
பாக்கியவசமாக நமது சுதந்திர பாரதத்தின் கொடிக்கு நடுவில் நடுநாயகமாக பகவானது தர்மஸ்வரூபமான சக்கரம் இடம் பெற்றிருக்கிறது. இக்கொடியின் அமைப்பைத் திட்டமிட்ட தலைவர்களின் கருத்து வேறுவிதமாக இருப்பதாகத் தோன்றினாலும்ட, நாமோ, 'பகவானே இந்நாட்டின் உயிர்நிலை அவரைச் சுற்றியே பிரஜைகளின் வாழ்க்கை முழுதும் படர்ந்திருப்பதுதான்' என்பதை நமக்கு நினைவூட்டவும், அவரது காப்பு சுதந்திர பாரதத்திற்கு எப்போதும் உண்டு என்று காட்டு முகமாகவுந்தான் அவரது இத் தர்ம சக்கரம் நமது கொடி நடுவில் இடம் பெறக் கருணை கூர்ந்திருக்கின்றாரென எண்ணுகிறோம்.
உண்மையான 'ஸெக்யூலரிஸம்'
சுதந்திர பாரத அரசாங்கமானது மத விஷயமாகப் பின்பற்ற வேண்டிய கொள்கை 'ஸெக்யூலரிஸம்' என்பதாக இருக்க வேண்டும் என்பதே தற்போது அரசியலாரின் கருத்தாக உள்ளது. இந்த 'ஸெக்யூலரிஸம்' என்பது அரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்ததாக இல்லாதிருப்பதே என்று அவர்களால் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது.
இது சரியான கருத்தல்ல என எடுத்துக்காட்டி, 'ஸெக்யூலரிஸம்' என்பது உண்மையில் யாது என்று தெரிவிக்க வேண்டியுள்ளது. தற்போது எண்ணுவது போல் அது அரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்து, அதாவது மதத் தொடர்பே அற்று இருப்பதல்ல. மாறாக அது, அரசாங்கமானது எந்த ஒரு மதத்தையும் மட்டும் சாராது, எல்லா மதங்களையும் ஆதரிப்பதாக இருப்பதே என்பதுதான் சரியான பொருள்.
ஒரு நாட்டின் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே சார்ந்து பிற மதங்களை இழிவும் அழிவும் செய்யாது, எல்லா மதங்களையும் ஏற்ற இறக்கமின்றி சம பாவத்துடன் ஆதரித்து, அவை யாவும் பரஸ்பரப் பகையின்றித் தழைத்தோங்க உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே உண்மையான 'ஸெக்யூலரிஸம்' ஆகும்.
16. திருவெம்பாவை
முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 16
