2
சவிதா தான் இந்த ஐவரணி வரலாறு பாடம் எடுக்க காரணம். அவள் இந்த கல்லூரியை தேர்ந்தேடுத்த காரணம் வீட்டை விட்டு அதிக தூரத்தில் இருந்ததால். அப்பா அம்மா அண்ணன் தொந்திரவு இல்லாமல் ஒரு நாள் முழுக்க இருக்கலாம்.
ரவி சவிதாவுடன் ஒட்டிக் கொண்டான். 8வது வகுப்பில் எனக்கு உன்னை பிடிச்சிருக்கு உனக்கு என்னை பிடிச்சிருக்கா என்று எழுதி விஞ்ஞானப் புத்தகத்தில் வைத்து சவிதாவிடம் கொடுத்தான்.
அவள் ஒரு வருடத்திற்கு பிறகு 9வது வகுப்பில் ஆம் என்று எழுதி அனுப்பினாள். அவள் பதினொன்று பண்ணிரண்டில் விஞ்ஞானம் எடுத்தான். ரவியும் விஞ்ஞானம் எடுத்தான். அவள் இளங்கலையில் வரலாறு எடுத்தாள். வீட்டில் அனைவரும் பைத்தியம் என்று திட்டியும் இவனும் வரலாறு எடுத்தான். அவள் வீட்டில் இன்னும் கல்யாண பேச்சை எடுக்கவில்லை இன்னும் நாள் கடத்தவேண்டும் என்றாள். இவனும் சரியென்று முதுகலை வரலாறு எடுத்துக் கொண்டான்.
ரகு சங்கர் ரவியின் கூட்டாளிகள். சங்கர் ரவியைப் பார்த்து எழுதியே முதுகலை வரையில் வந்தவன். ரவி, வசதியான குடும்பம். அகரத்தில் பெரிய நிலபுலங்கள். என்ன படிக்கிறோம் என்பதைவிட படிக்கிறோமே என்பதில் தான் சந்தோசமே.
ரகுவின் தந்தையும் பஞ்சாயத்து போர்ட் தலைவர். கேட்கவேண்டுமா.
ஆக படிப்பிற்காக படிக்கும் ஒருவரில் நீலவேணி மட்டும். அவளுக்கு வரலாறு பிடிக்கும். எந்தப் போர் எந்த ஆண்டில் யார் யாருடன் என்று தொடங்கி தமிழக வரலாறு எந்த ஆட்சிகாலத்தில் எந்த மன்னன் ஆட்சி என்பது வரை அத்துப்படி. அவள் பேசினால் எப்போது அனைவரும் கேட்பார்கள்.
சங்கருக்கும் ரகுவிற்கும் தனித்தனியே அவள் மீது காதல். இதுவரை சொல்லவில்லை. ஒருவருக்கு ஒருவரும் சொல்லிக் கொள்ளவில்லை.
சங்கரும் ரகுவும் மாற்றி மாற்றி அவளை வீட்டிலிருந்து அழைத்து வருவதும் வீட்டிற்கு விடுவதுமாக ஒரு பாதுப்பு படலம் தான். நீலவேணி வீட்டில் அவர் அப்பா மின்சாரத்துறையில் வேலை செய்வர். முற்போக்கு வாதி. வீட்டிற்கு பிள்ளைகள் வந்தால் கண்டிக்கும் கிராக்கி இல்லை. பசங்களுடன் அரட்டை அடிப்பார். அவர் மனைவியும் காபி கலந்து நொறுக்குத் தீணி கொடுப்பார். கிரிகெட் என்றால் ஐவரணி இவர்கள் வீட்டில் கூடிவிடும். நீலவேணி வீட்டில் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டால் போதும் மற்றவர்கள் வீட்டில் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.
வீட்டு விசேஷங்கள் வந்தால் பெரியவர்களும் மற்ற பெரியவர்களுடன் கூடி பேசி மகிழ்வார்கள். பிள்ளைகளின் 10 வருட நட்பு இவர்களுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டது.
