தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்கள் 📚📚📚

51 views
Skip to first unread message

தேமொழி

unread,
Nov 9, 2025, 11:58:41 AMNov 9
to மின்தமிழ்
tholmanitha-inangalum-manithakula-idapeyarvum_FrontImage.jpg

திருமதி சுபாஷினி அவர்களின் “தொல்மனித இனங்களும் மனித குல இடப்பெயர்வுகளும் ” எனத் தலைப்பிடப்பட்ட  நூலை ஆர்வத்தோடு படித்து முடித்தேன்.

டேவிட் ரைஹ் எழுதிய WHO ARE WE AND HOW WE GOT HERE மற்றும் டோனி ஜோசப் எழுதிய EARLY INDIANS ஆகிய இரண்டு   நூல்களின்  சாராம்சத்தை எளிமைப் படுத்தி வழங்கியுள்ளார்

மரபணு ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட  மேற்கண்ட இரு நூல்களும் தீவிரமான விஞ்ஞானப் பாடங்களாகும்.  அவற்றை அனைத்து தரப்பினரும் புரிந்து  கொள்ளும் வகையில் எழுதியுள்ளார்.

தொல் மனித இனங்களின் வகைகள், அவைகளின் கால கட்டங்கள், இடம் பெயர்வுகள் ,  அழிவுகள், நவீன மனிதர்கள் ஆகியோர் குறித்த ஆய்வுகளைத் திறம்பட விவரித்துள்ளார் .

தொல்மனிதர்கள் வட ஐரோப்பாவிலிருந்து ஆஸ்திரேலியா சென்றடைந்தது, ஆப்பிரிக்காவிலிருந்து நவீன மனிதர்கள் உலகம் முழுவதும் இடம் பெயர்ந்தது, தற்போதைய ஈரான் பகுதியிலிருந்து தொல்  மனிதர்கள ஆப்பிரிக்காவிற்கு இடம்
 பெயர்ந்து விவசாயம் செய்தது, இவை அனைத்தும் 50000 ஆண்டுகள் முதல் 7000 ஆண்டுகளுக்கு முன்பு வரை நிகழ்ந்திருப்பது போன்ற தகவல்கள் மிகுந்த வியப்பை உண்டாக்குகின்றன.

மனித இனங்கள்,  காலப் போக்கில் எவ்வாறு, எங்கே கலப்பினங்களாக மாறின, தூய்மையான இனம் என்று ஒன்றும் இல்லை ஆகவே சாதி, இனம் போன்ற வேறு பாடுகள் பொருளற்றவை என்பதை ஆணித்தரமாக விளக்கியுள்ளார்.

அவருடைய உயரிய தமிழ் நடை, இந்நூலிற்கு மணி மகுடம்.

அவர் எழுதிய நூல்களில் நான் படித்த முதல் நூல் இது. அவருடைய மற்ற நூல்களையும் படிக்க வேண்டிய ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

வாழ்த்துக்கள் திருமதி. சுபாஷினி.

அ. கா. விசுவநாதன்
​​​​​​​​​​​​​​​​​​​​​​​

____________________
​​​​​​​​​​​​​​​​​​
தொல்மனித இனங்களும் மனிதகுல இடப்பெயர்வுகளும்
விலை: ₹180
ஆசிரியர்: க. சுபாஷிணி
வெளியீடு: தமிழ் மரபு அறக்கட்டளை
கிடைக்குமிடம்
https://www.commonfolks.in/books/d/tholmanitha-inangalum-manithakula-idapeyarvum

தேமொழி

unread,
Nov 23, 2025, 5:21:22 PM (4 days ago) Nov 23
to மின்தமிழ்

R Balakrishnan Indus Valley English Book.jpg 

கடந்த ஆண்டு சிந்துவெளி ஆய்வாளர் திரு ஆர். பாலகிருஷ்ணன் அவர்களது பேட்டி அடங்கிய தமிழில் நாம் வெளியிட்ட சங்க இலக்கியம் எனும் சிந்துவெளி திறவுகோல் என்ற நூல் இவ்வாண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தற்போது தயாராக உள்ளது.

வரலாற்றை ஆங்கிலத்தில் அறிந்து கொள்ள இந்த நூல் உங்களுக்கு உதவும். உங்கள் வீட்டின் நூலகத்திற்கு இந்த நூலை வாங்கி வாசித்து மகிழுங்கள்.

