(வெருளி நோய்கள் 519-523: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 524-528
ஏணி குறித்த வரம்பற்ற பேரச்சம் ஏணி வெருளி.
உயரத்தைக் கண்டு பயப்படுபவர்களுக்கும் ஏணி மீது அச்சம் இருக்கும்.
ஏணியில் ஏறும் பொழுது அல்லது இறங்கும் பொழுது கால் தவறி விழுந்துவிடுவோம் அல்லது ஏணி புரண்டு விழுந்து விடும் என்றெல்லாம் தேவையற்ற கவலை கொள்ளேவார் ஏணி வெருளிக்கு ஆளாகின்றனர்.
climac என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஏணி.
00
ஏந்து(appliance) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஏந்து வெருளி.
சமையலுக்குப் பயன்படும் ஏனங்கள் முதலான துணைப் பொருள்கள், அன்றாடத் தேவை நிறைவேற்றத்திற்கு உதவும் குளிர்ப்பி(Air conditioner), தேய்ப்பி(iron box), உலர்த்தி(Hair dryer) முதலான எண்ணற்ற பயன்பாட்டுப் பொருள்களும் தொழிலாற்ற உதவும் துணைக்கருவிகளும் ஏந்துகள்(appliances) எனக் குறிக்கப்பெறுகின்றன.
இவற்றின் செம்மையற்ற இயக்கம் அல்லது பழுது போன்றவற்றால் அல்லது கவனக் குறைவாகக் கையாண்டால் ஏற்படும் பேரிடர் போன்றவற்றால் தேவையின்றி அளவுகடந்து கவலை கொள்வர்.
00
ஏப்பம்(belch) குறித்த காரமற்ற அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் ஏப்ப வெருளி.
தான் ஏப்பமிட்டாலோ பிறர் ஏப்பமிட்டாலோ கக்கினாலோ(வாந்தி எடுத்தாலோ)வரும் ஒலியாலும் நாற்றாத்தாலும் வெறுப்பு கொள்வர்.
eructo என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்கள் ஏப்பம், கக்கு.
00
ஏப்பிரல்(April) மாதம் குறித்த வரம்பில்லாப் பேரச்சம் ஏப்பிரல் வெருளி.
si என்னும் சீனச்சொல்லிற்கு நான்கு எனப் பொருள். yue என்னும் சீனச்சொல்லிற்கு மாதம் எனப் பொருள். எனவே, siyue நான்காம் மாதமாகிய ஏப்பிரல் திங்களைக் குறிக்கிறது.
00
ஏப்பிரல் முதல் நாளில் முட்டாளாக்கப்படுவதாகக் கூறி ஏமாற்றப்படுவது குறித்த ஏற்படும் பேரச்சம் ஏப்பிரல் முட்டாள் வெருளி.
தொடக்கத்தில் பழைய நாட்காட்டி முறைப்படி ஏப்பிரல் முதல் நாள் புத்தாண்டு நாளாகப் பல நாடுகளில் கொண்டாடப்பட்டது. ஆனால், புதிய கிரகோரி ஆண்டுக் கணிப்பு முறையை அவைக்கோ(போப்பு) கிரகரி நடைமுறைப்படுத்தினார். அதன் பின்னரும் சனவரி முதல்நாளைப் புத்தாண்டு தொடக்கமாகக் கொண்டாடாமல் ஏப்பிரல் முதல் நாளைக் கொண்டாடினர். இவர்களே ஏப்பிரல் முட்டாள்கள் என அழைக்கப்பட்டனர். ஆனால், அதற்கு முன்னரே 1466 ஆம் ஆண்டு அரசவை விகடகவி, பந்தயம் ஒன்றில் மன்னன் பிலிப்பை விளையாட்டாக மு்ட்டாளாக்கிய நாளே ஏப்பிரல் முட்டாள் நாள் ஆனது என்பர்.
