். இந்த பாதங்கள் தானே மண்ணுலகும் விண்ணுலகும் அளந்தவை. இவையல்லவோ தென்னிலங்கை சென்று ராவணாதியரை அழித்தவை. இவை தானே சகடாசுரனை உதைத்தவை. வத்சாசுரனை கன்று வடிவத்தில் வந்தவனை உதைத்து கொன்றவை. இவை தானே உன்னை சுமந்து சென்று கோவர்தன கிரியை தூக்க வைத்து குடையாக்கி இந்திரனின் சீற்றத்திலிருந்து எங்களை யெல்லாம் காத்தவை.

“கண்ணா, உன் கையில் இருப்பதென்ன கூர்வேலா? அது தானே உனக்கு சென்ற விடமெல்லாம் வெற்றியையும் சிறப்பையும் தருவது. எங்களுக்கு எது கவசம் தெரியுமா? உன்னை புகழ்ந்து பாடிக்கொண்டே இருப்பது. அதுவே எங்கள் மூச்சு. எங்களை என்றும் காக்கும் சுலபமான மந்திரம்.''

“அம்மா, ஆண்டாளே அழகிய ஆயர்பாடி சிறுமியே! உன் வழியையே நாம் இந்த மார்கழி 24ம் நாளை வில்லிப்புத்தூரிலும் அனுபவிக்க வேண்டாமா

''எவ்வளவு அழகாக உங்கள் பெண் இந்த ஆண்டாள் என்ற சிறுமியை ஆயர்பாடியில் உருவாக்கி அவளையும் அவள் தோழிகளையும் அந்த சாக்ஷாத் கிருஷ்ணனையே தரிசிக்க வைத்திருக்கிறாள்.'' தத்ரூபமாகவே காட்சியைச் சித்தரித்திருக்கிறாளே'' என்றார் பட்டாச்சார்யர்.

விஷ்ணு சித்தர் ஆனந்தத்தில் லயித்திருந்தார்.

''சுவாமி, எல்லாம் என் ரங்கனின் வரப்ரசாதம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் எனக்கு சொல்லத் தெரியவில்லை. எனது பாக்கியம் அவள் என் பெண்ணாக அவதரித்தது.

இந்த மார்கழி எனக்கு வைகுண்ட வாசமாக இருக்கிறது இந்த அருமையான பாசுரங்களைக் கேட்டு மகிழ்வதற்கு.

''சுவாமி, இன்றைய பாசுரத்தைப் படித்துக்காட்டினீர்களே .அதன் அர்த்தத்தை விளக்குங்கள். கேட்க ஆவலாக உள்ளேன்'' என்றார் பட்டாச்சார்யர்.

''கோதை எழுதிய அருமையைச் சொல்கிறேன் கேளுங்கள்.''.

''அந்த ஆண்டாளும் ஆயர்குடிச் சிறுமியரும் கிருஷ்ணனைச் சந்தித்ததும் எதற்காக அவனைப் பார்க்க வந்தோம் என்பது மறந்து, அவனை வாழ்த்தி பல்லாண்டு பாடினர்.

உலகளந்த அவன் திருவடி போற்றினர்.

தசரதர் எப்படி ராமனைப் புகழ்ந்து அவன் ராக்ஷசர்களை அழிக்க வாழ்த்தினாரோ அதுபோல் ஆண்டாளும் அந்த ராமன் சேது பாலம் கட்டிய பராக்ரமத்தையும், சிவ தனுசு ஓடித்ததையும் புகழ்ந்தவள், கிருஷ்ணன் ஒருவேளை எங்கு தன்னைப் புகழாமல் ராமனைப் புகழ்கிறாளே என்று நினைத்துக்கொள்வானோ என்று மனதில் தோன்றியது.

உடனே சகடாசுரனையும் வத்சாசுரனையும் கிருஷ்ணன் வதைத்ததும் புகழ்கிறாள்.

விடாமல் ஏழு நாள் கோவர்தனகிரியை ஒரு சிறு விரலால் சுமந்து ஆயர்பாடியைக் காத்ததையும் போற்றுகிறாள்

அந்த சிறு பெண்ணுக்கு எவ்வளவு அற்புத ஞானம். எல்லாம் அந்த அரங்கன் செயல் தான்'' என்றார் விஷ்ணுசித்தர். .


பெருமாள் பிரசாதம் எடுத்துக்கொண்டு விஷ்ணு சித்தர் தனது நந்தவனத்திற்கு நடந்தார்.
வழியெல்லாம் அடுத்த நாள் என்ன பாசுரம் எப்படி வரும் என்ற ஆவலுடன் நடந்ததால் வழிநடந்த களைப்பும் இல்லை.
கோதையை வாழ்த்தி அவளுக்கு வட பத்ர சாயியின் பிரசாதம் அளிக்கவேண்டும் என்ற ஒரு ஆவல் மட்டும் அவரை துசசிவன ஆஸ்ரமத்தை நோக்கி வழி நடக்கச் செய்தது


                                                           25   நெருப்பென்ன நின்ற நெடுமாலே

எங்கும் பெரிய கரும் இருட்டு கவ்விச் சூழ்ந்திருந்தது. இருட்டுக்குத் துணையாக காற்று பலமாக வீசியது. மார்கழியின் விசேஷமே பனிகலந்த சில்லென்ற காற்று தானே. வில்லிபுத்தூரில் எங்குமே எப்போதுமே அமைதி தான். ஆனந்தம் தான். அரங்கன் உள்ள ஊரில் ஆனந்தமில்லாவிட்டால் தானே ஆச்சர்யம்.

அந்த நிர்மானுஷ்யமான துளசி நந்தவனத்தில் நாராயணா கோவிந்தா, முகுந்தா என்ற விஷ்ணு சித்தர் குரல் மட்டுமே துல்யமாக கேட்டது. காற்று விசியதில் தீபம் மலை ஏறிவிட்டதால் விஷ்ணு சித்தர் மீண்டும் தீபத்தை ஏற்றினார். திரியை நிமிண்டி நீட்டிவிட்டு இருந்ததால் , காற்று அதன் மீது படாதவாறு அதைச்சுற்றிலும் ஒரு பிறை அமைத்ததால் அந்த தீபம் சற்று கூடுதலாக கொடுத்த வெளிச்சத்தில் ஆண்டாளின் மார்கழி 25ம் நாள் பாசுரத்தை ஏந்திய ஓலைச்சுவடியை அரங்கன் விக்ரஹம் முன் வைத்து வணங்கி அதை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டு மெதுவாக படித்தார்.

கண் தெரியவில்லை. ஓலைச்சுவடியின் எழுத்துகள் புரிபடவில்லை. கண்ணைச் சுருக்கிக்கொண்டு சுவடியை விளக்கருகே கொண்டு சென்று தலைக் கவிழ்த்து படிக்க முயன்ற போது தான் கோதை ஆஸ்ரமத்தில் நுழைந்தாள் . அவர் படும் அவஸ்தை அவளை வாட்டியது.

''அப்பா. நீங்கள் ஏன் ஸ்ரமப்படுகிறீர்கள். இதோ நானே படித்துக்காட்டுகிறேனே''

''படித்துக்கொண்டே நீ பாடினால் இன்னும் அற்புதமாக இருக்குமே. பாலில் தேன் கலந்தாற்போல்''

கணீரென்று வெண்கலக்குரலில் கோதை பாடியபோது தான் நமக்கெல்லாம் திருப்பாவையின் 25வது பாசுரம் கிடைத்தது.

''ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்''

''அப்பப்பா அந்த குட்டி கிருஷ்ணன் எப்படிதான் நாளொரு ராக்ஷசனும் பொழுதொரு ஆபத்துமாக வளர்ந்தான் என்று நினைத்துப் பார்க்கவே ஆச்சர்யமாகவே இருக்கிறதே . இல்லையா அப்பா ?''.

''ஆமாம் என் செல்வமே. தாயே, அவன் எந்த ஆபத்திலும் சிக்க வில்லை. அந்த ராக்ஷசர்கள் தான் ஒவ்வொருவராக வரிசையில் வந்து அவன் கையால் ஆபத்தையும் மரணத்தையும் தேடிக்கொண்டார்கள் என்பது தான் உண்மை. அவன் எதற்கு அவதரித்தானோ அந்த வேலையை பிறந்த கணம் முதல் தொடங்கிவிட்டான். சுறுசுறுப்பில் அவனைத்தான் நாம் பின்பற்றவேண்டும்!''

இறைவனுக்கே உகந்த சிறப்பு மிக்க இந்த மார்கழி மாதம் இன்று 25வது நாளைத் தொட்டு விட்டது. இன்னும் ஒரு கை விரல்
விட்டு எண்ண இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இன்று நடந்த விஷயத்துக்கு வருவோம். அதற்கு நாம் ஆயர்பாடி போயாகவேண்டும். புறப்படுவோம்.

