சம்பந்தனின் அரசியல் தலைமைத்துவமும் தவற விடப்பட்ட வாய்ப்புகளும்

4 views
Skip to first unread message

Mario Arulthas

unread,
Jul 17, 2024, 7:32:56 PM (5 days ago) Jul 17
to தமிழ் ஆராய்ச்சி


“இந்த ஆட்சிக்கு அடங்காதவர்களாக எனது மக்களை மாற்றியமைப்பேன்” மேசையில் அடித்து ஆவேசத்துடன் சம்பந்தன் உதிர்த்த வார்த்தைகள் இவை. 2016 ஆம் ஆண்டு ஒரு சக்தி மிக்க மேற்கு நாட்டின் இராஜதந்திரிகளுடனான கலந்துரையாடலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சிரிசேன அரசாங்கம் எந்தவித முன்னேற்றத்தையும் காண்பிக்காததால் ஏற்பட்ட ஏமாற்றம் அவரின் வார்த்தைகளில் புதைந்திருந்தது. எல்லாவற்றுக்கும் மேலா, 2016இல் அரசியல் தீர்வு கிடைக்கும் என  2015ஆம் இடம்பெற்ற தேர்தலுக்கு முன்னர் அவர் தமிழ் மக்களுக்கு உறுதியளித்திருந்தார், அது ஒரு நிறைவேறாத வாக்குறுதியாகவே இருந்தது. மேற்குறிப்பிட்ட ஒன்று கூடலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் இருந்து வருகை தந்திருந்த தமிழ் ஈழ செயறபாட்டாளர்களுடனான ஒரு சந்திப்பை அப்போதைய இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அமெரிக்காவின் நியூ ஜேர்சியில் நடத்தியிருந்தார். அக்காலகட்டத்தில் தமிழ் தேசியவாதிகளின் ஏகபோக பிரதிநிதிகளாகக் காணப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிரிசேன அரசாங்கம் ஒரு உடன்பாட்டுக்கு வரத்தவறும் பட்சத்தில் தான் ஒரு சிவில் ஒத்துழையாமை செயற்பாட்டை ஆரம்பிக்கப் போவதாக அவர் அந்த சந்திப்பில் முழங்கியிருந்தார். 1961ஆம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சி ஒழுங்கு செய்த, வடக்கு கிழக்கை ஸ்தம்பிக்க வைத்த சத்தியாக்கிரக போராட்டத்துக்கு ஒப்பானதாக இந்த ஒத்துழையாமை செயற்பாடு அமையும் எனவும் அப்போது கூறப்பட்டது.        

சிரிசேன எந்த வித முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை, சம்பந்தன் தமிழ் மக்களை ஆட்சிக்கு அடங்காதவர்களாக மாற்றவில்லை, அத்துடன் மாவை சேனாதிராஜாவும் சிவில் ஒத்துழையாமை செயற்பாட்டை முன்னெடுக்கவில்லை.

கடந்த ஞாயிறு அன்று சம்பந்தன் அவர்களின் மறைவைத் தொடர்ந்து அரசியல்வாதிகளும் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளும் தமது இரங்கல் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். அவரின் நடைமுறைச் சாத்தியம் கொண்ட அணுகுமுறை மற்றும் மறுக்க முடியாத அவரின் சேவைகள் என்பன இந்த இரங்கல் செய்திகளில் சுட்டிக்காட்டப்படுகின்றன. தமிழ் மக்களுக்கான நீதி மற்றும் கௌரவத்துக்காக அவர் முன்னெடுத்த ஆதரித்து வாதிடலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பாராட்டியிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான அவரின் கடந்த கால இணைப்பு பற்றிய கேள்விகளை தவிர்க்கும் வகையில் சுமந்திரன் போன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் உள்ளடங்கலாக இன்னும் சிலர் “இணைந்த” “பிரிக்கப்படாத” மற்றும் “பிரிக்க முடியாத” இலங்கை மீதான அவரின் கடப்பாட்டை சுட்டிக்காட்டியிருந்தனர்.  

