பாரதியின் கண்ணம்மா

19 views
Skip to first unread message

யாழ்க்கோ

unread,
Jun 5, 2026, 11:49:11 AM (3 days ago) Jun 5
to மின்தமிழ்
என் அம்மா கண்ணம்மா

அமைதியான தருணங்கள், ஆதரவில்லா சூழ்நிலைகள் இவைகள் எல்லாம் அம்மாவை நினைக்க நமக்கு கிடைக்கும் பொன்னான நேரங்கள். அப்படி எனக்குக் கிடைத்த தருணங்களை எல்லாம் பயன்படுத்தி என் வாழ்வின் பயணங்களை எழுத்து வடிவில் படைத்துவிட்டேன். எனது வரிகளின் பயணத்தில் என்னோடு இணைந்து நீங்களும் பயணிக்க வாருங்கள். வரிகள் நம்மை வாழ்வோடு அழைத்துச் செல்லும்.


     ஆணிமுத்து பெத்த பிள்ளை
அஞ்சு பேரும் பெண்பிள்ளை
அதுல நீ மூத்தவளா
அகிலம் காண வந்தவளே…


     பள்ளி செல்ல அனுப்பாம
தங்கைகளை வளர்க்கச் சொல்லி
பாவிப்பய உங்க அப்பன்
படிப்பு அறிய வைக்கலையே…

     பஞ்சவர்ணம் தாளி கட்ட
பல தூரம் நடந்து வந்து
கல்யாணம் கட்டிக்கிட்ட
கதை சொன்ன தூங்கயிலே…

     அப்ப நான் எங்கிருந்தேன்
அறியாமல் கேட்கயிலே
அடுத்த கதை சொல்லி என்னை
ஆழ்ந்து உறங்க வைச்ச…

     அதிகாலை எழுந்திருச்சு
அண்டாவை இட்டு வைச்சு
கொல்லை புறமா நெல் அவிச்சு
களத்து மேட்டில் காய வைச்ச…

     மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றி
மகன் படிக்க எழுப்பி விட்டு
அனல் கக்கும் அடுப்பருகே
அவித்த நெல்லை பதம் பார்த்த…

     நெருப்பருகே நான் வந்து
உன்பக்கம் நிற்கயிலே
தள்ளி நின்னு பாருடான்னு
சொல்லிச் சொல்லி வேலை செஞ்ச…

     வீட்டுப் பாடம் எல்லாம்
விளக்கின் வெளிச்சத்தில் முடிஞ்சிருச்சு
சிட்டுக் குருவியெல்லாம்
மெட்டுக்கு கீச்சிடத் தொடங்கிருச்சு…

     அப்பா வெட்டு வெட்ட
அடுத்த ஊரு கௌம்பிட்டாரு
நான் பள்ளி செல்லயிலே
நாலு காசு நீ கொடுத்த…

     நாளெல்லாம் நீ உழைத்து
நெல்லை அரசியாக்கி
நம்புதாளை கொண்டு சென்று
தலைச் சுமையா அதை வித்த…

     கூத்தரிசி கூவி வித்து
குடும்பத்தை நீ காக்க
கடற்கரை மணலில் எல்லாம்
கால் வலிக்க நடந்தவளே…

     வித்து முடித்து விட்டு
வீடு வந்து சேர்ந்தவுடன்
கொண்டு வந்த பணத்தையெல்லாம்
கொட்டி நீ என்னச் சொன்ன..

     பத்துப் பத்து ரூபாயா
பக்குவமா அதை பிரிச்சு
தனியா வைக்கச் சொல்லி
தந்தது நினைவிருக்கா…

     காசுகளை எண்ணும்போது
கவட்டில் கொஞ்சம் தள்ளிவிட்டேன்
அதையெல்லாம் எடுத்துக்கிட்டு
அசுமீர் கொட்டகைக்கு ஓடீட்டேன்…

     விவசாயி படம் பார்த்து
வீட்டுக்குத் திரும்பி வந்தேன்
திருடிச் சென்றது தெரிந்திருந்தும்
திட்டாமல் சோறு போட்ட…

     நாட்டுச் செய்தியெல்லாம்
நான் அறிய வேண்டுமென
கறுப்பு வெள்ளை டிவி வாங்கி
கருத்துகளைக் கேட்க வச்ச…

     விடுமுறை விட்ட போது
வயல்காடு நாம் சென்று
காளை மாட்டு சாணத்த
கழனியெல்லாம் வீசி வந்தோம்…

     நாகமுத்து கேப்பை மேட்டில்
நாளெல்லாம் கபடி ஆடி
களைத்துப்போய் நான் வருவேன்
கஞ்சி ஊத்தி நீ தருவ…

     தேத்தா விதை உரசி
தண்ணீரைத் தெளிய வச்சு
மண்பானை இளங் குளிரில்
மகனுக்கு நீர் கொடுப்ப…

     காடுகரை மேடு எல்லாம்
கருவேல முள் பொறுக்கி
ஒன்னா அதைச் சுருட்டி
உன் தலையில் தூக்கி வச்ச..