நீலவேணி தீர்க்கமாய் சொன்னாள் – நாம இதை செய்யனும் ரகு. ஏன்னா நாம இதுவரைக்கும் சாதாரணமாக காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கோம். ஒன்றும் பெரிசா செய்யலை. நாங்கள் பெண்கள். கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிடுவோம். நீங்கள் ஏதாவது பள்ளி ஆசிரியராகவோ இல்லை உங்க அப்பா வைத்துக் கொடுக்கும் வியாபரத்திலோ இறங்கிவிடுவீர்கள். பிள்ளைகள் பெறுவோம். குறைந்த பட்சம் நம் பிள்ளைகள் முன் என்ன சாதித்தோம் என்று சொல்ல ஏதாவது செய்ய வேண்டாமா.
நான் தயார் என்றான் சங்கர். அவனுக்கு நீலவேணி வார்த்தைகள் வேதத்திலிருந்து ஓதப்பட்டவை.
ரகு, அப்ப நெறைய ஊர் சுத்த வாய்ப்பு கிடைக்கும்னு சொல்லு என்றாள் உற்சாகமாக.
ஆமாம். தமிழ் நாடு முழுசும் ஏன் வெளிநாடுகள் கூட சுத்த வேண்டியதிருக்கலாம் – என்றாள் நீலவேணி.
சவிதாவிற்கு கண்கள் அகலாமாகியது. ஆகா, வீட்டிலிருந்து தப்பிக்க இப்படி ஒரு வாய்ப்பா என்று எண்ணிக் கொண்டே, நான் தயார். ஆனா என் வீட்டில நீங்கள் எல்லாம் சேர்ந்து பேசனும்.
ரவிக்கு ஒரே சந்தோசம். நீ கவலைய விடு பழனியப்பன் சாரை வைச்சி பேச சொல்லிட்டா போச்சு என்றான் கண்ணடித்தவாறு. சவிதா ரவியின் கைகளை பற்றிக்கொண்டே கனவில் மிதந்தாள்.
சங்கரும் ஜோதியில் கலந்துக் கொண்டான். டேய், அப்ப நாளைக்கு போய் பேசலாம்டா என்றான் ஆரவாரமாக.
கறுப்பி வராலாறை தோண்டினால் என்னென்ன விவகாரம் வரும் என்று தெரியாமல் அந்த இளம் பறவைகள் கூக்கூரலிட்டு வீட்டை நோக்கிப் பறந்தன.
3
நல்லா பேசனே பழனி. கரிகாலன் வந்து சொன்னான். யாராவது மசிஞ்சாங்களா என்று கேட்டார் சந்திரசேகர்.
வரலாற்றுக்காக தன் வாழ் நாளை அர்ப்பணித்தவர். பல புத்தகங்கள் எழுதியவர். வேலையில் இத்தனை கவனம் கொண்டு வீடு மனைவி மக்களை துறந்துவிட்டு தனியாக வாழ்பவர். அந்த ஓட்டு வீட்டில் வெறும் புத்தகங்களும் பழைய ஓலைகளும், கல் வெட்டின் பெரிய புகைப்படங்களும் பூதக்கண்ணாடிகளும் வவ்வால் நாற்றமும் நிறைந்துக் கிடந்தன.
ஆமாம் சார். உணர்ச்சிப் பூர்வமா பேசியிருக்கேன். இந்த வருஷம் யாரும் இந்த தலைப்பை எடுத்துக்காத பட்சத்திலே நாம வேறு பல்கலைகழகத்து மாணவர்களைத் தான் போய் பார்க்கணும் என்றார் பழனியப்பன் யோசனையுடன்.
உடல் படபடப்புடன், அப்படி சொல்லாதே பழனி. இந்த வருஷம் தான் என்னுடைய வாழ்நாள்ல கடைசி வருஷம்னு தோணுது. நான் சாகறத்துக்குள்ளே நீ களப்பிறர் ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் வாங்கறதை கண்ணாலப் பார்க்கணும்.
நெகிழ்ந்து போனார் பழனி. கட்டாயம் ஐயா. உங்கள் ஆசையை எப்படியாவது நிறைவேற்றி வைக்கிறேன்.
என்ன உதவி வேண்டுமானாலும் என்கிட்டே கேளு. கரிகாலன் உன் கூட படிச்ச பையன் தானே. அவன் என்ன உதவியும் பண்ணுவான். பணம் வேண்டும்னா என்கிட்ட கேளு. கல்லூரியில் சொல்லி ஒப்புதல் வாங்கித்தரேன். நம்ம பல்கலைகழகத்திற்கே பெருமை சேர்க்கற விஷயம் இது. மறந்துடாதே.