விலை ரூ120/-
இணையம் வழி நூலைப் பெற
https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation


தேமொழி

unread,
Nov 24, 2025, 3:33:30 AM (4 days ago) Nov 24
to மின்தமிழ்
tamizhar-pulappeyarvu_FrontImage.jpg 

தமிழர் புலப்பெயர்வு
முனைவர் க. சுபாஷிணி

தமிழ் மரபு அறக்கட்டளை(2024)
நூல் கிடைக்குமிடம்:
https://www.commonfolks.in/books/d/tamizhar-pulappeyarvu

பொதுவாக ஒரு புத்தகத்தை வாசித்து அதைப்பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததில்லை; வாசிப்பது சிந்திப்பது என்று மட்டுமே இயல்பாக இருந்தது. ஆனால் முனைவர் க. சுபாஷினி பதிவு செய்கின்ற புத்தகத் திறனாய்வுகளை பார்க்கும்போது நாமும் ஒருமுறை முயற்சி செய்யலாம் என்று அதுவும் சுபாஷினி அவர்கள் எழுதிய தமிழர் புலப்பெயர்வு நூலைப்பற்றி எழுதினால் நன்றாக இருக்கும் என்று இப்பதிவை தொடர்கிறேன்.

கடந்தாண்டு இறுதியில் தமிழ் மரபு அறக்கட்டளை குழுவுடன் குடியம் மரபுப்பயணம் மேற்கொண்ட போது இந்த புத்தகத்தை நான் வாங்கினேன். 10 அத்தியாயங்களுடன் கிட்டதட்ட 350 பக்கங்களைக் கொண்ட நூல் என்பதால் இரண்டு வாரத்திற்குள் வாசிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் வேறு பல காரணங்களால் அப்போது தொடரமுடியவில்லை. அண்மையில் மீண்டும் முயற்சி செய்து நாளொன்றுக்கு மூன்று முதல் நான்கு மணிநேரம் என்ற கணக்கில் நான்கு நாட்களில் பக்கங்களைப் புரட்டிவிட்டேன்; நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நூலை முழுவதுமாக வாசித்த திருப்தி.

சுருக்கமாகச் சொல்வதென்றால் இந்த நூல் மன்னர்களை நோக்கிய வரலாறு அல்ல மாறாக ஒரு மொழியை அடையாளமாகவும் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை வேராகவும் கொண்ட இனத்தின் பயணத்தைப் பற்றிய வரலாறு எனக் கூறலாம். காலச்சூழல்கேற்பக் கடந்த 2500 ஆண்டுகளில் எவ்வாறு அந்த இனத்தின் கிளைகள் சுருங்கி விரிந்தன எவ்வாறு அதன் அடையாளம் ஏற்றம் இறக்கம் கண்டன என்பனப்போன்றது. நூலாசிரியர் இவை அனைத்தையும் தக்கச் சான்றுகளுடன் பல்வேறு துணை நூல்களின் உதவியுடன் பற்பல தகவல்களுடன் ஆய்வு நோக்கிலும் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆவணமாகவும் எளிய நடையில் நேர்த்தியாக தொகுத்திருக்கின்றார்.

முதல் ஐந்து அத்தியாயங்களில் பயணத்தின் மையப்புள்ளியாக கடல்கடந்த வணிகமும் தத்துவ அடிப்படையிலான சமய விரிவாக்கமும் அமைந்திருக்கிறது. அடுத்த அத்தியாயங்களில் பயணத்தின் காரணங்களாகப் பஞ்சம், போர், கொள்ளை நோய் பிறகு கல்வி மற்றும் தொழில் ஆகியவை கூறப்படுகிறது; வணிகமானது காலனித்துவ கூட்டு-பங்கு நிறுவனமாகவும், வலிகள் நிறைந்த அடிமை வியாபாரமாகவும் பின்பு ஒப்பந்த தொழிலாகவும் உருமாறுகிறது; சமயமானது முதலில் அன்றாட பிழைப்புக்கு எது உகந்தது என்ற அடிப்படையில் தொடங்கி பிறகு பண்பாடு, கோயில் கட்டுவது என்ற வகையில் வெளிப்படுகிறது. கடைசி அத்தியாயம் தனிநாயகம் அடிகளார் மேற்கொண்ட உலகளாவிய வேர்களை தேடும் பயணத்தை முன்நிறுத்தி அவர் ஆய்வில் வெளிக்கொணர்ந்த தமிழின் பெருமைகளை பறைச்சாற்றுகின்றன. மேலும் உளவியல் அடிப்படையில் தாயகம், தாய்நாடு என்ற கருத்தை முன்வைத்து முடிவடைகிறது.

