மலாயாவில் தமிழ் சினிமா துறையினர் வருகையும் நிகழ்வுகளும்1930களிலேயே தமிழ்த் திரைப்படங்கள் பிரிட்டிஷ் காலனித்துவ மலாயாவிற்கு வரத்தொடங்கிவிட்டன. ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள், ரயில்வே ஊழியர்கள், துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புறத் தமிழர்கள் மத்தியில் தமிழ்ப் படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. ”தமிழ் பேசும் படம்“ என விளம்பரம் செய்யப்பட்டு திரைப்படங்கள் விளம்பரம் செய்யப்பட்டன.
அன்று மலாயாவில் (இன்றைய மலேசியா மற்றும் சிங்கப்பூர்) வாழ்ந்த தமிழர்களுக்கு மேடை நாடகங்களும் இசை நிகழ்ச்சிகளும் முக்கிய பொழுதுபோக்காகவும் கலாச்சார நிகழ்வாகவும் இருந்தன. இதன் காரணமாக தமிழகத்தின் முன்னணி கலைஞர்கள் அடிக்கடி மலாயாவிற்கு அழைக்கப்பட்டனர்.
மலாயாவிற்குத் தமிழ்த் திரைப்பட நட்சத்திரங்கள் வருகை தந்த வரலாறு முக்கியமானது. ஏனெனில் அவர்களுடைய பல வருகைகள் வெறும் திரைப்பட விளம்பரங்களுக்காக மட்டுமே நடைபெற்றவை அல்ல. நடிகர்களும் நடிகைகளும் மேடை நாடகங்கள், நன்கொடை திரட்டும் கலைநிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்வுகள், திரைப்பட முதல் காட்சிகள் (Premieres), மற்றும் பண்பாட்டு சுற்றுப்பயணங்கள் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக மலாயாவிற்கு வந்தனர்.
மலாயாவிற்கு வருகை தந்த ஆரம்பகால தமிழ்த் திரைப்படப் பிரபலங்கள் எனப் பட்டியலிட்டால் அதில் முதல் இடம் பிடிப்பவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். இவர் சிங்கப்பூர், பினாங்கு, கோலாலம்பூர் போன்ற பகுதிகளுக்கு வந்தவர். இரண்டாம் உலகப்போருக்கு முன்னரே, எம். கே. தியாகராஜ பாகவதரின் புகழ் மலாயா மற்றும் சிங்கப்பூர் முழுவதும் பரவியிருந்தது. அவரது நாடகக் குழு மலாயா மற்றும் சிங்கப்பூரின் பல பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மேடை நிகழ்ச்சிகளை நடத்தியது. குறிப்பாக பினாங்கு மற்றும் சிங்கப்பூரில், அவரது நிகழ்ச்சிகள் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் ரசிகர்களை ஈர்த்தன.
அவரது அபாரமான புகழ் மற்றும் மக்கள் ஆதரவின் காரணமாக, மலாயா முழுவதும் அறியப்பட்ட முதல் தமிழ்த் திரைப்பட சூப்பர் ஸ்டாராக எம். கே. தியாகராஜ பாகவதர் கருதப்படுகிறார். அவரது திரைப்படங்களும் இசை நிகழ்ச்சிகளும் அக்கால மலாயா தமிழர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தன.
புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்-நடிகையரான என். எஸ். கிருஷ்ணன் மற்றும் டி. ஏ. மதுரம் ஆகியோர் 1940களிலும் 1950களிலும் மலாயாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அவர்கள் மலாயாவில் வாழ்ந்த தமிழ் மக்களுக்காக மேடை நாடகங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் நன்கொடை திரட்டும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
தமிழ் நாடக மேடை மற்றும் தமிழ்த் திரைப்பட உலகின் மிகப் புகழ்பெற்ற கலைஞர்களில் ஒருவர் கே.பி.சுந்தராம்பாள். 1930கள் மற்றும் 1940களில் மலாயா மற்றும் சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தார். மலாயாவிலும் சிங்கப்பூரிலும் நடைபெற்ற அவரது நிகழ்ச்சிகள் பெரும்பாலும் தமிழ் இசைக் கச்சேரிகள், பக்திப் பாடல் நிகழ்ச்சிகள், தமிழ் கலாச்சார விழாக்கள் போன்றவை. இவர் நடித்து வெளிவந்த திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. மலாயா சிங்கையில் இருந்த திரையரங்குகளில் வெளியிடப்பட்டன. எடுத்துக்காட்டாக The Singapore Free Press பத்திரிக்கையில் வந்த விளம்பரத்தைக் காணலாம். அதில் கே.பி.சுந்தராம்பாள், எம்.கே ராதா இருவரும் நடித்த ஔவையார் தமிழ்த் திரைப்படம் திரையிடப்பட உள்ளது என்றும், அனைத்து டிக்கட்டுகளும் விறபனையாகி முடிந்து விட்டன என்ற செய்தியையும் காண்கின்றோம். (
https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/article/freepress19531104-1.2.71.1?qt=sundarambal&q=Sundarambal)
தமிழ்நாட்டின் திரையுலகத்தினரின் இந்த வருகைகள், அன்று தமிழ்நாடு, மலாயா தமிழர்களுக்கிடையேயான பண்பாட்டு உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தன. தூரத்தில் வாழ்ந்தாலும் தங்களது பண்பாட்டு கலை உணர்வுகளுக்கு தமிழ்நாட்டு கலைஞர்கள் முக்கியம் என்ற உணர்வுடன் மலாயா தமிழர்கள் இருந்தனர். இதே போக்குதான் இன்றும் தொடர்கின்றது.
முதன் முதலில் மலாயாவில் திரையிடப்பட்ட தமிழ்ப்படம் காளிதாஸ் (1931–1932). அதனைத் தொடர்ந்து பவளக்கொடி(1934–1935), நந்தனார் (1935–1936), சதி லீலாவதி (1936–1937), ஹரிதாஸ் (1945–1947), சந்திரலேகா (1948–1950), பராசக்தி (1952–1954), மலைக்கள்ளன் (1954–1955), அலிபாபாவும் 40 திருடர்களும் (1956–1957), நாடோடி மன்னன் (1958–1959), வீரபாண்டிய கட்டபொம்மன் (1959–1960) ஆகிய திரைப்படங்களைக் குறிப்பிடலாம்.
பராசக்தி (1952) திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னரும், அதனைத் தொடர்ந்து வெளிவந்த பல வெற்றிப்படங்களின் மூலமும் சிவாஜி கணேசன் மலாயாவில் மிகுந்த புகழைப் பெற்றார். 1950களிலும் 1960களிலும் அவர் கோலாலம்பூர், பினாங்கு, ஜொகூர், ஈப்போ, சிங்கப்பூர் வந்திருந்தார். தமிழ் அமைப்புகள், திரையரங்கு உரிமையாளர்கள், ரசிகர் மன்றங்கள் மிகப்பெரிய வரவேற்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தன. குறிப்பாக ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள், தோட்டப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களிடையே சிவாஜி கணேசனின் புகழ் பெரிது.
1960களிலும் 1970களிலும் மலேசியாவில் மிகவும் பிரபலமான தமிழ்த் திரைப்பட நட்சத்திரமாக எம்.ஜி.ஆர். விளங்கினார் என்று கூறலாம். அவரும் சுதந்திர மலேசியாவின் பல பகுதிகளுக்கு வந்து சென்றார்.
இணையமும் சமூக ஊடகங்களும் தோன்றுவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னரே, மலேசியா முழுவதும் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்கள் செயல்பட்டு வந்தன. அவரது திரைப்படங்கள் மலாயா தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, அவர் ஒரு கலாச்சாரச் சின்னமாகவும் மதிக்கப்பட்டார். இன்றளவும் மலேசியாவில் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களும், சரோஜாதேவி ரசிகர் மன்றங்களும் இயங்குகின்றன என்பது அன்றைய தமிழ்த் திரைக்கலைஞர்களை மலாயா தமிழர்கள் எவ்வளவு ஆராதித்தனர் என்பதை புரிந்து கொள்ள உதவும்.
(உலகத் தமிழ் இதழ் 348 இல் வெளிவந்த கட்டுரை)
```````````````````````````````````````````````````````````````````````````````````````````````