''சரணாகதி நீயே என்று கண்ணன் திருவடிகளில் மெய்மறந்து மனம் கனிந்து அவன் பேரருள் பெற வேண்டிய ஆண்டாளுக்கு திடீர் என்று கிருஷ்ணனின் பழைய ஞாபகங்கள் வந்து விட்டது.

இந்த மாயாவி யார்?
யாரோ ஒருத்திக்கு பிறந்தவன், பிறந்த கணத்திலேயே அவளை விட்டு பிரிந்தவன், பிறந்ததையே ரகசியமாக்கி விட்டு வேறு எங்கோ ஒருத்தியிடம் ரகசியமாகவே வளர்ந்தவன். இதனால் தான் பிற்காலத்தில் நமக்கெல்லாம் கீதா ரகசியம் கற்பித்தானோ!

தன் உயிரைக் காத்துக் கொள்ள உன்னைத் தேடிக் கொல்ல அலைந்த கம்சன் தூக்கமின்றி தவித்து வயிறு பூரா உன் மீதுள்ள கோபத்தால் உண்டான நெருப்போடு வெந்து அந்தக் கவலையில் துடிக்க வைத்தவனல்லவா நீ? என்று ஒரு கணத்தில் ஆண்டாள் கிருஷ்ணனைப பற்றி சிந்தித்து பெருமிதம் கொண்டாள். அப்படிப்பட்ட மகோன்னதமான பெருமாளே!, உன் பெருமையும், செழுமையும், வீரமும் கருணையும்-- எதைப்பற்றி பாடினாலும் சந்தோஷக் ககடலில் மூழ்க வைக்கிறதே!! எங்ளுக்கு அருள் செய்வாயாக”” என்று இந்த நன்னாளில் ஆண்டாள் அன்று வேண்டுகிறபோது அதே மார் கழி 25ம் நாளான இன்று ஸ்ரீ வில்லி புத்தூரில் ஆண்டாள்- கண்ணன் திருக்கோலம் ஊர்வலமாக வருஷா வருஷம் நடைபெறுகிறது.


பக்தர்களை மகிழ்விக்க தந்தத்தில் செய்யப்பட்ட பல்லக்கில் அந்த தெய்வங்கள் ஊர்வலம் வரும்போது, அதை மனதில் மட்டுமே பார்க்கக் கொடுத்து வைத்த நாம் அந்த ஊர்வலத்தில் ''மனதார'' கலந்துகொள்வோம். நம் வேண்டுதலையும் அவள் திருவடிகளில் வைத்து வழிபடுவோமாக.!! .


                                                      26  மாலே மணிவண்ணா

'மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள்வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்''

(குந்தல வராளி என்று ஒரு அபூர்வ ராகம். மனதை அப்படியே சுண்டி இழுக்கும் என்பது தெரிந்து தான் காலஞ்சென்ற ஏழிசை மன்னர் M K தியாகராஜ பாகவதர் ஒரு காலத்தில் ''மனமே நீ ஈசன் நாமத்தை'' என்று ஒரு பாபநாசம் கீர்த்தனையை இன்றும் ஒலிக்கும் அவர் குரலில் பாடிவிட்டுப் போனாலும் அதை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துமாறு காலஞ்சென்ற M L V அவர்கள் மேற்கண்ட பாசுரத்தை அதே ராகத்தில் பாடி நமது வீடுகளில் மார்கழியில் காதில் இன்பத் தேனாக வந்து பாயுமாறு செய்து விட்டுப் போயிருக்கிறாரோ? எனத்தோன்றுகிறது. எல்லாமே ஆண்டாளின் கைங்கர்யம் தான்)

மார்கழி 25வது நாள் நாம் என்ன கண்டோம்?

ஆண்டாள் தனது தோழியரோடு கிருஷ்ண பரமாத்மாவை பார்த்த போது கண்ணன் எவ்வளவு ஆபத்துகளை பிறந்ததிலிருந்தே எதிர்கொண்டவன்; வடமதுரையில்சிறையில் பிறந்து கோகுலத்தில் ரகசியமாகவே வளர்ந்தவன் என்பதை எல்லாம் நினைவு கூர்ந்துவிட்டு அந்த கண்ணன் கழல்களே சரணம் என வணங்கி ஆசி வேண்டினதை எல்லாம் பற்றியல்லவா?.

இன்று மார்கழி 26ல் நடந்தவையை முதலில் தென்கோடி வில்லிப்புத்தூரில் சென்று காண்போம்.

பொழுது புலர்ந்து விட்டது. மழையும் சற்று நின்றது. எண்ணத்தொடர் சற்று நந்தவனத்தில்பூத்துக் குலுங்கிய மலர்களின்மேல்செல்ல விஷ்ணு சித்தர் ''நாராயணா என்னே உன் கருணை '' என்று பூக்குடலையுடன் நந்தவனத்தில் நுழைந்தார்.

அவரைப்  பொருத்தவரையில் மழை பெய்தாலும், மலர் மலர்ந்தாலும், மாமரத்தில் மாம்பூ தென்பட்டாலும் , பசு அம்மா என்றாலும், பறவை கீதம் இசைத்தாலும், காற்று இனிமையாக தேகத்தை வருடினாலும் எல்லாமே ''நாராயணா, என்னே உன் கருணை'' தான்.

''இப்போதெல்லாம் கோதை வெகு ஆர்வத்துடன் ''அப்பா ஒவ்வொரு நாளும் நானே வடபத்ரசாயிக்கு மாலை தொடுப்பேன். எந்த மலர்களை எடுத்து பொருத்தி தொடுத்தால் அவனுக்கு அழகு கூடும் என்று அமைக்கிறேன்'' என்று ஆர்வமுடன் பாடிக்கொண்டே மாலை தொடுக்கிறாள் .இந்தக் கோதை என்கிற பூவையே ரங்கன் எனக்கு கொடுத்த அபூர்வ பூ, பரிசல்லவா?''

தங்களை அவள் தொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தால் அல்லவா இந்த நந்தவனம் பூக்களால் நிரம்பி பூத்துக் குலுங்குகிறது. அந்த அழகிய பூக்களைப் பார்க்கும்போதே இன்று ஒரு சிறந்த மாலை அமையப்போகிறது என்கிற எண்ணம் அவருக்கு உதயமாகி விட்டது.

மாதங்களிலே சிறந்த மார்கழி அந்த மாதவனின் ஸ்வரூபமே. அவனே சொல்லியிருக்கிறானே மாதங்களில் நான் மார்கழி என்று. இந்த 26 நாட்களும் ஆண்டாள் போற்றும் கிருஷ்ணனின் தனி சிறப்பு என்ன?

ஒருவர் மற்றொருவரிடம் விரோதம் கொண்டாலோ அவரை வென்று விட்டாலோ தோற்றவர் மற்றவரிடம் சொல்ல வொண்ணா கோபமும் ஆத்திரமும் கடைசிவரை வைத்திருந்து எப்போது அவரை வீழ்த்தலாம் என்று சந்தர்ப்பம் எதிர் நோக்கி இருப்பது நாம் இக்காலத்தில் விடாமல் கடைப்பிடிக்கும் நிதர்சனமான உண்மை. ஆனால் என்ன விசித்ரம் பார்த்தீர்களா? கிருஷ்ணனிடம் தோற்றவர்களோ அவனை எதிர்த்தவர்களோ கடைசியில் அவன் உண்மை ஸ்வரூபம், குணம், உத்தம பண்பு,பரோபகாரம் எல்லாம் உணர்ந்து அவனிடம் சரணாகதி அடைந்து அவனால் நற்கதி அடைந்தவர்கள். நமக்கு இது வழிகாட்டி. ஆண்டாள் கண்ணனின் இந்தப் பெருமையை பறை சாற்றுகிறாள்.

விட்ட இடத்திலிருந்து தொடர்கிறாள் ஆண்டாள்

''கிருஷ்ணா, எங்களிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டாயே. இதோ ஒரு பட்டியல் தருகிறேன்'' என்று ஒன்றன் பின் ஒன்றாக எதை கேட்டாள்?

மார்கழி யமுனை நீராட எங்களுக்கெல்லாம் நிறைய பெரிய சங்குகள் வேண்டும். எப்படிப்பட்ட சங்கு தெரியுமா” வெள்ளை வெளேரென்று உன்னுடைய பாஞ்சஜன்யம் இருக்கிறது பார், அதே மாதிரி தான். எங்கள் நோன்பு பாடல்களை நாங்கள் பாடிக் கொண்டு வீதி வலம் வரும்போது எல்லோருக்கும் கேட்கும்படியான சத்தம் அது கொடுக்க வேண்டும்.

