கண்ணில் பார்வை இருந்தாலும் அவனுக்கென்று எந்த திசையிலும் ஆதரவாக எவரும் இல்லை என்றால் ஒருவன் திக்கற்ற அனாதை. இப்படிப்பட்டவனுக்கு கண்களில் பார்வையும் இல்லை என்றால் இன்னும் எவ்வளவு மோசமான நிலை. ஏழை ஸூர்தாஸ் நிலை. கவலையே வேண்டாம். நமக்கெல்லாம் தெரிந்த ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறதே. ஆறுதல் தருகிறது. ''திக்கற்றவனுக்கு தெய்வமே துணை'' ஸூர்தாஸ் விஷயத்தில் அவர் இருக்கும் திக்கு நோக்கி ஓடிவந்தான் கண்ணன். என்ன காரணம்? ஸூர்தாஸ் கண்ணனின் மேல் வைத்திருந்த அளவற்ற பக்தி,பாசம், நேசம்.
ஒருமுறை ஸ்ரீ வைஷ்ணவர், கிருஷ்ண பக்தர் ஸ்ரீ வல்லபாச்சார்யர் வ்ரஜ் கிராமம் வந்தபோது ஸூர்தாஸ் கௌகட் என்ற ஊரில் இருப்பதை அறிகிறார். ஸூர்தாஸ் அருகே இருந்த சில பக்தர்கள், சிஷ்யர்கள் அவரிடம் ஓடிப்போய் சொல்கி
றார்கள்;,
''குருநாதா, கிருஷ்ண பக்தர் ஸ்ரீ வல்லபாச்சார்யர் இங்கே வந்திருக்கிறார் '' என்கிறார்கள்.
''அப்படியா, எவ்வளவு பெரிய மஹான் அவர், என்னை அவரிடம் நீங்கள் அழைத்துச் செல்லுங்கள். அவர் பாதத்தில் விழுந்து நான் வணங்க வேண்டும்'' என்கிறார் ஸூர்தாஸ். ஆனால் நடந்தது வேறு விஷயம். வல்லபாச்சார்யர் ஸூர்தாஸ் பற்றி கேள்விப்பட்டவர். இந்த ஊரில் அவர் இருக்கிறார் என்று அறிந்து அவரே ஸூர்தாஸ் இருக்குமிடம் வருகிறார்.
''ஸூர்தாஸ் , உங்கள் கிருஷ்ண பக்தி என்னை இங்கே இழுத்து வந்திருக்கிறது''
''வாருங்கள் என்னருகே உட்காருங்கள் என்று ஸூர்தாஸைப் பிடித்து, கையால் அணைத்து தனதருகே,அமரச் செய்கிறார் வல்லபாச்சார்யர்.
''சுவாமி உங்கள் வாயால் நேராக ஒரு கிருஷ்ணன் பாடல் பாடி கேட்கும் பாக்யம் எனக்கு அருளவேண்டும் '' என்று வேண்டுகிறார்.
ஸூர்தாஸர் கண்ணில்லாமலேயே கண்ணனை கண்ணார அகத்தில் கண்டவர். கண்ணன் மேல் ப்ரிஜ்பாஸி மொழியில் பாடிய ஸுர்ஸாகர் பாடல் தொகுப்பு ஹிந்தியில் இருக்கிறது. கிருஷ்ண சமுத்திரம் என அதற்கு பெயர். நமக்கு ப்ரிஜ் பாஸி தெரியாவிட்டால் என்ன? ஆங்கிலத்தில் படித்து புரிந்துகொண்டு தமிழில் முடிந்தவரை எளிமையாக தர முடிந்தால் நான் பாக்கியசாலி.
தன்னை முழுதாக இழந்து கிருஷ்ணனோடு மூச்சாக கலந்தவர் ஸூர்தாஸ். அதனால் தான் அவர் சொற்களில் கிருஷ்ணன் மணக்கிறான். பாரதியாரை, கம்பரை, தமிழிலே தானே அனுபவிக்க முடியும். நமக்கு பிரிஜ் பாஸி தெரியாததால் ஸூர்தாஸை நம்மில் நிறைய பேருக்கு அறிமுகமில்லை. வடக்கே ஸூர்தாஸ் என்றால் சூரியன், துளசிதாஸ் என்றால் சந்திரன், வடுகன் கேசவ தாஸ் என்றால் நக்ஷத்திரம் என்று பக்தர்கள் சொல்வார்கள்.
