திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
புலவர் வி.பொ.பழனிவேலனார்
ஆ.தமிழர்
கக. வழக்கில் வழுக்கள்
எழுவாய்
தமிழ் மொழி தோன்றிய காலவரையறை இன்னும் தமிழறிஞர்களால் கணிக்கவியலாத புதிராயுளது. உலக மொழிகள் யாவற்றினும் முதல் தாய்மொழியும் தமிழே என மொழி ஆராய்வாளர் மொழிகின்றனர். அத்தகு மொழி, மூவேந்தர்களாகிய சேர – சோழ – பாண்டியர்களால் சீராட்டிப் பாராட்டி வளர்க்கப்பெற்றது. பாண்டியப் பேரரசு, முத்தமிழ்க் கழகங்கள் மூன்று கண்டு – தமிழைப் பேணிற்று. அவர்கள் காலத்திற்குப் பின்னர், தமிழ்மொழி, பல இடர்ப்பாடுகட்கு உள்ளாயிற்று.
தமிழ்நாடு, பல வகை அரசர்களின் படையெடுப்புகட்கு ஆளாயிற்று. தமிழ்நாட்டை வென்று ஆண்ட அரசர்கள், தம்மொழிகளையும் – மதங்களையும் தமிழ்நாட்டில் பரவச் செய்தனர். ஏன் – தம் நாட்டு மக்களையும் கொண்டு வந்து குடியேற்றினர். அக்காலத்தில்தான், தமிழ்மொழி சீர் கெட்டு – செம்மை கெட்டு – தலைகெட்டுத் தடுமாறி நின்றது.
பிறமொழிக் கலப்பு
இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே வடமொழி (சமற்கிருதம்) வழக்குத் தமிழ்நாட்டிற்கு வந்தாலும், தமிழ், தன் தனித்தியங்கும் தன்மையால் பிறமொழிக் கலப்பை ஏற்றிலது. ஆனால், வடமொழி நூல்கள் பல தமிழில் பெயர்க்கப்பட்டும் – தமிழ் நூல்கள் பல வடமொழியில் பெயர்க்கப்பட்டும் வழக்காறுற்றன. அத்தகைய நூல்களுள் சில – இராமாயணம், பாரதம், கந்த புராணம், கருட புராணம், திருவிளையாடற்புராணம், கைவல்ய நவநீதம், விட்ணுபுராணம், சிவபுராணம், விநாயக புராணம், பெரிய புராணம், திருவாசகம், பாணினியம், பரதம், பஞ்ச மரபு, பஞ்ச பாரதியம், அகத்தியம் முதலியன.
அவற்றைப் படித்தும் – எழுதியும் வந்த தமிழர், கதைகளின் கற்பனையில் மூழ்கித் திளைத்தமையின், தமிழ்த்தூய்மையை மறந்தனர். வடமொழிச் சொற்களையே மிகுதியும் கலந்து வழங்க முற்பட்டனர். அதன் பயனாகக் கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும் தோன்றின. இதனை,
“கன்னடமுங் களிதெலுங்கும்
கவின் மலையாள முந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே
ஒன்றுபல வாயிடினும்”
என்னும் பேராசிரியர் சுந்தரனார் பாடலால் அறிக.
அங்ஙனம் தோன்றினும், தமிழ், தன் சீரிளமையும் – கன்னிமையும் கெடாது தனித்து இயங்கி வருகிறது. இது தமிழின் தனித்தியங்கும் தன்மைக்குச் சான்றாம். இன்றுள்ள புலவர்களும் – பேராசிரியர்களும் – பாவலர்களும் – தற்காலப் புதுவது புனைவாரும், பிறரும், தமிழில் பாடலோ – கதையோ – கட்டுரையோ – நாடகமோ எழுதுங்கால், வேற்றுமொழிச் சொற்களை அறியாமையாலோ, வேண்டுமென்றோ அளவின்றிக் கலந்தே எழுதுகின்றனர். ஆயினும், தமிழின் தூய்மையைக் கறைப்படுத்த அவர்களால் இயலவில்லை. அவர்கள் கலக்கும் சொற்கள், தாமரை இலையில் தண்ணீர்த் துளிபோல் தனித்து நிற்பதை நம்மால காண முடிகிறது.
