[ஆகமக்கடல்] பிறப்பு,இறப்பு தீட்டு விஷயங்கள் (பகுதி-2)

2,228 views
Skip to first unread message

ஆகமக்கடல்

unread,
Feb 19, 2013, 12:30:04 AM2/19/13
to aagam...@googlegroups.com

பக்ஷிணீ

பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசி பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்துவிட்டதாகவே பொருள். பகலில் அறியப்பட்டு பகல், இரவு, மறுநாள் பகலில் தீட்டு முடிந்துவிட்டாலும் மறுநாள் காலையிலேயே ஸ்னானத்திற்குப் பிறகு தீட்டுப் போகும்.

கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் ஆண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. (ஒன்றரை நாள்).

அத்தையின் பிள்ளை அல்லது பெண், மாமனின் பிள்ளை அல்லது பெண், தாயின் ஸஹோதரியின் பெண்கள்-பிள்ளைகள், தன்னுடைய ஸஹோதரியின் பெண், தன் ஸஹோதரனின் மணமான பெண், சிற்றப்பன், பெரியப்பன் பெண்கள், தன் பிள்ளை வயிற்றுப் பேத்தி (பௌத்ரீ), பெண் வயிற்றுப் பேத்தி (தௌஹித்ரி), உபநயனமாகாத பெண் வயிற்றுப் பிள்ளை (தௌஹித்ரன்), உபநயனமாகாத மருமான் (ஸஹோதரி புத்ரன்)

கீழ்க்கண்டோர் மரணத்தில் புருஷர்களுக்கு ஒரு நாள் தீட்டு. (இளைய, மூத்தாள் தாயார்களுக்கு ஸபத்னீ மாதா என்று பெயர்).

ஸபத்னீ மாதாவின் ஸஹோதரன், ஸஹோதரி. ஸபத்னீ மாதாவின் பெண் மற்றும் மேற்சொன்ன 3 வகை உறவினரின் பெண்கள் பிள்ளைகள். ஸபத்னீ மாதாவின் தாய், தந்தை. ஸபத்னீ மாதாவின் பெரியப்பா, சித்தப்பா. கல்யாணமாகாத 6 வயதுக்குட்பட்ட (2 வயதுக்கு மேற்பட்ட) பங்காளிகளின் பெண். ஸ்வீகாரம் சென்ற ஆணின் பிறந்தகத்தில் உடன் பிறந்த (முன் கோத்ர) ஸஹோதரர்கள் ஆறு மாதத்திற்கு மேற்பட்ட இரண்டு வயதிற்குட்பட்ட பங்காளிகளின் ஆண் குழந்தை. குழந்தையில்லாத மனைவி இறந்தபின் அவளைப் பெற்றவர்கள் மாமனார் மாமியார் இறந்தால்.

தீட்டில் தீட்டு

பங்காளிகளைப் பொறுத்தவரையில் ஒரு தீட்டு காத்துக்கொண்டிருக்கும்போது மற்றொரு தீட்டு வந்தால் முன் வந்த தீட்டு முடியும்போது பின் வந்த தீட்டும் முடிந்துவிடும்.

உதாரணமாக 10நாள் தீட்டில் 4ம் நாள் மற்றொரு 10 நாள் தீட்டு வந்தால் முன் வந்த தீட்டின் 10ம் நாளுடன் பின் வந்த தீட்டும் முடிந்துவிடும்.

ஆனால் முன் வந்த 3 நாள் தீட்டுடன் பின் வந்த 10 நாள் தீட்டு முடியாது.

பத்துநாள் தீட்டின் இடையில் வந்த 3 நாள் தீட்டுடன் 10 நாள் தீட்டு முடியாது. 10ம் நாள்தான் சுத்தி.

பத்தாம் நாள் இரவில் வந்த புதிய பத்து நாள் தீட்டிற்கு அதிகப்படியாக 3 நாள் மட்டும் காத்தால் போதும்.

ஆனால் பிறப்புத் தீட்டின் இறுதியில் வரும் பிறப்புத் தீட்டிற்காக மேலும் 3 நாள் காக்கத் தேவையில்லை.

மரணத் தீட்டு ஜனனத் தீட்டைக் காட்டிலும் பலம். மரணத் தீட்டின்போது வந்த பிறப்புத் தீட்டு மரணத் தீட்டுடன் முடியும்.

பெற்ற குழந்தை பத்துநாள் பிறப்புத் தீட்டிற்குள் இறந்தால் அதற்காகத் தனியாகத் தீட்டில்லை. பிறந்ததிலிருந்து 10 நாள் விலகும். ஒரு வேளை 10ம் நாள் மரணமானால் மேலும் 2 நாள் அதிகரிக்கும். 10ம் நாள் இரவு ஆனால் 3 நாள்.

பங்காளிகளுக்கு மேற்படி 3 நாள் தீட்டில்லை.