எல்லோரையும் ஈர்க்கும் பெரிய பேரிகைகள் வேண்டும்.

திருமாலின் அவதாரமான கிருஷ்ணா! உன் புகழ் பாடி உனக்குப்பல்லாண்டு பாட எங்களுக்கு நிறைய வேதகோஷ விற்பன்னர்கள்,வித்வான்கள் தேவை.

வரிசை வரிசையாக ஏற்றி வைத்து உன்னை தீபாலங்காரத்தோடு வழிபட நிறைய விளக்குகள் வேண்டும்.

எங்கும் உன் புகழ் பாடி நாங்கள் வரும்போது அனைவரும் கண்டு களிக்க கண்ணைக்கவரும் வண்ண வண்ண துணிகளில் நிறைய கொடிகள் வேண்டுமே.

அங்கங்கு பந்தல் போட்டு உன் பிரசாதங்களை அனைவருக்கும் சம்ருத்தியாக இட்டளிக்க நிழல் அமைக்க பந்தல் கூடாரம் துணிகள் வேண்டும்.

என்ன இது? மடை திறந்த வெள்ளம் போல் எதையெல்லாமோ கேட்கிறாளே இந்த ஆண்டாள் என்று யோசிக்கிறாயா? அதற்கும் காரணம் ஒன்று இருக்கிறதே! பிரளயம் என்ற கால ஊழியில் எதுவுமே நீரில் மூழ்கியபோது நீ மட்டும்ஒரு ஆலிலையில் சுகமாக படுத்து பிரயாணம் செய்து உலகை மீட்டு கொடுத்தவனாயிற்றே, உனக்கு என் இந்த சிறிய பட்டியல் ஒரு வெள்ளமா? ஒரு பொருட்டா?

நீ இவற்றை அளித்தால் தானே எங்கள் நோன்பு விரதம் எல்லாம் சிறக்கும். புரிகிறதா? என்றாள் ஆண்டாள். ஒருவிஷயம் இங்கு சொல்லவேண்டும் பெரிய மேதாவிகள் ஞானிகள் எல்லாம் என்ன சொல்கிறார்கள்? ஆண்டாள் கேட்ட பொருள்கள் எதை குறிக்கிறதாம் தெரியுமா?.

சங்கு: மந்த்ராசனம்.

பேரிகைகள் = ஸ்னானாசனம் (திருமஞ்சனம்)

வேதகோஷம் பல்லாண்டு

அலங்காராசனம்.: விளக்கு: நைவேத்ய சமர்ப்பணம்.

கொடி: விஞ்ஞாபனம்,

பந்தல்: பர்யங்காசனம்.

ஆண்டாள் கேட்ட 6 அயிட்டங்களும் பகவத் ஆராதனத்தில் உபசார ஆசனங்கள். ஆண்டாள் பார்ப்பதற்கு ஒரு குக்கிராம சிறுமி போல் காட்சியளித்தாலும் ரொம்ப விஷயம் தெரிந்தவள் என்று புரியவில்லையா? .


இன்று மார்கழி 26ம் நாள் இந்த ஆண்டாளை நாம் முத்தங்கி சேவையில் பார்க்கலாம் ஸ்ரீ வில்லிபுத்தூரில், அவள் தங்க சேஷ வாகனத்தில் பவனி வரும்போது. வில்லிப்புத்தூரில் சென்று நேரில் பார்க்கமுடியாதவர்களுக்கு எத்தனையோ சாதனங்கள் அவற்றை வடிவெடுத்து வீட்டில் உட்கார்ந்த இடத்திலேயே காட்டுகிறதே. பட்டிமன்றம் பார்க்கும் டிவியில் இதுவும் தெரிகிறதே.


                                   27- கூடாரை வெல்லும் கோவிந்தா

இந்த தீஞ்சொல் பாசுரத்தின் முதலடியே பண்டிகையாகி விட்டது. 'கூடாரை வெல்லி'' கரைந்து தேய்ந்து கூடார வல்லி
ஆகிவிட்டது திரு அல்லிக்கேணி ''ட்ரிப்ளிகேன்'' ஆனமாதிரி.

''கோதையே, நீ என் பெண்ணல்ல. என்னை உய்விக்க வந்த அந்த மகாலட்சுமி தாயார் தான் என்பதில் எள்ளளளவும் எனக்கு சந்தேகமில்லை என்று பூரிக்கிறார் விஷ்ணுசித்தர்.

இதையே எதிரொலிக்கிறார் சுவாமி தேசிகன் கோதா ஸ்துதியில். துளியும் எனக்கு சந்தேகமில்லை பெரியாழ்வார் ஆன விஷ்ணுசித்தர் சொன்னது வாஸ்தவம் தான் என்று பறை சாற்றுகிறார் கோதா ஸ்துதியில் சுவாமி வேதாந்த தேசிகன். இதோ அந்த ஸ்லோகம்:

ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீ ரங்கராஜ ஹரிசந்தக யோக த்ருச்யாம்!

ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாமநந்யசரண: சரணம் ப்ரபத்யே!!

''கோதையே, நீ ஸ்ரீ விஷ்ணுசித்தருடைய குலத்தில் பெண்ணாக வந்த , கேட்பதை அனைத்தும் வாரித் தரும் கற்பகக் கொடி.
அரங்கன் ஒரு சந்தன மரம். நீ அவனைச் சுற்றிப் படர்ந்திருக்கின்ற கற்பகக் கொடி. பூமிதேவியே கோதையாக அவதரித்தாளோ அல்லது ஸ்ரீலக்ஷ்மியே கோதையாக வடிவெடுத்தாளோ, வேறு புகலற்ற நான், கோதை நாச்சியாரைச் சரணடைகிறேன்.(கோதா ஸ்துதி, ஸ்வாமி ஸ்ரீ தேசிகர்).

ஆண்டாள் என்று ஒவ்வொரு பெருமாள் கோவில் சந்நிதியிலும் பெருமாளோடு தரிசனம் தருபவள் கோதை தான். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று பெயர் வாங்கியவள். பூமாதேவியின் அவதாரம்.கலியுகத்தில், பக்தர்களை உய்விக்க வேண்டி, எம்பெருமானின் கட்டளையை ஏற்று, ஸ்ரீவில்லிப்புத்தூரில், விஷ்ணு சித்தரின் (பிற்காலத்தில் பெரியாழ்வார்) திருமகளாக, துளசி வனத்தில் தோன்றியவள் கோதை. சகல வேதங்களையும் பிழிந்து வடிகட்டினால் கிடைக்கும் சாரம் தான் திருப்பாவை. திருப்பாவையை கோதோபநிஷத் என்று ஆங்கிலத்தில் தமிழ் அறியாத குழந்தைகளுக்காக பிரத்யேகமாக ஒரு புத்தகத்தை உருவாக்கிக்கொண்டு வருகிறேன். விரைவில் கோதை ஆங்கிலத்தில் பேசுவாள்-- சிவன்)

மார்கழி 27ம் நாள் நம் எதிரே தோன்றுவது இந்த இருபத்தாறு நாட்களாக கண்டு மகிழும் நீண்ட அழகிய கண்ணைக்கவரும் யமுனை ஆறு. இதோ கேட்கிறதே ஆண்டாளின் குரல் இந்த விடியற்காலையில். அவள் பாடும் அற்புதப் பாடல் நம் காதில் தேனாகப் பாய்கிறது. உண்மையில் ''தேன்'' என்பது பொருத்தமே. இன்று இனிய சுவையான அக்கார அடிசில் பற்றியல்லவோ ஆண்டாள் பாடுகிறாள்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

ஆண்டாள் இப்போது இடைச்சிறுமியா அல்லது பழுத்த ஞானியா? என்று சந்தேகிக்கும் அளவிற்கு அவள் கண்ணனுடன் கலந்து விட்டாள். இந்தத் ''திருப்பாவை'' யில் கண்ணன் ஆண்டாளின் ''கைப்பாவை'' ஆகிவிட்டதல்லவோ அதிசயம்! என்னமாய் அவள் கண்ணனிடம் பேசுகிறாள் பாருங்களேன்.

''கண்ணா! உன் புகழ் பாடி நோன்பு நோற்று அது நிறைவேறும் நிலையில், உன்னிடம் வேண்டுவன எல்லாம் கேட்டு அவற்றைப் பெற்று, நோன்பின் பயன் அடைந்தோமே, இந்த சிறுமிகளுக்கு நீ தக்க சன்மானம் தர வேண்டுமல்லவா? முதலில் இந்த ஆயர்குல சிறுமிகள் நோன்பு முடியும் இந்த தருணத்தில் அவர்கள் நல்ல புத்தாடைகள் உடுத்தி, கை, கால், கழுத்து நிறைய நகைகள் அணிந்து (அந்த கால நகைகள் பெயர்கள் தோள்வளை, செவிப்பூ -- நெக்லஸ் வராத காலம்) மலர்கள் சூட்டிக்கொண்டு இனிப்பான கம கம வென மணக்கும் நெய் , பால்,சர்க்கரை கலந்து உனக்கு ''நெய்' வேத்யம் கொண்டு வந்திருக்கிறார்களே, வாசனை மூக்கைத் துளைக்கவில்லையா உனக்கு ?

