🌼🌼🌼🌼🌼💎🌼🌼🌼🌼🌼🌼
🌼 சங்கராம்ருதம்
ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்
ஒருமுறை மத்திய அரசு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மூவர் ஸ்ரீபெரியவாளைத் தரிசிக்க வந்தனர்.
🌼🌼🌼🌼🌼💎🌼🌼🌼🌼🌼🌼
தரிசனம் செய்விக்க பாஷ்யம் அவர்களை உடன் வரச்சொன்னார்கள். இவரும் தரிசனம் இலகுவாகக் கிடைத்துவிடும் என்ற அலட்சியத்துடன் அழைத்துச் சென்றார்.
அன்று செவ்வாய்கிழமை. காலை ஆறரை மணி, எப்படியும் ஸ்ரீ பெரியவா தரிசனம் நல்கும் நேரம். போனோமா, தரிசனம் செய்து கொண்டு வந்தோமா என்று திரும்பிவிடலாமென்ற நினைப்பு.
இந்த நினைப்பு அந்த நால்வருக்குள் யார் ஒருவரிடமிருந்ததோ தெரியாது. அவர் ஸ்ரீமடத்திற்குள் போய் நிற்க,
“இன்னிக்கு ஸ்ரீ பெரியவா தரிசனம் கிடையாது” என்று ஸ்ரீமடம் சிப்பந்திகளின் அறிவிப்பால் ஆடி போனார்கள். என்ன காரணமோ என்ற பெருத்த ஏமாற்றத்தோடு நின்றிருக்க, வெங்குடி டாக்டர் ஸ்ரீ பெரியவாளைப் பரிசோதித்துவிட்டு வெளியே வந்தார்.
இவர்கள் ஆவலோடு அவரிடம் ஓடி ஸ்ரீபெரியவாளின் நிலைமை எப்படி உள்ளது; சற்றேனும் உட்கார்ந்து தரிசனம் நல்க இயலுமா என்பதை அறிய வேண்டிக் கேட்டனர்.
“பெரியவாளுக்கு 103 டிகிரி காய்ச்சல். எழுந்திருக்கவே முடியாம படுத்துண்டிருக்கா” என்று டாக்டரும் இவர்களுக்கு சாதகமில்லாத தகவலைக் கூறினார்.
ஸ்ரீபெரியவா உள்ளிருந்து டாக்டரைக் கூப்பிடுவதாக யாரோ திரும்பவும் அவரைக் கூட்டிச் சென்றனர். இந்த நால்வரும் ‘அடடா இத்தனை தூரத்திலிருந்து வந்தும் ஸ்ரீபெரியவா தரிசனம் நமக்கு கிடைக்கவில்லையே என்ன தவறு செய்தோமோ, ஒரு துளி இமைக்கும் நேரம் இங்கிருந்தே ஸ்ரீபெரியவாளைத் தரிசித்துவிட்டால் கூட போதும். எங்கிருந்தோ வந்ததற்கு அந்த க்ஷண நேர தரிசனமே திருப்தியளிக்கும்’ என்று உள்ளே கண்ணுக்கு புலப்படாமல் இருக்கும் ஸ்ரீபெரியவாளிடம் மனதில் வேண்டியபடி, ஏதோ இண்டு இடுக்கு இருந்தால் அதன் வழியாகக்கூட தரிசனம் கிட்டினால் போதும் என்று படபடக்க நின்றிருந்தனர்.
ஸ்ரீபெரியவா காட்சி தராவிட்டலும் மகானின் அமுதக் குரல் கேட்கும்படி அவர் டாக்டரிடம் உரையாடுவது லேசாக இவர்கள் செவியில் விழுகிறது.
“இன்னிக்கு செவ்வாய்கிழமை மங்களவாரமாச்சே” தன் உடல்நிலையில் ஸ்ரீபெரியவாளின் குரல் மெதுவாகக் கேட்கிறது.
“ஆமாம்” என்கிறார் வெங்குடி வைத்தியர்.
“மங்கள தீர்த்தத்தில் ஸ்நானம் பண்ணனுமே” ஸ்ரீபெரியவா.
“நன்னா இருக்கு, உடம்பு 103 டிகிரி காய்ச்சல். எழுந்திருக்கவே படாது….. ஆயிரம் மங்களவாரம் ஸ்நானம் பெரியவா பண்ணியாச்சு……..ஒரு மங்களவாரம் ஸ்நானம் பண்ணாட்டா பரவாயில்லை” ஸ்ரீ பெரியவாளிடம் அன்பும், மரியாதையும் காரணமாக வைத்தியர் உரிமையோடு கண்டிப்பதும் இவர்கள் காதுக்கு கேட்கிறது.
