, காலத்தால் அழியாத காவியமாக, 'பெரியபுராணம்'

32 views
Skip to first unread message

Ramakrishnan K S

unread,
May 31, 2017, 9:28:39 PM5/31/17
to VASUVANJA GROUPS
, காலத்தால் அழியாத காவியமாக, 'பெரியபுராணம்' 

மே 30 - சேக்கிழார் குருபூஜை

'இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்' என்று ஒரு பாடல் வரி உண்டு; இதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர், சேக்கிழார் பெருமான்.
சென்னை அருகே, குன்றத்தூரில் அவதரித்தவர், சேக்கிழார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் அருள்மொழித்தேவர். செய்யுள் இயற்றுவதில் பெரும் புலமை பெற்றிருந்தார். இதைக் கேள்விப்பட்ட மன்னன் அநபாயச் சோழன், அவரை தன் முதல் அமைச்சராக நியமித்து, 'உத்தமச் சோழப் பல்லவராயன்' என்ற பட்டம் கொடுத்தார்.
சிவபக்தியில் சிறந்து விளங்கிய சேக்கிழார், கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம், நாகேஸ்வரர் கோவிலைப் போன்று, தன் பிறந்த ஊரான குன்றத்தூரிலும் கோவில் கட்டி, அதற்கு, திருநாகேச்சரம் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.
ஒருசமயம், அரசவையில் புலவர் ஒருவர், சமணர்களின் காவியமான, 'சீவகசிந்தாமணி'யைப் படித்தார். அதைக் கேட்டு, அந்நூலின் சுவையைப் பாராட்டினார், மன்னர். உடனே சேக்கிழார், 'மன்னா... இந்நூலில், காதலைத் தவிர வேறு என்ன இருக்கிறது... இதனால், வாழ்க்கைக்கு என்ன பயன்... எந்த நூலை படிப்பதன் மூலம், இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை கிடைக்குமோ அதையே மானிடர்கள் படிக்க வேண்டும். சிவபெருமான், தன் அடியவர்களுடன் நடத்திய லீலைகளைக் கேட்டால், எப்பிறவிக்கும் பலனுண்டு...' என்றார்.
அதுகேட்ட மன்னன், 'அந்த அடியவர்களின் வரலாற்றை எங்களுக்கு சொல்லுங்கள்...' என்றார். சேக்கிழாரும் அவர்களின் வரலாற்றை சுவைபட எடுத்துரைத்தார். 'அந்த வரலாறுகளை நீங்களே காவியமாக வடியுங்கள்...' எனச் சொன்ன சோழ வேந்தன், அவருக்கு வேண்டிய பொருள் கொடுத்து, சிதம்பரத்துக்கு அனுப்பி வைத்தார்.
சிதம்பரம் சென்ற சேக்கிழார், நடராஜரிடம், 'எம்பெருமானே... உன் அடியவர்களின் புகழ்பாடும் நூலை இயற்ற வந்துள்ளேன். இந்த நூலுக்கு தாங்களே அடியெடுத்து தர வேண்டும்...' என, வேண்டினார். அப்போது, 'உலகெலாம்...' என்ற சொல், சேக்கிழார் காதில் விழ, அதையே முதல் சொல்லாகக் கொண்டு, 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்...' என்று ஆரம்பித்து, புராணத்தை பாடி முடித்தார். அதில், ௬௩ நாயன்மார்களின் வரலாறு இடம் பிடித்தது.
இதையறிந்த சோழமன்னன், சிதம்பரம் வந்தார். நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில், சேக்கிழார் தன் நூலை அரங்கேற்றம் செய்ய, 'தொண்டர் சீர் பரவுவார்' என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. பின், சேக்கிழார் சிதம்பரத்திலேயே தங்கி நடராஜருக்கு சேவை செய்து, முக்தி பெற்றார். அவரது குருபூஜை வைகாசி பூசத்தன்று நடைபெறும்.
மனிதனாகப் பிறந்தவன், இந்த உலகம் உள்ள வரை, தன் நினைவாக பூமியில் ஏதேனும் விட்டுச் செல்ல வேண்டும். அவ்வகையில், காலத்தால் அழியாத காவியமாக, 'பெரியபுராணம்' இன்றும் விளங்குகிறது; சேக்கிழாரும் நம் மனதில் நிறைந்திருக்கிறார்!



ANBUDAN
<>KSR<>
Reply all
Reply to author
Forward
0 new messages