இல்லை ஐயா. கடந்து பத்து வருஷமா நாம சேகரிச்ச எல்லா விஷயத்தையும் இந்த வருஷம் கணினியில் ஏத்திடறேன். கட்டுரையும் எழுத ஆரம்பிச்சிடறேன். எழுத எழுத உங்களிடம் கொடுக்கறேன். நீங்கள் திருத்திக் கொடுங்கள். எப்படியாவது இந்த ஆண்டு நிறைவுக்குள் நான் டாக்டர் பட்டம் வாங்கிடறேன்.
ஆ. நல்லது. நீ இப்பவே டாக்டர் தான். ஆனா இந்த தலைப்பில தான் நீ டாக்டர் பட்டம் வாங்கனும் என்றார் சந்திரசேகர்.
ஆம். என்று கூறிவிட்டு விடை பெற்றுச் சென்றார்.
தன்னுடயை குறிப்பேட்டில் டிசெம்பர் 31 என்னுடயை மறைவு நாள் என்று எழுதிக் கொண்டார் சந்திரசேகர்.
கறுப்பு படர ஆரம்பித்திருந்தது அவர்கள் வாழ்வில்.
4
சங்கர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். அவன் முதுகலை சேர்ந்தது அவன் வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை. சீக்கிரம் படிப்பை முடிச்சிட்டு வேலையை பாருடா என்று அவனுடைய மூன்று அண்ணனும் இரண்டு அக்காவும் அவனை கடிந்துக் கொண்டார்கள்.
அவன் வீட்டில் ஆராய்ச்சி என்றதும் உன்னை கொலை பண்ணப்போறேன் என்பது போல பார்த்தார்கள். ஆனால் அவன் மாதம் 600 ரூபாய் ஊக்கத் தொகையாக கிடைக்கும் அதை அப்படியே வீட்டுக்கு கொடுத்துவிடுகிறேன் என்றதும் சரியென்று ஒத்துக் கொண்டுவிட்டார்கள்.
அப்ப நீ என்ன செலவுக்கு செய்வே என்று குணசேகரன் கேட்டான். சங்கரின் மூத்த அண்ணன்.
நீ அப்படியே அள்ளி கொடுக்கற மாதிரி பேசறே. இத்தனை நாள் என் கூட்டாளிகள் கொடுத்த பிச்சையில தானே வாழறேன் என்றான் சங்கர் காட்டமாக.
ஆமா வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும் கேட்டாரா அப்பா. எனக்கும் உனக்கும் என் பொண்ணு வயசு வித்தியாசம். கண்டபடி பெத்துப் போட்டு என்னை பாத்துக்கோன்னா. நான் என் குடும்பத்தை பார்ப்பேனா இல்லை எனக்கு அப்புறம் பொறந்த அரை டசனைப் பார்ப்பேனா.
சரிதான் விடுங்க என்ற சங்கரின் அண்ணி சமாதானப்படுத்த அந்த பேச்சு முடிந்தது. உனக்கு என்ன துணி வேணும்னு சொல்லப்பா நான் எடுத்து வைக்கிறேன் என்றாள் அண்ணி.
என்னுடயை கறுப்பு சட்டையை மறக்காமல் எடுத்து வையுங்க என்றான்.
5
சவிதா வீட்டில் எந்த சமாதானமும் செல்லவில்லை. நீலவேணி வந்து பேசினாள். ஒன்றும் தேராமல் போகவே பழனியப்பன் வந்தார்.
சவிதாவின் அண்ணனை பார்த்து, சந்துரு, நீ சொல்றது சரிதான் பா. அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணி வை சவிதாவுக்கு. ஆனா ஒன்னு நினைச்சிப் பாரு. உன் தங்கச்சி இந்த ஆராய்ச்சியில வேலை செய்தா பிரபலமாயிடுவா. அந்த பெருமை நாளைக்கு அவனை கட்டிக்கப்போறவனுக்கும் தானே. உனக்கும் மாப்பிள்ளை பாக்கறுது சுலபமாயிடும் இல்லையா.
சார் நீங்க சொல்றது சரி. ஆனா கல்யாண வயசுல வீட்டை விட்டு தனியா மூனு மாசம் நாலு மாசம்னு போனா ஊர் என்ன சொல்லும்.
