அதிகார அமைப்பு
பொதுவுடமை தத்துவத்தை தவிர மற்ற அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் மதம் மற்றும் கடவுளின் கருத்தை சார்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் 2600 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு யுக்தி அடிமையை "கர்ம வினையின் காரணமாக இவ்வாழ்வு அமைந்தது" என்றும் கர்மயோகத்தால் மறுமை சிறப்படையும் என்றும் கூறி உழைப்பு சுரண்டல் செய்தது இன்றளவும் வேலை செய்கிறது. (இன்றளவும் சம்பள உயர்வின்போது தனியார் நிறுவனங்களில் பகவத் கீதையின் “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” என்ற வாசகம் அனைவரும் மத்தியில் சுழன்று கொண்டிருப்பது ஒரு வேடிக்கையான நிதர்சனமே). மேலும் மக்களை பொதுத்தன்மையுடைவர்களாக மாற்றி, சிறப்புகளை குறைப்பதால் ஆள்பவர்களுக்கு மிக எளிமையாகிறது. எளிமையாக சொல்லப்போனால் ஆறாவது அறிவை விடுத்த மனித விலங்குகளை ஆள்வது மிகச்சுலபம்.
ஏதாவது ஒரு சிந்தனையினூடே மக்களுடன் உணர்வு பூர்வமாக இணைவது ஒரு அரசுக்கு தேவைப்படுகிறது. அது புதிய சிந்தனையாக இருக்கவேண்டும் என்பதில்லை. பல்லாயிரம் ஆண்டுகளின் வெற்றியான பிரம்மதத்துவமும், மறுபிறவி தத்துவமும், கர்மவினையும், கடவுளிடம் சரணாகதி என்றெல்லாம் ஏற்கனவே உள்ளது. இதில் இணைவது ஒரு அரசியல் கட்சிக்கு மிகச் சுலபமே. மக்களின் உணர்வுகள் மதம், மொழி இனம், தேசம் ஆகியவற்றில் வேர்களாக உள்ளது. இந்த நான்கிலும் சிக்காத பரந்துபட்ட உலகை நினைப்பவன் லோகாயகவாதியாவான். மதம் மொழி இனம் இவைகள் சமுதாய சக்திகளின் தாக்கம் கொண்டவையே ஆகும். இவை சமுதாய இயக்கத்தின் தூண்டுகோலாகவும் இருக்கிறது. கி.மு ஆறாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் மதம் மொழி இனம் இவற்றைவிட தேசமே பிரதானமாக கருதியது. அங்கு மதம் மொழி இனம் என அதிக வேறுபாடு இல்லாமல் இருந்ததே இதற்கு காரணம். ஆனால் இந்தியாவில் இன்றைய நிலை மதம் மொழி இனம் மற்றும் தேச உணர்வுகள் நிறைந்ததாக உள்ளது. மொழியால் இனமும் தேசமும் அடையாளம் காணப்படும் சூழ்நிலை கொண்டது இன்றைய இந்தியா. இதனால் எல்லா அரசியல் செயல்பாடுகளும் மதம் மற்றும் மொழிகளின் அடிப்படையிலேயே உள்ளது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின் இந்த தேசம் மதத்தால் பிளவுண்டு இரு தேசங்களாக ஆனது. ஆனால் தேசத்தில் பல பகுதிகள் பல மொழிகளாக பல கலாச்சாரங்களாக பற்பல முகங்களை கொண்டிருக்கிறது. இந்தியா இதோ உடைந்து விடும்! என சோவியத்தில் வரலாற்றைப் பார்த்த பல மேலைநாட்டு அறிஞர்கள் கருத்துக்கள் கூறினார். (காந்திக்குப் பின் இந்தியா என்ற நூலில் ராமச்சந்திர குஹா).