வட்டுக்கோட்டை பிரகடனம் - 50 ஆவது ஆண்டு நினைவு
ஈழத் தமிழர் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படும் வட்டுக்கோட்டை பிரகடனம் வெளியிடப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1976 ஆம் ஆண்டு மே 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பண்ணாகத்தில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தேசிய மாநாட்டில் இந்தப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம், சுயநிர்ணய உரிமை, வரலாற்று ரீதியான ஈழத்தமிழ் இனத்தின் அரசுரிமை, தனி அரசை நிறுவ வேண்டியதன் தார்மீக கடப்பாடு மற்றும் ஈழத்தமிழ் இனத்தின் தேசிய அடையாளம் குறித்து வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட முக்கிய அரசியல் ஆவணமாக இது வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
ஈழத்தமிழினத்தின் பிறப்புரிமையான அரசுரிமை, காலனித்துவ அரசுகளினால் பறிக்கப்பட்டு, எமது இறைமை பெளத்த சிங்கள வல்லாதிக்கத்திடம் மாற்றப்பட்ட பின், தமது சொந்த மண்ணிலேயே தமிழ் மக்கள் அடிமைகளாக ஆக்கப்பட்டனர். அந்தக் காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மொழி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் உரிமை மறுப்பு போன்ற ஒடுக்குமுறைகள் தமிழர் அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கின. 1956 ஆம் ஆண்டு “சிங்களம் மட்டும்” சட்டம், கல்வித் தரப்படுத்தல், 1972 அரசியலமைப்பு மற்றும் தமிழர் தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட குடியேற்றத் திட்டங்கள் ஆகியவை தமிழ் மக்களிடையே ஆழமான அரசியல் விழிப்புணர்வையும், விடுதலை தாகக்கத்தினையும் ஏற்படுத்தின.
இந்தச் சூழ்நிலையில், 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் கூடிய தமிழ் தலைவர்கள், ஈழத்தமிழர்கள் தனித்த தேசிய இனமாக இருப்பதையும், வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் பாரம்பரிய தாயகமாக இருப்பதையும் வலியுறுத்தினர். மேலும் தமிழ் மக்களுக்கு தன்னாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும், தமிழீழம் அமைப்பதற்கான அரசியல் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் வட்டுக்கோட்டை பிரகடனமாக வெளிப்படுத்தினர்.
இந்தப் பிரகடனம் வெறும் அரசியல் தீர்மானமாக மட்டுமல்லாது, தமிழ் மக்களின் அரசியல் உணர்வு, உரிமை கோரிக்கை மற்றும் தேசிய அடையாளத்தின் வெளிப்பாடாகவும் அமைந்தது. 1977 பொதுத்தேர்தலில் ஈழ தமிழ் மக்களிடமிருந்து இந்தக் கோரிக்கைக்கு பூரணமான மக்கள் ஆணையும் வழங்கப்பட்டது.
தந்தை செல்வா முன்மொழிந்த வட்டுக்கோட்டை பிரகடனத்தையும் மக்கள் ஆணையையும் சிரமேற்று கரிகாலன் தலைமையில் திரண்டெழுந்த தமிழினம் தனது அரசுரிமையை மீண்டும் நிலைநாட்டியது. ஆயினும் எமது பிறப்புரிமையை பிரிவினைவாதமாக சித்தரித்த சிங்கள பேரினவாதம், அதே காலனித்துவ சக்திகளின் துணையுடன் எம்மை மீண்டும் வீழ்த்தியது.
50 ஆண்டுகள் கடந்த பின்னர், வட்டுக்கோட்டை பிரகடனம் முன்வைத்த அரசியல் வழித்தடம் இன்னமும் வலுவடைந்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல், பெளத்தமயமாக்கல், நீதியின்மை மற்றும் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினையும் சுயநிர்ணயமும் தொடர்ந்தும் மறுக்கப்படும் நிலையில் வட்டுக்கோட்டை பிரகடனம் முன்வைத்த அரசியல் வழித்தடமே ஈழ தமிழினத்திற்கு ஒரு நிம்மதியானதும் நிலையானதுமான தீர்வினை கொண்டு வரும். இதுவே எமது எதிர்கால சந்ததி தனது தனித்துவமான இன, மொழி, கலாசார அடையாளத்துடன் இத்தீவில் நிலைபெற வழி செய்யும்.
இந்த 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு “வட்டுக்கோட்டை - 50 எழுச்சி மாநாடு” எதிர்வரும் 20.06.2026 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது. (குறிப்பு : முன்பு அறிவிக்கப்பட்ட 30.05.2026 திகதி மாற்றப்பட்டுள்ளது)
இந்த மாநாட்டின் நோக்கம், வட்டுக்கோட்டை பிரகடனத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை புதிய தலைமுறைக்கு எடுத்துச் செல்லுதல், ஈழ தமிழர் அரசியல் பயணத்தை மீளாய்வு செய்தல், தற்போதைய அரசியல் சூழலில் தமிழ்த் தேசிய அரசியலின் திசையை வழிப்படுத்தல் மற்றும் தமிழ் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தலாகும்.
இம்மாநாட்டில் தமிழ் தேசிய சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், மாணவர்கள், இளைஞர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த வரலாற்று நிகழ்வில் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
வட்டுக்கோட்டை - 50 எழுச்சி மாநாடு
ஏற்பாட்டுக்குழு