தம்பி இவங்க அஞ்சு பேரோட நானும் போறேன். கரிகாலன் சாரும் வர்றாரு. இவங்க பாதுகாப்புக்கு நான் உத்திரவாதம். என்ன சொல்றீங்க.
சவிதாவின் அப்பா, சரி சார். நீங்க இவ்வளவு சொல்றதால நான் ஒத்துக்கறேன். ஆனா பின்னாடி எந்த பிரச்சனையும் வரக்கூடாது, என்றார் இருமனதுடன்.
சவிதா ஹாலின் ஒரத்தில் என்னைப்பற்றியா பேசுகிறார்கள் என்ற மாதிரி முக பாவனையுடன் இருந்தாள். நீலவேணி அவள் காதில் – டன் – என்றால் உற்சாகமாக.
கவலைப்படாதீங்க சார். உங்கப் பொண்ணு பத்திரமா வீடு வந்து சேருவா – என்று தான் காப்பாற்ற முடியாத ஒரு விஷயத்திற்கு உத்திரவாதம் தந்துவிட்டுச் சென்றார்.
சவிதா சந்தோஷமாக தன் கருப்பு ட்ராலியை தேடி எடுத்து சுத்தம் செய்யத் துவங்கினாள்.
6
நீலவேணியின் தந்தை உற்சாகமாக, அவசியம் போயிட்டு வாம்மா. இது உனக்கு வாழ்நாளில் ஒருமுறை வரும் வாய்ப்பு என்றார். அவரும் சில புத்தகங்கள் எடுத்து வைத்துக் கொண்டு நீ தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் இருந்து உன் ஆராய்ச்சியை ஆரம்பிக்கலாம். அதில்லாம ப்ராஜெக்ட் மதுரையில் பல புத்தகங்களை கணினியில் மின் புத்தகமா மாத்தியிருக்காங்க. நான் என்ன பண்றேன் உனக்கு ஒரு லாப்டாப் கம்ப்யூட்டர் வாங்கித்தரேன். எல்லா தகவல்களையும் அதில் சேகரித்துக் கொண்டே வா என்றார்.
தாங்கயூ டாடி என்று அணைத்துக் கொண்டாள் தந்தையை.
அம்மாவோ, இதெல்லாம் தேவையா. தனியா போய் சாப்பாடுக்கு கஷ்டப்பட்டுக்கிட்டு என்றார்.
அம்மா இது ஒரு ரிசர்ச் ட்ரிப் இல்லை. என்னை பொருத்தவரைக்கும் அட்வென்ச்சர் டிரிப்.
என்ன அட்வென்ச்சரோ. அதென்ன இதவரைக்கும் யாரும் கண்டுப்பிடிக்காத ஒன்னை நீ கண்டுபிடிக்கப் போறே.
அம்மா. நான் கண்டுபிடிக்கலை. நான் சும்மா உதவிக்குத்தான் போறேன். பழனியப்பன் சாருக்குத்தான் டாக்டர் பட்டம் கிடைக்கும். ஆனா நாங்க பிஹெச்டி பண்ணும் போது நாங்க இதுல வேலை செஞ்சோம்னு சொன்னாலே மதிப்பு வரும்.
அப்படி என்ன எழவு ஆராய்ச்சி என்றாள் அவள் அம்மா.
அம்மா, இதுக்கு பேரு கறுப்பு வரலாறுன்னு பேரு.
கறுப்பு வரலாறா, பேரே நல்லாயில்லை. என்னாகப்போகுதோ போ என்றாள் சங்கடமாக.
7
ரகுவின் வீட்டிலும் ரவியின் வீட்டிலும் அதிகம் பிரச்சனை இருக்கவில்லை. ரகுவின் வீட்டில் அவனுக்கு மூன்று மாதத்திற்கு தேவையான உணவு வகைகளை எடுத்து அடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
படுக்கை ஹோல்டார்கள், காம்பிங் பொருட்கள், துணி மணி, குறிப்பு புத்தகங்கள், விளக்குகள், மருந்து மாத்திரை, சமைக்கும் பொருட்கள் என்று ஆராய்ச்சிக்கு செல்லும் போது தேவையான விஷயங்கள் என்று ஒரு பட்டியலிட்டு தந்திருந்தார் சந்திரசேகர்.
