இலங்கையின் உள்நாட்டு குற்றவியல் நீதி பொறிமுறைகளால் பாரதூரமான குற்றங்களுக்கு நீதி வழங்க முடியாது

7 views
Skip to first unread message

BTF News

unread,
Apr 13, 2026, 10:33:05 AMApr 13
to

இலங்கையின் உள்நாட்டு குற்றவியல் நீதி பொறிமுறைகளால் பாரதூரமான குற்றங்களுக்கு நீதி வழங்க முடியாது

61st UNHRC Session Update


ஜெனீவாவில் நடைபெற்ற 61வது ஐநா மனித உரிமைகள் பேரவை (UNHRC) கூட்டத்தொடரில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் போர் விவகாரங்கள் ஆதிக்கம் செலுத்திய போதிலும், பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) முக்கியமான பல இராஜதந்திரிகளைச் சந்தித்து ஆலோசனைகளை நடத்தியது. இதன் போது இலங்கையின் உள்நாட்டுச் சட்டத்தின் கீழ் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறையை அபகரிக்கும் இலங்கையின் முயற்சிக்கு எதிராக BTF, தனது நிலைப்பாட்டினை எழுப்பியது. இது உண்மையில் ஒரு எரியும் பிரச்சினையாகும்.


சர்வதேச பொறுப்புக்கூறல் செயல்முறைக்கு ‘மாற்றாக’ ஒரு உள்நாட்டு குற்றவியல் நீதி பொறிமுறையை நிறுவுவதற்கான இலங்கையின் தந்திரோபாய முயற்சி மற்றும் அதன் நம்பகத்தன்மை குறித்து BTF இராஜதந்திரிகளிடம் மறுதலிக்க முடியாத வாதங்களை முன்வைத்தது. சர்வதேச சட்டங்களுக்கும் சிறிலங்காவின் சட்டங்களுக்கும் உள்ள நிரப்பப்படாத இடைவெளிகள் எம்மால் சுட்டிக் காட்டப்பட்டது. அரசினாலும் அது சார்ந்த நிறுவன கட்டமைப்புகளினாலும் இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றங்களுக்கு, இலங்கையின் உள்நாட்டு குற்றவியல் நீதி பொறிமுறைகளினால் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை வழங்க முடியாது என்பது குறித்து வலியுறுத்தப்பட்டதுடன் சிறிலங்காவின் கபடத் தன்மைக்கு இசைந்து கொடுத்து  சர்வதேச மன்றங்கள் தம்மை பலவீனப்படுத்தி கொள்ள கூடாது என்றும் விதந்துரைக்கப்பட்டது.


இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைவதற்கான முக்கிய காரணங்கள்:


1. சட்டக் கட்டமைப்பில் உள்ள அடிப்படை இடைவெளிகள்

இலங்கையின் சட்டக் கட்டமைப்பில் முக்கிய சர்வதேசக் குற்றங்கள் உள்ளடக்கப்படவில்லை என்பது ஒரு பாரதூரமான குறைபாடாகும்.

உள்நாட்டு சட்ட அமைப்பு இனவழிப்பு, போர்க்குற்றங்கள் அல்லது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்வதற்கோ அல்லது வழக்குத் தொடரவோ அங்கீகாரம் வழங்கவில்லை.

சர்வதேச குற்றவியல் சட்டத்தின் ஒரு முக்கிய அங்கமான (Cornerstone principle) 'கட்டளைப் பொறுப்பு' (Command Responsibility) என்ற சட்டக் கோட்பாடு இலங்கையில் இல்லை. இது உயர் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தின் கீழ் செய்யப்பட்ட குற்றங்களுக்குப் பொறுப்பேற்பதைத் தவிர்க்க வழிவகுக்கிறது.

இந்த சட்ட வரையறைகள் இல்லாமல், திட்டமிடப்பட்ட மற்றும் பெரிய அளவிலான மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் எட்ட முடியாத ஒன்றாகவே இருக்கும்.


2. கால வரம்புகள் மற்றும் தண்டனையிலிருந்து தப்பித்தல்

இலங்கையின் தண்டனைச் சட்டங்களுக்குள் பொதிந்துள்ள கால வரம்புகள் நீதியை நிலைநாட்டுவதை சீர்குலைக்கின்றன.

