கால் சட்டையும் மேல்
அங்கியும் நவநாகரீக
தோற்றத்துடன் ஒருவன் ‘ஞானி
நான்’ என்றான்.
“என்ன ‘ஞானியா’? உன்னிடம்
தாடி இல்லையே? அழுக்கு
வேட்டி கிழிந்த சட்டை
இப்படி எதுவுமே இல்லையே? நீ
ஞானி இல்லை” - என்றேன் நான்.
“மாயை” - என்றான்.
“என்ன?”.
“மாயை”.
“உன் பெயர் என்ன?”
“பெயரா?”;. மெல்ல
சிரித்தான். “முகவரிக்கு
முன்னே எழுத கேட்கிறாயா?
‘எனக்கு முகவரியே இல்லை.
அறிமுகம் தேவையா? அறிமுகம்
இல்லாத பலரில் நானும்
ஒருவன். ஏன் கேட்கிறாய்
பெயரை?” - என்றான்
“கூப்பிடத்தான்”.
“யாரை?”
“உன்னைத்தான்”.
மீண்டும் சிரித்தான்.
“ஏன் சிரிக்கிறாய்?”.
“பெயரைக் கேட்டாய்.
கூப்பிட என்று. இன்னும் சில
நொடிகளில் உன்னை நான்
பார்க்க மாட்டேன். பிறகு
ஏன்?” - என்றான்.
“ஏன்?” - என்று வினவினேன்.
“நடிக்கிறாய் நீ “ -
என்றான்.
“நீ பேசுவதே புரியவில்லை” -
என்றேன்.
“நான் ஞானி”.
“அதற்கும் பேசுவதற்கும்
என்ன சம்பந்தம்?”
“நீ முட்டாள். உடையிலும்
தாடியிலும் ஞானியை
பார்த்தாய். அதில் ஞானி
உனக்கு தெரிய மாட்டான்.
இப்படித்தான் இல்லாத ஒன்றை
தேடி அலைகிறீர்கள்”; -
என்றான்.
“பிறகு உன்னை ஞானி என்று
எப்படி சொல்வது?”.
“நீ பைத்தியம். நான் பேசவதே
உனக்கு புரியவில்லை. நான்
ஞானிதானே” - என்றான.
“புரியவில்லை”.
“உலகின் நடப்புகளைப்பற்றி
கவலையில்லை. ஆகாயத்தை
வெறித்து பார்ப்பான்.
உடையில் கவனம் கொள்ள
மாட்டான். குளிக்க
மாட்டான். இதுதான் நீங்கள்
ஞானியைப் பற்றி
நினைத்திருப்பது. சரியா?”
“ஆம்”.
“நான் உடை உடுத்துவேன்.
குளிப்பேன். ஆகாயம்
பார்க்க மாட்டேன. ஆனால்
நான் ஞானி?”.
“எனக்கு கொஞ்சமும்
புரியவில்லை. எப்படி?” -
என்றேன்.
“எப்படி ஏன் என்று
கேட்கிறாயே நீ மனிதன். நான்
ஏற்கனவே இதையெல்லாம்
கேட்டு விட்டேன். நீ
பிறரிடமிருந்து விடை அறிய
ஆசைப்படுகிறாய். காரணம் நீ
மனிதன். எனக்கு விடை
கிடைத்துவிட்டது. இல்லை.
கிடைக்கவில்லை. ஆகையால்
நான் ஞானி” - என்றான்.
“எனக்கு தெளிவாகச் சொல்.
ஒரு எழவும் புரியவில்லை” -
என்றேன்.
“நீ மனிதன். நான் ஞானி”.
அவன் சென்று விட்டான்.