ஒரு மொழியில் பிற மொழிச் சொற்களைக் கலப்பது எப்பொழுது பொருந்துமெனின், அம் மொழியில் நாம் சொல்லக் கருதும் பொருளை விளக்கக் கூடிய சொற்கள் இல்லாத போதுதான். தமிழ் பண்டுதொட்டே சொல்வளம் – பொருள் வளம் மிக்க மொழி. வேற்று மொழிக்காரர் ஆய்ந்து கண்ட அரிய கருத்துகளைத் தமிழில் பெயர்க்கும்போது, கலைச் சொற்களைப் புதியவாய் ஆக்கிக் கொள்ளல் சாலும். எனவே, தமிழ் மொழி, தன்னீர்மை குன்றாது என்றும் நின்று நிலவும் இயல்பிற்றாம்.
பொருளற்ற சொற்கள்
ஒரு மொழியைப் பேசுகின்ற மக்கள் அனைவரும் படித்தவரல்லர். ஒவ்வொரு சொற்கும் பொருள் தெரிந்து பயன்படுத்துவோர், படித்தவரில்கூட இல்லை எனலாம். படித்தவர் பலர் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போது ஊடே ஊடே ஒவ்வொரு சொல்லைப் பயன்படுத்துவதை நாம் அறிவோம். படிக்காதவர்களும் அதற்கு விலக்கன்று.
எடுத்துக்காட்டு :-
அவன் வந்துட்டு சொன்னான்
என்ன நான் சொல்றது?
எதுக்காகச் சொல்றேன்னா
நான் வந்து போனேனா?
அவர் வந்தாப்லே
அப்பா சொன்னாப்லே
ஐந்து மணியைப் போலே வா
ஈண்டு பொருளற்ற – தேவையில்லாத சொற்கள். வந்துட்டு – என்ன – எதுக்கு – வந்தாப்லே – போலெ – இன்னும் இவை போன்ற பல பயனற்ற சொற்களைப் பலரும் பயன்படுத்துகின்றனர்.
“பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்” (எண் : 196)
என்று திருவள்ளுவர் குறட்பா யாத்தது, இத்தகையோரைக் கருத்தில் கொண்டுதான் போலும்.
பொருள் வேறுபாடு
அன்று நற்பொருளில் வழங்கப்பெற்ற சொல். இன்று கெட்ட பொருளிலும் – இன்று நல்ல பொருளில் வழங்கும் சொல் அன்று கெட்ட பொருளிலும் வழங்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு:
நாற்றம், களிப்பு, கிழவன் – என்பன சில.
‘நாற்றம்’ என்னும் சொற்கு, முன்பு, ‘நறுமணம்’ என்று பொருள். ‘நாற்றம் உரைக்கும் மலருண்மை’ (45) என்று தொடங்கும் நான்மணிக்கடிகை பாடலை நோக்குக.
அன்று ‘களிப்பு’ என்ற சொல். கள்ளுண்டு மகிழ்வதைக் குறித்தது. இன்று, ‘மகிழ்ச்சி’ என்று பொருள்படப் பயன்படுத்தப்படுகின்றது. ‘கள்ளுண்டு களித்தனர் களம்புகு மறவர்’ (புறப்பொருள் வெண்பா மாலை).
முன்னர், உரியவர் – உடையவர் எனப் பொருள்பட வழங்கிய ‘கிழவன்’ என்னும் சொல், இப்பொழுது,’முதியவன்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ‘கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே’ என்னும் தொல்காப்பிய நூற்பாவிலும்,
‘செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து
இல்லாளின் ஊடிவிடும்’ (எண்:1039) என்னும் குறட்பாவிலும், ‘கிழவன்’ என்னும் சொற்பொருளைக் காண்க.