உடனே வந்து அக்கார அடிசில் கை நிறைய எடுத்துக் கொள். இதை உண்ணும்போது உன் கையிலிருந்து முழங்கை வழியாக நெய் வழிய வழிய ருசித்து உண்ண நீயும் எங்களோடு வா, கண்ணா, வா ! எங்களுடன் நீயும் மகிழ்சசியோடு உண்ண வாயேன் !! நாம் எல்லோரும் கூடி இருந்து மனம் குளிர களி ப்போமே.'' நீ நல்லவர்களோடு (இருக்கக் ) கூடாதவர்களை, ''வென்று'' அவர்களையும் திருந்தக் ''கூடிய''வர்களாகப் பண்ணுபவனாச்சே . எங்களோடு ''கூடி'' உண்ண வா'' என்று அழைக்கிறாள் கோதை வில்லிப்புத்தூரில் ஆண்டாள் என்கிற இடைச்சிறுமியாக கற்பனை உருவெடுத்து.

ஆண்டாளின் இந்த 27 வது பாசுரம் மிக அருமையான ஒன்று. கோதை ஆண்டாளாக சொல்கிற ஒவ்வொரு சொல்லும் நெய், பால் சர்க்கரை பொங்கலைப் போன்று இனிக்க வல்லது என்பதில் ஏதேனும் ஐயம் உண்டோ?


இதுவரை நாம் ரசித்த, ருசித்த, திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரமும், பாவை நோன்பு நோற்க வேண்டும், தோழியரே காத்யாயனி விரதத்தில் பங்கு கொள்ள வாருங்களேன் இன்னுமா தூக்கம் என்று மற்ற பெண்களை ஆண்டாள் தூக்கத்திலிருந்து எழுப்புவது என்று அமைகிறது. ஆஹா என்னே இந்த விந்தை. நம்மை அஞ்ஞான இருளில், தாமச குணத்திலிருந்து மீட்டு உயர் சத்வ குணம் அடைய, உள்ளும் புறமும் தூய்மை பெற, ''யமுனை நதி நீராட்டலை'' உதாரணமாக காட்டி ''நோன்பு நோற்பது'' என்கிற ஏகாக்ர விடா முயற்சியில் ஈடுபட்டு அந்த பரமனை அடையச் செய்து, அவன் அருளாகிய '' அக்கார அடிசிலை'' அவனுடனேயே ''கூடி மனம் குளிர்ந்து '' இனிமையாக அனுபவிக்கும் சுகானுபவத்தை அல்லவோ போதிக்கிறது அந்த சிறுமியின் பாசுரம். கோதை வாக்கு உபநிஷத் தான் என்பதில் என்ன சந்தேகம்.


28     குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா

''கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
              அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
               குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
            அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
              இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்''

வில்லிப்புத்தூரில் விஷ்ணு சித்தர் என்கிற சாது ஆழ்வாரின் வளர்ப்பு மகளாக அவதரித்த கோதை நாச்சியார், தாம் வாழும் வில்லிப் புத்தூரையே மனதளவில் கண்ணன் வாழ்ந்த ஆயர்பாடியாக, கோகுலமாக, வில்லிபுத்தூரில் கோவில் கொண்டுள்ள வடபத்ர சாயியையே, ரங்கமன்னாரையே, கண்ணனாகவும் அந்த சிறு கோவிலையே (அவள் வாழ்ந்த காலத்தில் இருந்ததைச் சொல்கிறேன், இப்போது தமிழக அரசு தனது அரசியல் சின்னமாக எடுத்துக்கொண்டு பெருமையளிக்கும் பெரிய அழகிய கோபுரம் கொண்ட கோவிலை அல்ல) கண்ணன் வாழ்ந்த நந்தகோபனின் மாளிகையாக கற்பனை செய்து இந்த பின்னணியில் அற்புதமாக 30 பாசுரங்களை காலத்தால் அழியாத காவியமாக அளித்துள்ளாள்.

தன்னையும் தன் தோழியரையும் ஆண்டாளாகவும் அவளது தோழிகளாகவும் காட்டுகிறாள். பதினைந்து வயதே வாழ்ந்த அவள் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவராக நிலை பெற்றுவிட்டாள்.

மேலெழுந்தவாரியாக படித்தால் திருப்பாவை என்பதில் ஆண்டாள் என்கிற ஆயர்பாடி சிறுமி, அவள் தோழிகள், கண்ணனது வளர்ப்புத் தந்தை நந்தகோபனின் அரண்மனை, அதன் வாயில் காவலாளி, கண்ணனை வளர்த்த அன்னை யசோதை, தந்தை நந்தகோபன் சகோதரன் பலராமன், நப்பின்னை, இவர்களைச் சுற்றியே முப்பது பாசுரங்களும் பிணைக்கப்பட்டிருக்கிறது. எல்லோரையும் விடியற்காலை துயிலெழுப்பி, கண்ணபிரானை அவனுடைய சிம்மாசனத்தில் அமரச்செய்து அவனிடம் தங்களது நோன்புக்காண வேண்டுகோளை அருள்வாயாக என்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறாள். கண்ணன் மறுவார்த்தை பேசாமல் கேட்டதைக் கொடுத்துவிட்டான். நன்றியோடு அவனைப் போற்றிப் புகழவேண்டாமா ?

ஏற்கனவே 26வது பாசுரத்தில் நமது ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வதை குறிப்பிடுகிறாள் கோதை. ஆமை போன்று புலன்களை உள்ளிழுக்க முடிந்தவன் யோகி. ஏகாதசி விரதம் போன்ற கட்டுப்பாடு நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ஐம்புலனில் ஒருசிலவற்றின் கண்ட்ரோல்.

உடம்புக்கு எதற்கு சிங்காரம். பகட்டான பளபளக்கும் ஜிலுஜிலுக்கும் உடை தேவையா.? மற்றவன் அறுத்துக்கொண்டு ஓடுவதற்காக நாம் நிறைய நகைகளைச் சுமக்கவேண்டுமா? காசு கொடுத்துக் கண்ணைக் கெடுக்கும் ரசாயன படைப்பில் மை, வாசனைப் பொடிகள், பவுடர், இந்த விரதத்தின் போதாவது அவசியமில்லையே என்கிறாள் ஆண்டாள் வாயிலாக அந்தச் சிறுபெண் கோதை.

ஒரு விரதம் என்று எடுத்துக்கொண்டால் நாக்கை அடக்கவே என்பதை தெளிவாக அறிவுறுத்துகிறாள்.
பால், நெய் கலந்தவற்றை சாப்பிடவேண்டாம். விரத காலத்தில் பூவைச்சூடவேண்டாம். நாம் விரதத்தில் இருக்கிறோம் என்று ஞாபகப்படுத்துவதற்காக இது.

சத்சங்கம், இறைவனைப் பற்றியே பேசுவது, பாடுவது, கேட்பது, நினைப்பது ஒன்றே குறியாக இருக்கலாமே. உடலின் நினைப்பை மறந்து உள்ளத்தைத் திறந்து அவனை உள்ளே ஆட் கொள்வோமே. இதால் நமக்கு மன அமைதி கிட்டும். பேச்சு குறையும். வம்பு கிட்டே வராது. அதை வெளியே தள்ளி அன்பு கிட்டே வரும். காலம் செல்லச் செல்ல, அடிக்கடி இப்படி விரதமிருந்தால் உடல் வலிமை பெருமை. வாய்மை, பொறுமை எல்லாம் தானாகவே வந்து சேரும். வியாதி நெருங்காது.

கள்ளம் கபடம் அறியாத உள்ளம் கொண்ட ஆண்டாளும் அவள் தோழியரும் எவ்வளவு உண்மையான பக்தி கொண்டவர்களா யிருந்தால் அந்த பரந்தாமனிடம் “என்னவேண்டும்?” என்று அவன் கேட்டபோது, கொடி கொடு,
, துணி கொடு, தம்பட்டம் கொடு, என்று குழந்தைத்தனத்தோடு கேட்டார்கள். நம்மிடம் அதனால் தான் இறைவன் உனக்கு என்னவேண்டும் என்று கனவில் கூட கேட்பதில்லை!!! தேவையில்லாததை கேட்டுப்பெருவதை விட தேவையானதை அறிந்து அவனே கொடுப்பானே. தப்பாக கேட்டு பெற்று அவதிபடுவதியும் தவிர்க்கலாமே. கும்பகர்ணனை ஞாபகம் இருக்கிறதா. ''நிர்தேவத்வம்' (தேவர்களே இருக்கக்கூடாது ) என வரம் கேட்கப் போய் நாக்கு குளறி ''நித்ராவத்வம் '' (தூக்கத்தை கொடு ) என்று கேட்டு வருஷத்தில் ஆறுமாதம் தூங்கியவன். நாம் வரம் கேட்காமலேயே தூங்குகிறோம்.

