140 மே தினம்: உழைப்பின் உன்னதத்தைப் போற்றும் நாள்
எம்.ஜெ. பிரபாகர்
ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதியை சர்வதேச தொழிலாளர் தினமாக உலகளவில் கொண்டாடி வருகிறோம். "உழைப்பவரே உயர்ந்தவர்" என்ற தாரக மந்திரத்திற்கு உயிர் கொடுக்கும் நாளாக மே மாதம் முதல் தேதி அமைகிறது. 1967ஆம் ஆண்டு தமிழக அரசு முதன்முதலாக மே ஒன்றாம் தேதியை தொழிலாளர் தினம் என அறிவித்து பொது விடுமுறையும் வழங்கியது.
மே தினத்தின் வரலாறு:
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 16 மணிநேரம் வரை மிகக் குறைந்த ஊதியத்திற்கு அடிமைகள் போல வேலை வாங்கப்பட்டனர். இந்தச் சுரண்டலுக்கு எதிராக அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1886ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். இந்தப் போராட்டத்தில் "8 மணிநேர வேலை, 8 மணிநேரம் ஓய்வு, 8 மணிநேரம் உறக்கம்." என்பதுதான் பிரதான கோரிக்கையாக முன் வைத்தனர். இந்த மாபெரும் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவு கூறவே, 1889இல் சர்வதேச சோசலிச மாநாடு மே 1ஆம் தேதியை 'சர்வதேச தொழிலாளர் தினமாக' அறிவித்தது.
இந்தியாவில் முதன்முதலில் மே தினம் 1923ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில், சிங்காரவேலர் தலைமையில் 'மெட்ராஸ் தொழிலாளர் சங்கம்' இதைக் கொண்டாடியது.
இந்தத் திருநாள் உலக தொழிலாளர்களின் வாழ்வில் ஏராளமான மாற்றங்களைக் கொண்டு வந்தது. அனைத்து தொழிலாளர்களின் பணி நேரம் 8 மணி நேரம் என உறுதி செய்யப்பட்டது.
ஆண், பெண் இருபாலருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கை வலுப்பெற்றது. தொழிலாளர்கள் தங்களுக்குள் சங்கம் அமைத்துப் போராடும் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தது. பணியிடங்களில் பாதுகாப்பு வசதிகள் மற்றும் மருத்துவக் காப்பீடு போன்றவை கட்டாயமாக்கப்பட்டன.
இன்றைய சூழலில்:
நம்நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருந்தாலும், வேலைவாய்ப்பு உருவாக்கம் அதே அளவில் நடைபெறவில்லை என்பது முக்கியமான சிக்கலாகும். வேலைவாய்ப்பு பற்றாக்குறை மற்றும் தொழிலாளர் நிலை ஆகியவை நாட்டின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை நேரடியாகப் பாதிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.
தொழிலாளர் நிலையைப் பொருத்தவரை, இந்தியாவில் பெரும்பாலானோர் முறைசாரா தொழிலில் பணிபுரிகின்றனர். இத்துறையில் பணிபுரிபவர்களுக்கு வேலை பாதுகாப்பு, மருத்துவ வசதி, ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்புகள் கிடைப்பது குறைவு. குறைந்த ஊதியம் மற்றும் கடினமான வேலைநிலைகள் இவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில் வேலை இருந்தாலும், சம்பளம் குறைவாக இருப்பது பெரிய சவாலாகும்.
பெண் தொழிலாளர் பங்கேற்பு இன்னும் குறைவாகவே உள்ளது. சமூக காரணிகள் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக பெண்கள் வேலைவாய்ப்பில் முழுமையாக ஈடுபட முடியாத நிலை தொடர்கிறது.
இன்றைய தொழிலாளர்கள் மிகப்பெரிய மாற்றங்களை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக மத்திய அரசு புதிதாக நான்கு தொழிலாளர் சட்டங்களை (ஊதியம், தொழில் உறவுகள், சமூக பாதுகாப்பு, பாதுகாப்பு/சுகாதாரம்) அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டங்கள் வேலை பாதுகாப்பு மற்றும் போராட்ட உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. அது போன்று பல மாநிலங்களில் 8 மணி நேர வேலையை 12 மணி நேர வேலையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது கவலைக்குரிய விஷயமாகும். தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 12 மணி நேர வேலையை அமல்படுத்தவில்லை.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை...:
நவீன பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்பையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் இந்த நாளில் சிந்திப்பது மிகவும் அவசியமானது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உழைப்பின் முகமற்ற நாயகர்கள் ஆவார்கள். பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் எண்களால் ஆனது மட்டுமல்ல; அது ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வந்து உழைக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வியர்வையாலும் ஆனது. நாம் வாழும் வானளாவிய கட்டடங்கள் முதல் பாலங்கள் வரை அனைத்திலும் புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களின் உழைப்பு உறைந்துள்ளது.
உற்பத்தித் துறையில் பிரதான பங்கு வகிக்கும் தொழிற்சாலைகளின் இயந்திரங்கள் தடையின்றி இயங்குவதற்கு இவர்களின் இடைவிடாத உழைப்பே காரணம். சேவை துறைகளான ஹோட்டல்கள், விநியோகப் பணிகள் மற்றும் விவசாயக் கூலிகளாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டின் உணவுப் பாதுகாப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏராளமான அடிப்படைச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.
ஒரே மாதிரியான வேலைக்கு உள்ளூர் தொழிலாளர்களை விட புலம்பெயர்ந்தோருக்குமிகக் குறைவான ஊதியம் வழங்கப்படும் அவலம் இன்றும் நீடிக்கிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முறையான தங்குமிடம், தூய்மையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் பல நேரங்களில் இவர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளன. இதனால் அவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள். மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகளால் இவர்கள் பெரும்பாலும் சமூகத்திலிருந்து அன்னியப் படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
முறையான பணி ஒப்பந்தங்கள் இல்லாததால், விபத்து காலங்களில் சட்டரீதியாக இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீடுகள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இவர்களுக்கான சட்டப் பாதுகாப்பு சட்டப்படியான உரிமைகள் சுத்தமான குடிநீர் சுகாதாரம் இருப்பிட வசதி ஆகியவை இவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
இன்றைய நவீன உலகில் வேலைக்கான சவால்கள் மாறியுள்ளன. 'ஒர்க் ஃப்ரம் ஹோம்', 'கிக் எகனாமி' போன்ற புதிய முறைகள் வந்தாலும், உழைப்பவருக்கான கண்ணியம் மற்றும் மனநல ஆரோக்கியம் ஆகியவை இன்றும் முக்கியமான விவாதப் பொருளாகவே உள்ளன.
தொழிற்துறை வளர்ச்சியை ஊக்குவித்து அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். திறன் மேம்பாட்டு திட்டங்கள் மூலம் இளைஞர்களை வேலைக்கு தகுதியாக மாற்ற வேண்டும். பெண்களின் வேலைவாய்ப்பு பங்கேற்பை அதிகரிக்க பாதுகாப்பான சூழல் மற்றும் சம வாய்ப்புகளை வழங்க வேண்டும். மேலும், தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்குவது அவசியமாகும். நாட்டின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளர்களைக் கௌரவிக்கும் நாள் இது. புலம்பெயர்ந்த தொழிலாளி முதல் கணினித் துறையில் வேலை செய்பவர் வரை அனைவரது உழைப்பும் போற்றத்தக்கது. மே தினத்தில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்போம் என உறுதி ஏற்போம்.