பிழைபட்ட பலுக்கல்
சில தமிழ் நெடுங்கணக்கு எழுத்துகளையும் – சொற்களையும் சிலருக்குச் சரிவரப் பலுக்கத் (உச்சரிக்க) தெரிவதில்லை. ‘ழ’ என்ற சிறப்பு எழுத்தை ‘ள’ என்றும் – ‘ய’ என்றும ‘ல’ என்ற எழுத்தை ‘ள’ என்றும் , ‘ள’ வை ‘ல’ என்றும் , ‘ன’ வை ‘ண’ வை ‘ல’ என்றும் ‘ன’ வை ‘ண’ என்றும் பலரும் பலுக்குகின்றனர்.
‘கோழி’ என்பதை ‘கோளி’, ‘கோயி’ என்றும் – ‘பள்ளம்’ என்பதை ‘பல்லம்’ என்றும் – ‘வெள்ளம்’ என்பதை ‘வெல்லம்’ எனவும் செப்புகின்றனர். இங்ஙனம் பலுக்குவதால், சொற்பொருள் வேறுபடுவதை நாம் அறிவோம். எத்தனையோ, தமிழ்ப்பேராசிரியர்கள், ‘ழ’ என்ற எழுத்தைப் பலுக்க இயலாமல் இடர்ப்படுகின்றனர்.
மக்கள் சிலர், ‘சொன்னேன்’ என்பதற்கு மாற்றாக, ‘சென்னேன்’ என்றும், ‘சொல்கிறேன்’ என்பதற்கு மாற்றாக, ‘செல்றேன்’ என்றும் வழங்குகின்றனர். இதன் கரணியம், பலுக்கத் தெரியாமையும், பொருளுணராமையுமாம்.
வழுப்பட்ட வழக்கு
பல தூய தமிழ்ச் சொற்களைப் பொருளறியார் பிழையாகவே பேசுகின்றனர் – எழுதுகின்றனர். அத்தகு சொற்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக விளக்கி வரையப்புகின் இக்கட்டுரை வரையறையின்றி நீளும். ஆதலின், பெருவழக்காயுள்ள சில சொற்களை மட்டும் ‘பிழை – திருத்தம்’ என்ற தலைப்புகளின் கீழ் தருதும். ஒரு சொல்லை மட்டில் எடுத்துக்காட்டாக ஈண்டு விளக்கிக் காட்டுவாம். வாய்ப்பு நேருங்கால் பிற சொற்களையும் ஒவ்வொன்றாக வரைவோம்.
எடுத்துக்காட்டு – ‘ஏழ்மை’ இச்சொல், வறுமை – பொருளின்மை என்னும் பொருள்படப் பலராலும் வழங்கப்படுகின்றது. ஆனால், அதன் உண்மைப்பொருள், ‘ஏழு’ என்பதாம். ‘ஏழை’ என்ற சொல்லினின்று உண்டான ‘ஏழைமை’ என்ற சொல்லே வறுமையைக் குறிப்பதாகும். ஏழ் தெங்க நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ்குண காரைநாடு. ஏழ்குறும்பனை நாடு என நாற்பத்தொன்பது நாடுகள். இங்கு ‘ஏழ்’ என்ற சொல், ‘ஏழு’ என்றே பொருள்படுதல் கண்டு தெளிக. ‘ஏழ்’ என்பதுடன், ‘மை’ என்னும் பண்பீறு இணைந்து ‘ஏழ்மை’ என்றாயிற்று. எனவே, ‘ஏழ்மை’ என்றால், ‘ஏழு’ என்றே பொருளெனக் கொள்க. இதுபோன்று, கீழே தரப்பட்டுள்ள சொற்களும் தவறாக வழங்கப்படுகின்றன. அவற்றை நன்கு ஆராய்ந்து – திருத்தத்தின் கீழ் உள்ள சொற்களையே வழக்கில் கொணருமாறு தமிழ்வளம் கருதுவாரையெல்லாம் வேண்டிக் கொள்கிறோம்.