பாலியல் வன்முறை, வலிந்து காணாமலாக்கப்படுதல், சித்திரவதை மற்றும் ஏனைய மனிதாபிமானமற்ற நடத்தைகள் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இழைக்கப்பட்டிருந்தால், அவற்றின் மீது வழக்குத் தொடர முடியாத பாரிய சட்டத் தடைகள் (prosecutorial barriers) உள்ளன.

இலங்கையின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 456-வது பிரிவு, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பாலியல் வன்முறைச் சட்ட மீறல்கள் மீது வழக்குத் தொடர்வதற்கு 20 ஆண்டு கால உச்ச வரம்பை (Statute of Limitations) நிர்ணயித்துள்ளது.

இது சர்வதேச தரத்திற்கு நேரடி முரணானது; ஏனெனில் சர்வதேச சட்டங்களின்படி இத்தகைய பாரதூரமான குற்றங்களுக்கு கால உச்ச வரம்பு கிடையாது.

இதன் விளைவாக, 2006 ஆம் ஆண்டிற்கு முன்னர் நடந்த மீறல்களுக்கு இலங்கையின் உள்நாட்டுச் சட்டம் நடைமுறையில் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பை (De facto immunity) வழங்குகிறது.  இக் காலப் பகுதியில் மிக மோசமான குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன.


3. சட்ட வரையறைகளில் உள்ள குறைபாடுகள்

உள்நாட்டு சட்ட வரையறைகள் போதுமானதாக இல்லை; உதாரணமாக, இலங்கையின் சட்டத்தில் ஆண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை (Male-on-male rape) குற்றமாக அங்கீகரிக்கப்படவில்லை.

இது உயிர் பிழைத்தவர்களுக்கு சட்ட ரீதியான தீர்வை மறுப்பதோடு, முறையான பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறலில் உள்ள பாரிய இடைவெளிகளை வலுப்படுத்துகிறது.

இலங்கைப் பாதுகாப்புப் படையினரின் பாலியல் வன்முறைச் செயல்கள் தனிப்பட்ட நிகழ்வுகள் அல்ல, மாறாக தகவல் பெறவும், அச்சுறுத்தவும், அவமானப்படுத்தவும் திட்டமிடப்பட்ட ஒரு நிறுவன ரீதியான சித்திரவதைக் கொள்கை என்று ஐநா விசாரணை அறிக்கை (OISL) முடிவு செய்துள்ளது.


4. சாட்சியங்கள் மற்றும் பாதுகாப்புச் சவால்கள்

சிறிலங்கா மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலக பொறுப்புக்கூறல் திட்டத்தின் (OSLAP) ஆவணக் களஞ்சியத்தில் உள்ள 94% ஆவணங்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டுமென அதனை வழங்கியோர் குறிப்பிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள், சிறிலங்காவின் உள்நாட்டு நிறுவனங்களின் மீது நம்பிக்கையற்ற நிலையில் இருப்பதால், அந்த ஆவணங்களை சிறிலங்காவிடம் ஒப்படைக்கக் கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

சாட்சிகள் பழிவாங்கப்படலாம் மற்றும் இரகசியத்தன்மை மீறப்படலாம் என்ற அச்சத்தை இது காட்டுகிறது.

இந்த கணிசமான ஆதாரங்கள் இன்றி, எந்தவொரு நீதித்துறை செயல்முறையும் கட்டளைப் பொறுப்பு (Command responsibility) மற்றும் குற்ற நோக்கத்தை நிரூபித்து தண்டனை வழங்க இயலாது.

இந்த கணிசமான ஆதாரத் தொகுப்பு இல்லாத எந்தவொரு நீதித்துறை செயல்முறையும், கட்டளைப் பொறுப்பு (Command responsibility), வடிவங்கள் (Patterns) அல்லது உள்நோக்கத்தை (Intents) நிரூபித்து தண்டனை வழங்க இயலாது.


5. அரசியல் மயமாக்கல் மற்றும் நீதித்துறை சுதந்திரம்

நீதித்துறைக்குள் நிலவும் அரசியல் தலையீடுகள் மற்றும் இனப் பாகுபாடு பற்றிய நீண்டகால குற்றச்சாட்டுகள் உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் மீதான நம்பிக்கையை சிதைத்துள்ளன.