எங்கெல்லாம் செல்லவேண்டும் எந்த விஷயங்கள் விட்டுப்போயிருக்கின்றன, யாரை சந்தித்தால் என்ன தகவல் கிடைக்கும் என்று அனைத்தையும் விளக்கியிருந்தார் பழனியப்பனுக்கு.
இங்க பாருங்க நமக்கு இப்ப தேவையான விஷயங்கள் நான்கு –
1. களப்பிறர் ஆட்சிக்கு முன் ஆட்சி செய்தது யாரு
2. எதனால களப்பிறர் ஆட்சி வந்தது
3. எத்தனை வருஷம் இந்த ஆட்சி நடந்தது
4. எந்த மன்னன் இந்த களப்பிறர் ஆட்சியை முடிச்சி வைச்சான்
அதனால எடுத்த காரியத்திலேர்ந்து டிவியேட் ஆகமா இதைப் பற்றி மாத்திரம் விஷயங்களை சேகரிச்சிகிட்டு வாங்க. நீங்க போகறது பிக்னிக்கு இல்லை. சின்ன பிள்ளைகள் கூட இருக்கறதால அவங்களை அப்படி இப்படின்னு கவனம் சிதராம பார்த்துக்க வேண்டியது உங்கப் பொறுப்பு.
வெளிய சுத்தற வேலை 3 பசங்களுக்கு கொடுங்க. விடுதியில் தங்கி குறிப்பெடுக்கற வேலை புகைப்படம் கட்டுரை எழுதற டாக்குமெண்டேஷன் வேலைகளை பெண்கள் செய்யட்டும்.
எல்லாவற்றையும் பவ்யமாக கேட்டுக் கொண்டார் பழனியப்பன். அவரிடமிருந்த நூற்றுக் கணக்கான காகிதங்களையும் வாங்கிக் கொண்டார்.
கல்லூரியில் இந்த ஆராய்ச்சிக்காக ஒப்புதல் வாங்கி அனைவுருக்கும் மாதாமாதம் ரூபாய் 1250 கிடைக்குமாறும் வகைசெய்தார். அவர்கள் படிப்பு கெடாமல் இருக்க அவர்களுக்கு பிரத்யேக பரீட்சைக்கும் அனுமதி வாங்கித் தந்தார்.
சங்கருக்கு ஆஹா, 600 சொல்லி 1250 கிடைக்குதே என்று ஒரே சந்தோஷம்.
கரிகாலன் வாகனத்துக்கு வாடகைக்கு கொடுக்கும் காசையும் வாகன ஓட்டுனருக்கு கொடுக்கும் காசையும் தனக்கே கொடுத்துவிடும் படி கூறினார். பழனியப்பனும் சரியென்று சொல்ல அவர் தன்னுடயை டாட்டா சுமா வாகனத்தை எடுத்து வந்துவிட்டார். 45 வயதனாலும் கரிகாலன் பார்க்க போலீஸ் அதிகாரி போல கும்மென்று இருந்தார்.
கரிகாலனும் பழனியப்பனும் பால்ய ஸ்நேகிதர்களாக இருந்தாலும் மாணவர்களுக்கு முன்பாக சார் சார் என்றே ஒருவரை ஒருவர் அழைத்துக் கொண்டனர்.
வெள்ளிக் கிழமை இரவு சிதம்பரத்திற்கு பிரயாணித்தனர். முதன் முதலில் களப்பிறர் பற்றிய கட்டுரை எழுதிய தம்பிரானை போய் சந்திக்கவேண்டும் என்று பட்டியலில் இருந்தது.
மாணவர்கள் ஐவரும் பின்னே அமர்ந்துக் கொள்ள முன்னால் பழனியப்பனும் ஓட்டுனர் இருக்கையில் கரிகாலனும். வண்டியின் மேல் இவர்களின் மூட்டை முடிச்சுகள்.
வண்டியில் அமர்ந்ததும் அனைவருக்கு 20-30 தாள்களை தந்தார் பழனியப்பன். இதை எல்லாரும் படிங்க. பத்திரமா வைச்சிக்குங்க. இதுக்கு பிரதி கூட இல்லை. நீலா, சவிதா சிதம்பரம் போனதும் நீங்க இரண்டு பேரும் இதை கம்ப்யூட்டரில் பதிக்க ஆரம்பிச்சிடுங்க என்றார்.