அதிக்ராந்தாசௌசம் என்பது தீட்டுக்காலம் முடிந்தபின் தீட்டுப்பற்றி அறிந்தவருக்கு விதிக்கப்படுவது.

பிறப்புத் தீட்டில் அதிக்ராந்தாசௌசம் இல்லை.

பத்து நாள் தீட்டை பத்தாம் நாளுக்குமேல் 3 மாதங்களுக்குள் கேட்டால் 3 நாள் தீட்டு.

மூன்று மாதத்திற்கு மேல் 6 மாதத்திற்குள் கேட்டால் ஒன்றரை நாள்.

6 மாதத்திற்கு மேல் ஒரு வருடத்திற்குள் ஒரு நாள். அதன் பிறகு ஸ்னானம் மாத்திரம்.

3 நாள் தீட்டை பத்து நாட்களுக்குள் கேட்டால் 3நாள் தீட்டு. பத்து நாட்களுக்குப் பிறகு ஸ்னானம் மாத்திரம்.

1 நாள் தீட்டுக்கு அதிக்ராந்த ஆசௌசம் கிடையாது.

மாதா பிதாக்களின் மரணத்தில் புத்திரர்களுக்கும், கணவனனின் மரணத்தில் பத்தினிக்கும் எப்போது கேட்டாலும் அதிலிருந்து 10 நாள் தீட்டு உண்டு.

க்ஷவரம்

சில தீட்டின் முடிவில் புருஷர் (ஆண்)களுக்கு ஸர்வாங்க க்ஷவரம் (வபனம்) செய்து கொண்டால்தான் தீட்டுப் போகும் என்பது சாஸ்திரம். ஸர்வாங்கம் என்பது:

தலையில் சிகை (குடுமி) தவிர்த மற்ற இடம். முகம், கழுத்து, இரு கைகளிலும் மணிக்கட்டிலிருந்து முழங்கைக்குக் கீழ் உள்ள ஒரு சாண் இடம் தவிர்த்து மற்ற இடம்.

கழுத்துக்கீழே பாதங்கள் வரை, பிறப்புறுப்பு உட்பட பின் முதுகு தவிர்த்த மற்ற அனைத்து இடங்களிலும் உள்ள ரோமங்களை அறவே அகற்றுவது ஸர்வாங்க க்ஷவரம் ஆகும்.

கீழ்கண்ட மரண தீட்டுகளின் முடிவில் (முடிகின்ற நாள் அன்று - அதாவது பத்து நாள் தீட்டில் 10ம் நாள் காலை)ஸர்வாங்கம் அவசியம்.

இறந்த பங்காளி தன்னைவிட வயதில் பெரியவரானால். வயதில் சிறியவர்களுக்கு வபனம் தேவையில்லை ஆனால் தர்பணம் உண்டு.

மாதாமஹன், மாதாமஹீ, மாமன், மாமி, மாமனார், மாமியார் இவர்கள் மரணத்தில் வபனம் உண்டு.

இறந்தவர் பெரியவரா இல்லையா என ஸந்தேஹம் இருந்தால் வபனம் செய்துகொள்வதே சிறந்தது.

தீட்டு முடியும் தினம் வெள்ளிக் கிழமையானால் முதல்நாளான வியாழக்கிழமையிலேயே வபனம் செய்துகொள்ள வேண்டும். எக்காரணத்தாலும் வெள்ளிக்கிழமை க்ஷவரம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

தீட்டுள்ளவன் வீட்டில் தீட்டற்றவன் தெரிந்து சாப்பிட்டால் அன்றையபொழுது அவனுக்குத் தீட்டு.

தீட்டுப்போகும் தினத்தில் சுமார் காலை எட்டரை மணிக்கு (ஸங்கவ காலம்) மேல்தான் தீர்த்தமாடி தீட்டை முடிக்க வேண்டும்.

பிறப்பு, இறப்பு, மாதவிடாய் (தூரம்) இவை சூர்ய உதயத்திற்கு பதினொன்றேகால் நாழிகை (270 நிமிடங்கள்)க்கு முன் ஏற்பட்டால் முதல் நாள் கணக்கு. அதன் பிறகானால் மறுநாள் கணக்கு.

ப்ரேதத்தின் பின் போனாலும் க்ஷவரம் செய்துகொண்டாலும் இரு முறை ஸ்நானம் செய்ய் வேண்டும்.

ஸந்யாசிகளுக்கு (முன் ஆச்ரம) மாதா, பிதாக்களின் மரணத்தில் மட்டும் ஸ்நாநம்.

88 அடிகளுக்குள் பிணம் (சவம்) இருந்தால், எடுக்கும்வரை, சமைப்பது, சாப்பிடுவது கூடாது.

ஸந்யாசியின் சவமானால் அந்தப் பகுதிக்கே தீட்டுக் கிடையாது.

நகரங்களுக்கு மேற்படி தோஷங்கள் எதுவுமில்லை.

