ஆவணியே தமிழ் ஆண்டின் தொடக்கம் என்பதற்கு இன்று மேலும் ஒரு சான்று மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய 'மறைந்துபோன தமிழ் நூல்கள்' (பக்கம்: 242) என்ற நூலில் கிடைத்தது.
"அணியியல்" என்பது ஒரு மறைந்து போன ஒரு நூல்; இந்த நூல் தண்டியலங்காரத்திற்கு முற்பட்ட ஒரு பழைய நூல். இந்த அணியியல் நூலிலிருந்து சில சூத்திரங்களை யாப்பருங்கல உரையாசிரியரும் நேமிநாத உரையாசிரியரும் மேற்கோள் காட்டுகின்றனர்.
யாப்பருங்கலம், ஒழிபியலில், 'மாலைமாற்றே' என்னும் சூத்திர உரை மேற்கோள் கொடுக்கு பொழுது;
"இனி, இருது ஆவன:
'காரே கூதிர் முன்பனி பின்பனி
சீரிள வேனில் வேனி லென்றாங்
கிருமூ வகைய பருவ மவைதாம்
ஆவணி முதலா விவ்விரண் டாக
மேவின திங்க ளெண்ணினர் கொளலே.' இந்த இருது வருணனை அணியியலுட் காண்க."
என்ற மேற்கோள் யாப்பருங்கல உரையாசிரியரால் அணியியல் நூலில் இருந்து கொடுக்கப்படுகிறது.
"ஆவணி முதலா விவ்விரண் டாக மேவின திங்க ளெண்ணினர் கொளலே" ;
இதன் பொருள்: ஆவணி மாதம் தொடக்கமாக ஒவ்வொரு பருவத்திற்கும் இரண்டிரண்டு மாதங்களாகக் கணக்கிடப்பட்டது என்று யாப்பருங்கல உரையாசிரியர் குறிப்பிடுகிறார். (11 ஆம் நூற்றாண்டில் யாப்பியலில் புலமை பெற்ற குணசாகரர் என்பவர் இந்நூலின் உரை ஆசிரியர்)
ஆவணி, புரட்டாசி - கார்காலம்
ஐப்பசி, கார்த்திகை - கூதிர்காலம்
மார்கழி, தை - முன்பனிக் காலம்
மாசி, பங்குனி - பின்பனிக் காலம்
சித்திரை, வைகாசி - இளவேனிற் காலம்
ஆனி, ஆடி - முதுவேனிற் காலம்
என ஆவணி தொடக்கமாகக் கொண்டு காலம் கணக்கிடப்பட்டது.
பார்க்க:
மறைந்துபோன தமிழ் நூல்கள் - மயிலை சீனி. வேங்கடசாமிபக்கம்: 242
TVA_BOK_0008131 மறைந்துபோன தமிழ் நூல்கள்.pdf