அனைவரும் வாங்கிக் கொண்டனர். வண்டி செங்கல்பட்டை கடந்திருக்கும். சிறிசுகள் சில்மிஷம் செய்யலாம் என்று நினைத்திருக்க முன்னால் இரண்டு பெரிசுகளும் தூங்கும் பாடில்லை. ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காக சங்கர், இந்த களப்பிறர் ஆட்சியைப் பற்றி கொஞ்சம் சொல்லு நீலா என்றான் முன்னால் அமர்ந்திருந்த நீலவேணியை பார்த்து. அவளும் சிரத்தையுடன் பேசத் தொடங்கினாள்.
தென்னிந்தியாவை பல பேர் ஆட்சி செஞ்சிருக்காங்க. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது 1956ல தான். அதுக்கு முன்னாடி ஆங்கிலேய காலத்துல மெட்ராஸ் பிரசிடெண்ஸின்னு தென் மாநிலங்களை சொன்னாங்க.
பல மன்னர்கள், பேரரசர்கள், குறு மன்னர்கள், நிலசுவாந்தார்கள் ஆட்சி செஞ்சிருக்காங்க. நமக்கு இதுவரைக்கும் கிடைச்ச தகவல் படி கடுங்கோன் அப்படிங்கற முதலாம் பாண்டிய பேரரசர்களிலிருந்து, பல்லவர்கள், சோழர்கள், சேரர்கள், முகமதியர்கள், மதுரை சுல்தானியர்கள், விஜய நகர அரசர்கள், மதுரை மற்றும் தஞ்சை நாயக்கர்கள், செஞ்சி நாயக்கர்கள், ராமநாதபுரம் சேதுபதிகள், தஞ்சை மராட்டியர்கள், அப்புறம் சுகந்திரம் கிடைக்கவிருந்த கொஞ்சம் வருஷம் முன்பு வரை புதுக்கோட்டை தொண்டைமான்கள் என்று நம் நாட்டையே கட்டம் போட்டு ஆண்டிருக்காங்க.
சுமார் 4வது நூற்றாண்டுல வடக்கேர்ந்து வந்ததாக சொல்லப்படுபவர்கள் தான் இந்த கள்வர் அல்லது களபிறர். அதாவது கள்ள பிறர் என்பது தான் களப்பிறர் ஆகிடுச்சு. களப்பிரர் அப்படின்னு கூட சொல்றாங்க. பெரிய ற சின்ன ர குழப்பம் இருக்கு. பல்லவர்கள் ஆட்சி ஆரம்பிச்ச பிறுகு தான் இந்த களப்பிரர் ஆட்சி முடிஞ்சிது. இது தமிழக வரலாற்றில் ஒரு கறுப்பு நேரம், இருண்ட வரலாறு என்கிறார்கள். இது தான் கறுப்பு வரலாற்றின் ஆதாரமே.
களபிறர்கள் ராட்சதர்கள். நீதி நேர்மை என்ற வார்த்தைகளே அவங்க அகராதியில் இல்லை. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று அட்டூழியங்கள் செய்தனர். ஒரு ராஜா ஒரு மந்திரி என்றெல்லாம் இல்லை. கூட்டமும் வாளும் இருந்தால் ராஜா தான். கொள்ளையடிக்கிறதும் குகைகளில் மறைந்து போவதும் தீவுகளில் அந்த வேட்டைகளை புதைத்து வைப்பது என்று ஒரே கூத்து தான். இன்றைய தமிழ் நாட்டின் உள்ளேயும் கடல் பிரதேசத்திலும் நிறைய தீவுகள் இருந்ததா சொல்றாங்க. அதுவெல்லாம் இவங்க கட்டுப்பாட்டில தான் இருந்துதாம். வழிப்பறி கொள்ளையர்கள் கடல் கொள்ளையர்கள் என்றே சொல்லலாம். இவர்கள் வடக்கிலிருந்தே வந்தவர்களா இல்லை தமிழ் நாட்டின் வடப்புறத்திலிருந்து வந்தவர்களா என்பது தெளிவாக தெரியவில்லை. இவர்களுக்கு சில குறும் மன்னர்களும் உதவி செஞ்சிருக்காங்க. சில பேர் பயத்திலும் சில பேர் அவங்க கொடுக்கற பொன்னுக்கும்.
