UTHTHALAKAR

5 views
Skip to first unread message

Sivan Krishnan

unread,
Apr 20, 2026, 1:02:25 AM (6 days ago) Apr 20
to amrith...@googlegroups.com

உத்தாலகர்  உபதேசம்.   -  நங்கநல்லூர்  J K SIVAN  

நமது தற்போதைய  வாழ்க்கை முறை வேறு.  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்  வாழ்ந்த வேத கால  ரிஷிகளின்  வாழ்க்கை முறை வேறு. காலத்தின் மாறு பாடு தான் இதற்கு காரணம்.  உங்களை இன்று  பின்னோக்கி  அழைத்து செல்கிறேன்.

நாம் இருப்பது  ஒரு அடர்ந்த ஆரண்யம்.  அங்குமிங்குமாக  ஓரிரு குடிசைகள்  காணப்படுகிறதே  அதெல்லாம் தவம் செய்யும்  ரிஷிகள், முனிவர்களின் குடில்கள். அவர்களாகவே கட்டிக்கொண்டது.  நெடிய உருவமாக  வெண்தாடி வேந்தராக ஜடா முடியோடு கழுத்தில் நிறைய  ருத்ராக்ஷங்களுடன் எதிரே வருகிறார் அவர் தான் உத்தலாகர். ஒரு மகரிஷி. அந்த ரிஷிக்கு ஒரு புத்ரன். ஸ்வேதகேது. மகனை மற்றொரு  ரிஷியிடம் குகுகுல வாசம் பண்ணி கல்வி கற்க அனுப்பினார்.  குறைந்தது ஐந்து ஆறு வருஷங்கள்  குருவின் வீட்டிலேயே  ஒருவனாக வளர்ந்து அவரிடம் கல்வி கற்று அவர் ஆசிர்வாதத்தோடு மாணவன் பெற்றோரிடம் திரும்ப வருவான்.  கல்வி பயின்றபின்  ஸ்வேதகேதுவுக்கு தான் நிறைய  கல்வி கற்றுவிட்டோம் என்கிற மமதை தலையில் கனமாக ஏறிவிட்டது.  அப்பா  உத்தாலகர் இதை கவனிக்காமல் இருப்பாரா?

ஒருநாள்  காலை ஸ்வேத கேதுவை அழைத்தார்.

''மகனே, உன்னுடைய  குருகுல வாசம் முடிந்து நீ கற்க வேண்டியவை அனைத்தையும் கற்று முடித்து விட்டாயா?''

'' ஆம்  தந்தையே.எனக்கு பெருமையாக  இருக்கிறது.''

''ஓஹோ.. சந்தோஷம்.  அப்படியென்றால்  நீ எதை தெரிந்துகொண்டால் எல்லாவற்றையும் தெரிந்து  கொள்ளமுடியுமோ அதை தெரிந்து  கொண்டு விட்டாயா?
''..........'
'எதை உணர்ந்தால் சகலமும் அறிந்ததாகுமோ அதை உணர்ந்தாயா. எதை செவி மடுத்தால், இதுவரை கேள்விப்படாததெல்லாம்  அறிய முடியுமா அதை தெரிந்து கொண்டாயா?

ஸ்வேத கேது முகம் வெளிறியது. வியர்த்தது. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. 
''தந்தையே,  தாங்களே எனக்கு அதெல்லாம்  உபதேசிக்கவேண்டும்''
''மகனே,  களிமண் உருண்டை ஒன்றை உனக்கு தருகிறேன். அதை தெரிந்து கொண்டால் அதன் மூலம் விளையும் அனைத்து உருவங்களையும்   (சட்டி, பானை தட்டு கூஜா, தம்ளர், குடம் ...தவலை ) உணர்வாய்''
உருவங்கள் தான் வேறு. அடிப்படையில் அனைத்தும் களிமண்.  நாமமும் ரூபமும் மட்டும் தான் வேறு''
ஆரம்பத்தில்  ப்ரம்மம் ஒன்று மட்டுமே இருந்தது. மனது விரிய விரிய  அது வெவ்வேறு நாம ரூபங் களில் காட்சி தந்தது. தன்னைத் தானே  வேறு வேறாக பல வாக்கிக்கொண்டது. அதுவே எல்லாவற்  றிற்குள்ளும் கருப்பொருளாக மிளிர்ந்தது. பிரபஞ்சம் இப்படி தான் உருவானது.  பிரம்மத்தில் அனைத்தும், அனைத்தில் ப்ரம்மமும் என்றும் உள்ளது..

வண்டுகள் எங்கெங்கோ திரிந்து மலர்களில் புகுந்து தேனை சேமித்து தருகிறது.  மொத்தமாக  சேமித்த தேனில் எந்த புஷ்பத்தின்  தேன் என்று அடையாளம் காண முடியாது.  நாம் எல்லோரும்  ஆத்மாக்கள், பரமாத்மாவின் அம்சம்.  பரமாத்மாவோடு  ஐக்யமானவர்கள். இந்த ஆத்ம தத்வம் மறக்காதிருந்தால் போதும். 
சர்வம் ப்ரம்ம மயம்  புரிந்துவிடும். 

''ஸ்வேதகேது, இதைத்தான்  ''தத் த்வம் அஸி'' நீ அதுவாக இருக்கிறாய். என்று சொல்வது தான்  உபநிஷத் மஹா வாக்யம்.
 
நாலா திசைகளிலிருந்தும் ஓடிவரும்  நதிகள் சமுத்திரத்தில் சங்கமமாகும்போது அடையாளம் இழக்கிறது.
ஒரு பெரிய  மரத்தின் ஒரு கிளையை ஒடித்தால் அது மரத்தின்  ஆயுள் முடிந்ததாகாது. வேறு ஒரு கிளையில் இன்னொரு சிறு  அரும்பு முளைவிடும், மலரும்.'' 

''அப்பா எனக்கும் மேலும் அறிவூட்டுங்கள்''
''போய் அதோ தெரிகிறதே  ஒரு ஆலமரம். போய் அதன் பழம் ஒன்றை கொண்டுவா""
''இந்த  சிறு பழத்தின் உள்ளே என்ன பார்க்கிறாய்?''
''எண்ணற்ற விதைகள்''
''ஏதாவது ஒரு சிறிய விதையை எடுத்து உடைத்து அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று சொல்?""
''ஒன்றும் தெரியவில்லையே அப்பா ''

''உன் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்றினால் தான் அவ்வளவு பெரிய விருக்ஷம் உருவாகிறது'' அப்படித்தான் இந்த பிரம்மாண்ட பிரபஞ்சம் உருவானது. 
''ஸ்வேதகேது , போய் கொஞ்சம் உப்புக்கல்   கொண்டுவா''
''இந்தா  நீ கொண்டுவந்த சில உப்புக்  கற்களை  இந்த பஞ்ச பாத்திரத்தில் உள்ள நீரில் போடு.
''போட்டுவிட்டேன் அப்பா. அப்புறம் என்ன செய்ய வேண்டும்''
''மகனே, நீ போட்ட  உப்புக் கற்களை  எடுத்து என்னிடம் தர முடியுமா?''

''தந்தையே, உப்பு,  நீரில் கரைந்து விட்டதே"

''ஜலத்தில் தேடினாயே  கிடைக்கவில்லை என்கிறாயே, 'இந்த ஜலத்தை சிறிது பருகிவிட்டுச் சொல்''

''ஜலம்  உப்பு  கரிக்கிறது''

''காணாமல் போன உப்பு  ஜலத்தோடு கலந்து, கரைந்து விட்டதை , அதன்  உருவம் காட்டவில்லை, ஆனால் அதன் ருசி உணர்த்துகிறது அல்லவா?   'அப்படிதான்  அப்பா, ப்ரம்மம் நம்மில் கலந்துள்ளதை கரைந்துள்ளதை,  நாம் அறிவதில்லை, நமது  ஆத்மா  ஆனந்தமாக இருப்பதிலிருந்து  உணரமுடியும். 

அந்திம நேரத்தில்  புத்தி ஸ்வாதீனத்தில் இருக்காது. வாய்பேசாது,  கண் பார்க்கும். ஆனால் அடையாளம் புரியாது. உடல் அசையாது.  மூச்சு மட்டும் உள்ளே போகும் வரும். அதுவும் நின்று போனபின்  உடல் மறையும். ஆத்மா மட்டும் கண்ணுக்குத் தெரியாமல் மிஞ்சும்.. ஆத்மாவுக்கு அழிவு இல்லை என்பது இதனால் தான். 

Reply all
Reply to author
Forward
0 new messages