     தலையில் சில முள் இறங்கும்
முகத்தில் சில முள் கீறும்
அத்தனையும் தாங்கிக் கொண்டு
அதையெல்லாம் வீடு சேர்த்த…

     துன்பங்கள் பல கண்டாய்
துயரங்கள் பல கொண்டாய்
என்னை படிக்க வைக்க
என்னென்ன வேலை செஞ்ச…

     ஆரம்பப் பள்ளி செல்ல
அரிசி விற்று வந்தவளே
உயர்நிலைப் பள்ளி செல்ல
புட்டவிற்கச் சென்றவளே…

     நீ பட்ட கஷ்டமெல்லாம்
நெஞ்சுக்குள் நின்றதாலே
நல்லா படுச்சு வந்தேன்
நல்ல பேரு எடுத்துவந்தேன்…

     மேல்நிலைப் பள்ளி சேர
மேம்பட்ட மக்களிடம்
நல்ல பள்ளி எதுவென்று
நயந்து நயந்து நீ கேட்ட…

     ஏளனப் பேச்சை எல்லாம்
எட்டி உதைத்து விட்டு
தேவகோட்டை இழுத்து வந்து
தேபிரித்தோ பள்ளியில் விட்ட…

     கண்கலங்கி கண்ணீர் வர-நீ
கட்டியணைத்து ஆறுதல் கூற
விடுதிக்குள் அனுப்பிவிட்டு
விறுவிறுன்னு கௌம்பிட்ட…

     உறக்கம் வரவில்லை
உண்ணவும் மனமில்லை
உன்முகம் பார்க்காம
ஒருநாளும் இருந்ததில்லை…

     மாதம் ஒருமுறை
மறக்காமல் நீ வருவ
பொறித்த கருவாட்டை
பூப்போல நீ தருவ…

     அன்றைய நாளெல்லாம்
தின்றே தீர்ப்பான்ணு
கூடை நிறச்சு வந்து
கொடுத்துத் கொடுத்து நீ மகிழ்ந்த…

     இரண்டு வருஷம் இப்படியே
இடைவிடாது நீ வந்த
நம்ம ஊரு கதையெல்லாம்
நகைச்சுவையா எடுத்துரைச்ச...

     பேச்சுப் போட்டி மேடையில
பொறி பறக்க நான் பேச
சொன்ன வரியை எல்லாம்
சொல்லிச் சொல்லி நீ ரசிச்ச…

     சட்டம் படிச்சு சாதிக்க நெனச்சு
நுழைவுத் தேர்வில் தகுதி பெற்று
மதுரை கல்லூரி மாணவனா
தடம் பதிச்சேன் உன் மகனா…

     வறட்சி தாங்க முடியாம
வயலெல்லாம் காஞ்சு போச்சு
வழக்காடிக்குப் படிக்கப் போன
மகன் வாழ்க்கை என்னாச்சு…

     பட்டணத்தில் இருக்கும் புள்ள
பசி தாங்க மாட்டானே
காசனுப்ப விதியுமில்லை
கடன் கொடுக்க நாதியில்லை…

     என்னை எண்ணித் துடிச்சவளே
என் நெனப்பில் இருந்தவளே
பகுதி நேர வேலை தேடி
உலகநேரி பக்கம் போனேன்…

     முகத்தை நல்லா பாத்துட்டு
முதலாளி வேலை தர
கல்லூரித் தேவையெல்லாம்
கருவி செஞ்சு வாங்கிக்கிட்டேன்…

     பருவமழை பொய்த்துப் போக
பயிரெல்லாம் வாடிப் போக
பட்டுக்கோட்டை பக்கம் போய்
பஞ்சம் பொழச்ச சேதி சொன்ன…

     கடுதாசி படித்து விட்டு
கனத்த இதயத்தோடு
கையில் புத்தகம் கொண்டு
கால்நடையா நடந்து போனேன்…

     கல்லூரி செல்லும் போது
கடுமையான காய்ச்சல் வர
சுருண்டு விழுந்து விட்டேன்
சுய நினைவை இழந்துவிட்டேன்…

     அருகில் இருந்த நண்பர்கள்
ஆஸ்பத்திரி கொண்டு சேர்க்க
முதலுதவி செஞ்ச உடன்
முகவைக்கு வந்துவிட்டேன்…

     காய்ச்சல் வேகம் எடுக்க-ஒரு
காலில் வலி கொடுக்க
நடக்க முடியவில்லை
முடங்க மனமுமில்லை…