கிருஷ்ணன் ஆண்டாளிடம் "ஏ! சிறு பெண்ணே, இதுமட்டும் தான் வேணுமா, இந்த அழியும் அல்ப வஸ்துகள் தவிர வேறு பெரிசா எதாவதும் கேளேன்" என்றான்

" கிருஷ்ணா, பெருமானே, நாங்கள் படிப்பறிவில்லாத இடைச் சிறுமிகள், யமுனை ஆத்துக்கு அந்தபக்கம், கீழண்டை பனந்தோப்புக்கு அடுத்து இருக்கிற கிராமத்திலே, அதோ தெரியுதே அந்த வேலங்காட்டுக்கு வடக்கே, கூட என்ன இருக்கிறது என்று தெரியாத மாடு மேய்க்கிற அறிவிலிகள். உன்னோடு சேர்ந்து சாப்பிடவேணும் என்கிற ஆசையிலே உன்னை மரியாதைக் குறைவாக பேசியிருந்தோம் என்றால் எங்களை, கிருஷ்ணா, நீ கொஞ்சம் மன்னித்துவிடு . நீ உலகையே படைத்துக் காக்கின்றவன். வேதங்கள் கூறும் பரம்பொருள் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன். இவ்வளவு பெரிய உன்னை ஒண்ணுமே தெரியாத சிறிசுகள் நாங்கள் தப்பாக பேசியிருந்தால் எங்கள் மேலே கோபம் வேண்டாம். மன்னித்து காப்பாற்று . உன்னை விட்டால் எங்களுக்கு வேறு யாரும் இல்லையே” . ஆண்டாள் தனது பக்தியை எவ்வளவு எளிமையாக வெளிப் படுத்தியிருக்கிறாள் பார்த்தீர்களா. இன்னும் ரெண்டு நாள் மட்டுமே பாக்கியிருக்கு இந்த மார்கழி 28ம் நாளோடு. இன்று அந்த ஆண்டாள் ஸ்ரீ வில்லிபுத்தூரில் தங்க பல்லக்கில் வீற்றிருந்த கோலத்தில் நமக்கு காட்சி தருகிறாள்!!

பேசிக்கொண்டே நாம் ஆயர்பாடியில்ருந்து எவ்வளவு தூரம் வில்லிப்புத்தூர் வரை நடந்துவிட்டோம்.!! ஆஸ்ரம் வாயிலில் நாம் நுழையும்போதே உள்ளே விஷ்ணு சித்தர் குரல் கேட்கிறதே.

''அம்மா கோதை, நீ இந்த ஆண்டாள் மூலமா பக்தி, சரணாகதி என்றால் எப்படி பண்ணவேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்தியிருக்கிறாய். எப்படியம்மா உன்னால் இது முடிந்தது.?


''அப்பா. நான் நினைப்பது, பேசுவது, பார்ப்பது, பாடுவது சகலமும் அந்த அரங்கனைத்தவிர வேறு ஒன்றுமே இல்லை என்று ஒரு பழக்கத்தை, ஏன் ஒரு வழக்கத்தை எனக்கு ஏற்படுத்திக்கொடுத்ததே நீங்கள் தானே. இப்படி இருக்கும்போது நான் எழுதியவற்றில் எல்லாம் உங்களிடமிருந்து தெரிந்துகொண்டது மட்டும் தானே இருக்கும் இதில் என்ன ஆச்சர்யம் என்று சிரித்தாள் கோதை .


29.   உனக்கே நாம் ஆட்செய்வோம்

நானே பாடுகிறேனே, நீங்களும் என்னோடு சேர்ந்து சொல்லுங்கள் என்று ஆண்டாள் கூறிட கூட இருந்த அத்தனை இடைச் சிறுமிகளும் அவளைத் தொடர்ந்து பாடினார்கள். அந்த அமைதிச் சூழலில் மென்மையான குளிர் உடலை வருட இந்த இனிய கானம், நம்பிக்கை கலந்த உண்மையான பக்தி இதயத்தை மயிலிரகாக வருடியது.

எப்படி ஆண்டாள் உன்னால் மட்டும் இவ்வளவு அழகாக பாட்டை இயற்ற முடிகிறது என்று அவர்கள் வியந்து கேட்டபோது ஆண்டாள் சிரித்தாள். '' நீங்கள் இப்போது என்னோடு சேர்ந்து பாடினதிலேயே விடை இருக்கிறதே கவனிக்க வில்லையா'' என்று கேட்டாள் .

என்ன பாடினோம் என்று அவர்கள் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது நாம் அவள் பாடியதை அறிந்து கொள்வோம்.


''சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
              பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
             குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
             எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
               மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்''

இந்த பிறவி மட்டுமல்ல, இனி வரும் ஏழேழு பிறவிக்கும் நான் உன்னைச்சேர்ந்தவன், உன்னைச் சரணடைந்தவன் என்பதால் உன்னிடமிருந்து தனியே பிரிக்கப்படாத உன்னால் ஆட்கொள்ளப்பட்டவன் என்று ஒரு பக்தன் தன்னை கிருஷ்ணனிடம் அர்ப்பநித்துக்கொண்டபோது இது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ அழகான பாடல்கள் அவன் உள்ளத்திலிருந்து பிறக்குமே என்று ஆண்டாள் சுட்டிக்காட்டியது புரிகிறதா?

''ஏண்டீ ஆண்டாள் நாமெல்லாம் இப்போது ரொம்ப சாத்வீகமாகவே சாப்பிடுகிறோம் இல்லையா. இந்த விரதம் இருந்ததிலிருந்து முப்பது நாளாக நாம் எல்லோரும் பழையபடி இல்லையே. கிருஷ்ணனை சந்தித்ததும் ரொம்பவே மாறிவிட்டோம் இல்லையா என்று ஒருவள் கேட்டாள் .''

''இப்படி இருக்கிறது உங்களுக்கு சந்தோஷம் தானே என்றாள் ஆண்டாள் .''

''இதிலென்னடி சந்தேகம் உனக்கு. மனசு ரொம்ப லேசாகி விட்டது போல் இருக்கிறது. எங்கோ ஆகாயத்தில் உயர உயரமாக காற்றிலே பறக்கிற மாதிரி இருக்கிறதடி'' என்று ஒரு இளம்பெண் தனது உணர்வைக் கூறினாள்.

ஆகவே, சாத்வீக உணவு உண்பதன் மூலம் எப்போதுமே செய்யாதன செய்யோம் தீய எண்ணங்கள் உள்ளே இடம் பெறாது, மனம் அவை நீங்கி லேசாகும் அங்கு இறைவன் பஞ்சு மெத்தையின் மீது அமர்வது போல் இடம் பெறுவான் என்பதை ஆண்டாள் மூலம் கோதை நாச்சியார் இந்த திருப்பாவை எளிய பாடல்களில் விளக்குகிறாள்..

+++
வில்லிப்புத்தூரில்

''சுவாமி இத்தனை நாளா நீங்க சொல்ற திருப்பாவை பார்க்கறதுக்கு சின்னதா இருந்தாலும் உள்ளே ரொம்ப பெரிய விஷயங்களை அடக்கிண்டிருக்கு என்றார் வில்லிப்புத்தூர் வட பத்ர சாய் கோவில் பட்டாச்சர்யார்.''

''கோதை, திருப்பாவையிலே யோகங்களைப் பத்தியெல்லாம், பரம ரகசியமாக வச்சு பாடியிருக்கா. நான் கவனிச்ச வரைக்கும் நம் உடலில் பல முக்ய ஆதாரச் சக்கரங்கள் இருப்பது தெரியுமல்லவா ? அதில் அதி முக்யமானது தான் முதல்லே மூலாதாரம் என்கிற குண்டலினி. ரொம்ப சக்தி அதுக்கு. பார்க்க சுருண்டு படுத்திண்டிருக்கிற பாம்பு மாதிரி இருக்கும் . இதை ஒரு உலுக்கு உலுக்கி எழுப்பணும். அதுக்கு முறையாக தெரிஞ்சவா கிட்ட போய் யோகம் கத்துக்கணும். உச்சாணிக்கிளைக்கு அதாவது நமது சிரசிலே இருக்கிற சக்ரம் (அது பேர் ஸஹஸ்ராரம்-- ஆயிரம் மொட்டு தாமரை என்று கண்ணதாசன் பாடுவாரே அது ) கிட்டே கொண்டு போய் சேக்கணும்.