பிழை – திருத்தம்
ஏழ்மை – ஏழைமை
எண்ணை – எண்ணெய், எள்நெய்
வெண்ணை – வெண்ணெய்
சிலவு – செலவு
கண்ட்ராவி – கண்ணராவி
மனதில் – மனத்தில்
ஒரு மனதாக – ஒரு மனமாக
புடவை – புடைவை
என்னைப் பொருத்தவரை – என்னைப்
பொறுத்தவரை
சில்லறை - சில்லரை
மக்கட் தொகை - மக்கட்டொகை,
மக்கள்தொகை
அவைதான் - அவைதாம்
வரட்சி - வறட்சி
அக்கரையில்லை - அக்கறையில்லை
அருகாமை - அருகில், அருகமை
மேதை - மேதகை
எந்தன் - என்றன்
வெவ்வேறு - வேறுவேறு
குருணை - குறுநொய்
குருவை நெல் - குறுவை நெல்
காலாகாலம் - காலகாலம்
புண்ணாக்கு - பிண்ணாக்கு
வாளாயிருந்தான் - வாளாவிருந்தான்
சாக்கடை - சாய்க்கடை
மென்மேலும் - மேன்மேலும்,
மேலும் மேலும்
உந்தன் - உன்றன்
காக்காப் பிடித்தல் - கால் கைப் பிடித்தல்
கோடெறி - கோடரி
வெட்டிவேர் - வெறிவேர்
சுவற்றில் - சுவரில்
தவறை - தவற்றை
அறைகுரை - அரைகுறை
முயற்சித்தான் - முயன்றான்
அன்னியர் - அந்நியர்
தமிழின் தூய்மையைக் கெடாது காக்கவேண்டிய முதன்மைப் பொறுப்பு தமிழால் பிழைப்பு நடத்தும் புலவர்களுடையது. அடுத்தது, தமிழைப் பேணி வளம் பெறச் செய்ய விழையும் தமிழ்ப் பெரியார்களின் பொறுப்பு. மூன்றாவதாகத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவருடைய பொறுப்புமாகும்.
தமிழின் முன்மை, எண்ணம், ஒண்மை சிறக்கத் தமிழ்நாட்டில் வாழ்வாரும், அலுவலின் பொருட்டு அயல்நாடு சென்றுறைவாரும், பிழைப்பின் பொருட்டு இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் போய்ப் பணிபுரிவாரும் தாயைப் போன்று தமிழைப் போற்றி வளர்ப்பாராக.
(நன்றி : கழகக் குரல், 25.07.76)
(தொடரும்)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
(வெருளி நோய்கள் 529-533: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 534-538
ஏளனமாகப்(Ridicule) பேசப்படுவது குறித்த பேரச்சம் ஏளன வெருளி.
பொதுவிடங்களில் ஏளனமாகப் பேசப்படுவோம் என்று அஞ்சுதல்; இதனால் தரம் தாழ்த்தப்பட்டதாக வருந்துதல்; தன் மதிப்பு குறைவதாகப் பேரச்சம் கொள்ளல்; கேலிப்பொருள் ஆக்கப்பட்டதாக வருந்துதல் ஆகியன இத்தகையோருக்கு ஏற்படும்.
தலைக்குனிவிற்கு ஆளாவோம் என்ற அச்சம், தாழ்வு மனப்பான்மை, தன்மதிப்புக் குறைப்பிற்கு ஆளாவோம் என்ற கவலை போன்ற வற்றால் கேலி செய்யப்பட்டாலும் கேலி செய்யப்படுவோம் என எண்ணினாலும் இப்பேரச்சம் வருகிறது.
தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள், தங்களைப் பிறர் ஏளனமாக எண்ணுவதாகக் கருதி ஏளன வெருளிக்கு ஆளாவதுண்டு.
‘பாகப்பிரிவினை’ திரைப்படத்தில் கண்ணதாசனின் “பிள்ளையாரு கோயிலுக்குப் பொழுதிருக்க வந்திருக்கும் பிள்ளையாரு இந்தப் பிள்ளை யாரு” என்னும் பாடலில், “நொண்டிக்கை, ஊளைமூக்கு” என்றெல்லாம் கேலி செய்து பாடுவதுபோல் வரும். எதிர்ப்பாட்டு பாடினாலும் இவ்வாறான கேலிக்காக அஞ்சுவது கதைத்தலைவனின் இயல்பு. அதுபோல் ‘பதினாறு வயதினிலே’ திரைப்படத்தில் தன் நாயகி கூறிய பின்னர், ‘சப்பாணி’ எனக் கேலி செய்வதால் நாயகனுக்குச் சினம் வரும். இவை போன்ற சூழலில் அடுத்தவர் கேலி செய்வதால் வெளியில் தலை காட்ட அஞ்சுதல், அடுத்தவருடன் பழகத் தயங்குதல், தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாதல் போன்ற நிலைகள் வரும்.