அதேபோல் 1508 ஆம் ஆண்டில் பிரான்சிலும் 1539ஆம் ஆண்டில் தச்சுநாட்டிலும் முட்டாள்கள் நாள் கொண்டாடப்பட்டதாகக் கூறுகின்றனர்.
ஏப்பிரல் முதல் நாளன்று மற்றவர்களை விளையாட்டாக ஏமாற்றி இன்பம் காண்பதையே பொழுதுபோக்காக மக்கள் கொண்டுள்ளனர். சிறுவர்கள் பிறர் அறியாமல் அவர்களின் சட்டைகளில் மை தெளித்தல், ‘ஏ.எப்’ என உருளைக்கிழங்கு போன்றவற்றில் முத்திரை செய்து மையில் தோய்த்து பிறர் சட்டையில் பதித்தல், பொய்யான தகவல்களை உண்மைபோல் கூறி நம்பச்செய்தல் போன்றவற்றைச் செய்வர்.
ஏப்பிரல் முட்டாள் (ஏப்ரல் ஃபூல்) என்னும் தலைப்பில் தமிழ் முதலான பல மொழிகளில் படங்கள் வந்துள்ளன. தமிழில் ‘பனித்திரை’ என்னும் திரைப்படத்தில் “ஏப்பிரல் ஃபூல் ஏப்பிரல் ஃபூல் என்றொரு சாதி” எனப் பாடலும் வந்துள்ளது. இவை நகைச்சுவையாக இருந்தாலும் இவைபற்றிக் கேட்டாலே – ஏப்பிரல் முட்டாள் நாளுக்கு அஞ்சுவதால் – அஞ்சுவோர் உள்ளனர்.
தை முதல் நாள் புத்தாண்டு என நடைமுறைப்படுத்திய பின்பு, சித்திரை முதல்நாளைப்புத்தாண்டாகக் கொண்டாடுபவர்களைச் சித்திரை முட்டாள்கள் என்று கேலி செய்யலாமா?
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
(சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- 1 தொடர்ச்சி)
சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- 2
நாம் செய்ய வேண்டியது என்னவாக இருக்க வேண்டும்? தமிழுக்குத் திட்டங்கள் தர வேண்டும். தரவில்லையே! ஒன்றும் செய்யவே இல்லையே! நமக்கு ஒன்றும் வேண்டா, செம்மொழி அறிவிக்கப்பட்ட பிறகு செம்மொழி விருது கொடுத்தார்கள். யாருக்கு? இளைய அறிஞர்களுக்கு ஆண்டுக்கு ஐவருக்குக் கொடுத்தார்கள். (அதிலும் சில ஆண்டுகள் குறைவாகக் கொடுத்தார்கள்.)
ஒவ்வோர் ஆண்டும் சமற்கிருத அறிஞர்கள் 15 பேர், அரபி அறிஞர்கள் 3 பேர், பெருசியன் அறிஞர்கள் 3 பேர், பாலி/பிராகிருத அறிஞர் ஒருவர் என 22 அறிஞர்களுக்குக் குடியரசுத் தலைவர் விருது இந்திய விடுதலை நாளின் பொழுது வழங்கப்படுகிறது. இவ் விருதானது விருது பெற்றவர்களுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் 50,000 உரூபாய் பரிசுத்தொகை வழங்கும் சிறப்பிற்குரியதாகும்.
இளையவர்களுக்குத் தருவது ஒரு முறை விருது( ஒன் டைம் அவார்டு). மூத்தவர்களுக்குத் தருவது வாழ்நாள் முழுமைக்குமான ஆண்டு தோறுமானது (யியர்லி அவார்டு).
ஆண்டு தோறும் தரக்கூடிய வாணாள் விருது தமிழில் இதுவரை தரப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழுக்குச் செம்மொழி அறிந்தேற்பு தந்த பிறகுதான் சமற்கிருதத்திற்கு அறிந்தேற்பு தந்தார்கள் பாலி, பிராகிருதத்திற்கும் 2004 இல் கொடுத்துவிட்டார்கள் எல்லாவற்றிற்கும் கொடுத்து விட்டார்கள் கோயிலிலே வருபவர்களுக்கெல்லாம் சுண்டல் தருவது போன்று “இந்தா நீ வாங்கிக்கோ! நீ வாங்கிக்கோ! ” என்று செம்மொழி அறிந்தேற்பு கொடுத்துவிட்டார்கள். இது மிகவும் தவறானது எல்லாம் செம்மொழியாக இருக்கலாம். ஆனால் தமிழ் ஒன்றுதான் உலகத்திலேயே உயர்தனிச் செம்மொழி, வேறு எந்த மொழியும் உயர் தனிச் செம்மொழி அல்ல. ஆகவே உயர் தனிச் செம்மொழி என்ற தகுதியைத் தமிழுக்குக் கொடுத்து கூடுதல் நிதி ஒதுக்குமாறு கேட்டிருக்க வேண்டும் .ஆனால் கேட்கவில்லை நாம். அது மட்டும் அல்ல. சமற்கிருதம் ஒரு முழுமையான மொழி அல்ல பாலி பிராகிருதம் தமிழும் கலந்த சொற்கலவைதான். தவறுதலாகச் சமற்கிருதத்தில் இருந்து பிராகிருதம் வந்தது என்பார்கள். பிராகிருதம் என்பது இயல்பான பேச்சு மொழி. சமற்கிருதம் செய்யப்பட்ட மொழி. இயல்பான பேச்சிலிருந்து செய்யப்பட்டது தான் சமற்கிருதம் அப்படி இருக்கும் போது பிராகிருதம் மூத்ததாக இருக்குமா சமற்கிருதம் மூத்ததாக இருக்குமா?
சமற்கிருதப் பேராசிரியர் சுகுமாரி(பாட்டார்சார்)எழுதிய சமற்கிருதச் செவ்விலக்கிய வரலாறு(History of Classical Sanskrit Literature. 1993) நூலிலேயே சொல்கிறார் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா? சமற்கிருத இலக்கியங்கள் பேரளவின என்று காட்டுவதற்காகப் பாலி மொழி நூல்களையும், பிராகிருத மொழி நூல்களையும் மொழி பெயர்த்துக் கொண்டு அல்லது அவற்றின் அப்பட்டமான தழுவல்களையும் எழுதி வைத்துக்கொண்டு, நூல்களாக இயற்றிவிட்டு அவையெல்லாம் சமற்கிருத நூல்கள் என்று பொய்யான வரலாற்றை உருவாக்கி வைக்கிறார்கள். தமிழ் அறிஞர்களின் தமிழ் இலக்கியங்களை அழித்துவிட்டு எவ்வாறு சமற்கிருதம் தனது நூல்களாகக் காட்டுகிறதோ அதேபோன்று வடக்கே செய்து இருக்கிறார்கள். ஆக இத்தகைய ஒரு பொய்யான சமற்கிருதத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய தேவை என்ன?
நாம் என்ன சொல்ல வேண்டும். நமக்கு அஃதாவது இப்போது அரசு அறிவித்தார்களே பத்தாண்டு என்று, இப்போது குதிக்கிறார்கள் அல்லவா? எண்ணிப் பாருங்கள். பத்தாண்டு என்று சொல்லி இன்று கேள்வி கேட்பவர்கள் எங்கு சென்றார்கள். இன்று கூக்குரல் இடுபவர்கள் எங்கு? சென்றார்கள். ஆண்டுதோறும் அறிவித்துக் கொண்டு தானே இருந்தார்கள் ஏன் அப்பொழுது கேட்கவில்லை? ஒன்றிய அரசு ஆட்சிப் பொறுப்பில் தமிழர் கட்சிகள் இருந்தனவே, அப்போது என்ன செய்தார்கள்? அவர்கள் பேசுகையிலே அந்த நாடாளுமன்ற அவையிலேயே அறிக்கை கொடுக்கிறார்கள் அல்லவா? எதெதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள் என்று பார்த்தால் தெரியுமே, அப்பொழுதெல்லாம் ஏன் கேட்கத் தெரியவில்லை? இவ்வாறு பல்வேறு வாய்ப்புகளையும் விட்டுவிட்டு இப்பொழுது ஏதோ புதிதாகக் கொடுப்பது போல் கேட்கிறார்கள். அதுதான் கொடுமை. ஏதேனும் சமற்கிருதம் தொடர்பான அறிவிப்பு /இந்தி தொடர்பான அறிவிப்பு வந்த பிறகு அப்பொழுது தான் வந்து குதிகுதியென்று குதிப்பார்களே தவிர ஆண்டுதோறும் நடக்கும் இயல்பான ஒன்று என்பதை மறந்து விடுகிறார்களா அல்லது மறைக்கிறார்களா எனத் தெரியவில்லை. ஆக ஆண்டுதோறும் விட்டு விட்டு பத்தாண்டுகள் போன பத்தாண்டுகள் அதற்கு முந்தைய 10 ஆண்டுகள் முந்தின ஆண்டு தொடர்ச்சியாகப் பத்தாண்டு இதெல்லாம் ஆங்கிலேயர்களிமிருந்து விடுதலைக்கு முன்பிருந்தே தொடர்ந்து நடந்து வந்த அநீதிகள் இவையெல்லாம், இந்தியா விடுதலை அடைந்து மிகுதியாக வந்துவிட்டது.
பேராய கட்சியான காங்கிரசில் தொடங்கி தொடர்ந்து கொண்டே இருக்கிறது .ஆக, சமற்கிருத நிதி ஒதுக்கீடு என்பது இங்கே தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அப்பொழுதெல்லாம் இந்தக் கட்சிகள் எங்கே தூங்கிக் கொண்டு இருந்தன? ஒன்று இவர்கள் தெரிந்தே செய்கிறார்கள் என்றால் இவர்களுக்கு எதையும் சொல்லத் தகுதி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பிறரது முதுகிலே உள்ள அழுக்கைச் சுட்டிக்காட்டுகிற நாம், சுட்டிக் காட்டிய கைகளில் மண்டிக் கிடக்கிற அழுக்கை நாம் பார்க்க வேண்டும். நாம் தமிழுக்காக என்ன செய்தோம் என்று பார்க்க வேண்டும் .அப்படிப் பார்க்கும் பொழுது இப்பொழுது நான் பல திட்டங்களைச் சொன்னேன் அல்லவா, அதை விடப் பல பெரிய திட்டங்கள் இருக்கின்றன. திட்டங்கள் மட்டுமல்ல. எதற்காகச் சொல்கிறேன் தெரியுமா? சமற்கிருதம் தொன்மையான மொழி என்பது பொய், பிற மொழிகளுக்குச் சமற்கிருதம் தாய் மொழி என்பதும் பொய், சமற்கிருதம் தேவ மொழி என்பதும் பொய். இவ்வாறு பொய்களைப் பரப்பிக்கொண்டு பொய்யான தகவல்களுக்காக – அத்தகவல்களின் அடிப்படையிலான திட்டங்களுக்காக – நிதி ஒதுக்கீடு வழங்குகிறார்கள்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன் இணைய வழி உரையின் எழுத்தாக்கம்
13.07.2025
(தொல்காப்பியமும் பாணினியமும் – 6 : பாணினியத்தின் சிறப்பு?!-தொடர்ச்சி)
தொல்காப்பியமும் பாணினியமும்
7
தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே
தமிழ் நூல்களைக் காப்பதற்காக இயற்றப் பெற்ற தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் தமிழ்ச்சொற்களைக் கையாள்வதுதானே முறை. தமிழ் மீதுள்ள வெறுப்பின் காரணமாகவும் சமற்கிருதத்தை உயர்த்தும் நோக்கிலும் வையாபுரி போன்றோர் பல சொற்களையும் சமற்கிருதமாகத் தவறாகக் கூறுகின்றனர். தொல்காப்பியர் காலத்தில் எழுத்தமைப்பு உருவாக்கி அதன்பின் சொல் வளத்தை உருவாக்கிய சமற்கிருதச் சொற்கள் எங்ஙனம் தொல்காப்பியத்தில் இடம் பெற இயலும்? தமிழ் இலக்கணம் வகுக்க வந்த தொல்காப்பியர் எதற்கு வளமில்லாத பிற மொழியாகிய சமற்கிருதச் சொற்களைக் கையாள வேண்டும்? இது குறித்துத் தொல்காப்பிய அறிஞர் பேரா.முனைவர் சி.இலக்குவனார் (பழந்தமிழ்)பின் வருமாறு தெரிவிக்கிறார்:
நாகரிகத்திலும் பண்பாட்டிலும் சிறந்து திகழ்ந்த தமிழர்க்கான காப்பியம் என்பதால் தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தும் சிறப்பு என்பது இதன் தளமாக அமைந்துள்ளது. தமிழ்ச்சொற்களாகிய கவி, இபம், அகில், அரிசி, கருவப்பட்டை, பாண்டியன், கேரலர் (சேரலர்), சோழர், தமிழ், தொண்டி, கடத்தநாடு, சங்காடம் (மலையாளச் சொல் – படகு என்னும் பொருளினது), கோட்டாறு, குமரி, பெருங்கரை, பொதிகை, கொற்கை, கோடி, கள்ளிமேடு, மலை, ஊர் முதலிய சொற்கள் கிரேக்கம் முதலிய மேலை நாட்டு மொழிகளுள் இடம் பெற்றுள்ளமையை அறிஞர் காலுடுவல் அவர்கள் ஆராய்ந்து எடுத்துக் காட்டியுள்ளார். வையாபுரி(ப்பிள்ளையவர்கள்) அரிசி, அகில் முதலிய சொல் பற்றிய அறிஞர் காலுடுவல் ஆராய்ச்சியை, ஆராய்ச்சி முறைக்கு ஒவ்வாத முறையில் மறுத்துரைக்கின்றார். அரிசி எனும் தூய தமிழ்ச்சொல் விரீகி எனும் ஆரிய மொழியிலிருந்து தோன்றியதென^ அவர் கூறுவதிலிருந்து அவருடைய ஆராய்ச்சியின் போக்கு எத்தகையது எனத் தெள்ளிதில் புலப்படும். அவர் ஆராய்ச்சியைப் புறத்தே தள்ளுதலே ஆராய்ச்சியாளர் கடனாகும். கபி என்னும் சொல் கவி என்னும் சொல்லின் திரிபாகும். கவி என்பது குரங்கைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லேயாகும். மனிதனைப் போன்று வடிவம் பெற்றுள்ள குரங்கு கவிழ்ந்து நடக்கின்ற காரணத்தால் கவி என்று தமிழர் அமைத்துள்ளனர். கவிதல் என்னும் சொல்லினது முதனிலைத் தொழிற்பெயரே கவி என்பதாகும்.
தொல்காப்பியத்தில் பயின்றுள்ள தூய தமிழ்ச் சொற்களை வடமொழிச் சொற்களின் மொழிபெயர்ப்பு என்று வையாபுரி கூறுவதுதான் நகைப்புக்கிடமாய் உள்ளது. தாமரை, வேற்றுமை, அவையல்கிளவி, நூல் முதலியன வடமொழிச் சொற்களின் மொழிபெயர்ப்பு என அவர் கூறியுள்ளமையை என்னென்பது! தாமரைக்குத் தமிழ் நாட்டில் எல்லோரும் அறிந்த வேறுபெயர் யாது உளது? ஒன்றுமில்லையே. தாமரை தமிழ்நாட்டில் என்றும் உள்ளதுதானே? வடமொழித் தொடர் ஏற்படுவதற்கு முன்னர்த் தாமரையை என்ன பெயர் கூறித் தமிழர் அழைத்தனர்? கமலம் என்பதாவது எம்மொழிக்குரிய சொல் என்பதில் கருத்து வேறுபாடுகொள்ள இடம் உண்டு. தனித்தமிழ்த் தாமரைச் சொல்லை வடமொழியின் மொழி பெயர்ப்பு என்பார் அறிவை என்னென்றழைப்பது?
அவை என்பதும் தூய தமிழ்ச்சொல். அதன் வடமொழி வடிவமே சபா என்பது. வேற்றுமை என்னும் சொல் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே வழக்கிலிருந்த சொல்லாகும். வேற்றுமை தானே ஏழென மொழிப” என்று தொல்காப்பியர் கூறுவதனால் வேற்றுமை என்று பெயரிட்டது அவர் அல்லர் என்று நன்கு தெளியலாகும். நூல் என்பது வேறு; சூத்திரம் என்பது வேறு. நூற்பா என்பதுதான் சூத்திரத்திற்கு நேர் பொருளாகும். நூல் என்றும் நூலின் பாக்களை நூற்பா என்றும் தமிழர் அழைத்தனர். வடமொழியாளர் நூற்பாவையும் சூத்திரம் என்று கூறிக் கொண்டாலும் சூத்திரம் என்னும் வடசொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. ஆனால் நூற்பா என்னும் சொல்லுக்கு வேறு பொருளே கிடையாது. சூத்திரம் என்னும் சொல்லுக்கு நூல்-திரிக்கப்பட்ட நூல்-என்னும் பொருள் இருக்கலாம். ஆனால் புத்தகம் என்ற பொருளில் வழங்கும் நூல் என்னும் பொருள் பொருந்தாது; கிடையாது என்பதை வையாபுரியார் அறியார் போலும்.
ஆதலின், தொல்காப்பியப் பிறப்பியலின் முதல் நூற்பா பாணினியிலிருந்தும், மெய்ப்பாட்டியலின் மூன்றாம் நூற்பா பரதநாட்டிய சாத்திரத்திலிருந்தும் மொழிபெயர்க்கப்பட்டன என்று கூறும் அவர் கூற்று எட்டுணையும் உண்மையன்று; இருமொழி நூல்களையும் தெளிவாகக் கற்றிலர் போலும் என்பது நன்கு புலப்படுகின்றது. (பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்)
மேனாட்டு அறிஞர்கள் ஆய்வனவற்றை அன்றே தொல்காப்பியர் மேற்கொண்டுள்ளார்
இன்றைய மேனாட்டு அறிஞர்கள் ஆய்வனவற்றை அன்றே தொல்காப்பியர் மேற்கொண்டுள்ளார் என்பதைப் பின்வருமாறு இலக்குவனார் தெரிவிக்கிறார். “மேலை நாட்டு மொழி நூலறிஞர்கள் “Semantemes and morphemes’ என்னும் தலைப்பில் ஆராய்கின்றனவற்றை ஆசிரியர் தொல்காப்பினார் உரிச்சொல் இடைச்சொல் என்ற தலைப்புகளில் ஆராய்கின்றார்.(பேராசிரியர் சி.இலக்குவனார்: தொல்காப்பிய ஆராய்ச்சி பக்-13)
தொல்காப்பியம் ஒரு விழுமிய நூல் என ஆராய்ச்சியாளர் மு.வை. அரவிந்தன் (உரையாசிரியர்கள்: பக்.140) பின் வருமாறு குறிப்பிடுகிறார்:
“தொல்காப்பியம் என்னும் பழம்பெரும் இலக்கணநூல் தமிழ்மொழியின் தொன்மைக்கும் சிறப்பிற்கும் சான்றாய் விளங்குகின்றது. வளமாக வாழ்ந்த தமிழினத்தின் உயர்ந்த கொள்கைகளையும் எண்ணங்களையும் உலகிற்கு உணர்த்தும் விழுமிய நூலாய் இது ஒளிர்கின்றது. இதனை இயற்றிய தொல்காப்பியரின் குரல், காலத்தையும் இடத்தையும் கடந்து வந்து தெளிவாக ஒலிக்கின்றது. தொல்காப்பியம் தனக்குப் பின் தோன்றிய பல இலக்கண இலக்கியங்களுக்கு எல்லாம் தலைமை தாங்கி வழிகாட்டி நடத்திச் செல்லுகின்றது. தொல்காப்பியத்தின் கருத்தை உணரவும் உணர்த்தவும் புலவர் பெருமக்கள் காலந்தோறும் முயன்று வந்தனர். அம்முயற்சியின் விளைவாய் உரைகள் பல பெருகின. உரைவளம் கொண்ட பெருநூலாய்த் தொல்காப்பியம் திகழ்கின்றது.”
(தொடரும்)
தொல்காப்பியமும் பாணினியமும்
இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 524-528: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 529-533
ஏமாற்றம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஏமாற்ற வெருளி.
இவ்வெருளி உடையோர் எண்ணங்கள் நிறைவேறாமற் போதல், நம்பிக்கைக் குலைவு, மனமுறிவு, மனக்கசப்பு, தோல்வியினால் விளையும் வெறுப்புனர்ச்சி போன்றவற்றிற்கு ஆளாகின்றனர்.
00
ஏரி அல்லது சதுப்பு நிலம் குறித்துக் காரணமின்றி வரும் அச்சம் ஏரி வெருளி.
ஏரி அல்லது சதுப்பு நிலத்தில் மூழ்கிவிடுவோம், ஏரி நீர் துன்பம் தரும், ஏரி உடைப்பெடுக்கும், ஏரி வறண்டால் வேளாண்மை முதலியன பாதிப்புறும் முதலிய கவலைகளுக்குத் தேவையின்றி ஆளாகி அளவு கடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
Limne /limno என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் ஏரி.
00
ஏவுகணை(missile)-குண்டு(bullet) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஏவு குண்டு வெருளி.
அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தப் பாதிப்பு(post traumatic stress disorder) உள்ளவர்களுக்கு ஏவு குண்டு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
தொல்லையூட்டும் எண்ணங்கள், கனவுகள், உணர்வுகளால் இத்தகையோர் பாதிப்புறுகின்றனர்.
தமிழ் ஈழம் போன்ற இனப்படுகாெலைப்பகுதிகளில் வாழ்ந்தவர்களுக்கும் போர்க்கொடுமைகளைச் சந்தித்தவர்களுக்கும் இவ்வெருளி வருகிறது. சிறுவர்களும் பெண்களும் இதனால் மிகுதியும்பாதிப்புற்றாகின்றனர். இவற்றை அறிந்தவர்கள் தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
00
ஏழாம் எண்கூறுகள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஏழன்கூறு வெருளி.
எண் ஏழுடன் தொடர்புடையவை, ஏழு கூறுகளாக்கப்பட்ட பகுதி, ஏழு பிரிவுகளாக்கப்பட்ட தொகுதி என ஏழுடன் தொடர்புடையவற்றின் மீது இவர்கள் பேரச்சம் கொள்வர்.
00
ஆண்டின் ஏழாவது வாரம் குறித்த அளவுகடந்த பேரச்சம் ஏழாவது வார வெருளி.
எண் ஏழு வெருளி உள்ளவர்களுக்கு ஏழாவது வார வெருளி வர வாய்ப்பு உள்ளது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5