சர்வதேச தரத்திலான நீதியை வழங்குவதற்குத் தேவையான கட்டமைப்புச் சுதந்திரம் அல்லது பாரபட்சமற்ற தன்மை இலங்கையின் நீதித்துறையிடம் இல்லை.

சிங்கராசா எதிர் இலங்கை உச்ச நீதிமன்றம் (1999) என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில், சர்வதேச உடன்படிக்கைகள் (ICCPR போன்றவை) அங்கீகரிக்கப்பட்டாலும் (Ratify) அவை தானாகவே உள்நாட்டுச் சட்டமாக மாறாது என்று கூறி சர்வதேச சட்டத்தின் ஏற்புத் தன்மையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழரான சிங்கராசாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற ஐநா மனித உரிமைகள் குழுவின் பரிந்துரையையும் சிறிலங்கா நிராகரித்தது.

இது இலங்கை சர்வதேச சமூகத்தை திசைதிருப்புவதற்காகவே உடன்படிக்கைகளை கையெழுத்திடுகின்றது (Ratify) என்பதைக் காட்டுகிறது.



முக்கிய கோரிக்கைகள் 

இலங்கையின் உள்நாட்டுச் சட்ட அமைப்பு சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட குற்றங்களைத் தீர்க்கும் தகுதியைக் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, நம்பகமான நீதிக்கான பாதையில் பின்வருவன உள்ளடக்கப்பட வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுக்கிறோம்:


  • வலுவான சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறைகளை (International Criminal Justice Mechanisms) நிறுவுதல்.

  • உலகளாவிய அதிகார வரம்பு (Universal Jurisdiction) கொள்கைகளைப் பயன்படுத்துதல்: அமெரிக்கா, கனடா மற்றும் ஐக்கிய இராச்சியம் பின்பற்றும் கொள்கையின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற ஏனைய நாடுகளும் உலகளாவிய அதிகார வரம்பு (Universal Jurisdiction) கொள்கையைப் பயன்படுத்தி இலங்கைக் குற்றவாளிகள் மீது தடைகளை விதிக்க வேண்டும்.


இத்தகைய நடவடிக்கைகள் இன்றி, இலங்கையில் ஆழமாக வேரூன்றியிருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த இனவாத அரசியலுக்கு முடிவு காண்பது என்பது சாத்தியமற்ற ஒன்றாகும். 


சர்வதேசத்தின் வலுவான  தலையீட்டின் மூலமே நீதியை உறுதிப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவும் நிலையான சமாதானத்தினை உருவாக்கவும் முடியும்.



ஆங்கில மூலம்: Why Sri Lanka’s Domestic Criminal Justice Mechanisms Cannot Deliver Justice for Atrocity Crimes 61st UNHRC Session Update

(https://www.britishtamilsforum.org/why-sri-lankas-domestic-criminal-justice-mechanisms-cannot-deliver-justice-for-atrocity-crimes-61st-unhrc-session-update/)



--

Best Wishes

S. Sangeeth     

BTF Media Contact

+44 (0) 7412 435697

Disclaimer

This email and any attachments with it are confidential and intended solely for the use of the individual or entity to whom they are addressed. If you have received this email in error please let us know at the earliest. Any unauthorised use, disclosure, or copying is not permitted.

Every effort has been made to ensure that this e-mail is virus free. However, the British Tamils Forum does not accept any liability in respect to an undetected virus and recommends that the recipient(s) use an up to date virus scanner.

Registered Office: British Tamils Forum, Unit 1, Fountayne Business Centre, Broad lane, London, N15 4AG

Telephone: +44(0)20 8808 0465

Website: www.britishtamilsforum.org  

E-mail: in...@britishtamilsforum.org  

Twitter: https://twitter.com/tamilsforum

Facebook: https://www.facebook.com/BritishTamilsForum

உள்நாட்டு குற்றவியல் நீதி பொறிமுறைகளால் பாரதூரமான குற்றங்களுக்கு நீதி வழங்க முடியாது Fn1.pdf
OSLAP - Breakdown of the materials in terms of confidentaility.png
March 2026 UNHRC _ 3.jpeg
Reply all
Reply to author
Forward
0 new messages