இதைத்தான் ஒரு பாசுரத்திலே ( 6வது நாள் ) திருப்பாவையைப் பார்த்தோமே அதில் கோடி காட்டியிருக்கிறாள் கோதை.

''கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்'' என்று சூசகமாக சொல்றாள். புரிகிறதா. சகடம் என்றால் சக்கரம், அரவு என்றால் நான் சொன்ன குண்டலினி என்கிற சுருண்ட பாம்பு இந்த இடத்திலே என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.

''சுவாமி, வாஸ்தவமான பேச்சு.. ரொம்ப யோசிச்சா, இந்த திருப்பாவையோட உள்ளர்த்தங்களைஎல்லாம் தெரிஞ்சிக்க ஒரு ஆயுசு போதாதோ என்றே தோணறது.''

''வாஸ்தவம் தான். எல்லாமே புரிஞ்சிக்கிறதைப் பொறுத்து அமையறது தான்'' என்று தலையாட்டினார் விஷ்ணு சித்தர். .
பரமாத்மாவோட ஜீவாத்மா கலக்கிறது தான் மனித பிறப்போடைய லட்சியம். (கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் என்று 27ம் நாள் சொன்னது )

இது நம்மாலே முடியுமா என்று ஒதுங்கக்கூடாது. இது ஏன் நம்மாலே முடியாது என்று முயற்சி செய்தால் பலன் கிடைக்கும்.

நம்பிக்கை மனதில் இருப்பதுடன் இதயத்தில் ஆர்வம் எழவேண்டும். நெஞ்சில் உறுதி தானாகவே வந்து விட்டதென்றால் ல் காரியம் கைகூடும்.


30    செல்வத்திருமால்

''வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை-
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே சொன்ன
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.''

மேலே கண்டது கோதை நாச்சியார் அருளிச்செய்த மார்கழி மாதம் முடியும் கடைசி நாளுக்கான பாசுரம். இதை பலஸ்ருதி என்று சொல்வது வழக்கம். இந்த ஸ்லோகத்தை, இந்த மந்திரத்தை, இந்த உச்சாடனத்தை சொன்னால் இன்ன பலன் கிடைக்கும் என்று பல முக்ய பாராயணங்கள், ஸ்தோத்ரங்கள் அளிக்கும் உறுதி.

சுலோகம் சொல்லுங்கள்,பாராயணம் செய்யுங்கள், பிரகாரம் நடங்கள் என்று ஒன்றை ஒருவரிடம் சொன்னால், இதைச் செய்தால், இதன் படி நடந்தால், எனக்கு என்ன பயன், என்ன பலன் என்று கேட்பவர்களும் நம்மில் அநேகர் இருப்பதை அந்த இளம் பெண் கோதை நாச்சியார் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தெரிந்து கொண்டு அவர்களை, (நம்மை) திருப்திப்படுத்த கொடுத்த வாய் மொழி இது .

மார்கழி முடிந்தவுடன் தான் உத்தராயண புண்ய காலம் ஆரம்பமாகிறது. இந்த முப்பது ஆண்டாள் பாடல்களை எத்தனையோ மகான்கள் வியாக்யானம் செய்திருக்கிறார்கள். அனுபவித்து உரையாற்றியிருக்கிறார்கள், பிரசங்கித்து வருகிறார்கள்.

இங்கொன்றும் அங்கொன்றுமாக பெரிய விஷயங்களை தொடுகிறது என்பதைத் தவிர பாராயண புத்தகமல்ல. குழந்தைகளுக்கும் சில பெரியவர்களுக்கும் திருப்பாவையை எளிதில் அறிமுகம் செய்ய ஒரு சிறிய முயற்சி.

முப்பது பாசுரங்களும் தினமும் விஷ்ணுசித்தரிடம் விளக்கம் கேட்ட பட்டாச்சார்யர் :

''சுவாமி நீங்கள் இன்று விளக்குகின்ற பாசுரம் தான் மார்கழியின் கடைசி பாசுரம் என்று அறியும்போது இனி தொடராதே என்கிற வருத்தம் மிகவும் இருக்கிறது ' என்றார் '

'' அப்படிச் சொல்லவேண்டாம். இதற்கு முடிவே கிடையாது. ஒன்றில்லை எனில் மற்றொன்று. இந்த பாசுரத்தில் ஆண்டாள் கேசவா மாதவா என்று கிருஷ்ணனை அழைக்கிறாள். ''க '' என்பது பிரமனைக் குறிக்கும் சொல். ''ஈசா'' என்பது சிவனைக்குறிக்கும் சொல். (க+ஈசா = கேசவா). மும்மூர்த்திகளும் ஒன்றே என்ற அழகான வார்த்தை. மாதவா என்பது மஹாலக்ஷ்மி .தாயாரை உடையவர் என்று பொருள். திருப்பாற்கடலைக் கடைந்ததில் கிடைத்தவள் மகா லக்ஷ்மி. (இந்த கோதை, தன்னை அரங்கனை அடைய வந்த மஹாலக்ஷ்மி என்பதை விளக்குகிறாளோ?)

முதல் பதினைந்து பாசுரங்களிலும் மற்ற பெண்களுடன் யமுனையில் நீராடி அன்றாடம் நோன்பு நோற்பதையும், 16வதில் நந்தகோபன் அரண்மனையை அடைவதையும் , அடுத்த 5 பாடல்களை நந்தகோபன், பலராமன், முதலானோரை துயி லெழுப்புவதையும், 23வது பாசுரத்தில் கண்ணனை துயில் எழுப்பி அவனை சிம்மாசனத்தில் அமரச்செய்வதையும், மற்ற இருபாடல்களில் பரிபூர்ண சரணாகதித்வம் பற்றியும் 26ல் விரதத்துக்கு தேவையான பொருள்களை வேண்டுவதையும், 27ல் அந்த ஆயர்பாடிச் சிறுமிகளுக்கு சன்மானம் கேட்பதையும், 28வதில் அவனது மேன்மையை எடுத்துச்சொல்லி தாங்கள் செய்த நோன்பில் ஏதேனும் தவறுகள், குறைபாடுகள் இருப்பின் அவற்றை க்ஷமிக்க வேண்டுவதையும், 29ல் நோன்பின் நோக்கத்தை அருளிச்செய வேண்டுவதையும், 30ல் அதை அடைந்தனர் என்ற பலஸ்ருதியையும் எத்தனை அழகாக மனிமாலையாக அந்த பட்டர்பிரான் வளர்த்த கோதை கோர்த்து அளித்திருக்கிறாள்.

முப்பது நாளும் திருப்பாவையை மனதில் பக்தியோடு, நம்பிக்கையோடு படித்து பாராயணம் செய்பவர்க்கு நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும். இதற்கு கண்ணன் அருள் புரிவான். வாரண்டி கேரண்டீ இதுதான்.

இந்த பாசுரம் திருப்பாவையை பூர்த்தி செய்கிறது. ஒரு அழகிய மணிமாலையில் ஒரு மணி உதிர்ந்தாலும் மாலைக்கு மதிப்பில்லையே. அது போல் இந்த முப்பது பாசுரங்களையும் முழுமையாக பாடி வேண்டுவோர்க்கு பொங்கும் மங்களம் எங்கும் தங்கும் என்பது சான்றோர் வாக்கு.


திருமண அழைப்பு

என்னுடன் இந்த மார்கழி மாதம் பூரா விடியற்காலை குளிரில் குளித்து நடுங்கி கொண்டு தலையில் குரங்கு குல்லாவோடு, ஆண்டாள் மற்றும் அவள் தோழியர் பின்னே கூடவே ஆயர்பாடிக்கு தொடர்ந்து வந்து, அங்கிருந்து அடிக்கடி தென்கோடியில் வில்லிப்புத்தூருக்கு தாவுவதுமாக இருந்த உங்களுக்கு என்ன விதத்தில் நான் நன்றி தெரிவிக்கமுடியும்?

ஆண்டாள் என்ன சொல்கிறாளோ அதையே திருப்பி சொல்வது தான் சாலச்சிறந்தது.