குறிப்பா, தமிழர் அல்லாதோரிடம் இருந்து வெள்ளமெனப் பாயும் இரங்கல் செய்திகளையும் அவற்றின் தொனியையும் நோக்கும் ஒருவர் இதையொத்த அல்லது இதற்கு அதிகமான உணர்வு ரீதியான எதிர்வினை தமிழ் மக்களிடம் இருந்தும் வெளிப்பட்டிருக்கும் என எதிர்பார்ப்பது இயல்பானது. அனைத்துக்கும் மேலாக, தமிழர் தாயகத்தின் வடக்கிலும் தெற்கிலும் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும், தமிழ் மக்கள் தேடும் ஒரு தலைவராக அவர் இருந்திருந்தால், அவரின் இறப்பு சோகத்தையும் இழந்து போன உணர்வையும் தமிழ்த் தாயகமெங்கும் உருவாக்கியிருக்க வேண்டுமல்லவா?  

இதற்கு மாறாக, இலங்கை அரசாங்கத்தைச் சேர்ந்த மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் அவரிடம் அதிகமாக நேசிக்கும் “நடைமுறைச் சாத்திய” அணுகுமுறையே 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் அவர் தமிழ் மக்களுடன் கொண்டிருந்த பிணைப்பு பெருமளவில் நலிவடைந்ததற்கு காரணமாக அமைந்திருந்தது. தான் தலைமை கோரிய தமிழ்த் தேசிய அரசியல் வட்டங்களுக்குள் இருந்து வெளிவந்த இரங்கல் செய்திகள் மிகவும் அமைதியானவையாக இருந்ததுடன் பாரம்பரியமாக வெளியிடப்படும் ஆத்ம சாந்தி மற்றும் ஓம் சாந்தி போன்ற இரங்கல் செய்திகளாகவே காணப்பட்டன. புதிய விடயங்கள் தொடர்பில் மிகவும் ஆரவாரமாக உணர்வு ரீதியாக கருத்தூட்டங்களை வழங்கும் சமூக வட்ஸ்அப் குழுமங்கள் ஆரவாரமற்றனவாக காணப்பட்டதுடன் இறப்பை ஒரு செய்தியாக பகிர்வதுடன் தமது செயற்பாட்டை மட்டுப்படுத்தியிருந்தன. அவர் இயற்கையெய்திய நாளில் இருந்து ஒரு சில பொது இரங்கல் நிகழ்வுகளே இடம்பெற்றன. அவை அனைத்தும் அவரின் கட்சியினால் அல்லது அவருக்கு நெருக்கமானவர்களாலேயே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இதற்கு மாறாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வந்த ஒருவர் இந்த வருட ஆரம்பத்தில் இயற்கையெய்திய போது தமிழர் தாயகமெங்கும் பரவலான இரங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன, அத்துடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் போன்ற முக்கிய இடங்களில் கறுப்புக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன.

மேலும், வடக்கு கிழக்கில் அவரின் இறப்புக்கு இரங்கல் செய்திகளை வெளியிட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனான அவரின் கடந்த கால தொடர்புகளை சுட்டிக்காட்டினர். உதாரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஶ்ரீதரன் தனது இரங்கல் செய்தியில் பிரபாகரனால் உறுதிப்படுத்தப்பட்ட தலைவராக சம்பந்தன் திகழ்ந்தார் எனவும் அவரின் இறப்பின் பின்னரும் தமிழ்த் தாயகத்தின் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்திருந்தார். சம்பந்தன் மற்றும் அவரின் கட்சியினால் ஏன் வாக்குகளை சேகரிக்க முடிகின்றது அத்துடன் மக்கள் மத்தியில் கட்சி எவ்வாறு நல்ல ஆதரவைப் பெறுகின்றது என்பதை ஶ்ரீதரனின் இந்தக் கூற்று எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. எனினும் சம்பந்தனுக்கும் அவரின் கட்சிக்கும் தமிழ் மக்கள் வாக்களிப்பதற்கான காரணம் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள சம்பந்தனின் விசிறிகளுக்கு முக்கியமான விடயம் அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சம்பந்தனின் கடந்த கால வரலாறு, தமிழ் மக்களின் ஏகபோக அரசியல் தலைவராக அவர் உறுதிப்படுத்தப்பட்டமை அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் ஒரு கூட்டணிக்கு தலைமை தாங்குதல் என்பனவே 2009ஆம் ஆண்டின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்காதிருப்பது போராட்டத்துக்கு செய்யும் துரோகம் என குறிப்பிடத்தக்க அளவான தமிழ் சனத்தொகை உணர்ந்ததற்கு காரணங்களாக அமைந்தன. இதனை சம்பந்தன் உள்ளடங்கலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்கு அறிந்துள்ளதுடன் தமது உள்ளூர் முன்னெடுப்புகளின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்த்தேசியவாதத்துக்கு ஆதரவானவர்களாக தம்மை அடையாளப்படுத்தினர். நடைமுறையில், சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் தெற்கு மற்றும் சர்வதேச சமூகம் என்பவற்றின் மத்தியில் ஒரு “நடுநிலையான” தோற்றப்பாட்டைக் கொண்டிருந்த அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான தலைவர்கள் மற்றும் அடிமட்டத் தொண்டர்கள் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வழியில் தமிழ்த்தேசியவாத கோட்பாட்டை பின்பற்றுபவர்களாக இருந்தனர்.