‘பாகப்பிரிவினை’ திரைப்படத்திலேயே கண்ணதாசனின்
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்,
தரத்தினில் குறைவதுண்டோ?,
உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்,
அன்பு குறைவதுண்டோ?,
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்,
தரத்தினில் குறைவதுண்டோ?,
உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்,
அன்பு குறைவதுண்டோ?,
சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்,
சீற்றம் குறைவதுண்டோ?,
என்று பாடல் வரும். இதுபோல் தன்னம்பிக்கை ஊட்டுவோர் இருப்பின் ஏளன வெருளி / கேலி வெருளி காணாமல் போகும்.
மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், மந்தப்புத்தியினர் போன்றவர்களை எல்லாம் கேலிசெய்யாமல் பரிவுடன் அணுகினால் யாருக்கும் ஏளன வெருளி ஏளன வெருளி / கேலி வெருளி வராது.
வன் சீண்டல்(raging) சூழலில் உள்ளவர்கள் இவ்வெருளிக்கும் ஆளாகிறார்கள்.
ஏளன வெருளி எனவும் கேலி வெருளி எனவும் தனித்தனியாகக் குறிக்கப்பெறுவனவற்றை ஒத்த தன்மை கருதி இணைத்துள்ளேன்.
cata என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் (கீழ்)மட்டமாகக் கருதுதல். அஃதாவது ஏளனம்/கேலி.
gelo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சிரித்தல். ஏளனமாக எள்ளி நகையாடலைக் குறிக்கின்றன.
00
எதையேனும் பெறுவது குறித்தான அளவுகடந்த பேரச்சம் ஏற்கை வெருளி.
பசுவின் தேவைக்காக, நம் முயற்சியில் பெறாமல் அடுத்தவரிடம் தண்ணீர் கேட்பதையும் பிச்சை என்று இழிவாகக் கூறுகிறார் திருவள்ளுவர். எனவே,
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.(திருக்குறள் 1066)
என்கிறார் திருவள்ளுவர். ஏற்பதை மறுத்து ‘இரவச்சம்’ என ஓர் அதிகாரமே அவர் படைத்துள்ளார்.
ஏற்பது இகழ்ச்சி(ஆத்திசூடி 8)
என்கிறார் ஒளவையார்.
இவ்வாறு பெறுவது தொடர்பான வெறுப்புரைகள் தமிழில் உள்ளன. அந்தவகையில் பெறுவது குறித்த அச்சமாக இஃது இருந்தாலும் நன்றுதான்.
கையூட்டு பெறுவதற்குப் பலர் அஞ்சுவதில்லை. என்றாலும் அச்சசூழலிலும் பேரச்சம் கொண்டு சித்தம் கலங்குவோர் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்.
மணக்கொடை பெறுவதில் பேரச்சம் கொண்டு மனம் நலிவுற்றவர்களை மன நல மருத்துவர்கள் தெரிவிக்க வேண்டும்.
00
ஏற்புடைமை அல்லது சரியாக இருத்தல் தொடர்பான அளவு கடந்த பேரச்சம் ஏற்புடைமை வெருளி.
அரசியல், சமயம், மெய்யியல், தனிப்பட்ட நம்பிக்கைகளால் இவ்வெருளி ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.
ortho என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ஏற்புடைமை/ சரியான.
00
ஏனங் கழுவி(dishwasher) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஏனங் கழுவி வெருளி.
ஏனங்கழுவி சரியாகச் செயல்படாது, ஏனங்களை ஒழுங்காகத் தூய்மை செய்யாது, செயல்பாட்டின் இடையே பழுதாகிவிடும் என்பனபோன்ற தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் கொள்வர்.