உண்மையான பக்தன் மனதில் ஊற்றாக பக்தி பெருகும்போது அதை வெளிப்படுத்த அவனுக்கு தனியாக ஒரு குளுகுளு அறை , நிறைய பேனா, பேப்பர் வேண்டியதில்லை. வயிறு நிறைய ஆகாரம் 'தாக சாந்தி'..... எதுவும் வேண்டாம். நினைத்த இடத்தில் அமர்ந்து அவன் கண்ணை மூடி வாய் திறந்தால் மடை திறந்த வெள்ளமாக பாடல்களும் பாசுரங்களும், பதிகங்களும் வெளிவருவதை பற்றி நாம் அறிவோம். நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள் அவை.
ஸூர்தாஸ் இப்படித்தான் ஒரு மரத்தடியில் அமர்ந்து மனதில் தோன்றிய கற்பனை வளத்தை உபயோகித்து இட்டுக் கட்டி கிருஷ்ணன் வாழ்க்கை பற்றிய சம்பவங்களை பாடல்களாக பாடியவர். ஒரே ஒரு வித்யாசம் அவர் கண்ணை மூடிக்கொண்டு பாடவில்லை, கண் திறந்திருந்தாலும் பார்வை மனதிலே தான். அவர் பாடல்களைக் கேட்டு வருவோர் போவோர் கொடுத்த ஆகாரம் தான் ஜீவனம். அருகே ஒரு பெரிய ஏரி. பிருந்தாவனம் மதுரா போவோர் செல்லும் வழி. அங்கே வந்து மரத்தடியில் தங்கி ஓய்வெடுப்பார்கள். அவர்கள் பேச்சுகள் மூலம் காதில் விழுவது தான் கிருஷ்ணனைப் பற்றிய செயதிகள், சரித்திரம், உலக ஞானம்.
பதினாலு வயதில் ஏதோ குறி சொல்ல வந்தது. அவர் சொன்னது நடந்தது. ஊர் மக்கள் அவரை போற்றி பாதுகாத்தனர். கிருஷ்ணன் தன்னை நம்பினோரை ஏமாற்றுவானா? ஒரு வழி காட்டினான் . ''இவன் ஒரு அதிசய பையன்'' என்று அந்த ஊரே நம்பியது.
அந்த ஊர் பஞ்சாயத்து தலைவனின் பிள்ளை ஒரு சிறு பையன் ஒருநாள் வழி தவறி எங்கோ போய் விட்டான். பஞ்சாயத்து தலைவன் திண்டாடுகிறான். ஸூர்தாஸிடம் வருகிறான். என் பிள்ளை பற்றி எங்கே இருக்கிறான் என்று சொல்லுங்கள் சுவாமி என்கிறான்.... ஸூர்தாஸ் கிருஷ்ணனை வேண்டுகிறார். பிறகு மனதில் தோன்றிய ஏதோ ஒரு இடத்தின் பெயர் சொல்லி அங்கே போய் பார் உனக்காக அழுகிறான் என்று சொல்லி, அவன் அங்கே சென்று பார்க்க அந்த குழந்தைப் பையன் அழுது கொண்டு நின்றான். அப்புறம் என்ன? கிருஷ்ணன் அருளால் ஸூர்தாஸுக்கு ஒரு கூரை போட்ட ஆஸ்ரமம் கிடைத்தது. ஊர்க்காரர்கள் ஒரு ஒற்றை கம்பி ''டொய்ங் டொய்ங் '' வாத்யம் செய்து ஸுர் தாஸிடம் கொடுத்தார்கள். அதை உபயோகித்துக் கொண்டே ஏதோ ஒரு சுருதியில் அதை சேர்த்து, அதோடு கூடவே பாடுவார் ஸூர் தாஸ். நிறைய சிஷ்ய பிள்ளைகள் சேர்ந்தார்கள். அவர்கள் தான் பின்னர் ஸூர்தாஸ் பாடப் பாட எழுதி வைத்தவர்கள். அதில் தான் நமக்கு 8000 மிஞ்சியது என்று சொன்னேன்.
''புரியாதவர்கள் சங்கத் தலைவனாக'' நான் எனக்குத் தெரிந்த மொழியில் எழுதுகிறேன்.ஸூர்தாஸ் தினமும் வரட்டும்.