எனவே, சம்பந்தனின் இறப்புக்கு தமிழ் மக்கள் மத்தியில் சார்பளவில் ஒரு சாரமற்ற எதிர்வினை ஏன் காணப்படுகின்றது அத்துடன் இலங்கையின் அதிகார பரப்பெல்லைக்கு அப்பால் மற்றும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் எழும் ஆழ்ந்த இரங்கல்களில் இருந்து எதனை எம்மால் கற்றுக்கொள்ள முடியும்? அரசாங்கத்திடம் சம்பந்தன் பொய்யுரைத்தார் என்ற செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஒரு நண்பர் “அரசாங்கத்துக்காக வாழ்நாள் முழுவதும் பொய்யுரைத்ததன் பின்னர் அவர் அரசாங்கத்திடம் பொய்யுரைத்துள்ளார்” எனக் கூறினார். ஒரு வெளிநாட்டவரின் பார்வையில் தமிழ் மக்களின் இந்த நடத்தை அவரின் புகழுக்கு வழங்கப்பட்ட அவமரியாதை எனத் தோன்றினாலும், சம்பந்தனின் கடந்த கால நடவடிக்கைகள் இந்த நிலையை நியாயப்படுத்துவதாகவே அமைகின்றது.  

ஒரு தைரியமான மூத்த இனப்பற்றாளராக இருக்க வேண்டிய தருணங்களில் எல்லாம் சம்பந்தன் தமிழ்த்தாயகத்துக்கு ஏமாற்றத்தையே வழங்கினார். யுத்த நிறுத்தக் காலத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரம் உச்ச நிலையில் காணப்பட்ட போது, அவர் புலிக்கொடியை ஏந்தி நின்றதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக இருந்ததற்கான நன்மைகளை நன்றாக அனுபவித்தார். போராட்டம் மௌனிக்க வைக்கப்படப் போகின்றது எனத் தெளிவாகத் தெரிந்தவுடன் தனது நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொண்டார். யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் இந்தியாவில் உள்ள தனது இன்னொரு வீட்டில் பதுங்கி விட்டார், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற தனது சக பாராளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி அழைப்புகளைக் கூட அவர் புறக்கணித்திருந்தார். யுத்தத்தின் இறுதிச் சில தினங்களில் இடம்பெற்ற இறுதிக்கட்ட உயிர்காக்கும் பேச்சுவார்த்தைகளில் அவர் விடயங்களை பொன்னம்பலம் மற்றும் சந்திரகாசன் போன்ற ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தள்ளி விட்டு ஒதுங்கிக்கொண்டார். இப்பேச்சுவார்த்தை முயற்சிகள் காரணமாக சிரேஷ்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்ததுடன் அவர்கள் சட்டத்துக்கு புறம்பாக கொல்லப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

மே 2009இன் பின்னர் எஞ்சிய ஒரேயொரு குறிப்பிடத் தக்க தலைவராகக் காணப்பட்ட சம்பந்தன் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னணியில் போராட்டத்தை தனது இரு கரங்களிலும் ஏந்திக் கொள்வார் என நாம் எதிர்பார்த்திருக்கக் கூடும். அக்கால கட்டத்தில் தமிழ் மக்களின் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு பரந்து பட்ட சர்வதேச ஆதரவு அலை தோன்றியிருந்தது. அதனைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் போராட்டத்தை முன்கொண்டு செல்வதற்கான தலைமைத்துவ வகிபாகத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கியிருக்க முடியும். அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை கொடுமைக்கான நீதி கோரலை முன்கொண்டு செல்ல உதவும் தலைமையை அப்போது மக்கள் பரிதவிப்புடன் தேடிக்கொண்டிருந்தனர்.