00
ஐங்னோணம் குறித்த அளவுகடந்த பேரச்சம் ஐங்கோண வெருளி.
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் படைத்துறைத் தலைமையகத்தின் பெயர் பெண்டகன்(The Pentagon). வெர்சீனியாவின் ஆர்லிங்டனில் உள்ள இதன் கட்டடம் ஐங்கோண வடிவிலானது. சிலர் இதை ஐங்கோண(பெண்டகன்) வெருளி என்கின்றனர். கனவுத் தீவிற்கான சண்டை(Battle For Dream Island) என்னும் வலைத் தொடரில் உள்ள பாத்திரங்களின் அடிப்படையிலும் இவ்வெருளியைக் கூறுகின்றனர். எனினும் அடிப்படை ஐங்கோண வடிவு என்பதால் ஐங்கோண வடிவம் மீதான தேதவையற்ற அளவு கடந்த பேரச்சம் என்பது எல்லாவற்றிற்கும் பொருந்தும். அதே நேரம் அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு அஞ்சுவோர் பெண்டகன் மீது பேரச்சம் கொள்வது இயற்கைதான்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 16 October 2025 அகரமுதல
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 14 : உம்மைத் தொடர்களில் ‘மற்றும்’ தேவையில்லை
தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை எனக் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மற்றும் எனச் சேர்ப்பது தவறாகும். மற்றும் என்பதை நீக்கிப் பின்வருமாறு குறிப்பிட வேண்டும்.
தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை
ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத் துறை
இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை
உணவு கூட்டுறவு அமைச்சர்
உள், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை
* கால்நடைப் பேணுகை மீன்வளத்துறை
கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை
கைத்தறி, கைத்திறன், சவுளி, கைந்நூல் துறை
சவுளி என்பது தமிழ்ச்சொல்லே. (ஞ்)சவுளி என்ற உச்சரிப்பு பெற்றதும் நாம் பிற சொல்லாகக்கருதும் நிலை ஏற்பட்டது. கைந்நூல் என்பதைக் காதி அல்லது கதர் என்றே பெரும்பாலும் கூறுகின்றனர்.
பரம்பரையாக ஒரு குழித்தறியில் கையால் நெய்யப்பட்டுக் கையால் நூற்கப்பட்டு காதி நெய்யப்படுகிறது. காதி என்பது குழி என்னும் பொருள் கொண்ட இந்திச்சொல் khad என்பதில் இருந்து பிறந்தது. இந்தியில் கதர்(Khaddar) என்றும் அழைக்கப்படுகிறது.
“காதியின் ஒரே அளவுகோல் அது கையால் நூற்கப்பட்டு கையால் நெய்யப்பட்டிருப்பதுதான்” எனக் காந்தி யடிகளே கூறியுள்ளார். (மகாத்மா காந்தியின் படைப்புகள் தொகுப்பு, தொகுதி 28, 1925) ஆனால் ஓர் இசுலாமிய அம்மையார் காந்தியடிகளுக்குக் கையால் நூற்ற துணியை அன்பளிப்பாகத் தந்த பொழுது அதனைப் பெற்றுக் கொண்டு மதிப்பு மிக்கது என்ற பொருளில் குறிப்பிட்டார். நெசவுத் தொழில் தமிழ்நாட்டின்மிகப்பழமையான சிறப்பான தொழில். எனவே, காதி என்றோ கதர் என்றோ குறிப்பிடாமல் கைந்நூல் என்றே சொல்லுவோம்.