பலவிதமான எதிர்பார்ப்புகள் தோன்றின. தேச ஒருமைப்பாட்டிற்காக வேற்றுமையில் ஒற்றுமை என்ற குரல் எழும்பியது. பல அத்தியாவசியமான தேசிய ஒருமைப்பாட்டுக்கொள்கைகள். தேசிய கட்டமைப்பு பட்டறைகள் நடத்தப்பட்டன. வரலாறுகள் திரும்ப திருத்தி மாற்றி எழுதப்பட்டன. இவைகளில் ஏதோ ஒன்று அல்லது எல்லாமோ ஒரு காரணமாக அமையலாம் இந்தியா இந்தியாவாக இருப்பதற்கு. (இது மேலும் பண்டைய இந்தியா என்ற கட்டுரையில் விரிவாக விளக்கப்படும்). நாம் ஒரு விசயத்தை மறக்கக்கூடாது 1947 இல் திடீரென்று இந்தியா தோன்றி விடவில்லை. வரலாறுகள் திடீரென்று எழுதப்படவில்லை. இவையெல்லாம் இரண்டு தலைமுறையை முன்னரே ஆங்கிலேய ஆட்சியில் நடந்து கொண்டிருந்தவை. அவைகள் தலைமுறைகளால் மெதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. நாட்டின் அதிகாரம் என்பது சுதந்திர காலத்திலும் இப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கமுடியாது, இருப்பதாகவும் தெரியவில்லை. இனி நாடு துண்டாடப்படும் என்ற எண்ணம் தேவையில்லாதது.தனிதேசிய நடைமுறை சாதகமானதும் இல்லை. ஆனால் தேசியம் என்பதும் ஐக்கியம் என்பதும் முரண்பாடுகள் கொண்டதாக காலப்போக்கில் மாறினால் இயக்கவியதின் தத்துவப்படி அது மோதிக் கொள்ளலாம். குணாம்சமாறுதல் அடைந்து அது நடைமுறை அரசியலமைப்பை மாற்றலாம். இதன் முடிவு மீண்டும் ஐக்கியமாகவோ அல்லது தனி சுயேச்சை தேசமாகவோ மாறலாம். இவை நடக்க சாதக சூழ்நிலையும் தத்துவவேட்கையும் கொண்ட சூழல் தேவை. இன்றைய சூழலில் மாநில உரிமை என்பது பிரிவினையை தூண்டுவதாக கருதப்படுகிறது. அரசியல் தத்துவசிந்தனையின் இடமாக இல்லை. மதம் மொழி சாதியை வைத்துத்தான் எல்லோரும் அரசியல் செய்கிறார்கள். ஊழல் மட்டும் கொள்ளையடிப்பதில் அரசியல்வாதிகள் தேர்ந்துவிட்டனர். அவர்களை எந்த கர்மவினையோ கடவுள்எண்ணமோ தடுத்து நிறுத்தமுடியாது. மக்களின் துயரம் இவர்களை எதுவும் செய்வதில்லை. ஆட்சி மாற்றம் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை என்பது மக்கள் மனதில் பதிந்துவிட்டது. மாற்று அரசு அமைய வேண்டி மக்களின் முடிவு சில நேரம் சரியாகவும் பல நேரம் தவறாகவும் இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாத ஒரு கட்சி, ஐந்து அல்லது பத்து வருட ஆட்சியில் இல்லாமல் இருப்பது, ஒரு வேட்டை நாயை உணவில்லாமல் கூண்டுக்குள் வைப்பதற்கு சமம். அது வெளியே வந்தால், கதவை திறந்தவனுக்கு நன்றி சொல்லாது. ஈரலையோ குடலையோ கேட்கும், இல்லையென்றால் நேரே கழுத்தை குறிவைக்கும். இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், இந்த நாட்டையும் மாநிலத்தையும் அவர்கள் பார்க்கும் பார்வை என்பது அரேபிய இரவு கதைகளில் கொள்ளையர்கள் குகையில் உள்ள செல்வங்களை பார்த்தால் எந்த வகையான உற்சாகம் ஏற்படுமோ அதுபோன்றது. அப்படியானால் பதவிக்கு எதிரான நிலை (Anti-incumbency) எந்த விதத்திலும் பலனளிக்காதா?.இது ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களை கீழே இறக்குமே தவிர கொள்ளை ஊழல் ஆகியவற்றை முற்றிலும் இல்லாமல் ஆக்கி விடாது. குகையின் சாவியை ஒருவரிடம் இருந்து பிடுங்கி மற்றொருவரிடம் கொடுக்கிறோம். பின் நாம் சொல்கிறோம் அவர் ரொம்ப கொள்ளை அடித்தார் நீங்கள் சிறிது குறைவாகவே கொள்ளையடிப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த நிலைக்கு நாம் ஆனந்தப்பட்டு கொள்ள வேண்டியதுதான்.
முரண்பாடுகளைப்பற்றி தத்துவ ஆசிரியர்களைவிட நன்றாக புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் ஊழல் விசயத்தில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல் முரண்பாடுகளே இல்லாமல் ஒற்றுமையோடு செயல்படுகிறார்கள். இதில் கடவுள் நம்பிக்கை உள்ளவர் இல்லாதவர் என்ற பாகுபாடு இல்லை.அதிகம் நன்றாக படித்தவனோ அல்லது பெயரையும் கையெழுத்தியும் தவிர ஏதும் அறியாதவனோ, பலமொழிகளை கற்றவனோ, தாய் மொழியின் மேல் ஆர்வம் கொண்டவனோ, இவர்கள் யாராயிருந்தாலும் உள்ளுக்குள் முரண்பாடுகளே இல்லை. செயல் அளவில் அவர்கள் செய்வது ஒன்றே அளவில் பெரியதும் சிறிதுமாக வித்தியாசப்படலாம். இந்நிலை மாற என்ன செய்ய வேண்டும்? இது பலகாலமாக கேட்கப்பட்ட கேள்வி. இந்தக் கேள்வி அனைவரும் கேட்டாலும் அதற்குத் தகுந்த பதில் இன்னமும் இல்லை. ஆனால் அந்த பதில் எதிலிருந்து வரும் என்று நான் நிச்சயமாக கூற முடியும். நம் நாட்டின் வரலாற்றில் மக்கள் புரட்சி என்பது ஒருமித்து ஏற்பட்டதாக தெரியவும் இல்லை. சில இடங்களில் ஏற்பட்டது அது மிகவும் அற்புதமான வரலாற்று நிகழ்வுகளை நமக்கு கொடுத்து (சிப்பாய் கலகம். ஆனால் அது சரியான முறையில் பதிவு செய்யப்படவும் இல்லை. அது தோற்றது உள்நாட்டு அரசர்களின் சுயநலம் மற்றும் துரோகத்தால்).
நம் நாட்டில் மக்களின் ஏகோபித்த வேட்கை என்பதோ புரட்சி என்பதோ தோன்ற சூழ்நிலை இன்னும் மாறவேண்டும். இங்கு தனி மனித தேவை அல்லது சுயநலம் என்பது அதிகம். அதனால் பொய்யும் புரட்டும் அதிகம். இல்லாவிட்டால் 1872ல் ஆங்கிலேயன் இந்தியாவிற்காக சாட்சிய சட்டத்தை கொண்டு வர வேண்டிய அவசியமே இல்லை. இங்கு மக்களின் தேவை என்பது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அனைவருக்கும் சுகாதாரமான இடம் அல்லது ரொக்கமாக ஒரு லட்சம் என்றால் யார் சுகாதாரமான இடத்தை தேர்ந்தெடுப்பார்கள். இந்த ஒரு லட்சம் என்பது ஆயிரம் ரூபாய் வரை கூட செல்லலாம். சென்றாலும் மக்கள் பணத்தையே நம்புவர். இது ஒரு அரசுக்கு அவமானமே ஆனால் அதைப்பற்றி கவலையே இல்லை.
அப்படியானால் மக்கள் புரட்சி என்பது ஏற்படாதா? மக்கள் ஓட்டு போடவே வருவதில்லை அவர்கள் அந்த விடுமுறையை நன்றாக செலவழிக்க நினைக்கிறார்கள். அவர்கள் எப்படி புரட்சி செய்ய முடியும். முதலில் இந்த நாட்டிற்கு மாற்றங்கள் புரட்சியினாலா அல்லது சீர்திருத்தத்தினாலா என்ற விவாதம் இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மக்களின் சகிப்புத்தன்மை என்பது பல தலைமுறைகளாக ஒரு மரத்தில் ஆணிவேர் பலகாத தூரம் செல்வது போலவே உள்ளது. இந்த சகிப்புத்தன்மை என்பது தலைமுறைக்காக மரபணுவில் நுழைந்து வட்டதோ என்று சந்தேகிக்கும் அளவிற்கு இது உள்ளது.
இவைகள் அனைத்தும் மாற நாம் கீழ்காணும் அறிகுறிகளை எப்பொழுது காண்கிறோமோ அப்பொழுது நமக்கு அந்த நம்பிக்கை பிறக்கும்.
1. மக்கள் அனைவரும் தன்னலம் இல்லாமல் அயலவரின் நலம் குறித்து சிந்தித்தல், செயல்படுதல்.
2. மக்களிடம் கதைகள் கவிதைகள் மட்டும் இல்லாமல் மெய்யியல் குறித்த தேடல்.
3. கடந்த கால வரலாற்றின் பெருமையை மட்டும் கொள்ளாமல், நிகழ்காலத்தில் அவலங்களை குறித்து சிந்தித்தல், அதை மற்றவரிடம் விவாதித்தல்.
4. கண்ணைமூடி வேறு உலகை காணாமல், செல்பேசியிலும் சமூக ஊடகத்திலும் தேவையில்லாத செய்திகளில் மூழ்காமல், நிதர்சன யதார்த்த வாழ்வை கவனித்தல்.
5. சிறுவர்கள், மாணவர்களிடம் சமுதாயத்தின் நிலையை பற்றி கலந்துரையாடுதல்
6. மக்கள் பெரும்பாலும் அரசியல் நிகழ்வில் ஆர்வம் கொள்ளுதல், எது சரி? எது தவறு? என்று விவாதித்தல்.
7. சக மனிதனை மதித்தல் அவனது சுதந்திரத்தை காப்பது தன்கடமை எனக்கொள்ளல்.
8. மதம் சாதி பிரிவினை கூறுகளையும் கண்டறிந்து அது அரசியல் ஆதிக்கம் கொண்டால் அதை தவிர்த்தல்.
9. தன் தேவைகள் என்னவென்று அறிதல்
10. கல்வி விஞ்ஞானமாகவும் எதார்த்தமான சிந்தனையுடனும் இருத்தல்.
11. கல்வியை வேலைக்காக மட்டும் உபயோகிக்காமல், வாழ்க்கையிலும் உபயோகித்தல்.
12. பொருள்களில் உள்நாட்டு உற்பத்தியை பற்றி சிந்திக்க விவாதித்தல்.
13. தனிமனித உற்பத்தி மற்றும் விற்பனையை தடுத்தல்.
14. மக்கள் ஒற்றுமையான சமுதாயமாக வேறு பிரிவினை கூறுகள் இல்லாமல் ஏற்படுத்துதல்.
15. சட்ட அறிவை மக்களிடம் கொண்டு சேர்த்தல்
16. தத்துவ ஆசிரியர்கள் இன்றைய நிலைக்கு தேவையான தத்துவங்களை பரப்புதல் மற்றும் கலந்து உரையாடுதல்.
எப்பொழுது நாம் இந்த அறிகுறிகளை இடையறாது பார்க்கிறோமோ அன்று நாம் ஒன்றை தீர்மானம் செய்யலாம். மனம் என்பது சமுதாயத்தின் பிரதிபலிப்பு. அதேபோல் தனிநபரின் மனம், சமுதாய மாற்றத்திலும் பங்கேற்கிறது. இது நடந்தால் நாம் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கலாம். இல்லையென்றால் நம் வரலாறு காட்டிய அதே பழைய நிகழ்வுகளின் படி நமது நாட்டின் மாற்றம் என்பது இந்நாட்டிற்கு வெளியே எங்கோ காத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு நாம் கொடுக்கும் விலை ஈடுகட்ட முடியாததாகவே போய்விடும். இங்குள்ள மனிதர்களின் ஒற்றுமையே அவர்களின் சுதந்திரம். ஒவ்வொருவரின் சுதந்திரத்தை காப்பதே மற்றவரின் கடமையாக இருக்க வேண்டும். இந்த சமுதாய நிலையை கண்டு வேட்கைக்கொள்ளல் வேண்டும். ஒன்று இதை சீர்திருத்த வழியாக இருக்கலாம். மற்றொன்று தேசத்தின் நலன் வெளி சக்திகளால் பாதிக்கப்படுமாயின், அது பல இழப்புகளை கொடுத்து ஒரு மாற்றத்தை தரும். இதில் எந்த ஒன்று நடந்தாலும் அது இயக்கவியலின் படியே நடக்கும் என்பதே நிதர்சனம்..
இங்ஙனம்
ஜனா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/k68H3J82B8c/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/d8b2ae57-094d-4494-ac73-c9c80f2b12ffn%40googlegroups.com.