அதற்கு மாறாக, வன்முறையை கட்டவிழ்த்து விட்ட அதே சிங்கள மேட்டுக்குடிகளிடம் இருந்து பெயரளவிலான நட்டஈடுகளை பெறும் அர்த்தமற்ற, மிகவும் சௌகரியமான பணியில் சம்பந்தன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கொழும்பை மையப்படுத்திய மூலோபாயத்தின் உச்சக் கட்டமாக 2015 ஆம் ஆண்டு “நல்லாட்சி அரசாங்கத்துக்கு” வெளிப்படையான ஆதரவை வழங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் அமைந்திருந்தது. 2015ஆம் ஆண்டு இலங்கையின் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற சம்பந்தன் 1972ஆம் ஆண்டின் பின்னர் அவ்விழாவில் பங்கேற்ற முதலாவது தமிழ்த் தலைவராக வரலாற்றில் பதிவானார், இது நிகழ்ந்து தசாப்தங்கள் கடந்துள்ள போதும் அத்தினம் இன்று வரை தமிழ் மக்களால் ஒரு “கறுப்பு தினமாக” அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. சுதந்திர தின விழாவில் தனது பங்கேற்பு மற்றும் இன்று வரை பல தமிழ் மக்களால் இன மேலாதிக்கத்தின் அடையளமாகக் கருதப்படும் சிங்கக் கொடியை அங்கீகரித்தமை என்பவற்றை அவை “பழைய கதை” எனக்கூறி நியாயப்படுத்தினார் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது. அதன் பின்னர் பிராந்திய அரசாங்கம் என்ற நிலைப்பாட்டுக்கு கூட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கீழிறங்கியது, 2018ஆம் ஆண்டு சுமந்திரன் “அது தேவையானது என நான் கூற மாட்டேன், ஏற்கனவே காணப்படும் மாகாண சபை முறைமையை எம்மால் இன்னும் விரிவாக்க முடியும், அதனை ஒரு தீர்வாக ஏற்க எமது மக்களும் தயாராகவுள்ளனர்” எனக் கூறினார்.    

இக்கால கட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சரணடைவுகள் ஆச்சரியம் மிக்கனவாகவும் எதிர்வு கூறத்தக்க வகையில் பயனற்றதாகவும் காணப்பட்டன. இதனைத் தொடர்ந்து இலங்கையின் அரசியல் வரலாறு தொடர்பான குறைந்தபட்ச புரிதல் உள்ளவர்களாலும் அடுத்து என்ன நடக்கும் என ஊகிக்க முடியுமானதாக விடயங்கள் அமைந்திருந்தன. சிரிசேன-விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எந்த வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, தீர்வு தொடர்பான சிந்தனைகள் எவையும் அவர்களிடம் காணப்படவில்லை. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த மூலோபாயம் தவிர்க்க முடியாததை தள்ளிப்போட மாத்திரமே உதவியது. மூன்றாண்டுகள் கழித்து 2019 மாற்றங்கள் எவையும் அற்ற சிங்கள-பௌத்த மேலாதிக்கம் ராஜபக்சவின் வடிவில் மீண்டும் பதவிக்கு வந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலோபாயம் தோல்வியைத் தழுவியதுடன் அதன் நற்பெயர் குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்தது.