“கண்ணா, இந்த மார்கழி முழுதும் பக்தியோடு உன்னை பாடிய இந்த ஆயர்குடி இடைப் பெண்கள் நாங்கள் உன்னிடம் என்ன கேட்கிறோம்? நீயார்? எங்களைப்போல் இடையர் குலத்தில் பிறந்தவனல்லவா? .அதனால் நாம் எல்லோரும் ஒரே குலம் அன்றோ, ஒரே வித்தியாசம் நமக்குள் என்னவென்றால் நீ ஆண்டான் நான் ஆண்டாள் ஆக இருந்த போதும் உன் அடிமை. எங்களுக்கு நீ அருள வேண்டிய வரம் என்ன தெரியுமா?. இனி எத்தனை எத்தனை பிறவியோ அத்தனையிலும் நீ எங்களில் ஒருவன், நாங்கள் உன்னுடையவர்கள், புரிகிறதா?

ஒரே வார்த்தையில் இறைவனோடு தன்னைப் பிணைத்து கொண்டு விட்டாள் ஆண்டாள். என்ன பொருத்தம் பாருங்கள்.

"கோதா" என்ற அவள் பெயரே "கோவிந்தா'' என்ற அந்த மாயாவியின் பெயருக்குள் அடங்கிவிட்டதே! ஆகவே அவனை வணங்கும்போது நாம் அவளையும் சேர்த்தே தான் வணங்குகிறோம். இந்த 30 பாடல்களையும் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் மகளாக ஆண்டாள் இந்த திருப்பாவையை எழுதவில்லை.

தன்னை கிருஷ்ணன் காலத்திற்கே கொண்டு சென்று அன்று அங்கு வாழ்ந்த கோபர்கள் கோபியர்கள் எனப்படும் பசு கன்று மேய்க்கும் ஆயர் குலப் பெண்ணாக பாவித்து மற்ற சிறுமிகளுடன் சேர்ந் து பாவை நோன்பு நோற்றும் கிருஷ்ணனின் அருளைப் பெற்ற சிறுமியாகவே இந்த திருப்பாவை பாசுரங்கள் அமைந்தன. மார்கழி 30வது பாசுரத்தில் தான் ஸ்ரீ ஆண்டாள் இந்த பாசுரங்களை எவர் தப்பின்றி உண்மையான பக்தியோடு இறைவன் மேல் பாசத்தோடு மார்கழி மாதம் பூரா இசைக்கிறார்களோ அவர்கள் அந்த மாதவன் கேசவன் என்றெல்லாம் ஆயிர நாமங்கள் கொண்ட கோவிந்தனின் அருளை, சதுர்புஜ நாராயணனின் ஆசியைப் பெறுவர். குறையொன்றும் இல்லாத கோவிந்தன் தாள் சேர்வர். இது நிச்சயம், உறுதி, நம்பலாம் என்றுமுடிக்கிறாள்.

''திரு'' ப்பாற்கடலில் விளைந்த ''திரு'' அல்லவா அவள் -- ஆண்டாளாக அவதரித்து ''திரு'' ப்பாவை தந்தவள்!!. நம் எண்ணம் முற்றும் அந்த வெண்ணை ''திரு''டன் நீலவண்ணனுக்கே உரித்தாகட்டுமே!!.

இப்போது ஆண்டாள் எப்படி அந்த மதுசூதனனைக் கைப்பிடித்து கணவனாக்கிக் கொண்டதாக கனவு கண்டாள் என்பதை விழித்துக்கொண்டே அவள் கனவை நம் நினைவாக்கி அனுபவிக்கப் போகிறோம்! இது கனவல்ல. நிஜம். காலம் காலமாக ஆண்டாள் திருக்கல்யாணம் ஊரெங்கும் கோலாகலமாக நடைபெறுகிறதே. இது ஒன்றே நிதர்சனம். இனி நாம் ஆண்டாள் கல்யாணத்தில் சந்திக்கப்போகிறோம்.

''கனாக்கண்டேன் தோழி நான்''

நமது கனவில் முக்கால்வாசி பேருக்கு திருடன் வீட்டுக்குள் வருவது போல், நம்மை யாரோ துரத்துவதால்
துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடுவது போல், போலீஸ்காரனிடம் பிடிபடுவதுபோல், பஸ்ஸிலிருந்து விழுவதுபோல், மனைவியை கோபித்துக் கொள்வது போல்,-- இப்படிப்பட்ட கனவுகள் வருகிறதே.

நாளெல்லாம் வாயினிக்க அந்த கண்ணனைப் போற்றிப் பாடினாலும் இரவு தூங்கும் போதாவது அந்த அபூர்வமான ஆண்டாள் என்கிற அழகிய சிறு பெண் வெறுமனே தூங்கினாளா என்றால் அது தான் இல்லை. தூக்கத்திலும் இடைவிடாத கனவு ஒரே சீராக. அந்த கனவு என்ன ? வாருங்கள் . அவள் தன் தோழிகளிடம் மறுநாள் அதை பற்றி விவரமாக சொல்வதை நாமும் "உம் " கொட்டிகொண்டே “அப்புறம், அப்புறம்" என்று கேட்போம்:

'' நிறைய யானைக் கூட்டம் சுற்றி வருகிறது. நடுவில் ஜம் என்று அந்த அழகன் வருகிறான். எங்கே பார்த்தாலும் தென்னை,பாக்கு மர இலை, மாவிலைத் தோரணம். வேதியர் கூட்டம் மந்திர கோஷத்துடன் பூரண கும்பத்தோடு வரவேற்க காத்திருக் கிறார்கள்
பிரம்மாண்டமான பெரிய பந்தல், வாழை,பாக்கு போன்ற மரங்கள் அங்கங்கு கட்டப்பட்டு. குறையொன்று மில்லாத அந்த கோவிந்தன் என்னமாக அவனுக்கே உரித்தான பீதாம்பர பட்டாடை உடுத்தியிருக்கிறான்!! முக மலர்ச்சியோடு இதோ பந்தலில் நுழைந்து விட்டான்.

கல்யாணத்துக்கு நாள் பார்த்து எல்லா ஏற்பாடுகளும் தான் செய்தாகிவிட்டதே. என்னை அவனுக்கு பெண் பார்க்க யாரெல்லாம் வந்தார்கள் தெரியுமா? இந்திரன்,வருணன்,அக்னி, வாயு போன்ற தேவர்கள் கூட்டமே வந்து அவனுக்காக என்னைப் பெண் கேட்டார்களே தெரியாதா? மறந்து விட்டதா? இதோ,எனக்கு மந்திரங்கள் சொல்லி ஆசிர்வாதத்தோடு புது கூறைப் புடவை கூட கட்டி விட்டாகி விட்டார்கள். தூக்க முடியாத கனமான இந்த மாலையைக் கூட என் கழுத்திலே போட்டுவிட்டார்களே.

அப்பப்பா! எத்தனை வேத கோஷ பிராமணர்கள், எங்கெங்கோ நதிகளில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து ப்ரோக்ஷணம் செய்து, மங்கல நாண் அதில் தோய்த்து என் கையில் காப்பு கூட அந்த மாயாவி கட்டியாச்சே! கல்யாணத்துக்கு சதிர் ஆட பெரிய பெரிய நாட்டியக்காரிகள் வந்திருக்கிறார்கள். எல்லோர் கையிலும் தீபங்கள் எவ்வளவு அழகாக மின்னுகிறது பார்த்தாயா? இந்த கல்யாண ஏற்பாடுகள் ஒழுங்காக நடக்கிறதா என்று யார் மேற்பார்வை தெரியுமா?.வேறு யார்?. இந்த மதுரை ஊருக்கு ராஜாவான பாண்டியன் தான்.

முகூர்த்த நேரம் வந்துவிட்டதே. நாதசுரம், தவில், மங்கள வாத்யங்கள், சங்கு எல்லாம் முழங்கும் போது, இதோ இந்த முத்துப் பந்தலில் என்னருகில் வந்து என் கையை தானே எடுத்து பிடித்து அந்த கிருஷ்ணன் என்னைக் கைப்பற்றிவிட்டான். ''மாங்கல்யம் தந்துனானேனா.''.....மந்திரம் ஒலித்துவிட்டதே .

மந்திர கோஷங்கள் வானைப் பிளக்க அந்த கோவிந்தன் என் காலைப் பற்றினான். அம்மி மிதித்தேன். அருந்ததி பார்த்தேன். என் கையை அவன் பற்றிக்கொண்டு என்னை அணைத்து வர நானும் அவனும் அக்னி வலம் வந்தோம்.

என் கனவை ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால் தோழியரே, நான் அவன் மனைவியானேன்.

எனது “கண் அவன்” கணவன் ஆனான்”

தோழியர்கள் ஆண்டாள் கனவைச் சொல்லி முடித்ததும் ஆண்டாளை கேட்டனர். உனக்கு நிஜமாக எப்போ டீ அந்த கிருஷ்ணனோடு கல்யாணம்?''