ஸ்நானம் பண்ணமுடியாத அளவிற்கு நோயுள்ள தீட்டுகாரனின் தீட்டுப்போக வேண்டுமானால், தீட்டற்ற ஒருவன் தீட்டுள்ளவனைத் தொட்டுவிட்டு தீர்த்தமாடி பின் தொட்டு தீர்த்தமாடி என பத்து முறை தீர்த்மாடவேண்டும்.

அதுபோல் நோயுள்ள தூர ஸ்த்ரீயை மற்றொருத்தி 12 முறை தொட்டு தீர்த்தமாடி வேறு உடை உடுத்தச் செய்தால் சுத்தி. இரண்டிலும் புண்யாஹவாசனம் முக்கியம்.

தீட்டில்லாத காலங்கள்

ச்ராத்தத்தின் நடுவில் (ச்ராத்த சங்கல்பம் ஆனபின்) தீட்டுத் தெரிந்தால் ச்ராத்தம் முடியும்வரை கர்த்தாவுக்குத் தீட்டில்லை.

வரித்தபின் போக்தா (ச்ராத்த ஸ்வாமி)க்கு தீட்டுத் தெரிந்தால் சாப்பிட்டு முடியும்வரை தீட்டில்லை.

விவாஹத்தில் உத்வாஹ சங்கல்பத்தின் பின் தீட்டுத் தெரிந்தால் சேஷ ஹோமம் வரை தீட்டில்லை.

ஸந்யாசிகளின் மரணத்தினால் அவரின் பங்காளிகளக்குத் தீட்டில்லை, அவப்ருத ஸ்நாநம் மட்டும்.

மற்ற சில கவனிக்கத் தக்கவை

ராஜாங்கத்தால் கொலை தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு உடனே கர்மா செய்யலாம்.

துர் மரணம் செய்து கொண்டவனுக்கு 6 மாதம் கழித்து கர்மா செய்ய வேண்டும் என்பது விதி ஆயினும் 24 நாட்கள் கழித்து செய்வது என்றும் ஒரு விதி உள்ளது.

தற்செயலாய் துர்மரணம் அடைவோருக்கு தீட்டு, தர்பணம் முதலியவை உண்டு.

தற்கொலை செய்துகொண்டவனுக்கு தீட்டு, தர்பணம் இவை இல்லை.

கர்மா செய்பவனுக்கு 11ம் நாள் கர்மாவிற்குப் பின் தீட்டுப் போகும்.

கல்யாணமான பெண் இறந்தால் அவள் பிறந்த வீட்டுப் பங்காளிகளுக்கு தீட்டில்லை.

பிறப்புத் தீட்டுள்ளவனை 4 நாளைக்கு மேல் தீண்டினால் அதிகம் தோஷமில்லை.

ஒரு தீட்டுக் காரன் மற்றொரு தீட்டுக்காரனைத் தொடக் கூடாது.

தீட்டுள்ளவன் வீட்டுக்கும் அவன் சாமான்களுக்கும் தீட்டுண்டு.

பிரம்மச்சாரிகள் கர்மா செய்தால் அதனுடன் தர்பணம் (உதகதானம்) தனியாக இல்லை.

மனைவி கர்பமாக இருக்கும்போது தானம் வாங்குதல், தூரதேச யாத்திரை போதல் கூடாது.

சவத்துக்கு முன்னாலும், பக்கவாட்டிலும் போகக் கூடாது.

சஞ்சயனம் ஆனபின் துக்கம் விசாரித்தால் ஆசமனம் மட்டும் போதும்.

சிராத்த தினத்தன்று துக்கம் விசாரிக்கச் செல்லக் கூடாது.

தன் மனைவி கர்பமாய் இருக்கும்போது தாய், தந்தை தவிர மற்றவர்களின் சவத்தை சுமக்கலாகாது.

ப்ரம்மச்சாரிகள் தாய் தந்தை சவத்தைத் தவிர மற்வர்கள் சவத்தைச் சுமக்கக்கூடாது.

தீட்டுக்காரர்கள் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது.

தீட்டுக்காரர்களை தீட்டில்லாதவர்கள் நமஸ்கரிக்கக் கூடாது. தீட்டுக்காரரும் அப்படியே.

ஜனன, மரண தீட்டிலும் ஏகாதசி, துவாதசி விரதம் விடக் கூடாது. உபவாஸம் மட்டும், பூஜை கிடையாது.

சாவு தீட்டுக்காரர் மெத்தை போன்றவற்றில் படுக்கக் கூடாது. தினமும் தீர்த்தமாடவேண்டும்.

சிசுக்கள் இறந்தால் புதைத்த தினம் தான் தீட்டு.

                                                                                                           SOURSE- WELL-BRED KANNAN
                                                                                                                                                                                              முற்றும்-----


--
Posted By ஆகமக்கடல் to ஆகமக்கடல் at 2/19/2013 11:00:00 AM
Reply all
Reply to author
Forward
0 new messages