* சமூக நலம் சத்துணவுத் திட்டத்துறை
சுற்றுப்புறம் வனத்துறை
சுற்றுலா, பண்பாடு சமய அறநிலையத் துறை
செய்தி சுற்றுலாத் துறை
தகவல் தொழில்நுட்பவியல் எண்மப் பணிகள் துறை
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல். (௲௨௱௬௰௧ – 1261)
என்னும் குறளில் திருவள்ளுவர் தலைவர் பிரிந்த நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டு விரல்களும் தேய்ந்து போயின எனக் குறிப்பிடுகிறார். விரலே கணக்கிற்கு அடிப்படையாக உள்ளது.விரல், விரற்கடை என்பன கணக்கில் இடம் பெறும் அளவீடுகளாகவும் உள்ளன. என்பதும் விரலைத்தான் குறிப்பிடுகிறது. digital என்பதும் இலக்கம், இலக்கமுறை; சொடுக்கெண்;எண்மம்; எண்மமுறை; என்னும் பொருள்களில் பயன்படுகிறது. எனவே நாம் , Information Technology and Digital Services Department என்பதைத் தகவல் தொழில்நுட்பவியல் எண்மப் பணிகள் துறை எனச் சொல்ல வேண்டும்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு வணிகத் துறை
தொழிலாளர் வேலைவாய்ப்புத் துறை
நகராட்சி நிருவாகம் குடிநீர் வழங்கல் துறை
நிர்வாகம் என்பது தவறு என்பதால் நிருவாகம் எனக் குறிப்பிடுகிறேன்.
நெடுஞ்சாலைகள் சிறு துறைமுகங்கள் துறை
* பணியாளர் பணியாட்சிச் சீர்திருத்தத் துறை
இத்துறையின் பெயரை இப்போது மனிதவள மேலாண்மைத் துறை (Human resource management department) எனப் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையர் நலத்துறை
மக்கள் நல்வாழ்வு குடும்ப நலத்துறை
மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை
வணிகவரி பதிவுத்துறை
வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை
பொருளியல் புள்ளியல் இயக்கம்
பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்புத்துறை
மதிப்பீடு செயல்முறை ஆராய்ச்சித்துறை
மருத்துவம் ஊரகநலப்பணிகள் துறை
மருத்துவ மனைகள் மருத்துவக் கல்லூரிகள்
மிகப்பிற்பட்டோர் சீர்மரபினர் நலத்துறை
கலை பண்பாட்டுத் துறை
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் கழிவுநீர் அகற்று வாரியம்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம்
தமிழ்நாடு தோட்டக்கலை மலைப்பயிர் துறை
கட்டுமான வடிவமைப்பு ஆராய்ச்சி
கட்டுமானம் பேணுகை
கட்டடப் பேணுகை கட்டுமான வட்டம்
என்பன போல்தான் குறிப்பிட வேண்டும்.
பராமரிப்பு எனக் குறிக்கப்படுவனவற்றைத்தான் நான் பேணுகை எனக் குறிப்பிடுகிறேன்.
மற்றும் எனக் குறிக்காமல் சுருக்கமாக (ம) என்றும் குறிக்கின்றனர். அதுவும் தவறு.
? “மற்றும்’ என்பது தமிழ்ச்சொல்தானே? பயன்படுத்தினால் என்ன தவறு?
விடை: “மற்றும்’ என்பது மேலும், மீண்டும் ஆகிய பொருள்களைத் தரும்
தமிழ்ச்சொல். இதனை “உம்’ (and) என்பற்கு மற்றாகப் பயன்படுத்தக் கூடாது. மேலும்.
மற்ற. பிற.
மற்றது. ஏனையது.
மற்றநாள். மறுநாள், நாளை, மறுநாள்
மற்றபடி. வேறுவகையில்.
மற்றவர். பிறர், ஏனையோர்
மற்று. மறுபடியும், ஓர் அசைநிலை
மற்றையது. குறித்த பொருளுக்கு இனமான வேறு ஒன்று
மற்றொன்று. பிறிதொன்று.
என்பன போல் பொருள் உள்ளனவே தவிர “உம்’ பொருள்பட எச்சொல்லும் இல்லை. மேலும் “உம்’ வரக்கூடிய இடங்களில் சான்றாக அலுவலரும் ஆசிரியரும் என்பது போல் குறிக்க வேண்டிய இடங்களில் ஆசிரியர் அலுவலர் என “உம்’ பயன்படுத்தாமல் குறிப்பதே மரபு. இது போன்ற இடங்களில் “உம்’ தொக்கி (வெளிப்படாது மறைந்து) நிற்பதால் உம்மைத் தொகை என்கிறோம். நாம் இரவு பகல், ஆடு மாடு, இயல் இசை நாடகம், சேர சோழ பாண்டியர் என்று கூறுவோமே தவிர இரவு மற்றும் பகல் ஆடு மற்றும் மாடு, இயல் மற்றும் இசை மற்றும் நாடகம், சேரர் மற்றும் சோழர் மற்றும் பாண்டியன் எனக் கூறுவதில்லை.