மஹாபாரதத்துக்கு பிறகு ஆரம்பிச்சதுதான் இதை இருண்ட காலம் அப்படின்னு சில பேரு சொல்றாங்க. தமிழ் இலக்கியங்கள் சுமார் 3000 வருடம் களப்பிறர் காலம் இருக்கலாம்னு சொல்றாங்க. அதுக்கப்புறம் தான் சேரன் சோழன் பாண்டியன் அப்படிங்கறது இன்னொரு கூற்று.
கொங்கு நாட்டை களப்பிறர் ஆண்டதாக சொல்றாங்க. அவங்க களப்பிறர்னா தமிழ் அல்லாத மற்ற மொழி பேசறவங்கனு குறிப்பிட்டு இருக்காங்க.
ரகு மிகுந்த ஆர்வத்துடன் அது சரி, எதுக்கு அந்த இருண்ட காலத்தைப் பற்றி நமக்கு இத்தனை ஆர்வம். அதைப்பத்தி ஆராய்ச்சி பண்ணனும் ஏன் நிறைய பேர் துடிக்கனும்.
அப்பாடா ரகு தூங்கிட்டியோன்னு நினைச்சேன் என்றாள் நீலா நக்கலாக.
சங்கரும், ரவியும் ரகுவின் தோளில் சாய்ந்துக் கொண்டு ஆர்வத்துடன் கதை கேட்டுக் கொண்டிருந்தனர்.
ரவி, பின் சீட்டு வழியாக சவிதாவின் கூந்தலை மோந்துக் கொண்டிருந்தான்.
ரகு எதுக்கு இந்த ஆராய்ச்சி அப்படின்னா, ஆங்கிலே அரசு நம் நாட்டில் இந்த மாதிரி ரிசர்ச் பண்றவங்களுக்கு ரொம் உதவி பண்ணுது. அவங்களுக்கு என்ன ஆர்வம் அப்படின்னா, களப்பிறர்கள் அறிவிலேயும் சிறந்து விளங்கினவங்க. அவங்க கொள்ளையடிச்சதை பல இடங்களிலே ரகசியமா மறைச்சி வச்சிருந்தாங்க. அதுல எவ்வளவு செலவு பண்ணாங்கன்னு யாருக்கும் தெரியாது. எத்தனை கிடைச்சிது எத்தனை இன்னும் மறைஞ்சிருக்குன்னு. பல்லவர்கள் காலத்திலே கோவில் கட்டும்போது ஒரு சில புதையல் கிடைச்சிது. இன்னிக்கு தேதில தமிழக பட்ஜெட்டையே பண்ணலாம். ஆனால் அதுவும் களப்பிறர் தான் வெச்சதான்னு தெரியலை.
அது சரி ஆங்கிலேயர் தான் நம் நாட்டை இத்தனை காலமா ஆண்டாங்களே, அவங்க காலத்திலே ஏன் ஆராய்ச்சி பண்ணலை என்று ஒரு புத்திசாலி கேள்வி கேட்டாள் சவிதா.
அதுதான் நான் சொன்னேன்ல களப்பிறர்கள் பயங்கர புத்திசாலின்னு. அவங்க கட்டுப்பாட்டுல்லே நம்ம நாடு இருக்கும் போது ஒரு அங்குலம் விடாம தேடிப்பார்த்துட்டாங்க ஆங்கிலேயர்கள். அவங்களால முடியலை. அதனாலதான் ஆராயச்சி இன்னும் தொடருது.
அப்படியா சங்கதி. அப்படின்னா நம்ம பழனியப்பன் சாருக்கு இந்த ஆராய்ச்சி முடிஞ்சதும் டாக்டர் பட்டத்தோடு பல கோடி ரூபாய் கிடைக்கும்னு சொல்லு. இல்லையா சார் என்றான் சங்கர்.
அட பசங்களா. நான் டாக்டர் பட்டத்துக்காக மட்டும் ரிசர்ச் பண்ணிக்கிட்டு இருக்கேன். நீங்க பாட்டி இது மாதிரி புரளி கிளப்பிவிடாதீங்க. அப்புறம் புதையலை தேடறோம்னு சினிமாவில வரமாதிரி நம்ம பின்னாடி ஒரு கூட்டம் வந்துடும். நம்ம எல்லோரையும் தீர்த்துக் கட்டிடுவாங்க.
அவர் விளையாட்டாக சொன்னது நிஜமாகிவிடும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.