சிங்களத் தலைமைகளிடம் இருந்து சலுகைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சரணடைவதற்கான சம்பந்தனின் ஆர்வத்தை அப்பாவித்தனம் எனவோ எளிமையான நம்பிக்கை எனவோ எம்மால் புறந்தள்ள முடியாது; இலங்கையின் அரசியலில் மிக நீண்ட காலம் நிலைத்திருந்த அவர் இதன் பின்விளைவுகளை நன்கு அறிந்தவராகவே இருந்திருப்பார். இங்கு அவரது அரசியலை அதன் முதன்மை விளைவுகளை பயன்படுத்தியே எம்மால் மதிப்பிட முடியும். தனக்கும் கொழும்பின் அரசியல் வட்டங்களுக்குள் தன்னுடன் பயணிப்பவர்களுக்கு ஒரு அரசியல் நிலையை பேணுவது மாத்திரமே அதன் முதன்மையான விளைவாக அமைந்திருந்தது. சம்பந்தனின் மரணத்துக்கு மிகவும் உணர்வுபூர்வமான இரங்கல்கள் கொழும்பில் இருந்து வந்ததில் ஆச்சரியம் இல்லை, ஏனெனில் அதுவே அவரின் அரசியல் இல்லமாக இருந்ததுடன் அவர் அங்கு உள்வீட்டுப் பிள்ளையாகவே காணப்பட்டார். 

அவரின் இந்த கொழும்பு அரசியல் நிலையை தனது அரசியல் பயணத்தின் அனேகமான பகுதிகளில் அவர் பேணி வந்தார். நோர்வேயின் சமாதான முயற்சி இடம்பெற்ற குறுகிய காலப்பகுதியைத் தவிர தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை விட்டு அவர் தூரமானவராகவே இருந்தார். 2009இற்கு பிந்திய கால கட்டத்தில் பொறுப்புக்கூறல், இனப்படுகொலை ஏற்பு, நீதி மற்றும் இராணுவத்தை அகற்றல் போன்ற விவகாரங்களை முன்கொண்டு செல்லும் மிகவும் வினைத்திறன் மிக்க தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களாக சிவில் சமூக நிறுவனங்களின் நாடுகடந்த வலையமைப்பு, அத்துடன் புலத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள சமூக இயக்கங்கள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களே காணப்படுகின்றனர். இவ்வாறான முன்னணிகள் மற்றும் சக்திகளுடன் ஈடுபாடுகளை மேற்கொள்வதை சம்பந்தன் சாதுரியமாக தவிர்த்து வந்தார். இவ்வமைப்புகளின் முயற்சியால் பொறுப்புக்கூறல் மற்றும் இனப்படுகொலை நடந்தமைக்கான அங்கீகாரம் என்பவற்றுக்கான நிகழ்ச்சி நிரல் முன்னகர்த்தப்படும் வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கொள்ளும் நிர்ப்பந்தம் உருவாகியது. அரசியல் செயற்பாடு மற்றும் போராட்டம் என்பவற்றுக்கான பிரதான அரங்குகளில் இருந்து சம்பந்தனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தூரமாகி கொழும்புடன் நெருக்கத்தை அதிகரித்துக்கொண்டனர், அந்த வகையில் அவர் மிகவும் தொடர்பற்றவராக மாறினார். இந்த வலையமைப்பாக்கம் செய்யப்பட்ட அரசியலில் இணைவதற்கே விருப்பற்றதாகக் காணப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு தலைமைத்துவம் வழங்குவது பற்றி கற்பனை கூடச் செய்ய முடியாது. அவர்கள் சிங்கள அரச மேட்டுக்குடிகளுக்கும் உண்மையான முக்கியத்துவம் கொண்டவர்களாக இருந்தார்க்ள் என்பதையும் இது சுட்டி நிற்கின்றது, அவர்களிடம் பேரம்பேசுவதற்கான உண்மையான இயலுமையும் இல்லை பேரம் பேசவும் அவர்களிடம் ஒன்றுமில்லை; ஆர்ப்பாட்டங்களை நிறுத்துமாறு, பொறுப்புக் கூறலுக்கான கோரிக்கையை கைவிடுமாறு அல்லது பிராந்திய அரசு தொடர்பான ஒன்றிணைந்த நிலைப்பாட்டுக்கு வருமாறு பரந்து பட்ட தமிழர் இயக்கத்தை அவர்களால் கோர முடியாது, ஏனெனில் அவர்களிடம் அதற்குரிய எந்த அதிகாரமும் இல்லை. வாக்குகளை மாத்திரமே அவர்களால் விநியோகிக்க முடியும், அதற்குக் கூட சிங்கள அரச மேட்டுக்குடிகள் எதிர்காலத்தில் அவர்களிடம் தங்கியிருக்க முடியாது. எவ்வாறாயினும், கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு பணி மாத்திரமே உள்ளது. உண்மையான சீர்திருத்தம் மற்றும் கடுமையான பேரம்பேசல் என்பவற்றின் அசௌகரியங்கள் எவையும் இல்லாமல் சிங்கள அரச தரப்புகள் தமிழர்களின் கோரிக்கைகளில் கரிசனை கொண்டுள்ளன என்ற மகிழ்வூட்டும் பிரதிவிம்பத்தை வெளி உலகுக்கு காட்சிப்படுத்தும் கருவியாக அதனால் செயற்பட முடியும்.

