பதிவிரதமும், குருவிரதமும் -தெய்வத்தின் குரல்- ஏழாம் பகுதி-2
இங்கே முக்யமான விஷயம், அவர் (இப்படிப்பட்ட சிஷ்யர்) அந்த இரண்டு பேரிடமும் (குருமாரிடமும்) மற்றவரைப் பற்றி ஒளிக்காமல் சொல்லி அவரும் அறிந்தே, ஸம்மதித்தே, ஆசீர்வாதம் பண்ணியேதான் இரட்டை குருக்களாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது.
அப்படி இல்லாவிட்டால் அங்கே குரு வஞ்சனை குரு த்ரோஹம் வந்துவிடும்.
அப்படியில்லாத கேஸாகத்தான் சொல்கிறேன். இப்படியும் அபூர்வமாக நடக்கின்றன. தன்னிடமே சரணாகதனாக இருக்கிற ஒரு சிஷ்யனிடம் அந்த குருவேகூட இன்னொருத்தரைச் சொல்லி அனுப்பி வைப்பதாகக்கூட உண்டு.
ஏதோ அபூர்வமான பூர்வ ஸம்ஸ்காரம் காரணமாகத்தான் இப்படிச் சிலபேருக்கு நடப்பதாக இருக்கவேண்டும்.
"ஸரி, ஆனால் சரணாகதியை எப்படிப் பிச்சுப் பிச்சு இரண்டு பேர்கிட்ட குருவ்ரதம்?"
இது வெளி ஆள் கேட்கிற கேள்வி. ஆனால் ஸம்பந்தப்பட்ட ஆஸாமிக்கு - சிஷ்யனுக்கு - அவனுக்கு மாத்திரமில்லை, மூன்று ஆஸாமிகளுக்கு - அந்த சிஷ்யன் அவனுடைய அந்த ஸம ஸ்தான குருக்கள் இரண்டு பேர் என்ற மூன்று ஆஸாமிகளுக்கும் இந்தக் கேள்வி எழும்புகிறதேயில்லை!
அங்கே அந்த இரண்டு குருக்களுமே சேர்ந்து ஒன்றாக - ஒருத்தராகத்தான் - இருப்பார்கள். அதெல்லாம் அநுபவத்தினாலே தெரியவேண்டிய விஷயம். ஸம்பந்தப்பட்ட ஆஸாமிக்கு அப்படி நன்றாகவே தெரிகிற விஷயம். பிறத்தியாருக்கு 'ஏன், எப்படி?' சொல்லி புரியவைக்க முடியாது.
ஈச்வரனும் அம்பாளும் ஒன்றாகவே சேர்ந்து அர்த்த நாரீச்வரர் என்றே ஒரே மூர்த்தியாக இருக்கிறதோ இல்லையோ?
ப்ரஹ்ம - விஷ்ணு - ருத்திரர்கள் மூன்று பேரும் சேர்ந்து த்ரிமூர்த்தி என்றே மூர்த்தி உண்டோ இல்லையோ?
இங்கேயெல்லாம் (இவ்விரு மூர்த்திகளிடம்) பரம பக்தர்களாக சரணாகதி செய்து ஸித்தி கண்ட பெரியவர்கள் இருந்திருக்கிறார்களே!அவர்கள் பிய்த்துப் பிய்த்தா சரணாகதி பண்ணினார்கள்? ஐகாந்திக வ்ரதத்திற்கு (ஒரே நெறிக்கு) பங்கமா பண்ணினார்கள்? பண்ணியிருந்தால் அவர்கள் ஸித்திகண்டே இருக்க முடியாதே!
இந்த சிஷ்யர்களிடம் வேறே வேறே குருமார்கள் என்ற இடறலே மனஸில் கொஞ்சங்கூட இருக்காது. ஒரே பதி, அதே பதி வெவ்வேறே 'ட்ரெஸ்'ஸில் இருக்கிற மாதிரி ஒரே பரமாநுக்ரஹம், ஒரே உத்தாரண சக்திதான் வெவ்வேறே மநுஷ்ய - ரூப 'ட்ரெஸ்' போட்டுக் கொண்டிருப்பதாகவே அவர்களுக்குத் தெரியும். ஒரே லக்ஷ்யத்துக்கு மூர்த்தியாக ஒன்றுக்கு மேற்பட்ட பேர், Goal ஒன்றே, அதிலே சேர்ப்பிக்கிற ஆள் வெவ்வேறான ரூபத்திலே என்று தெரியும்.
வேறே வேறே குருக்கள் சொல்வதில் ஒருத்தர் சொல்கிறபடி பண்ணுவது மற்றவர் சொன்னதற்கு விரோதமாக ஆனால் அப்போதுதான் இடறல் வருவது. நாம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அப்படி ஆகவே ஆகாது. இரண்டு
பேரும் சொல்வது ஒன்றாகவேயோ, ஒன்றையன்று இட்டு நிரப்பிப் போஷித்துக்
கொண்டோ, அல்லது பக்குவ ஸ்திதியில் ஏறுமுகமாக ஒன்றை முடித்து இன்னொன்றுக்குப் போவதாகவோதான் இருக்கும்.
(ஸாதனை) வழியிலும் கொஞ்சங்கூட இடறல் இருக்காது, மனஸிலும் துளிக்கூட இடறல் - உறுத்தல் - இருக்காது. 'வஞ்சனையோ, த்ரோஹமோ, திருட்டுத் தனமோ பண்ணுகிறோமோ?' என்று உறுத்தாது. 'ஃப்ரீயாக, ஆனந்தமாக ஒன்றுக்கு மேற்பட்ட குருமாரிடம் போய்க்கொண்டிருப்பான்.
உபநிஷத்துக்களைவிட நமக்கு ப்ரமாணமில்லை. அதிலே இப்போது நாம் பார்த்ததில், க்ராமம் க்ராமமாக வழிகாட்டியவர்களைப் பல குருமார் என்று உபமேயமாக எடுத்துக்கொண்டது மட்டுமில்லை. உபநிஷத்துக்களிலே வருகிற ஸாக்ஷ£த் பாத்ரங்களில் பல பேரே பல குருமார்களிடம் போனதாகவும் நிறையப் பார்க்கிறோம்!
மேற்படி கந்தார தேச உபமானக் (உவமைக்) கதை எவனுக்கு உபதேசிக்கப்பட்டதோ அந்த ப்ரஹ்மசாரிப் பையன் ச்வேதகேது என்பவனே பல குருக்களிடம் உபதேசம் பெற்றுக் கொண்டவன்தான்
இங்கே முதலிலே முக்ய குரு, அப்புறம் பல உபகுருமார் என்று இல்லாமல் முதலிலே பல பேரிடம் கற்றுக்கொண்டுவிட்டு அப்புறம் முக்ய குருவிடம் வந்து சேர்வதாக இருக்கிறது. பிதாவான உத்தாலக ஆருணியே தான் அப்படி முக்ய குரு ஆகிறவர். முன்னே நாம் பார்த்த பிதா - குரு 'ஈக்வேஷன்'!
அவன் பல பேரிடம் படித்துவிட்டுப் பிதாவிடம் திரும்பி வருகிறான். அவர் ஆத்ம ஸம்பந்தமாக ஒன்று சொல்லி, அது அவனுக்குத் தெரியுமா என்று கேட்கிறார்.
அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அப்போது அவன், "என்னுடைய குருமார்களுக்கு - 'பகவந்த:' என்று பஹ§வசனத்தில் சொல்கிறான் - இந்த ஸமாசாரம் தெரியாமலிருக்கணும். தெரிஞ்சிருந்தா எனக்குச் சொல்லிக் குடுக்காம இருந்திருக்கமாட்டா" என்று சொல்வதாக உபநிஷத்தில் இருக்கிறது.
இன்னும் அநேக இடங்களிலும் உபநிஷத்துக்களில் இப்படி ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குருமார் இருந்ததைக் காட்டியிருக்கிறது.
அதில் இரண்டில், வேடிக்கையாக, ஆசார்யர் உபதேசிக்காமல் சோதித்தபோது திவ்ய சக்திகள் இரண்டு சிஷ்யர்களுக்கு விசித்ரமான உபதேசித்ததையும், அப்புறம் அதைஅந்த சிஷ்யர்களிடமிருந்தே தெரிந்துகொண்ட ஆசார்யர் தாமும் 'கன்ஃபர்ம்' பண்ணிக் கொடுத்ததையும் கதையாகச் சொல்லியிருக்கிறது.
ஒருத்தன் முன்னே பார்த்த ஸத்யகாம ஜாபாலன். குருவின் உத்தரவுப்படி அவன் பாட்டுக்கு அவருடைய பசுக்களை வைத்துக்கொண்டு தனியே போய் இருந்துகொண்டு, அவற்றை மேய்த்து, சினைக்கு விட்டுக்கொண்டு காலத்தை ஒட்டிக் கொண்டிருந்தான். அவர் பாடம் சொல்லித் தருகிற பாடாக இல்லை. அவனை அப்படிச் சோதனை பண்ணிக் கொண்டிருந்தார். அவனும் பொறுமையாகவே இருந்தான்.
தன்னிடம் அவர் கொடுத்திருந்த பசு மந்தையை அவன் ஆயிரமாகப்
பெருக்கி முடித்த பிற்பாடு குருகுலத்துக்குத் திரும்புகிறான். அதற்கு மேல் பொறுக்க
முடியாமல் அந்த மந்தையிலிருந்த ரிஷபம் ஒன்றே அவனுக்கு ஒரு உபதேசம் கொடுத்தது. மறுதினம் அவன் அக்னி உபாஸனை செய்யும்போது அந்த அக்னி ஒரு உபதேசம் கொடுத்தது. அதற்கடுத்த நாள் ஒரு ஹம்ஸமும், முடிவாக நாலாம் நாள் மத்கு (Madgu) என்கிற ஜலத்தில் வஸிக்கும் ஒரு பக்ஷியும் உபதேசங்கள் கொடுத்தன. திவ்யசக்திகள்தான் இப்படியெல்லாம் உபதேசித்து அதையே அப்புறம் குரு - ஹாரித்ருமத கெனதமர் -அங்ககீகாரம் பண்ணித் தம் வாயால் உபதேசித்து உறுதிப்படுத்திக் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்தாற்போலவே (சாந்தோக்யத்தில்) வரும் கதையில் இந்த ஸத்யகாம ஜாபாலரே குருவாகி, தம்முடைய சிஷ்யனான உபகோஸலனை இதே மாதிரி சோதிக்கிறார். பன்னிரண்டு வருஷம் அவன் குருகுலவாஸம் செய்தபோதிலும், மற்ற சிஷ்யர்களுக்கு மாத்திரம் அவர் வித்யாப்யாஸம் பண்ணி, பூர்த்தியும் ஆக்கி, அகத்திற்குத் திருப்பி அனுப்பிவைத்துவிட்டு, அவனுக்கு ஒன்றும் செய்யாமலிருந்து விடுகிறார். மனஸொடிந்து போன அவனுக்கு குரு உபாஸிக்கும் மூன்று அக்னிகளுமே உபதேசம் பண்ணி விடுகின்றன. அப்புறம் அவரும் ஸந்தோஷமாக அதற்கு முத்ரை குத்திக் கொடுத்து, ஆனாலும் அக்னிகள் அவன் ஆசைப்பட்ட ப்ரஹ்ம வித்யையில் ஏதோ கொஞ்சந்தான் சொல்லித் தந்தன என்றும், தாம் முழுக்கச் சொல்லித் தருவதாகவும் சொல்லிப் பெரிசாக உபதேசம் ஆரம்பிக்கிறார்.
இதெல்லாம் 'பல குருமார்' என்ற தலைப்பின் கீழ் அஸலே வராது என்று சில பேருக்குத் தோன்றுலாம். ஆனால் குரு சோதித்துச் சோதித்துச் சொல்லித் தருவது, அப்போதும் சிஷ்யன் ஸஹித்துக் கொண்டு பணிவிடை பண்ணிக்கொண்டு அவரிடம் பக்தி ச்ரத்தையுடனேயே இருப்பது, தன்னுடைய வித்யா லக்ஷ்யத்திற்காகவும் தபித்துக் கொண்டிருப்பது - ஆகிய விஷயங்கள் இவற்றிலிருந்து தெரியவருகின்றன. அதனால் நம் 'டாபிக்'குக்கு ஸம்பந்தமானவைதான்.
அஸலே ஸ்தூலமான மநுஷ்ய ரூபத்திலேயும் அநேக குருமாரிடம் ஒருத்தரே உபதேசம் பெறுவதற்கும் உபநிஷத்துக்களில் யதேஷ்டமாக 'எவிடென்ஸ்' இருக்கிறது.
கீதையிலேயும் பகவான் 'உபதேஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்நாநிந: தத்வ - தர்சிந:' என்பதாக பஹ§வசனத்திலேயே "தத்வத்தை அநுபவித்தறிந்தவர்களான ஞானிகளிடம் போய் நமஸ்காரம் பண்ணி, தொண்டுகள் செய்த, அலசி அலசித் தத்வத்தைக் கேட்டுக்கொள். அவர்கள் உனக்கு ஞானோபதேசம் கொடுப்பார்கள்" என்கிறார். கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு குருவாக இருந்துகொண்டு உபதேசிக்கிறபோதே, இப்படி மற்ற உபகுருக்களும் அவனுக்கு உண்டு என்கிற ரீதியில் பேசியிருக்கிறார்!
அவருக்குமே இப்படிப் பல குருமார் இருந்துதானிருக்கிறார்கள். யதுவம்சக் குலகுரு கர்காசார்யர். அவர்தான் பகவானுக்கு உபநயனம் செய்த குரு. பகவான் வித்யாப்யாஸம் என்று குருகுலவாஸம் யதோக்தமாகப் பண்ணினது ஸாந்தீபனி என்கிற குருவிடம். தேவகீ புத்ரனாக அவர் தம்மைத் தெரிவித்துக் கொண்டு,
கோர ஆங்கீரஸ் என்ற ரிஷியிடம் உபதேசம் பெற்றுக் கொண்டதாகவும் நாம்
சாந்தோக்யக் கதை பார்த்தோம்.
தத்தாத்ரேயரையும் உதாஹரணம் பார்த்தோம். இருந்தாலும் அவர் அந்த இருபத்து நாலு பேரிடம் உபதேசம் என்று வாஸ்தவத்தில் பெறாமல், தாமே அந்த இருபத்துநாலில் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு படிப்பினைஎடுத்துக்கொண்டதோடு ஸரி என்பதால் அவர்களை அவருக்கு குரு என்பது ஒளபசாரிகந்தான் (உபசாரத்திற்குச் சொன்னதுதான்) என்று வைக்கவும் ந்யாயமுண்டு.
ஆனாலும் அவர் நம் 'டாபிக்'குக்கே பலம் கொடுப்பதாகவும் நேராக ஒன்று அந்த உபாக்யான முடிவில் சொல்லியிருக்கிறார்.
ந ஹ்யேகஸ்மாத் குரோர் - ஜ்ஞாநம் ஸுஸ்திரம் ஸ்யாத் ஸுபுஷ்களம் 1
'பூர்ணமாகவும்,உறுதியாகவும் ஒரே குருவிடமிருந்து ஞானம் ஸம்பாதிக்க முடியாமல் ஆகலாம்' என்று அர்த்தம். இது அவருடைய ஜெனரல் ஸ்டேட்மென்ட் - எல்லாருக்குமாகச் சொன்னது.
இப்படி ச்லோகத்தின் முன்பாதியில் சொல்லிவிட்டு, பின்பாதியில் நம் வேதாந்த மதத்தின் பரந்த, விசாலமான கோட்பாட்டைச் சொல்கிறார்:"ப்ரஹ்மைதத் அத்விதீயம் வை கீயதே பஹ§தர்ஷிபி:." "இரண்டாவது அற்றதான அந்த ஒரே ப்ரம்மந்தான் அநேக ரிஷிகளாலும் அநேக விதமாகப் பாடப்படுகிறது, அதாவது உபதேசிக்கப்படுகிறது" என்று அர்த்தம். 'ஒரே ஸத்வஸ்து, அதைத்தான் விப்ரர்கள் பலவிதமாகப் பேசுகிறார்கள்' என்ற ப்ரஸித்தமான வேத வாக்யத்தை அநுஸரித்துச் சொன்ன வாக்யம்.
WITH PRANAMS
N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536