     சிறகொடிந்த பறவையாட்டம்
சிக்கிக்கொண்டேன் காய்ச்சல் வந்து
நாட்டு மருந்து நீ கேட்டு
நாடு நாடா சுற்றினாயே…

     மகனை சரி செஞ்சு
மறுபடியும் உறு ஏத்தி
கல்லூரி முடித்து வர
கைப்பிடியா கூட்டி வந்த…

     உழைக்க கரம் இருக்கு-நீ
உயரப் பறடான்னு
வறுமையை உடைத்து எறிந்து
வாழ்க்கையை உணர வச்ச…

     சட்டம் படித்து விட்டேன்
பட்டமும் பெற்றுவிட்டேன்
சேது நாட்டுச் சீமையில
வக்கீலா வலம் வந்தேன்…

     வழக்காடி பணி செஞ்சு
வறுமையைப் போக்கீட்டேன்
கனமழைக்கு ஒழுகாம
கல்லு வீடும் கட்டீட்டேன்…

     அரசுப் பணிக்கு ஆர்வம் கொண்டு
அதற்கு என்னை தகுதியாக்கி
நேர்முகத் தேர்வில் வெற்றிபெற்று
நெடுஞ்சாலைத்துறையில் சேர்ந்துவிட்டேன்…

     செல்ல மகன் சென்னையில
சேர்ந்துவிட்டான் கோட்டையில
பூரிப்பில் நீ மூழ்கி
ஊரெல்லாம் சொல்லி வந்த…

     சேது நாட்டுக் கிராமத்தான்
சென்னையில் குடி கொண்டேன்
அரசுப் பணியெல்லாம்
அறம் காத்து செஞ்சுவந்தேன்…

     அண்ணன் மகள் கோமதியை
பாரதிக்கு கட்டி வச்சு
அழகு பார்க்க ஆசைப்பட்ட
அதிலும் நீ சாதிச்சிட்ட…

     பேத்தி பிறந்து விட்ட
பெருமையை நீ அடைந்து
அடுத்த தலைமுறை
அத்தனையும் பார்த்துட்ட…

     பணியை முடித்து விட்டு
பரங்கிமலை வீடு வந்து
உன்னோடு பேசாம
ஒருநாளும் இருந்ததில்லை…

     சூறைக் காற்றாய் சுழன்றுவிட்டு
சுறுசுறுப்பை நீ இழந்து
நெஞ்சுவலி வருதுடான்னு-என்
நெஞ்சு துடிக்க நீ சொன்ன…

     உன்னை அள்ளி எடுத்து
ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தேன்
செவிலியர் சேதி சொல்ல
சிதைந்து போய் சீர்குலைந்தேன்…

     இதய நோய் வந்து
இன்னல் நீ கொள்ள-உன்னை
அள்ளி எடுத்துச் சென்றேன்
ஆழ்வார்பேட்டை கொண்டு செல்ல…

     அறுவை சிகிச்சைக்கு
அழைத்துச் செல்லும்போது
பிழைத்து வருவேனானு
பதறிப் போய் கேட்டவளே…

     சிகிச்சை நீ முடிந்து
சீக்கரமாய் வீடு வர
குலசாமி கோயிலுக்கு
கிடா வெட்ட நேந்துக்கிட்டேன்…

     சென்னையில பணி புரிந்த
சிநேகிதர்கள் அங்கு வந்து
பண உதவி செஞ்சாங்க
பல உதவி புரிந்தாங்க…

     பூரண குணம் பெற்று
புதிதாய் நீ பிறந்தாய்
மரணத்தை வென்ற உன்னை
மகிழ்வோடு நான் கண்டேன்…

     மாத ஊதியத்தை
மனமகிழ்ந்து நான் வாங்கி
ஒரு பகுதி ஊதியத்தை
உனக்காக அனுப்பிவைத்தேன்…

     வருடம் கடந்து போக
வயதும் முதிர்ந்து போக
மகளோடு வாழ்ந்து கொண்டு
மகனை நீ மறதியால் மறந் தாயே...!

     உயிர விடும் நேரத்தில்
உன் அருகில் நான் இல்லை
என்ன சொல்ல நினைத்தாயோ
எதுவும் நான் அறியவில்லை…

     கல்லறைக்கு எடுத்ததுச் செல்ல
கண்ணீரோடு நான் வந்தேன்
கண்ணம்மா எனும் காவியத்தை
ஆறடிக்குள் அடக்கம் செஞ்சேன்…

     எழுதி முடிக்கும் போது
என் நெஞ்சு துடிதுடித்து
கண்ணில் நீர் பெருக
கவிதையை முடித்துவிட்டேன்...
=========================
Picture1.1.png

தேமொழி

unread,
Jun 5, 2026, 2:33:31 PM (3 days ago) Jun 5
to மின்தமிழ்
நெகிழ்ச்சி தரும் பதிவு அருமை.  🥰
Reply all
Reply to author
Forward
0 new messages