வைத்தியர் எச்சரிப்பதைக் கேட்டால், ஸ்ரீபெரியவாளுக்கு எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு ஜூர வேகம் இருக்கிறது போலிருக்கு; அப்படியே ஸ்ரீ பெரியவா ஆசைப்பட்டு மங்கள ஸ்நானம் செய்து கொள்ள வேண்டும் என்று அடம்பிடித்தாலும், உள்ளேயே கிணற்றில் ஸ்நானம் செய்து கொண்டு உடனே ஓய்வெடுக்கும்படிதான் ஸ்ரீபெரியவாளை கைங்கர்யகாரர்கள் அனுமதிப்பார்களோ என்னவோ? நமக்கு இன்று ஸ்ரீபெரியவா தரிசனம் கொடுப்பினை இல்லவே இல்லை என்பதாக அந்த நால்வருள் ஒருவரின் ஆதங்கம் மட்டும் ஓங்கியிருந்திருக்க வேண்டும். அதற்காகவே ஒரு அதிசயம் செய்ய ஸ்ரீ பெரியவாளின் கருணை செயல்படலாயிற்று.
திடீரென்று ‘வழிவிடுங்கோ வழிவிடுங்கோ’ என்று குரல் கைங்கர்யம் செய்பவர்களிடமிருந்து எழ எல்லோரும் ஒதுங்கி வழிவிட ஸ்ரீபெரியவா விரைவாக வெளியே வந்து நிற்கிறார்.
ஆகா என்ன பேறு பெற்றுவிட்டோம். என்னே மகானின் கருணை. தன் உடல் சுகமின்மையிலும் பக்தர்களின் ஆதங்கத்தை அறிந்தவராய் அத்தனை காய்ச்சலிலும் தரிசனம் நல்க ஈஸ்வரர் விழைந்துள்ளாரே என்ற உணர்ச்சிப் பெருக்கோடு ஸ்ரீபெரியவாளை மிக அருகே தரிசித்து மகிழ்கின்றனர்.
அதுவே பரமதிருப்தி. இதுவே பெரும்பாக்யம் என்று அவர்களின் மனம் சமாதனாமாகியிருந்தாலும், ஸ்ரீபெரியவாளின் அனுக்ரஹ பிரவாகம் மடை திறந்து பாய்கிறது.
மடமடவென்று ஸ்ரீமடத்தின் வெளியே ஸ்ரீபெரியவா வருகிறார். எதிரே கங்கை கொண்டான் மண்டப வாயிலில் பொரி வியாபாரம் செய்யும் ஒரு இஸ்லாமிய அன்பரிடம் நலம் விசாரிக்கிறார். பின் மங்கள தீர்த்தக் குளத்திற்குப் போய் நிற்கிறார்.
கைங்கரிய அன்பர்களுக்கு ஒரே படபடப்பும் லேசான கோபமும் எழுகிறது. நடுங்கிப் போய் ஓடிச் சென்று “பெரியவா குளக்கரையில் தானே ஸ்நானம் செய்யணும்……நாங்க வெந்நீர் கொண்டு தர்றோம். பெரியவா இஷ்டப்படியே மங்கள தீர்த்தக் கரையிலே ஸ்நானம் பண்ணலாம்” எப்படியோ சமாதானம் செய்து பச்சை தண்ணீரில் பெரியவா குளிப்பதைத் தடுக்க முயற்சிக்கிறார்கள்.
ஸ்ரீ பெரியவாளின் சித்தம் அவர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு இசைந்தது.
ஸ்ரீ பெரியவாளின் திருகாட்சி க்ஷணநேரம் கிடைக்காதா என்று ஏங்கிய நால்வருக்கும் ஒரு விஸ்தாரமான அபிஷேக காட்சியே கண்டுகளிக்கப் போகும் பாக்யம் காத்திருந்தது.
உடனே இந்த பக்தர்கள் புருஷசுக்தம் பாராயணம் செய்ய ஆரம்பித்தனர். ஸ்ரீமடத்திலிருந்தது கொண்டுவரப்பட்ட குடத்தின் வெதுவெதுப்பான நீரால் ஸ்ரீபெரியவாளுக்கு மங்கள தீர்த்தப் புஷ்கரணியில் மகோன்னதமாக அபிஷேகம் செய்யப்பட்டதை ஆனந்தமாக அவர்களின் கண்கள் பருகின.
அந்த அதிகாரிகளுள் யாருடைய உண்மையான வேண்டுதல் ஸ்ரீபெரியவாளின் அபார கருணையை பெருக்க விட்டதோ தெரியவில்லை. அன்று கிடைக்கவே கிடைக்காதென்று நினைத்த தரிசனம் மிகவும் விஸ்தாரமான வகையில் முழுத் திருப்தியோடு அவர்கள் பெறும் வகையில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வகை செய்துவிட்டது.
அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம்
ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
🌼🌼🌼🌼🌼💎🌼🌼🌼🌼🌼🌼