ஆண்டாள் கனவு கண்டாளே அது நிறைவேறியதா? கனவு நிறைவேறுமா?. ஓ ஆகுமே! மாசம் பூரா விரதமிருந்து ஆண்டாள் வேண்டிக்கொண்டது நிறைவேறியது. கனவுகாட்சியாகியது. போகியன்று சில இடங்களில், தை முதல் நாள் அன்று என்றெல்லாம் ஆண்டாள் திருக்கல்யாணம் ஊரெல்லாம் காலா காலமாக நடைபெறுகிறதே .


கல்யாணம் முடிந்து இனி பெண் வீட்டுக்குப்போகவேண்டும் தயாராகுங்கள்.


பெற்ற மனம் பித்து

ஒரு முப்பது நாட்களாக தினம் விடியற்காலை பழகிய அந்த சிறுமி ஆண்டாளையும் , அவளை உருவாக்கிய, மற்றொரு சிறுமி கோதையிடமிருந்தும் நாம் பிரியும்போது நமக்குள் எதோ ஒரு இனம் புரியாத வெற்றிடம் ஏற்படுகிறதே. அவள் சிசுவாக துளசிவனத்தில் கண்டெடுத்ததுமுதல் 12-15 வருஷம் இணை பிரியாமல் விளக்கும் ஒளியும், உடலும் நிழலும் போல் கூடவே இருந்த கோதை என்கிற ஆண்டாள் கல்யாணமாகி புருஷனோடு, அந்த இறைவனோடு ஒன்றி விட்டாள் . வேண்டியதை அடைந்துவிட்டாள் என்றபோது தனியாக வில்லிப்புத்தூர் திரும்பிய விஷ்ணு சித்தருக்கு எப்படி தனிமை வாட்டியிருக்கும் என்று ஒரு நிமிஷம் யோசிப்போம்.

சிலை போல வெகு நேரம் நின்று கொண்டிருந்தார் விஷ்ணு சித்தர். எண்ண அலைகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கடுக்காக ஆக்ரமித்தன.

அன்னம் ஆகாரம் எல்லாம் மறந்து விட்டதா வெறுத்து விட்டதா? அவளில்லையே! இனி அன்னம் எதற்கு, நீர் எதற்கு ,
வீடு வாசல் இந்த தோட்டம் ஏன், என் உடலே எதற்கு?
எல்லாம் அவளகவே இருந்து அவளே இல்லாமல் போன பின் நானே எதற்கு? .
கண்களில் வழியும் நீர் ஆனந்த கண்ணீரா? இல்லை அளக்க முடியாத சோக கண்ணீரா? தெரியவில்லையே.
பித்து பிடித்து விட்டதே!!.
இதோ!, இந்த துளசி வனத்தில் தானே , ஒரு ஆடிப் பூரம் அன்று, விடிகாலை என் ரங்கபாடிக் கொண்டே புஷ்பம் பறிக்க வந்தபோது அந்த சின்ன குரல் கேட்டேன். ஆச்சர்யமாக, அவளை ஒரு தெய்வ பிம்பமாக, தாயாரின் சிறு வடிவாகப்பார்த்து இதோ இந்த கூடத்தில் இட்டு பால் வார்த்தேன். இங்கு தானே ரங்கன் சிலைக்கு முன்னால் அமர்ந்து அவளை மடியில் போட்டுக் கொண்டு அனைவர் மத்தியிலும் அவளுக்கு இரவெல்லாம் யோசித்து பொருத்தமாக “கோதை ” என்று பெயரிட்டேன். இங்கு தானே அவள் எப்போதும் என்னோ டு அமர்ந்து பேசுவாள். ரங்கன் கதையெல்லாம் திரும்ப திரும்ப கேட்பாள். வாய் ஓயாமல் நானும் சொல்லி சொல்லி மகிழ்வேனே.

எப்போதும் இந்த பூக்கூடையை பார்த்து “மாலை தயாரா?” எனறு கேட்பாளே. ஏன் எதற்கு என் று ரொம்ப காலம் புரியாமலே இருந்து விட்டேனே!. தினமும் கட்டி வைத்த மாலையை தன் தோளில் சூட்டிக்கொண்டு இங்கே பின்னால் இருக்கும் கிணற்றில் நீரில் தன் அழகைப் பார்த்து “ரங்கா, நான் அழகாயிருக்கிறேனா? உனக்கு ஏற்றவளா?
உனக்குப் பிடிக்கிறதா என்னை” என்று கேட்பாளாமே.

இறைவனின் மனதில் இடம் பிடித்த அவளை ஒன்றும் அறியாதவனாக நான் கோபித்ததே மாபெரும் தவறு. அவள் சூடிக்கொடுத்த மாலை தான் வேண்டும் என்று ரங்கனே அல்லவா உணர்த்தினான் எனக்கு.

அவள் அவனுக்காகவே பிறந்தவள். என்னிடம் வளர்வதற்காகவே வந்தவள். நான் பாக்யவானே. அப்பறம் தானே அந்த அழகிய மணவாளனே எல்லாவற்றையும் எனக்கு புரிய வைத்தான்!.

என்ன குரல்.... என்னஇனிமையான குரல் அவளுக்கு. எவ்வளவு சூடிகை. எவ்வளவு அறிவு. என்னமாய் தமிழ் பாசுரங்கள் எழுதலானாள்.

என் பெண் சாதாரண பிறவி அல்ல என்று வாய்க்கு வாய் சொல்வேனே. அவள் பாசுரங்ளை நானே எத்தனையோ முறை பாடி மகிழ்ந்தேனே

எல்லாமே அவள் என்னை விட்டு பிரிவதற்காகவேவா?”

“ச்சே” என்ன எண்ணம் இது?. அவள் எங்கு என்னை பிரிந்தாள்?. நான் அல்லவோ மேள தாளங்களோடு பாண்டியன் அனுப்பிய பல்லக்கிலே சகல மாலை மரியாதைகளோடு மகாலட்சுமியாக அவளை சீவி சிங்காரித்து சீர் வரிசையோடு மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பினேன். கூடவே போனவனும் கூட.!

என்ன அழகு அவளுக்கு, எத்தனை மகிழ்ச்சி முகத்தில். “இன்னும் எத்தனை தூரம் இருக்கிறது , எவ்வளவு நேரம் ஆகும் ஸ்ரீ ரங்கத்துக்குப் போக '' என்று கேட்டு கொண்டே வந்தாளே. “என்ன ஆச்சர்யம், என்ன அதிசயம் என்னை கிள்ளி பார்த்துக் கொண்டும் கூட என்னால் நம்ப முடியவில்லையே”.

“இதோ, வந்து விட்டது, அரங்கனின் இடம்! இதோ எனக்காக காத்துக்கொண்டிருக்கிறான். அரங்கா உன்னைக் காக்க வைத்து விட்டேனே. “பல்லக்கை இறக்குங்கள்” என்று அவசர அவசரமாக இறக்கச் சொல்லி பல்லக்கு இறக்குவதற்குள்ளேயே தாவி குதித்து அரங்கனின் சந்நிதிக்குள் ஓடினாள். எல்லாரும் ''ரங்கா ரங்கா'' என்று உணர்ச்சி பொங்க கூவினோம். என் கோதை, எனை ஆண்டாள், எஙகளையெல்லாம் திரும்பிப் பார்க்கக் கூட நேரமில்லாமல் உள்ளே ஓடினாள் . பாம்பணையில் படுத்து அவளுக்கு காத்திருந்த அரங்கனை ஆரத்தழுவினாள்.
பிறகு? பிறகு .....? அந்த அரங்கனில் கலந்து மறைந்தாள்!!!

இறைவனோடு எங்கள் இறைவி ஒன்றாக கலந்தது துக்கமா?? நிச்சயம் இல்லைதான்! ஆனால், ஆனால்,....
அவளை இனி என் கோதையாகப் பார்க்க முடியவில்லையே!” ---- ஒரு தகப்பனின் ஞாயமான பாசக் குமுறல் தானே இது!.

நன்றி மீண்டும் வேறொரு தொடரில் சந்திப்போம் ஜே. கே. சிவன்

(இது புத்தகமாக ''பாவையும் பரமனும் '' என்ற பெயரில் 11.1.14 வைகுண்ட ஏகாதசி அன்று செஞ்சொல் செல்வர் உ.வே. திரு கே.பி. தேவராஜன் சுவாமிகள் அவர்களது திருக்கரத்தால் நங்கநல்லூரில் வாழ்க வளமுடன் சிற்றரங்கத்தில் வெளியானது. இப்புத்தகத்தை விரும்புவோர் அணுக:


ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி
15 கன்னிகா காலனி 2வது தெரு, நங்கநல்லூர், சென்னை 600061 தொலைபேசி எண் 9840279080
மின்னஞ்சல் sreekrishnarpa...@gmail.com jksivan @gmail.com

Reply all
Reply to author
Forward
0 new messages