சம்பந்தனை SJV செல்வநாயகத்துடன் ஒப்பிட்டுப் பேசுவது வழமையாகும். தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகரான> பரவலாகக் கொண்டாடப்படும் செல்வநாயகம் இரண்டு சந்தர்ப்பங்களில் சிங்களத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது பிரபலமான விடயமாக உள்ள போதும் அந்த இரண்டு முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்தன. எனினும், இந்த ஒப்பீடு மிகைப்படுத்தப்பட்டதாகவே அமைந்துள்ளது. செல்வநாயகம் தமிழ் அரசியலில் ஒரு நிலைமாற்றத்தை ஏற்படுத்தினார். தமிழரசுக் கட்சிக்கான மக்கள் தளத்தை அமைத்த அவர் அதன் மூலமாக தமிழ்த் தேசியவாதத்துக்கான கோட்பாட்டு அடித்தளத்தை நிறுவினார். பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தேர்தல்கள் ஊடாக பிராந்திய அடையாளத்தை திடப்படுத்திய அவர் சர்வதேச சமூகம் மற்றும் அப்போதைய புலம் பெயர் மக்களை சென்றடைந்து தமிழர்களின் கோரிக்கைகளை முன்னகர்த்திச் சென்றார். இதற்கு மாற்றமாக, கடந்த ஒன்றரை தசாப்தங்களாக தமிழ்த் தேசியவாத அரசியலின் தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் கொழும்பின் உள்ளக அரசியலில் தனது இருப்பை தக்கவைத்துக்கொண்டதே சம்பந்தனின் பிரதான வெற்றியாகக் காணப்படுகின்றது. 

சம்பந்தனின் தலைமைத்துவத்தின் கீழ் சமாதான செயற்பாடுகளின் போது பெறப்பட்ட நன்மைகள் மற்றும் உத்வேகம் என்பவற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீணடித்துள்ளது. எஞ்சியுள்ள பொதுமக்கள் ஆதரவும் கடந்த கால புகழ் மற்றும் ஆதரவளிக்கும் அரசியலின் செயற்பாடுகள் காரணமாக கிடைக்கப்பெற்றதே ஆகும், அதன் மூலம் தமிழ்த் தேசியவாத அபிலாஷைகளை வென்றெடுக்க முடியாது. சம்பந்தனின் அடுத்த வாரிசு யார் என்ற கேள்வி தமிழ் அரசியல் வட்டாரத்தில் அதிக ஈர்ப்பையோ அல்லது ஆரவாரத்தையோ ஏற்படுத்தாது. எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குறுகிய அரசியல் தளங்களுக்கு அப்பால் அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச போராட்ட தளங்களிலும் தமிழ்த் தேசியவாத அரசியல் தழைத்தோங்கும்.                                      

 ஆக்கம்:

மரியோ அருள்தாஸ்கலாநிதிக் கற்கையாளர்SOAS, இலண்டன் பல்கலைக்கழகம்

மற்றும் 

கலாநிதி மதுரா இராசரட்னம்சிரேஷ்ட விரிவுரையாளர்சிட்டிலண்டன் பல்கலைக்கழகம்

நிறைவேற்றுப் பணிப்பாளர்இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்துக்கான மக்கள் அமைப்பு (PEARL)

 

****************************************************************

PAGE 16 Virakesari Sampanthan Arulthas Rasaratnam Jul 16.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages