இம்முறை சென்னைக்குச் சென்றபோது இருப்பூர்திக்கு முன்பதிவு செய்திருந்த பயணச்சீட்டுகளில் வருகைச் சீட்டுகள் குறித்த எண்ணமின்றிச் சென்றுவிட்டேன்.
செல்கைச் சீட்டுகள் குறித்த தரவுகள் பயண நேரத்திற்கு முன்னதாகவே குறுஞ்செய்தியாக வந்துவிட்டன. அதனால் இடையூறில்லை. வருகைச் சீட்டுகளைக் குறித்த கூர்மதியின்றித் தவறவிட்டேன்.
வருகைச் சீட்டுத் தரவுகள் குறுஞ்செய்திப் பட்டியலில் இருக்கும், இல்லையேல் மின்னஞ்சலில் கிடக்கும், இல்லையேல் நாம் கைப்பேசி வழியாக இந்திய இருப்பூர்தித் தளத்திற்குள் நுழைந்து பார்த்துக்கொள்ளலாம் என்று பொருட்படுத்தாமல் விட்டுவிட்டேன். இத்தனை வழிகள் இருக்கையில் நான் கவலைப்படாமல் சென்றதில் வியப்பில்லை.
சென்னைக்குச் சென்ற வேலை முடிந்து ஊர்க்குத் திரும்பும் நாளில் வருகைச் சீட்டுகள் குறித்த தரவுகளைப் பெற அமர்ந்தேன். கைப்பேசியில் துழாவி பதிவுசெய்து பெற்ற சீட்டுகளைக் குறித்த குறுஞ்செய்தி வந்துள்ளதா என்று ஆராய்ந்தேன். ஒரு செய்தியையும் காணவில்லை. மின்னஞ்சலைத் திறந்து பார்த்தால் அங்கேயும் மடல் இல்லை. அங்கிருந்தவை யாவும் பழைய சீட்டுகள்.
வேறு வழியில்லை, இருப்பூர்தித் தளத்திற்குள் நுழைந்து பார்த்துவிடவேண்டியதுதான் என்று கூகுள் உலவியின் வழியாக இந்திய இருப்பூர்தித் துறையின் தளத்திற்குள் நுழைந்தேன். கைப்பேசியின் நினைவகம் சார்ந்த இடையூறுகளால் தனிச்செயலியை இட்டுப் பயன்படுத்துவதில்லை. வீட்டில்/அலுவலகத்தில் கணினியில் கூகுள் உலவி வழியாகவே எல்லாவற்றையும் செய்கிறேன். கணினித்திரை வழியாகச் செய்வதில் உள்ள நேர்த்தியே என்னைக் கவர்ந்தது. நிற்க.
பயனர் பெயர், கடசொல், உயிரர்சொல் (Captcha) என எல்லாவற்றையும் இட்டுத் தட்டினால் கடசொல் தவறு என்று வந்தது. கைப்பேசியில் எழுத்தைத் தட்டுவதில் உள்ள பேரிடையூறு, எப்படியும் பக்கத்து எழுத்தும் அடிவாங்கி அமரும். அப்படி ஆகியிருக்கும் என்று மீண்டும் கடசொல் இடுகிறேன். மீண்டும் தவறாம். கைப்பேசியில் குறுஞ்செய்தி இல்லை, மின்னஞ்சல் எதுவும் வரவில்லை. இங்கே வலைத்தளத்திற்குள்ளும் நுழைய வழியில்லாமல் போனால் வருகைப்பாடு திண்டாட்டம் ஆகிவிடுமே என்று மெல்ல வியர்த்தது. ஒரேயொரு முயற்சிக்கு மட்டுமே இனி வழியுள்ளது. கூகுள் கணக்கிற்குள் நுழைந்து, அது சேர்த்து வைத்திருக்கும் கடசொற்களின் நினைவுப்பட்டியலைச் சரிபார்த்தேன். நான் முயல்வதும் அது பதிவில் காட்டுவதும் ஒரே கடசொல்தான். ஏன் பிழையாகிறது ? இப்போது சரியாக முயல்வோம். ஆனால் அதுவும் தவறாகிப் போனால் கெட்டது கதை. வியர்த்த முகத்தோடு மீண்டும் கூர்ந்து நோக்கி பயனர் பெயர், கடசொல், உயிரர்சொல் என உள்ளிட்டேன். அதுவும் தவறு. பலமுறை தவறாக முயன்றமையால் தங்கள் கணக்கினை இன்னும் இருபத்து நான்மணிநேரம் கழித்துத்தான் திறக்கும் முயற்சிக்குத் தர இயலும் என்று திரையில் அறிவிப்பு வந்துவிட்டது.
இப்போது என்ன செய்வது ? ’பயணியர் பெயர்ப் பதிவு’ (PNR Number) எண்கூட என்னிடம் இல்லையே. பொறுமை பொறுமை பொறுமை. அன்றைய பயணத்திற்குரிய பதிவுத்தரவுகள் யாவும் பயணியர் அட்டவணை உறுதிப்பட்டவுடன் குறுஞ்செய்தியாக வரும்தான். ஒருவேளை அந்தக் குறுஞ்செய்தியும் வராது போய்விட்டால் என்ன செய்வது ? அது வரும்வரைக்கும் காத்திருக்க முடியாதே.
இருப்பூர்தித் தளத்திற்குக் கைப்பேசி அழைப்பு வழியாகத் தொடர்புகொள்ள முடியுமா என்று இணையத்தில் தேடினேன். 14646 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு எதனையும் கேட்டுப் பெறலாம் என்று இணையம் சொல்லிற்று. என்னுடைய இருப்பூர்தியக வலைக்கணக்கில் ஆட்சான்றெண் (ஆதார்) முதற்கொண்டு அனைத்தையும் ஏற்றி வைத்திருக்கிறேன். கைப்பேசி எண்ணையும் இணைத்திருக்கிறேன். அதனால் இந்த எண்ணிலிருந்து அழைத்து 'என் கணக்கிலுள்ள பயணச் சீட்டுகள் அனைத்தையும் குறுஞ்செய்திகளாக அனுப்புக' என்று கேட்டுப் பெற்றுவிடலாமே என்ற எண்ணம் தோன்றிற்று.
அவ்வெண்ணிற்கு அழைத்தவுடன் வழக்கம்போல் இந்தியும் ஆங்கிலமும் தொகையறாவில் இடம்பெற்றன. பிறகு எந்த இந்திய மொழியையும் குரல்வழியாகவே தேர்ந்தெடுக்கலாம் என்றது. ’தமிழ்’ என்றேன். உடனே தமிழில் உதவிக்கணினி குரலியம்பத் தொடங்கியது. எல்லா வாய்ப்புகளையும் முடித்துவிட்டு ’எங்களிடம் நேரடியாகப் பேச’ ஓர் எண்ணை அழுத்தச் சொல்லிற்று. அழுத்தினேன். அடடா... நேரடியாக ஓர் அம்மணி இணைப்பில் வந்தார்.
“அம்மா. இந்தக் கைப்பேசி எண்ணில் இனிவரும் பயணத்திற்குப் பதிவு செய்யப்பட்டுள்ள இருப்பூர்திச் சீட்டுகளைப் பற்றிய குறுஞ்செய்திகளை உடனே அனுப்புங்கள்...” என்றேன். “இதோ” என்றபடி பத்துக் குறுஞ்செய்திகளை அனுப்பினார். “வந்திருக்கிறதா ?” என்று உறுதிப்படுத்தச் சொன்னார். ”ஆம்... மிக்க நன்றிம்மா...” என்றபடி அழைப்பினை முடித்தேன். சும்மா சொல்லக்கூடாது. மிக அருமையான உதவிச்சேவை. சில மணித்துளிகளில் என் கையறுநிலை முடிவிற்கு வந்தது. இதற்காகவே இருப்பூர்தித் துறையைப் பாராட்டலாம்.
இப்போது என் கைப்பேசி எண் இணைக்கப்பட்ட இந்திய இருப்பூர்தியகக் கணக்கில் பதிவுசெய்யப்பட்ட சீட்டுகள் யாவும் கிடைத்துவிட்டன. பதிவுக்குப் பயன்பட்ட கைப்பேசி வழியாக 14646 என்ற எண்ணிற்கு அழைத்துப் பெற்றுக்கொண்டுவிட்டேன். (பிறகு பயணியர் அட்டவணை உறுதிப்பட்டதும் முறையான குறுஞ்செய்தியும் வந்தது.)
14646 - இருப்பூர்தியக உதவித் தொடர்பெண். பதிந்து வைத்துக்கொள்க. தொடர்ந்து இருப்பூர்திகளைப் பயன்படுத்துவோர்க்குப் பல வழிகளில் உதவியாக இருக்கட்டும்.