அல்லது
இரவும் பகலும்
ஆடும் மாடும்
இயலும் இசையும் நாடகமும்
சேரரும் சோழரும் பாண்டியரும்
எனலாம்.
இவ்வாறு சேர சோழ பாண்டியர், இரவு பகல் என உம்மைத்தொகை வரும் பொழுது வல்லினம் மிகாது.
உம்மைத் தொகை தவிர, போன்ற, முதலிய ஆகிய என்னும் சொற்களையும் பலரும் சரியாகக் கையாள்வதில்லை.
கேள்வி: இவற்றில் என்ன வேறுபாடு உள்ளது? ஒன்று போல்தானே பயன்படுத்துகிறோம்?
விடை: பொருள் வேறுபாடின்றி அவ்வாறு பயன்படுத்துவது தவறு.
ஒன்றை அல்லது ஒருவரை மட்டும் எடுத்துக்காட்டாகக் கூறி அதனை அல்லது அவரைப் போல என விளக்கும் இடங்களில் “போன்ற’ எனக் குறிப்பிட வேண்டும்.
சான்றாக,
மதுரை போன்ற ஆற்றுப்பாசன ஊர்களில் எனக் குறிப்பிடின், ஆறுகள் பாய்ந்து நீர்ப்பாசனத்திற்கு உதவும் பல ஊர்களில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டு, இதுபோன்ற பல ஊர்கள் உள்ளமையை உணர்த்துகிறோம்.
“முதலிய’ என்பது மேலும் தொடர்ச்சியாக வேறு உள்ளனவற்றையும் குறிப்பிடுகின்றது.
ஆதிதிராவிடர் நலத்துறை கலை பண்பாட்டுத்துறை முதலிய துறைகளில் தமிழ் ஆட்சி மொழிச் செயலாக்கம் சிறப்பாக உள்ளது என்றால் இவ்வாறு இருக்கக் கூடிய துறைகளில் இரண்டு துறைகளை மட்டும் சுட்டிக் காட்டியுள்ளதாகப் பொருள்.
அதே நேரம் “ஆகிய’ என்பது முற்றாக அமைந்து விடுகிறது.
மதுரை, சேலம், சென்னை ஆகிய நகரங்கள் என்றால் இம்மூன்று ஊர்களை மட்டும்தான் குறிக்கின்றோம். இவற்றைப் போன்று (இந் நேர்வில்) மேலும் ஊர்கள் உள்ளனவாகப் பொருள் இல்லை. தெளிவாக வரையறுத்துக் கூறுகின்றோம்.
அல்லது சேர, சோழர், பாண்டியர் ஆகியோர் எனக்குறிக்க வேண்டும்.
உயர்திணையாய் இருப்பின் பாவலர் முதலியோர் என்பது போல் முதலியோர் எனக் குறிக்க வேண்டும்.
எனவே “மற்றும்’ என்ற சொல்லைத் தவிர்த்து இடத்திற்கேற்ற போல்
உம்மைத் தொகை
உம்மை விரி
போன்ற, போன்றன, போன்றவை, போன்றோர்
முதலிய, முதலியன, முதலியவை, முதலியோர்
ஆகிய, ஆகியன, ஆகியவை, ஆகியோர்
என இடத்திற்கேற்ற இணைப்புச் சொற்களைக் கையாள வேண்டும். இவற்றிற்கு முரணாக “மதுரை ஆகிய மாவட்டங்களில்’ “இயல் இசை நாடகம் முதலிய 3 துறைகளில்’ “சேர, சோழ, பாண்டியர் போன்ற மூவேந்தர்கள்’ எனக் குறிப்பிடுவது தவறாகும்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்