ஆரம்பப்புள்ளி என்று நூலாசிரியர் பொ. ஆ. மு 5ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்திலிருந்து தொடங்குகிறார். தற்போதைய தொல்லியல் சான்றுகள் தமிழ் நிலத்தில் இதற்கும் பல நூற்றாண்டு முன்னரே குடியேற்றங்கள் இருப்பதை உறுதிப்படுத்தினாலும், பயணங்கள் தொடர்பான வரலாற்று நிகழ்வுகள் பொ. ஆ. மு 5ஆம் நூற்றாண்டுகளிலிருந்தே இந்திய நிலப்பரப்பில் பதிவாகியுள்ளன. அவ்வாறே நூலாசிரியர் ஒருபுறம் கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரடோட்டஸ் (Herodotus) எழுதிய இந்தியாவைப் பற்றியப் பயண ஆவணம், மறுபுறம் புத்தரின் அறநெறி கருத்துக்களும் அதைத்தொடர்ந்த பௌத்த பரவல், இன்னொருபுறம் மகாவம்சம் குறிப்பிடும் விஜயனின் இலங்கை வருகை என்று எடுத்துக்காட்டுகிறார்.

பல்வேறு அறியத்தகவல்கள் நூலில் சொல்லப்பட்டு இருப்பதனால் அவற்றில் ஒன்றிரண்டைப் பற்றி மட்டும் என்னுடைய கருத்தையும் சேர்த்து சற்று விரிவாக இங்கு முன்வைக்கிறேன்.

நூலாசிரியர் பண்டைய இந்தியாவை வரைபடங்கள் மூலம் காட்சிப்படுத்தும் போது தமிழ் நிலப்பகுதி என்பது பெருவாரியானத் தென்னிந்தியப்பரப்பு மற்றும் இலங்கையும் உள்ளடக்கியதாக உள்ளது. இதை உற்றுநோக்கும் போது எனக்குள் எழுகின்ற கேள்வி என்னவென்றால் எப்படி தமிழ் பேசும் மக்கள் வடவேங்கடம் என்று இன்றறியப்படும் திருப்பதிக்கும் தென்குமரி என்கிற குமரிமுனைக்கும் இடையில் மட்டுமே நெடுங்காலமாக வாழந்திருக்க முடியும்? அப்படி அந்த நிலப்பரப்பு எந்தவொறு சுருக்கமும் விரிவும் அடையாமல் நிலையானதாகவே இருந்ததென்றால் அது எனக்கு ஆச்சரியமும் வியப்புமாக இருக்கிறது.

இன்றைய காலத்திலுருந்து சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் நிலத்திலிருந்து புறப்பட்ட பயணங்கள் நிறைய குடியேற்றம் கண்டிருக்கும். ஏனென்றால் தமிழகத்திற்கும் கிழக்காசிய பகுதிகளுக்கும் நெருங்கிய வணிக மற்றும் சமயத் தொடர்பு இருந்ததைச் சீனத்துறவிகளின் பயணக்குறிப்புகள் விவரிக்கின்றன. அடுத்ததாக துரக்கிழக்காசியாவில் காணப்படும் மொழியியல் மற்றும் சில தொல்குடி மக்களுடனான மரபணு ஒற்றுமைகள் குடியேற்றங்களுக்கான சான்றாகப் பார்க்கப்படுகிறது. அதற்கடுத்ததாக 14ஆம் நூற்றாண்டு வரையில் தென்கிழக்காசியாவில் கிடைத்தப் பல கல்வெட்டு ஆதாரங்கள் தமிழகத்திலிருந்து சென்ற வணிகக்குழுக்கள் முக்கியமாக திசையாயிரத்து ஐந்நூற்றுவர் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஆயினும் நூலாசிரியர் இக்குடியேற்றங்கள் இன்றளவும் ஏதேனும் தமிழ் அடையாளத்துடன் அறியப்படுகிறதா? என்கிற வினாவை எழுப்புகிறார். மேலும் அவர் அதற்கான ஆய்வுலகின் விரிவான தேடுதலையும் அதன் தேவையையும் எடுத்துரைக்கிறார். ஆக என்னத்தான் பழம்பெருமை இருந்தாலும் இன்றைய சூழலில் நமது பெருமையை மற்றவர்களுக்கு உணர்த்துவது நாம் எடுக்கும் முன்னேற்பாடுகளின் வழிதான்.

அவ்வகையில் இன்றளவும் அறியப்படும் தமிழ் புலம் கொண்ட குடியேற்றங்கள் பொ. ஆ. 14ஆம் நூற்றாண்டுக்கு பின் படிப்படியாக அரங்கேறியதாக வரையறுக்கிறார் நூலாசிரியர். இக்கால்கட்டம் தமிழ் இஸ்லாமிய வணிகர்கள் அதிலும் குறிப்பாக மரைக்காயர்கள் கோலோச்சிய காலம் எனப் பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் கிழக்காசியாவில் மலாக்காவை மையமாகக் கொண்டு நிலவிய இஸ்லாமிய சமயப்பரவல் மற்றும் தமிழ் இஸ்லாமியர்களுக்கு கப்பல் கட்டுமானத்தில் இருந்த முதிர்ச்சி என்றும் கூறலாம். இதைத் தொடர்ந்து புதிய குடியேற்றம் என்று பார்க்கும் போது மலாக்கா செட்டி (Peranakan Indians) எனும் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த வணிகர்களின் குடியேற்றத்தை சொல்லாம். காலப்போக்கில் இவர்கள் உள்ளுர் மலாய் அல்லது சீன இனத்து மக்களோடு திருமணக் கலப்புகளின்வழிப் புதிய பண்பாட்டு மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளனர். பழந்தமிழரின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனும் வாழ்வியல் சிந்தனையை ஒத்ததாக இப்பண்பாட்டு மாற்றம் இருப்பதைக் காணலாம்.

இவ்வாறு வணிக குடியேற்றங்கள் ஒரு பக்கம் தொடர்ந்தாலும், மற்றொரு பக்கம் தமிழ் நிலத்திலிருந்து மக்கள் அடிமைகளாகவும் அயல்தேசங்களுக்கு அனுப்பபட்டனர் என்பதை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். முன்னதாக ஐரோப்பியர் வருகைக்கு முன்னரே தமிழ் சமூகத்தில் அடிமை நிலையிருந்தது என்பது பெரியபுராணத்தில் குறிப்பிடும் ஆளோலை என்ற சொல் மூலம் தெரிகிறது. அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் அதுவும் குறிப்பாக கீழ்சாதி வகுப்பினர் வணிகப்பொருள் போல் கைமாற்றப்பட்ட அவலநிலையும் நடைப்பெற்று இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக காலனித்துவ ஆதிக்கத்துக்கு பின்னர் கங்காணிகள் உதவியுடன் ஆள்சேர்க்கபட்டு அடிமை வியாபாரமாக முன்பின் தெரியாத தீவுகளுக்கு அனுப்பபட்டதை அறியமுடிகிறது. பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் இவ்வியாபாரம் பெருகியதையும் ஆவணங்கள் காட்டுகின்றன. அதன்பின்பு ஐரோப்பாவில் நிலவிய சமூக நிலைபாடு காரணமாக அடிமை வியாபாரம் ஒப்பந்த தொழிலாக உருமாறியது; இருப்பினும் இன்னல்கள் குறையவில்லை என்பதை இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் நாடற்று அலக்கழிக்கப்பட்டதன் மூலம் வெளிப்படுகிறது.

இத்தகையத் துயரங்களுக்கு நடுவே சென்றவர்களுள் பலர் பயணத்தின் போது மாய்த்ததும் உண்டு, ஒப்பந்தம் முடிந்து தாய்நாடு திரும்பியதும் உண்டு, இல்ல வேறு நாடுகளுக்கு ஒப்பந்த தொழிலை தொடர்ந்ததும் உண்டு. இவ்வகையானப் பயணத்தை தொடர்ந்தவர்கள் கடினப் பணிச்சுமை மற்றும் கொள்ளை நோய்களை சமாளித்து சமூகச் சூழல்கேற்ப தங்களை தக்கமைத்து குடியேறியும் இருக்கிறார்கள். இப்படி பயணமாக சென்ற நாடுகள் மற்றும் அவர்கள் பயணித்தக் கப்பல்கள் அடங்கியப் பட்டியலை நூலாசிரியர் ஆவணங்கள் மூலம் பதிவுசெய்கிறார். இவ்வாறு பல தடைகளை அவர்கள் எதிர் நோக்கியிருந்ததால் அது அவர்களிடையே இருந்த உயர்வு தாழ்வு எனும் சாதிய வேறுபாடுகளை இழக்கச் செய்தது; சாதி அமைப்பு உடைந்து முன்னேற்றப் பாதைக்கு வழிவகுத்தது. பலவேளைகளில் வலிகளும் தடைகளும் பாரமாய் இருப்பவைகளை புறந்தள்ளச் சொல்கின்ற ஒரு வாய்ப்பு எனலாம், அப்படி புறந்தள்ளுவதால் மட்டுமே அத்தடைகளைத் தாண்டி முன்னேர முடிகிறது.

ஒருபக்கம் காலனித்துவ பொருளாதார சுரண்டல் அரங்கேறிக் கொண்டிருந்த அதேவேளையில் மறுபக்கம் ஐரோப்பிய
கிறித்துவ மதபோதகர்கள் தமிழ் நிலப்பகுதிக்கும் தமிழுக்கும் ஆற்றிய தொண்டினை மறுக்கமுடியாது. இதை நினைவூட்டும் விதமாக நூலாசிரியர் பல சான்றுகளை முன்வைக்கிறார். அதில் குறிப்பாக சீர்திருத்த கிறித்துவ பாதிரியாரான க்ருண்ட்லர் 1715ஆம் ஆண்டில் ஃபராங்கே கல்வி நிறுவனத்திற்கு எழுதும் கடிதத்தில் தமிழ் மொழியின் இலக்கிய, இலக்கணச் செழுமையை எடுத்துரைத்து, ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் ஒரு பாடமாக நடத்தப்பட வேண்டிய மொழி என்று தமிழை உயர்த்திப் பிடிக்கிறார். அக்காலக்கட்டத்தில் வேறு எந்த இந்திய மொழியும் ஐரோப்பியக் கல்விக்கூடகங்களில் பாடமாக்கப்படவில்லை. இப்பெருமைக்கு காரணம் நம் முன்னோர் நமக்கு விட்டுச்சென்ற அறிவு செல்வங்களே ஆகும் என்பதில் ஐயமில்லை.

இறுதியாக சொல்வதென்றால் நூலாசிரியர் குடியேற்றங்களை மட்டும் பேசவில்லை அதற்கும் ஒருபடி மேலாக பிண்ணனியில் ஏற்பட்டக் காலனித்துவ மாற்றங்கள், சமூக நிலைபாடுகள், பண்பாட்டு உள்வாங்கல்கள், போர்காலச் சூழல்கள், குடியேறியவர்களில் வழிதோன்றுதலில் வந்த ஆளுமைகள் பற்றியும் அவர்கள் அந்நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு பக்கப் பலமாக இருந்தார்கள் போன்ற செய்திகளையும் தருகிறார். இதில் குறிப்பிடும் படியான சமூகம் சாரந்த நிகழ்வு என்றால் தந்தை பெரியாரின் 1929-1930 இல் நடந்த மலாயா வருகையை சொல்லலாம். நிறையப் பணிச்சுமைக் கொண்ட மலேசிய ரப்பர் தோட்டங்களில் பணிப்புரிவதற்கான கூலித் தொழிலாளர்களில் பொருத்தமானவர்கள் தமிழர்கள் என்று பேசப்பட்டிருந்த காலம் அது. ஏனெனில் காலனித்துவ அதிகாரி ஒருவர் இவர்களை எளிதில் அடிமைப்படுத்தி விடலாம் என்று முன்னரே குறிப்பிடுகின்றார். இத்தகைய சூழலில் பெரியார் ஆற்றிய உரைகள் ரப்பர் தோட்டக் கூலித் தொழிலாளர்களுக்கு சுயமரியாதையைத் தட்டி எழுப்பும் வகையில் அமைந்திருந்தன. இந்நிகழ்வு காட்டுவது அயலகத்தில் தமிழர்கள் இன்னல்களுக்கு உள்ளாகும்போது அவர்களுக்கு புத்துணர்ச்சி கொடுப்பது தாயகத்தில் உள்ளவர்களின் கடமை எனலாம்.

முதல் முயற்ச்சியாக முனைவர் க. சுபாஷிணி எழுதிய தமிழர் புலப்பெயர்வு எனும் நூலைப் பற்றி எழுதியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்நூலைப் படைத்திருப்பதன் மூலம் பலரும் முன்னெடுக்காத செயலை சுபா அவர்கள் செய்து முடித்திருப்பது மிகுந்தப் பாராட்டுதலுக்குரியது. மேலும் அவர் எழுதிய ஆய்வு நூல்களான ஜெர்மன் தமிழியல், மெட்ராஸ் 1726, ராஜராஜனின் கொடை, மக்கள் வரலாறு போன்றவற்றை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னிடம் உள்ளது.

ஜெரின்
24-11-2025
Reply all
Reply to author
Forward
0 new messages